தம்பி எனக்கு மூத்தவன்

மாட்னி ஷோவுக்குப் போக வேண்டுமென்று தம்பி பிரியப்பட்டான். பைக் ரிப்பேர்டா தம்பி என்று தப்பிக்கப் பார்த்தேன். சைக்கிள்ல போயிருவோம்ண்ணே என்று ஐடியா கொடுத்தான்.

“அண்ணா நகர்லயிருந்து மவுன்ட் ரோடு வரக்யும் சைக்கிள மிதிக்யணுமேடா!”

“நா வேணா மிதிக்கிறேண்ணே.”

“ஒண்ணும் வேணாம். நானே மிதிக்கிறேன். கௌம்பு.”

கிளம்பினோம். ஜாலியாய்ப் பின்னால் தொற்றிக் கொண்டான்.

ஸிக்னல்களில் சைக்கிள் நிற்கிறபோது தம்பி இறங்கிக் கொள்வதும், பச்சை விளக்கில் வண்டி கிளம்புகிற போது தாவிப் பின்னால் உட்கார்ந்து கொள்வதுமாயிருந்தான்.

ஈகா தியேட்டர் ஸிக்னலில் நான் காலூன்றி நின்றபோது, நம்ம சைக்கிளையடுத்து ஒரு கை வண்டிக்காரன். வேகாத வெயிலில், செருப்பில்லாத கால்களைத் தகிக்கிற தார்ச் சாலையில் பதித்து நிற்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

ஒரு காலை ஊன்றி நின்று மறுகாலுக்குத் தற்காலிகமாய்க் கொஞ்சம் ஆறுதலளிப்பதும், பிறகு இந்தக் காலை ஊன்றி அடுத்த காலை உயர்த்திக் கொள்வதுமாய் அவன் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததை அவதானித்த போது, இவனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுக்க முடிந்தால் எவ்வளவு புண்ணியமாயிருக்கும் என்று தோண்டிறியது.

போகிற பாதையில் ப்ளாட்ஃபாம் செருப்புக் கடைகள் இருக்கும். ரப்பர்ச் செருப்பு மிஞ்சிப் போனால் முப்பது ரூபாய் இருக்கும். ரெண்டு பேர் சினிமாவுக்கு செலவழிக்கப் போவதில் நாலில் ஒரு பங்கு.

சேத்துப் பட்டு பாலம் ஏறி இறங்கியதுமே ஒரு செருப்புக் கடை கண்ணில் பட்டது. தம்பி, கொஞ்சம் எறங்குடா என்றேன்.

“ஏண்ணே, வீல்ல காத்து இல்லியா?”

“அதில்லடா, நாம ஸிக்னல்ல நின்னுட்டிருப்ப, பக்கத்துல ஒரு கை வண்டிக்காரன் நின்னுட்டிருந்தானே, கவனிச்சியா!”

“ஆமா, அவனுக்கென்ன?”

“பாவம்டா அவன், கால்ல செருப்பில்லாம, வெயில்ல நிக்ய முடியாமத் துடிச்சிட்டிருந்தான். அவனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் குடுத்துட்டுப் போவோம்டா.”

படத்துக்கு லேட்டாயிருச்சுண்ணே. நேரா வண்டிய வுடு. செருப்பு கிருப்பெல்லாம் இப்ப வாங்க வேண்டாம் என்று பின்னாலிருந்து இடித்தான் தம்பி.

தம்பியின் இரக்கமின்மை எனக்கு ஏமாற்றமாயிருந்தது. கோபமாயும். கோபத்தை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளை ஓரங்கட்ட முற்பட்டேன்.

“சினிமாவுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டாப் போனா ஃபைன் ஒண்ணும் போட மாட்டாண்டா. கொஞ்சம் எறங்கு.”

“சொன்னாக் கேளுண்ணா, செருப்பெல்லாம் வாங்க வேண்டாம். வண்டிய வுடு.”

என் கோபம் கரை கடக்கப் பார்த்தது. “என்னடா தம்பி நீ, இப்படி மனிதாபிமானமே இல்லாம இருக்கியேடா, கஷ்டப் படறவங்களுக்கு நம்மாலான ஹெல்ப் பண்ணலன்னா நம்மல்லாம் என்னடா மனுஷங்க! சொல்றத கேளுடா. எறங்குடா.”

“நா சொல்றத நீ கேளுண்ணா, வண்டிய நிறுத்தாம ஓட்டு. அவனுக்குப் புதுச் செருப்பு தேவையில்லை.”

அவனுடைய பிடிவாதத்துக்குப் பணிந்து, சைக்கிளை வேண்டா வெறுப்பாய் அழுத்தினேன், “திரும்பத் திரும்ப அதத்தானடா சொல்ற. என்னடா தம்பி நீ இவ்ளோ மோசமாயிருக்க” என்று என்னுடைய வெறுப்புக்கு ஒரு சொல் வடிவம் கொடுத்தபடி.

முதுகுக்குப் பின்னால் தம்பியின் குரல் பொறுமையாய்க் கேட்டது. “ஸிக்னல்ல நிக்கிறப்ப என்னோட செருப்பக் கழட்டி அவனுக்குக் குடுத்துட்டேண்ணே.”

(ஆனந்த விகடன், 30.01.2005)

About The Author

2 Comments

  1. P.Balakrishnan

    கொடையும் தயையும் பிறவிக் குணம் என்பது இது தானோ!

Comments are closed.