தமிழ் என்னும் விந்தை! -24

திரிபங்கி – 2

திரிபங்கிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் இது.

நனியொரு பாவாய் நடந்தது தானே தனிதனி மூன்றாஞ் சால்புறு பொருண்மையிற் பகுப்ப நிற்பது திரிபங்கியதாகும்.

திரிபங்கிக்கு உதாரணச் செய்யுளாக மாறனலங்காரம் தரும் செய்யுள் இது:-

"வாரிதிபார்  மன்மதன் பூசல்பார் வெய்ய மாமதி பார்
ஊரலர்பா ரன்னையிங் கேசல்பாருய் யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார் துய்யமான் மயல்பார்
 நாரணனே தென்னரங்கேசனே தெய்வ நாயகனே"

இதனை மூன்றாகப் பகுத்த பா கட்டங்களில் வருமாறு:-

1 வாரிதிபார்
ஊரலர் பார்
சோர்குழல் பார்
நாரணனே

2.மன்மதன்பூசல்பார்
அன்னையிங்கேசல் பார்
பொன்னிறஞ்சேர்தல் பார்
தென்னரங்கேசனே

3.வெய்யமாமதி பார்
உய்யுமாறிலை பார்
துய்யமான்மயல் பார்
தெய்வநாயகனே

யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய கட்டளைக் கலித்துறையில் அமைந்த திரிபங்கிப் பாடல் இது:-

"தந்தையென் பேனன்னை தானுமென் பேன்சற்
குருவுமென்பேன்
சிந்தையன் பாய்நின்னை நாடிநிற் பேனற் றிருநகுலை
வந்துறச் சீர்மன்னு வாழ்வளிப் பாய்மற் றருணிறையத்
தந்திருப் பாய்வன்னி சேர்கரத் தாய்தற் பரமுதலே"

இச்செய்யுள் மூன்று வஞ்சித் துறை ஆகுமாறு கீழ்க்கண்டபடி பிரிக்கலாம்:-

1.தந்தை யென்பேன்
சிந்தையன்பாய்
வந்துறச் சீர்
தந்திருப்பாய்

2.அன்னைதா னுமென்பேன்
நின்னைநா டிநிற்பேன்
மன்னுவாழ் வளிப்பாய்
வன்னிசேர் கரத்தாய்

3.சற்குரு வுமென்பேன்
நற்றிரு நகுலை
மற்றரு ணிறையத்
தற்பர முதலே

நேரிசை வெண்பாவில் அவர் அமைத்த இன்னொரு திரிபங்கி வெண்பாப் பாடல் இது:-

கங்கரா பன்னாகக் கச்சார் வியனிடையாய்
பங்கதனின் மின்னாள் பயில்வடிவா – வெங்கயிலை
 மன்னா வியனகுலை வானவா இங்கஞ்சல்
என்னா யியைபயனும் ஈ

இந்த வெண்பா கீழ்க்கண்ட இரு வெண்பாக்களை உருவாக்கும்:-

1.பன்னாகக் கச்சார் வியனிடையாய் பங்கதனின்
 மின்னாள் பயில் வடிவா வெங்கயிலை – மன்னா
வியனகுலை வானவா விங்கஞ்ச லென்னா
யியைபயனு மீகங்க ரா

2.பயனுமீ கங்கரா பன்னாகக் கச்சார்
வியனிடையாய் பங்கதனின் மின்னாள் –
பயில்வடிவா வெங்கயிலை மன்னா வியனகுலை
வானவா விங்கஞ்ச லென்னா வியை

எப்படி ஒரு அற்புதமான கவித் திறமையை நம் தமிழ் கவிஞர்கள் கொண்டிருக்கிறார்கள், பாருங்கள்!

வளம் வாய்ந்த நம் தமிழ் மொழி அன்றோ செம்மொழி!

*****

About The Author