திருக்குறள் உலகப்பொதுமறையா? – சில சொல்லாடல்கள் (3)

பெண்ணிற்கு எதிரானவரா திருவள்ளுவர்?

திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றது; ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. ’தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில் சிறக்கலாம்’ என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ’பெண் வழிச் சேரல்’ அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்: பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது; அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்காது; அவனால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ’பெண் சொல் கேளேல்’ என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர் மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான ‘பெண் சொல் கேளேலைப்’ பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின் அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர். பொருளை விரும்பும் பெண்கள் இருந்தனரே அன்றி, பொருளுக்காக ஆடவரை விரும்பும் பெண்கள் பற்றிய குறிப்புகள் குறளில் இல்லை. குடும்ப அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டினை அறமாக திருவள்ளுவர் வலியுறுத்துவது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான அம்சமாகும். மகளிர் நிறை காக்கும் கற்பினை முதன்மைப்படுத்தும் வள்ளுவர், ஆடவர் நிறை பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தாராளமாக அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார்!

ஆண் சார்பு நிலைக் காமத்துப் பால்

ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும் பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் ’கற்பு’ என்ற சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

வள்ளுவரின் ஆண் – பெண் பாலுறவு குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும்; பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. ’கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள’ என்ற குறள் ஆண் மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அடித்தளமாகும்.

ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை ‘காமம்’ பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

"தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும் மனமுமிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள் கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன் பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப் பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப் பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.

கல்வியின் சிறப்பைச் சொல்லும் குறள்

சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர் குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின் சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார். கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர், மேலும் அவனை ’விலங்கு’ எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன் பேச முயலுவது, ’முலை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டது போல’ எனக் கண்டிக்கிறார். ’பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன’ என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும் உரித்தானது என்ற சநாதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர், தனது அறக்கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில் பாதிப்பை ஏற்படுத்திட முயன்றுள்ளார்.

(அடுத்த இதழில் முடியும்)

About The Author

1 Comment

  1. narmu

    மிக நன்று. நடுநிலையான, ஆழமான பார்வை. இது போன்ற கட்டுரைகளை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்

Comments are closed.