திசை தெரியாத காற்று

முதலிரவு அறை. அடர்த்தியாக குளிர் பரவியிருந்தது. கிறக்கமூட்டும் பூக்களுடன், மெத்தை முதல் காட்சிக்கு தயாராய் இருந்தது. அந்த அறை மேல் நாட்டு தொழில் நுட்பத்தில் உள்ளே குண்டு வெடித்தாலும் வெளியில் கேட்காத அளவுக்கு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனந்த் கற்பனைகளோடு ஆவலாய் காத்திருந்தான், தன் புது மனைவியை எதிர்பார்த்து. அவள் வர தாமதித்தாள். அவளை எதிர்பார்த்து காத்திருப்பது வெறுப்பாக இருந்தது.

உடை மாற்றி அலங்காரம் பண்ணிக்கொண்டு வெகு நேரம் கழித்து அவள் அந்த அறைக்கு இரண்டாவது முறையாகப் புறப்பட்டாள். அசையும் பொம்மைபோல தலை குனிந்து சென்ற அவளது கரங்களில் ஒரு கண்ணாடி டம்ளரில் பால் இருந்தது.

முதல் முறை அந்த அறைக்குள் எதற்கு போனோம் என்பதை நினைத்தபோது உடல் குலுங்கி சிலிர்த்தது. சுதாரித்துக்கொண்டு சாத்தியிருந்த கதவை மெல்ல விலக்கினாள். உள்ளே தரையில் ஆனந்த் படுத்திருந்தான், பிணமாய். அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்து ஒரு அடிக்கு மேல் தரையில் படர்ந்திருக்க, அவன் கையில் துப்பாக்கி ஒன்று இருந்தது. சுவற்றில் புல்லட் ஒன்று சீறிப் பாய்ந்த தடம் தெரிந்தது.

ஓ..வென்று காது பொத்தி கதறினாள். அவள் கொண்டு வந்த பால் டம்ளர் அந்த அறை வாசலில் விழுந்து நொறுங்கியது. பால் வழிந்து ரத்தத்தோடு கலந்து சைவ பால் அசைவமாகிக் கொண்டிருந்தது. அவள் அலறியது அந்த வீடு முழுவதும் எதிரொலிக்க, அந்த பங்களாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து ஓடி வந்தனர். அவள் கதறி அழுதவாறு சுவரில் சாய்ந்திருந்தாள். ஒவ்வொருவராய் வெளியிலிருந்து உள்ளே எட்டி பார்த்தனர். எவரும் உள்ளே பிரவேசிக்கவில்லை. அவனது அம்மா உள்ளே போக முற்பட்டாள். அவளை சிலர் சமாதானப்படுத்தி இழுத்துக்கொண்டு போயினர்.

ஒருவர் போலீசுக்கு தகவல் சொல்ல, அந்த தெருவையே எழுப்பியது போலீஸ் சைரன். எல்லோரும் புது மாப்பிள்ளை முதலிரவு அறையில் தற்கொலை செய்து கொண்டதை ஆச்சரியம் கலந்த பயத்தோடு பேசிக்கொண்டார்கள்.

ஒரே ஒரு புல்லட் அந்த கல்யாண வீட்டை சாவு வீடாக மாற்றியிருந்தது. நந்தினி மட்டும் ஓயாமல் அழுதுகொண்டிருந்தாள். போலீஸ் அவளையும் விசாரித்தது. "நான் பால் டம்ளரோடு உள்ளே வந்து பார்த்தபோது அவர்……" என்று வாய் பொத்தி மறுபடியும் அழுதாள்.

போலீஸ் வெவ்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியது. அதை தற்கொலை என ஆழமாய் நம்பியது.

"கன்பார்ம் சூசைடு தான். உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"

" இல்லை "என்றார் ஆனந்தின் அப்பா.

"சார் போஸ்மார்ட்டம் முடிந்து நாளைக்கு காலையில பாடிய எடுத்துறலாம். எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.

அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு ’தொழிலதிபர் மகன் ஆனந்த் முதலிரவு அறையில் தற்கொலை’ என சூடாக செய்தி போய் சேர்ந்திருந்தது. அது தற்கொலை என எல்லோரும் நம்பியதில் நந்தினி உள்ளுக்குள் ஆர்ப்பரித்தாள்.

"எத்தனை அட்டூழியம். எல்லாம் பணம் இருக்கும் திமிர் தானே. இவனைக் கொன்றதில் என்ன தவறு. என்னை ரமேஷ் உயிருக்கு உயிராய் காதலித்தான். ஒரு நாள்.. இதோ மூளை சிதறி இறந்து கிடக்கிறானே இந்த பணக்கார நாய், இவன் தன் காரில் வந்து என் மீது மோதினான். மோதிய மாத்திரத்தில் என் மீது மோகம் வந்ததாம். எத்தனை அதிகாரம் செய்தான். என் வீட்டில் இருப்பவர்களை மிரட்டி.. என் காதலனின் வீட்டாரை ஊரை விட்டே விரட்டி… என் அப்பாவை பணத்தால் மயக்கி ஒரு கூண்டுக்கிளியாய் முகூர்த்த நேரம் பார்த்து சிறை பிடித்தானே…. இதோ அவன் ஆணவம் ரத்தமாய் உருகி வெளியேறிக்கொண்டிருக்கிறது."

"இதோ நான் போகப்போகிறேன். ரமேஷ் எனக்காக ஏதாவது ஒரு ஊரில் காத்திருப்பான். தாடி வளர்த்திருப்பான். சரியாக சாப்பிடாமல் இருப்பான். குடிக்க தொடங்கியிருப்பானோ? அவனைக் காப்பாற்ற வேண்டும். அவனிடம் உரக்க சொல்ல வேண்டும், உன்னை என்னிடமிருந்து பிரித்தவன் மடிந்துவிட்டான்; உன் தெய்வீக காதலை அணு அணுவாய் கொன்றவன் அழிந்துவிட்டானென்று.“

"என்னை சிறை பிடித்தவன் கை விரல் கூட உனக்காக வளர்த்த இந்த தேகத்தை தீண்டியிருக்கவில்லை. அந்த மிருகத்திடமிருந்து என்னை நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன், உனக்காக. „
ரமேஷிடம் மானசீகமாய் சொல்லிக் கொண்டாள்

„ரமேஷை தேடி கண்டுபிடிப்பேன். உலகில் ஏதோ ஒரு மூலையில் எனக்காக உருகி உருகி இந்த இரவில் அழுது கொண்டிருப்பான். அவனைத் தேடிப்போக வேண்டும். அவன் என்னை ஏற்றுக்கொள்வான். இவனை கொன்றுவிட்டதாக சொன்னால் என்னை தூக்கி கொண்டாடுவான். „
அவன் முதல் முதலில் பரிசாய் கொடுத்த மோதிரம் கை விரல்களில் அவன் நினைவுகள் போல் இறுகியிருந்தது."

அடுத்த நாள் அவளின் ஒரு நாள் கணவனின் உடலை ஆம்புலன்சில் கொண்டு வந்தார்கள். நடு ஹாலில் கண்ணாடிப் பெட்டியில் அவன் உடல் வெள்ளைத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. நந்தினி மெல்ல வந்து அதன் அருகில் அமர்ந்தாள். உள்ளுக்குள் பழி தீர்த்த சந்தோஷம். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென்பதற்காய் அழுதாள்.

எல்லோரும் இவளை பரிதாபமாய் பார்த்தார்கள். அவளது மனம் ரமேஷை தேடி எப்போது எப்படி எங்கே போவதென்பதையே சிந்தித்துக்கொண்டிருந்தது . ஒவ்வொருவராய் வந்து மலர் வளையம் வைத்தார்கள். தலை குனிந்து அழுதாள். அழுவதாய் நடித்துக் கொண்டிருந்தாள். நீண்ட வரிசையில் ஆட்கள் மாலையோடு காத்திருந்தார்கள்.

திடீரென கூட்டம் விலகி யாருக்கோ வழிவிட்டது. நந்தினி தலை உயர்த்தி பார்த்தாள்.

ரமேஷ்.

அவன் கையில் ஒரு மலர் வளையம் வைத்திருக்க, அவன் பின்னால் ஒட்டியபடி ஒரு பெண் வந்தாள். அவள் கழுத்தில் புதுத் தாலி இருந்தது. அவன் மௌனமாய் வந்து கண்ணாடி பெட்டியின் மீது மலர் வளையம் வைத்தான்.

அவன் பின்னால் வந்த பெண் "அண்ணா என்ன விட்டுட்டுப் போயிட்டியே" என அந்த கண்ணாடி பெட்டியில் இடித்து அழுதாள். ரமேஷ் நந்தினியை ஒரு முறை பார்த்தான். அந்தப் பார்வை "உன்னை விட்டுக்கொடுத்து தான் இவன் பணக்கார தங்கையை வாங்கினேன்" என்றது.

அவளது கணவன், தான் இறந்ததற்கான காரணம் தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தான்.

About The Author

1 Comment

  1. ullathil irundhu

    ரஜேஷ்குமார் நாவல் மாதிரி கொண்டு போயிருக்கீங்க.

    உங்களின் குறும் கிரைம் கதைகள் மிக அருமை

Comments are closed.