தாவரங்களின் தலைவன் (2)

தண்டுடன் கட்டிய பின்பாரக் கல் உயர, கமலை கிணற்றில் குனியும். அவர் முன்பக்கமாய் இசைவாய் வருவார். கமலையில் நீர் அள்ளிக் கொண்டபின் அவர் பின்வாங்க மெல்ல தண்ணீர் மேலே வந்து சாலில் கமலை கவிழ்ந்து தண்ணீர் இறங்கி வயலுக்கு சலசலத்துப் போகும். ஒருமணி ரெண்டுமணி உழைப்புக்குப் பின் மேல்த் துண்டால் வியர்வையைத் துடைத்துவிட்டு வந்தமர வேப்பமரம் ரொம்ப வசதி. அம்மைபோல அவரைப் பிரியமாய் மடியமர்த்திக் கொள்ளும் அது. அம்மையை விட அது ஒசத்தி. அம்மைக்குக் கோவம் வந்தா விளக்குமாத்தால சாத்திருவா.

இது சாத்தாது.

இந்த விசயத்தில் சம்சாரங்களையே நம்பேலாது. குரங்கு எப்ப பேன் பார்க்கும், எப்ப காதைக் கடிக்கும்னு யாருக்குத் தெரியும்?

வேப்பங் காத்தின் குளிர்ச்சிக்கு ஈடாய் லோகத்தில் வேறெதும் உண்டா? மண்பானைத் தண்ணி குடிச்சி வயிறு குளிர்ந்தாப்போல மனசடங்கிப் போகும். சிலுசிலுவென்று காற்றின் கோபத்தை அடக்கிக் கீழனுப்பும் மரம். உடம்பு கருப்பு. சின்னச் சின்னதாய் வெள்ளைப் பூ. இலைக்கொழுந்து பழுப்பும் சிவப்புமாய் என்ன மெருகு. பழமோ பச்சை – என்று ஆச்சர்யமான மரம். கோடையில் தரையில் பாய் விரித்து உதிரும் பூவைச் சேகரிப்பார்கள். வேப்பம் பூவில் ரசம் வைத்தால் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்து ஆனந்திப்பார்கள்.

பக்கத்தில் மரமே கிடையாது. வயல் வளர்ச்சிக்குக் கொக்கும் காகமும் வந்தாலும் ஒரு நிமிசம் இந்த மரத்துக்கு வந்து களைப்பாறிவிட்டுக் கிளம்பும். பறவைச் சத்திரம்.

ரோட்டோடு அசுரவேகம் போகிற பஸ்சுகள் லாரிகள் கல்யாணப் பார்ட்டி வேன்கள் சட்டென்று அங்கே நின்றால் இறங்கி ஒண்ணுக்குப் போகப் போகிறார்கள் என்று அர்த்தம். வெட்ட வெளியில் நின்று ஒண்ணுக்கடிப்பது ஏனோ சனங்களுக்கு லஜ்ஜை. ஒரு மரம் அவர்கள் தேவையை முழுமை செய்து விடுகிறது. நாய்ப் பிறவி போல மரம் தேடி அலைதல்… டிரைவர் அவசரத்துக்கு அவன்வசதிக்கு வண்டியை நிறுத்தி இறங்குவான். பிறகு அவனைப் பார்த்ததும் பிற ஆண்மக்கள் இறங்கி சாந்தி பண்ணிக் கொள்வர். பெண்கள் ஆத்திரத்துடன் பல் கடித்துக் காத்திருப்பர். அட சீக்கிரமாவது வந்து வண்டி யெடுங்கடா. முடிச்ச பின்னும் நின்னு சிகெரெட்!… இது ஆண்களின் உலகம்.

தோளோடு ரெண்டு கையும் விரித்துப் பரத்தினாப் போல மரம். வெயில் முழுசும் எனக்கே என்று எல்லா இலையும் வெளிச்சங் குடிக்கத் தவித்தது. டோப்பாத் தலை மாதிரி மரத்தின் மண்டை ஒரு பன் உப்பலில் ஓரங்களில் சரிந்து உச்சி பொம்மித் தெரியும், ஷேவிங் பிரஷ் போல. சதா காதலன் முகம் பார்க்கப் பிரியப்படும் காதலி போல வானம் பார்த்துக் கிடந்தது மரம். கீழே கருணையோடு அது விட்டு வைத்திருந்தது நிழலை. வெயில் எனக்கு, நிழல் உனக்கு – என்று விட்டுக் கொடுத்தாப் போல. ஒரு அவசரத்தில் தோலை உரித்து பழத்தை விட்டெறிந்து தோலை வாயில் வைத்தாப் போல!

தெரிந்தே தியாகம் செய்யும் அம்மையின் எல்லையில்லா அன்பு அது…

மரத்தின் மேல் சந்தோசக் கிறுகிறுப்புடன் பரபரத்துத் திரியும் கரு எறும்புகள். பிள்ளையார் எறும்புகள் என்பார்கள். மேலே ஊறும். கடிக்காது. செவ்வெறும்புகள் கெட்ட ஜாதி. கடிச்சால் கை தடித்து விடும்.

சிவ பெருமானிடம் தப்பா வரம் வாங்கியவை அவை, என்கிறதாக ஒரு கதை கேட்டிருக்கிறார். மனுசாளை எதிர்த்து அவை சிவ பெருமானிடம் ஒரு வரம் கேட்டன. நாங்க மட்டுந்தான் லோகத்தில் இருக்கணும், மனுசாளால் எங்களுக்கு ஒரே தொந்தரவு… என்றன. என்ன வரம் வேண்டும், என்றார் கடவுள். அவசரத்தில், நாங்க கடிச்சா சாகணும், என அவை வேண்டின. தந்துவிட்டார் கடவுள்.

அடுத்த முறை அவை போய் மனுசனைக் கடித்தபோது அவன் ஒரே அடி, எறும்பு செத்துப் போனது. கடிச்சால் யார் சாகணும், என்று அவை சரியாக வரம் கேட்டிருக்க வேணாமோ?… முருகனின் டீச்சர் சொன்னாள் இந்தக் கதையை. சொல்லும் போதே அவனுக்குச் சிரிப்பு. பள்ளிக் கூடத்தில் நல்ல நல்ல கதையெல்லாம் சொல்லித் தருகிறார்கள்…

இடுப்பு பெருத்து மேலேற ஏற சிறுத்துக் கிடந்தது மரம். கிளைகள் சிறிதாகிக் குச்சிகளாய் முடிந்தன. கணுக்களில் இலைகள். அவற்றின் தீக்கொழுந்து நுனிகளின் பளபளப்பு. சளிப் பளபளப்பு அது. கொத்தாய் வேப்பங் கொட்டைகள். முத்த முத்த கனியக் கனிய அவை உள்கொளகொளப்புடன் பளிங்குத் தன்மை பெறுகின்றன. வேப்பங்காய் ச்சை கசப்பு, வாயில் வைக்கேலாது. பழம் நல்ல ருசி. ஆச்சர்யங்களை வைத்திருந்தது மரம். க்ரீச் க்ரீச் என்று அணில் வாலை மரத்தில் அடித்து அடித்து உள்வயிறு அதிர சப்தமெழுப்புகின்றன.

தொலைவில் இருந்து பார்க்கையில் அந்த மரம் வாத்தியார் போலவும் கீழே வயல் நாத்துகள் பிள்ளைங்கள் போலவும் காணும்.

டிரில் வாத்தியார். அவர் ஆணைக்கு இடப்புறம் வலப்புறம் ஒருசேரத் தலையாட்டும் நாத்துகள்.

அந்த நாத்துகள் முன் மரம், தாவரங்களின் தலைவன் போல கம்பீரமாய் நின்றிருந்தது. அங்கங்கே சிறு பட்டைவெடிப்புகளில் வஜ்ரம் ஊறியிருந்தது. தண்ணிப்பசை இறுகிக் கெட்டிப்பட்டு கோந்து திரண்டிருந்தது. அதிலும் ஒரு ஆரஞ்சுத் தனமான கோலி குண்டுப் பளபளப்பு காணும். முருகன் கோந்தைத் திரட்டி வருவான். வேப்பம் பிசின் போல ஒட்ட வேறு கோந்து உலகில் இல்லை. மரத்தில் கோந்துக்கொத்தை ஒரு தீக்குச்சி உரசிப் பற்ற வைத்தால் உஸ்ஸென்று ஒரு பைத்தியச் சிரிப்பு சிரிக்கும். முருகனுக்கு அதைக் காண ஆனந்தம்.

”மரத்தை இம்சை பண்ணாதடா” என்பார்.

ஒரு ராத்திரி அந்த மோசமான நிகழ்ச்சி நடந்தது. வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இருபத்திநாலு மணி நேரமும் அதில் எதாவது இருந்துகொண்டுதான் இருக்கிறது. போட்டதையே திருப்பியாவது போடுகிறார்கள்… சிலோனில் குண்டு வெடித்தது என்கிறான்கள், பழைய நியூசா இப்ப புதுசா தெரியவில்லை. சிலோனில் குண்டு வெடித்துக்கொண்டே இருக்கிறது…

”லிங்கம்?” என்று வாசலில் பதட்டக் குரல். மேல வயல் லிங்குசாமி. வயக்காட்டில் ராத்திரி தண்ணியிறைக்க என்று போனவன் பதறி ஓடி வந்திருந்தான். ”என்னடா பாம்பு கீம்பு புடுங்கிட்டதா…” என்று வெளியே வந்தார்.

”ல்…” என்னுமுன் மூச்சிறைத்தது. அவனே பாம்பாய் மூச்சு விட்டான்.

”ஆக்சிடெண்டா?”

”எவனோ குடிகார டிரைவர் கம்னாட்டி வண்டில தடுமாறி…”

இது புது செய்தி, என்று டி.வி.யை அணைத்தார். ”என்னாச்சி?”

அதற்குள் அவர் ஆசுவாசப் பட்டிருந்தார். ”நல்ல போதை போல டிரைவர். வண்டில நிதானப்பட முடியல. வண்டி நேரா மரத்ல மோதி…”

”ஐயோ மரத்துக்கு என்னாச்சி?” என்றார் பதறி.

வயலை நோக்கி ஓடினார்கள்.
(நன்றி : யுகமாயினி மாத இதழ் – இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது)

About The Author