தாய்லாந்தில் ஒருநாள்

அண்மையில், பணி நிமித்தமாகத் தாய்லாந்து சென்றிருந்தேன். இரண்டு வாரக் காலம் தங்கியிருந்து பணிகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. தாய்லாந்தின் முக்கிய அங்கங்களான பேங்காக், அயோத்தயா ஆகிய நகரங்களைக் கண்டு மகிழும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தாய்லாந்து நாட்டின் விரிந்து பரந்திருக்கும் இயற்கை எழில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது. அண்மைக்காலம் வரை மன்னராட்சியே நடந்து கொண்டிருந்த தாய்லாந்தில் தற்போது ஆட்சிமுறை மாறியிருக்கிறது.

Thailandஇங்கு நகரங்களை இணைக்க நேர்த்தியான நான்கு வழிச்சாலைகளை அமைத்துள்ளனர். இது போன்ற சாலைகளில் எளிதாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடிகிறது. அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்துக் காவலர் ஒருவராவது இருக்கின்றனர். 

ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. இங்கு பெட்ரோல், டீசல் கார்களையே காண முடியாது. ஆம்! அனைத்து வாகனங்களும் கேஸ் மூலமாகவே இயங்குகின்றன. அதனால், நகரத்திற்குள் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது சுத்தமாக இல்லவே இல்லை.

மேலும், மக்கள்தொகை குறைவாக இருப்பதனாலோ என்னவோ தெருக்களிலும் குப்பைக் கூளங்களைப் பார்க்க முடிவதில்லை.

இங்குள்ள நடுத்தர மக்கள் அதிகமாக டாக்சியைப் பயன்படுத்துகின்றனர் அல்லது சொந்தமாகக் கார் வைத்திருக்கின்றனர். இங்குள்ள அதிவேகச் சாலைகளைக் கடப்பதற்கென்று தனியாகப் பாலங்களைக் கட்டியுள்ளனர். யு-டர்ன் என்னும் திரும்பு தடங்களை எங்கேயும் காண முடியவில்லை. அதற்குப் பதிலாகப் பாலங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

நகருக்குள் பயணிக்கும் பேருந்துகள் பார்ப்பதற்குச் சுமாராக இருந்தாலும் நகர் விட்டு நகர் செல்லும் பேருந்துகள் நம்மூர் குளிர்சாதனப் பேருந்துகளைப்போல் இருக்கின்றன. கட்டணமோ நம்மூர் சாதாரணப் பேருந்து கட்டணத்தைப்போல்தான் இருக்கிறது. சில புதுப்பேருந்துகளில் பயோடாய்லட் (Bio-toilet) வசதிகூட இருக்கிறது!

இங்குள்ள பேருந்துகளில் பெண் நடத்துநர்களின் எண்ணிக்கையே அதிகம். காரணம், நாட்டில் ஆண் – பெண் சதவிகிதத்தில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.

நாட்டின் நகரங்களை இணைக்கும் இன்னொரு முக்கிய வாகனம் இரயில். அதிவேக இரயில், நகர இரயில் என இருவிதமாக இருக்கின்றன. அதிவேக இரயில்கள் மணிக்கு 300 மைல் வேகத்தில் பறக்கின்றன!

தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கில் சுற்றி வந்தால், உள்ளூர்வாசிகளுக்கு இணையாகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருக்கிறது! அதுவும் விடுமுறை நாட்களில், மால் என்றழைக்கப்படும் பல்பொருள் அங்காடிகள் அனைத்திலும், புத்தக் கோவில்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம்!

Thailandபுகைப்படம் எடுக்க புத்தக்கோவில்களில் எவ்விதத் தடையுமில்லை. எல்லாப் புத்தக்கோவில்களிலும் புத்தத்துறவிகள் பலர் இருக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாத ‘மாங்க்’ என்றழைக்கப்படும் புத்த சன்னியாசிகளும் பரவலாக இருக்கின்றனர். இவர்களிடம் உள்ளூர்வாசிகள் குடும்பமாகச் சென்று ஆசி பெறுகின்றனர்.

தாய்லாந்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான நகரம் அயோத்தயா. இது நாட்டின் முந்தைய தலைநகரமாக இருந்தது. இந்த நகரைச் சுற்றிலும், சிறியதும் பெரியதுமாகச் சுமார் நானூற்றுக்கும் மேற்பட்ட புத்தக்கோவில்கள் உள்ளன.

நகர்வலம் வருவதற்கேற்ற முக்கிய வாகனம் ‘டுக் டுக்’. இது நம்மூர் ஷேட் ஆட்டோ மாதிரி. எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஏறிக்கொள்ளலாம். படகு சவாரியும் இங்கு பிரபலமானது. ஒருநாள் முழுவதும் இந்த நகரைச் சுற்றிப் பார்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘லோட்டஸ் மால்’ இந்த நகரின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். ரிவர் சைடு ஹோட்டல், லீமா ப்லேஸ் ஆகியவை இந்த நகரின் முக்கியமான தங்கு விடுதிகள். ஒருநாள் இரவு வாடகை, வசதிக்கேற்ப 500பாட் முதல் 2000பாட் வரையிலும் கிடைக்கிறது. எல்லா ஹோட்டலிலும், சுற்றிப் பார்ப்பதற்கு என டாக்ஸியோ அல்லது டுக் டுக்கோ பதிவு செய்து தருகிறார்கள். ஒருமணி நேரத்திற்கு 200பாட்.

Thailandஒவ்வொரு சுற்றுலாத் தலமும் 4 அல்லது 5 கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிறது. ஓட்டுநர்கள் முக்கியச் சுற்றுலா இடங்களின் புகைப்படங்களை நமக்குக் காண்பிக்கின்றனர். நாம் செல்லும் இடங்களைச் சொன்னால் அங்கு மட்டும் சுற்றிக் காண்பிப்பார்கள் அல்லது முக்கியமான பத்துப் பதினைந்து இடங்களை அவர்களே குறிப்பிட்டுச் செல்வார்கள். ஓட்டுநர்கள் யாருக்கும் இம்மியளவுகூட ஆங்கிலம் தெரியவில்லை. ‘தாய்’ மொழி தெரிந்திருந்தாலோ அல்லது தெரிந்தவர் கூட இருந்தாலோ மிகவும் சவுகரியமாக இருக்கும். நாட்டின் முக்கிய மொழியே தாய்தான்.

தாய்லாந்தில் புகழ்பெற்ற மற்றுமொரு விஷயம் மசாஜ் என்றழைக்கப்படும் உடம்பு பிடித்தல். எல்லா தங்கு விடுதிகளிலும் உடம்பு பிடிக்கும் முன்றில்கள் -மசாஜ் பார்லர்கள்- இருக்கின்றன. ஒருவருக்கு உடம்பு பிடிக்க ஒருமணி நேரத்திற்கு 500பாட் முதல் 10,000பாட் வரை இடத்திற்கேற்ப வாங்குகின்றனர்.

நாட்டில் விவசாயமும் முக்கியத் தொழிலாக இருக்கிறது. காய்கறிகள், நெல் போன்றவையே இங்கு முதன்மையாகப் பயிரிடப்படுகின்றன. தாய்லாந்து மக்களின் முதன்மையான உணவு அசைவம் கலந்த உணவு. எந்த ஓர் உணவிலும் மசாலா பயன்படுத்துவதில்லை. ஆகவே, அங்கு சாப்பாட்டிற்கு நம்மூரில் வைக்கப்படும் குழம்பு போல் எதுவும் இல்லை. சைவ உணவாக இருந்தால் பல காய்கறிகளைத் தண்ணீரில் போட்டுக் கொதித்த நிலையில் சாப்பாட்டிற்குப் பரிமாறுகிறார்கள். அசைவமாக இருந்தால் அவற்றுடன் மசாலாவுக்குப் பதிலாக மிளகு கலந்த ஒருவித ரசத்துடன் கலந்து பரிமாறுகிறார்கள். அரிசி சாதத்தைத் தண்ணீரில் வேக வைப்பதற்குப் பதில் ஆவியிலேயே வேக வைக்கின்றனர். இப்படியெல்லாம் சாப்பிடுவதாலோ என்னவோ பருமனாக எவரையும் இங்கு காண முடியவில்லை. முக்கிய அசைவ உணவுகள் கோழிக்கறி, ஆட்டுக்கறி, பாம்புக்கறி, பன்றிக்கறி வகைகளாகும்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, நம் நாட்டைவிடச் சற்று மேம்பட்டதாகவே இருக்கிறது. ஒரு டாலருக்கு நிகரான தாய்லாந்து பணம் 32 பாட் ஆகும். அதாவது ஒரு பாட் என்பது 1.7 இந்திய ரூபாய் மதிப்பாகும். காலநிலையைப் பொறுத்தவரை, பகலில் நம் நாட்டின் வெப்பநிலையே அங்கும் இருக்கிறது. கோடைகாலத்தில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குளிர்காலத்தில் 25 டிகிரி செல்சியஸ்க்குக் குறைவாகவும் இருக்கிறது.

சுற்றுலாவாகக் கடற்கரைக்குச் செல்ல வேண்டுமானால் பட்டயா என்ற நகருக்குச் செல்ல வேண்டும். இது அயோத்தயாவிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஒருநாள் சுற்றுலாவாக அயோத்தயாவிற்கு செல்லலாம்.

(குறிப்பு: மேற்கண்ட படங்களைச் சொடுக்கினால் தொடர்புடைய பல படங்களைப் பெரிதாகக் காணலாம்).

******

About The Author