தருணம் (16.1)

சரபோஜிபுரம்

–சா. கந்தசாமி

கதையின் முன்பாதி: தருணம் (16)

கிருஷ்ணமூர்த்திதான் குடிதண்ணீர் வராததை ஒரு கதை போலக் கோர்வையாகச் சொன்னான். அவர் தலையசைத்துக் கேட்டுக் கொண்டார்.

"ரொம்பக் கஷ்டம் சார்" என்றான் கிருஷ்ணமூர்த்தி.

"ஒரு வாரமா குடிக்கத் தண்ணி வர்லேன்னா ரொம்ப கஷ்டந்தான். எனக்கு அது நல்லா தெரியுது. எல்லா தண்ணீரையும் மிலிட்டரிக்கே விட சொல்லி இருக்க மாட்டாங்க. மிலிட்டரி முக்கியந்தான். அது போல ஜனங்களும் முக்கியந்தான். இதுல ஏதோ தப்பு நடந்து இருக்கு. கீழே இருக்கற ஆளுங்கதான் ஏதாவது பண்ணி இருக்கணும். நாங்க நேர்ல வந்து பார்த்து சரி பண்ணுறோம்.”
“அப்ப, இன்னைக்கே வாங்க சார்."

அவர் ஒரு சிரிப்பு சிரித்தார்.

"கமிஷ்னர் கலெக்டர பார்க்கப் போய் இருக்கார். சீப்-மினிஸ்டர் நம்ப மாவட்டத்துக்கு முதல் முறையாக வரப்போறாங்க. அதனால எல்லாரும் ரொம்ப பிஸியா இருக்காங்க… நாங்க வந்து பார்க்கிறோம்."

"இன்னிக்கு வெள்ளி சார். இதைவுட்டா சனி, ஞாயிறு லீவு சார்:

"திங்க செவ்வாயில கமிஷ்னர் சாரை கூட்டிக்கிட்டு நானே வர்றேன்."

"கண்டிப்பா வரணும் சார். குடிக்க தண்ணி இல்லாம ஜனங்க தவிச்சிக்கிட்டு இருக்காங்க."

"குடிக்கத் தண்ணி இல்லென்னா ரொம்ப கஷ்டந்தான். அதைக் கொஞ்சம் பொறுத்துக்கச் சொல்லுங்க. மிலிட்டரிக்கு பெரிய கிணறு வெட்டப் போறாங்க. அப்ப அதுல இருந்து உங்க ஊருக்கெல்லாம் தண்ணி கிடைக்கும்."

"எப்ப சார்?"

‘ஐந்தாறு மாதத்துல வரும்.’

"அதுவரைக்கும் எங்களுக்கு குடிக்கத் தண்ணி கிடைக்காதா சார்?"

அசிஸ்டெண்ட் கமிஷனர் தலையசைத்தபடி கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டார்.

"சரி" என்று துரைக்கண்ணு எழுந்தார்.

"நீங்க வந்து ஏதாவது பண்ணுலேன்னா ரொம்ப சிக்கலா போயிடும் சார்."

"நீங்க இடையில புகுந்து சிக்கல் பண்ணுலேன்னா ஒண்ணும் ஆகாது" என்றபடி கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார் அசிஸ்டெண்ட் கமிஷனர்.

கிருஷ்ணமூர்த்தி என்னவோ சொல்ல வாய் எடுத்தான். துரைக்கண்ணு அவன் கையைப் பிடித்து வெளியில் அழைத்துக் கொண்டு வந்தார். வெளியில் வந்ததும் "அவன் கடைசியா என்ன சொன்னான் பார்த்தீங்களா?" என்று கேட்டான் கிருஷ்ணமூர்த்தி.

"நம்ப நாளைக்கு வந்து கமிஷனரைப் பார்ப்போம்."

"அதான் சரியா இருக்கும்."

இரண்டு பேரும் பஸ் நிலையத்திற்கு வந்தார்கள். பஸ் ஒன்றைக் கூடக் காணோம். விவசாயிகள் பேரணி வருவதால் பஸ் எல்லாம் திருப்பி மாமரத்து மேடை வழியாக விடப்பட்டு இருக்கிறது, என்றார்கள். அவர்கள் நடந்து மாமரத்து மேடைப் பக்கம் சென்றார்கள். அவர்களைப் பார்த்து விட்ட வீரப்பன் ஆரன் அடித்து பஸ்ஸை நிறுத்தினான். இருவரும் பஸ்ஸில் ஏறி, பேச ஒன்றும் இல்லாதவர்கள் போல உட்கார்ந்து கொண்டார்கள்.

பஸ் சரபோஜிபுரம் வந்து நின்றது. துரைக்கண்ணும் கிருஷ்ணமூர்த்தியும் கீழே இறங்கினார்கள். கிருஷ்ணமூர்த்தி வீடு தெற்குத் தெருவில். புளிய மரத்தையொட்டிப் போகும் சாலையில் போக வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டு "நான் இப்படியே போயிட்டு, காலையிலே வந்து பார்க்கறேன்" என்றான்.

"ஒரு டீ குடிச்சிட்டுப் போறது!"

"இல்லை, வேணாம்." கிருஷ்ணமூர்த்தி எதிரே வந்த ஆடுகளை விரட்டிக் கொண்டு சென்றான். சாலையில் ஒரு மிலிட்டரி லாரி வேகமாகச் சென்றது. துரைக்கண்ணு நின்று அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கையை வீசியபடி நடந்தார். அவர் வீட்டு வாசலில், லட்சுமி காத்துக் கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் "இம்மாம் நேரம் ஆனதும் என்னமோ, ஏதோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்" என்றாள்.

அவர் பதிலொன்றும் பேசவில்லை. திண்ணையில் ஏறிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, "லட்சுமி குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டா" என்றார்.

அவள் அவசர அவசரமாக உள்ளே சென்று பெரிய குவளையில் தண்ணீர் கொண்டு வந்து அவர் முன்னே நீட்டினாள். அவர் வாங்கி ஒரு மிடறு குடித்தார். சுவை தெரிந்தது.

"குழாயில தண்ணி விட ஆரம்பிச்சிட்டாங்களா?"

"சத்தம் போடாதீங்க."

"என்னா?"

"மிலிட்டரிக்குப் போற தண்ணிக் குழா புங்கனூர் கிட்ட கசிஞ்சியிருக்கு. அதெ பாத்துட்டு நம்ப ஜனங்களெல்லாம் போய், குழாய் உடச்சி தண்ணி புடுச்சிக்கிட்டு வந்துட்டாங்க. நானும் போய் ரெண்டு குடம் புடிச்சிக்கிட்டு வந்துட்டேன்."

"மிலிட்டரிக்காரவங்களுக்குத் தெரிஞ்சா சுட்டுத் தள்ளிடுவானுங்க."

"நீங்களே போய் சொல்லிடுவீங்க போல இருக்கே."

அவர் பதிலொன்றும் சொல்லாமல், தண்ணீர்க் குவளையைக் கீழே வைத்து விட்டு சாலையைப் பார்த்தபடி இருந்தார்.
"ஆமாம், நீங்க போனது என்ன ஆச்சி? கமிஷ்னர் என்ன சொன்னார்?"

"ஒரு வாரத்துல எல்லாம் சரியா போயிடுமாம்."

"அப்ப தண்ணியே வராதுன்னு சொல்லுங்க."

அவர் பதில் சொல்லாமல் எழுந்து உள்ளே சென்றார். அவர் கூடவே அவளும் சென்றாள்.

******

அடுத்த நாள். பொழுது புலரும் நேரம். வெளியில் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. துரைக்கண்ணு எழுந்து வாசல் பக்கம் வந்தார். குடம், செம்பு, பானை என்று ஏதோ கையில் கிடைத்த பாத்திரத்தையெல்லாம் தூக்கிக்கொண்டு ஆண்களும், பெண்களும் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

அவர் உட்பக்கம் திரும்பி, "லட்சுமி, லட்சுமி" என்று குரல் கொடுத்தார். பதில் இல்லை. உள்ளே திரும்பிச் சென்று பார்த்தார்.
லட்சுமியைக் காணோம். அவர் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டைவிட்டுக் கீழே இறங்கினார்.

"தாத்தா, புங்கனூரிலே தண்ணி ஆறா ஓடுது. ஒரு குடம் எடுத்துக்கிட்டு ஓடியாங்க தாத்தா" என்று சொல்லிக் கொண்டே ராஜேஸ்வரி ஓடினாள். அவர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக நடந்தார்.

புங்கனூரில் மா மரத்துக்குக் கீழே மிலிட்டரிக்குத் தண்ணீர் போகும் குழாயில் இருந்து குடம் குடமாகத் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் பிடிக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் இரைச்சலுமாக இருந்தது. ரத்தினசாமி தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு எல்லாரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தான்.’

"டேய்… டேய்……" என்று கத்திக்கொண்டு துரைக்கண்ணு கீழே இறங்கினார். ஆனால், அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் ஓரடி முன்னே எடுத்து வைத்து, "ரத்தினசாமி… இதெல்லாம் என்ன?" என்றார்.

"நீங்க வீட்டுக்குப் போங்க மாமா" என்றபடி அவன் தண்ணீர்க் குடத்தைத் தூக்கி ராஜேஸ்வரி தலையில் வைத்தான்.

"இது தப்பு."

"நீங்க போங்க மாமா."

அவன் ராஜேஸ்வரியிடம் இன்னொரு குடத்தைத் தூக்கிக் கொடுத்தான். அவள் தலையில் ஒரு குடமும் இடுப்பில் இன்னொரு குடமுமாக முன்னே நடந்து சென்றாள்.

புளிய மரத்தடியில் ஒரு ஜீப் வந்து நின்றது. அவசர அவசரமாக மூன்று மிலிட்டரி ஆசாமிகள் கீழே இறங்கினார்கள். ஒருவன் பரக்கப் பரக்கச் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ராஜேஸ்வரியை நோக்கி ஓடிவந்தான். அவள் பயந்து போய்க் கால்களை எட்ட எட்ட எடுத்து வைத்தாள். அவன் வெடுக்கென்று அவள் தலையில் இருந்த மண்பானையை பிடுங்கி, தலையில் இடித்தான். மண்பானை உடைந்து அருவி போல அவள் தலையில் இருந்து தண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அவள் இடுப்பில் இருந்த குடத்தையும் கீழே போட்டுவிட்டு "ஐயோ……. ஐயோ" என்று கத்த ஆரம்பித்தாள்.

ராஜேஸ்வரி சப்தத்தைக் கேட்டு ரத்தினசாமி, மாலதி, சுந்தரி, துரைக்கண்ணு எல்லாம் மேலே ஏறி ஓடி வந்தார்கள். மிலிட்டரி அவர்களைச் சுற்றி வளைத்து நின்று கொண்டது.

உயரமாக இருந்தவன், "இதெல்லாம் உன் வேலதான?" என்று ரத்தினசாமியைப் பார்த்துக் கேட்டான்.

"எங்களுக்கு ஒரு வாரமா குடிக்கத் தண்ணியே இல்ல" என்று மாலதி சொன்னாள்.

"அதுக்காக குழாயை உடைச்சி திருடச் சொன்னாங்களா?"

"நாங்க ஒண்ணும் திருடல."

"அவங்கிட்ட என்ன பேச்சு… ஒரு நிமிஷத்துல இந்த இடத்தைக் காலி பண்ணிட்டு எல்லாரும் ஓடிடுங்க… இல்லாட்டா…"
"ஓடுலேன்னா?" மாலதி முன்னே ஓரடி எடுத்து வைத்தாள்.

"மாலதி, நீ சும்மா இரும்மா!" துரைக்கண்ணு அவள் பக்கமாக வந்தார்.

"நீங்க இருங்க மாமா."

"என்னாடீ… என்ன சொன்ன?" ஒரு மிலிட்டரிக்காரன் மீசையைத் திருகியபடி முன்னே வந்தான்.

"என்ன, மிரட்டுறீயா?"

"என்னடீ, சவாலா விடுற!"

சும்மா இரு, என்பது போல ஒருவன் ஜாடை காட்டிவிட்டு, ஒரு மிலிட்டரிக்காரன் திடீரென்று குனிந்து மாலதியைத் தூக்கிக் கொண்டு ஜீப்பை நோக்கி ஓடினான்.

"மாலதியை விடு… மாலதியை விடு" என்று கத்தியபடி கூட்டம் பின்னால் ஓடியது. அவன் அவளை ஜீப்பில் போட்டான். அவள் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு ஜீப்பில் இருந்து கீழே குதிக்கப் பாய்ந்தாள். பின்னால் இருந்த ஆட்கள் கழிகளையும், கற்களையும் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடிவந்தார்கள்.

மிலிட்டரி ஆட்கள் பாய்ந்து ஜீப்பில் ஏறினார்கள். ஜீப் புறப்பட்டது. கூட்டம் ஜீப்பைத் துரத்திக்கொண்டு சப்தம் போட்டுக்கொண்டு ஓடியது.

ஒரு பையன் கையில் இருந்த கல்லை ஜீப் மீது வீசியடித்தான். திடீரென ஜீப் நின்றது. ஒன்று இரண்டு என்று கற்கள் பறந்தன. துப்பாக்கி வெடித்தது.

"ஐயோ" என்று அலறியபடி ராஜேஸ்வரி மாலதி மேல் சாய்ந்தாள்.

ஜீப் வேகமாகப் புறப்பட்டுச் சென்றது.

"மிலிட்டரிக்காரன் சுட்டுட்டான், மிலிட்டரிக்காரன் சுட்டுட்டான்" என்று கத்தியபடி இரண்டொரு ஆட்கள் ஜீப்பைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். ஜீப் மரங்களுக்குப் பின்னால் மறைந்து போய் விட்டது.

துரைக்கண்ணு ராஜேஸ்வரி முகத்தில் கை வைத்துப் பார்த்தார்.

"மாமா, ராஜேஸ்வரி அநியாயமா போயிட்டாளே!" என்று அவரைக் கட்டிக்கொண்டு மாலதி அழ ஆரம்பித்தாள். அவர் ராஜேஸ்வரி முகத்தையே பார்த்தபடி இருந்தார்.

இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் மிலிட்டரி ஆபிசில் இருந்து பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கை சென்றது. அது கீழ்க்கண்டவாறு இருந்தது.

"சரபோஜிபுரத்தில் இருந்து மிலிட்டரி கேம்பிற்குக் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை சமூக விரோதிகள் உடைத்துத் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் பத்து நாட்களுக்கு மேலாகக் கேம்பிற்குத் தண்ணீரே வரவில்லை. நேற்று அதிகாலையில் ஓரிடத்தில் குழாயை உடைத்து ஒரு கும்பல் தண்ணீர் பிடிப்பதைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்குச் சென்ற மிலிட்டரி ஆட்களை ஒரு கும்பல் தாக்கியதோடு, அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு சுட ஆரம்பித்தது. வேறு வழியில்லாமல் மிலிட்டரி திருப்பிச் சுட நேர்ந்தது. அதில் ஒரு பெண் இறந்து போய் விட்டாள். சரபோஜிபுரத்தில் கள்ளக்கடத்தல், தீவிரவாதிகள் நடமாட்டம் மிலிட்டரி வருகையால் அதிகமாகத் தடைப்பட்டுள்ளது. தண்ணீர்க் குழாய் உடைப்புக்குத் தீவிரவாதிகளும், கடத்தல்காரர்களும்தான் முக்கியக் காரணம். சரபோஜிபுர ஜனங்களுக்கு வெகு நாட்களாகவே தீவிரவாதிகளோடும் தொடர்பு இருந்து வந்ததை, மிலிட்டரி துண்டித்து விட்டது."

–சந்திப்போம் வேறொரு தருணத்தில்…

About The Author