திருக்குறள் உணர்த்தும் உரிமைகள்!

உணர்வுகளைப் புண்படுத்துதல் மனித உரிமை மீறல் ஆகும் :

மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்.

"இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது". (குறள் 99)

பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

எழுத்து / பேச்சுரிமை

மனித உரிமைகளுள் முக்கியமான ஒரு உரிமை தன் கருத்துக்களை எழுத்து, பேச்சு மூலம் வெளிப்படுத்துவது. இது இல்லையெனில், மற்ற உரிமைகளும் பயனற்றுப் போகும். மனிதனுக்குச் சொல்லுரிமை இருக்கிறது என்று கூறும் திருவள்ளுவர், அத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வழி காட்டுகிறார்.

"சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இனிமை அறிந்து". (குறள் 645)

தான் சொல்லுகின்ற சொல்லை வெல்லக் கூடிய வேறு ஒரு சொல் எதுவும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்னரே சொல்ல நினைத்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

"சொலல் வல்லன் சோர்வு இலான் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது" (குறள் 647)

எதையும் சொல்லுவதில் வல்லவனாகவும், மறதியும், சோர்வும் இல்லாமல் சொல்லுபவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் உள்ள சொல்வன்மைமிக்கவனை யாராலும் வெற்றி கொள்ள முடியாது.

நீதி பெறும் உரிமை:

உலக மனித உரிமைப் பிரகடத்தின் 7, 8 பிரிவுகளின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்புரிமை படைத்தவர். எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அடிப்படை உரிமைகள் சட்டப்படி அளிக்கப்படவும், அவை மீறப்படும் பொழுது தகுதி வாய்ந்த நீதி அமைப்புகளின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் உண்டு.

"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்". (குறள் 388)

நீதி நெறி முறைகள் தவறாமல் குடிமக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை மக்கள் ஒப்பற்ற தெய்வமென மதித்துப் போற்றுவர்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், நீதியைப் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நிலை நாட்டுவது அரசின் கடமை எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். மக்களும்கூட நடுவு நிலைமை தவறாது வாழ வேண்டும் என்று அறத்துப்பால் "நடுவு நிலைமை" அதிகாரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.

கல்வி உரிமை

கல்வியின் சிறப்பை அனைவரும் அறிவோம். எனவே அரசு கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தல் வேண்டும். அதை இந்திய நடுவண் அரசு சட்டமாக இயற்றியுள்ளது பற்றி இந்தியர் அனைவரும் பெருமைப்படலாம். அதை முழுமையாக ஏற்று வெற்றி அடையச் செய்ய வேண்டியது மக்கள் கடமை. அது ஒரு மனித உரிமையாகக் காக்கப்பட வேண்டும்.

கல்வி கற்றலின் இன்றியமையாமையை ஓர் அதிகாரம் முழுமையும் விளக்கியுள்ளார். கல்லாதலினால் ஏற்படும் கேட்டினையும் வள்ளுவப் பெருந்தகை தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்வி இன்னாருக்குத்தான் உரியது என்று வறையறுக்காது, அனைவருக்கும் பொது என்று விளக்குகிறார்.

"யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு". (குறள் 397)

கற்றவர்களுக்குத் தன் நாட்டையும் ஊரையும் போலவே பிற நாடுகளும் ஊர்களும் உரிமை உடையவனவாகும். அப்படி இருக்க ஒருவன் சாகும்வரை கற்காமல் காலத்தை வீணாக்குவது ஏன்?

என்று வியக்கிறார் வள்ளுவர்.

"கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை". (குறள் 414)

ஒருவன் கற்கவில்லையென்றாலும் கற்றவர்கள் சொல்வதைத் தவறாமல் கேட்டறிய வேண்டும். அது அவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போன்று துணையாய் அமையும். கேடில் விழுச்செல்வம் கல்வி அனைவருக்கும் உரியது; ஒருவன் அனைத்து முயற்சியும் செய்து கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற சீரிய சிந்தனையைக் காண்கிறோம்.

(தொடரும்)

About The Author