துகிலுரிக்கும் பாண்டவர்கள் !

கல்பனாவுக்கு அவளுடைய தோட்டத்தின் மீது மிகுந்த ஆசை உண்டு. அந்த சிறிய தோட்டத்தில் எல்லாமே அவள் கையால் நட்டு வளர்த்த செடிகள். வீட்டின் முன்புறத்தில் ஒரு பாத்தி நிறைய வெண்டை. ஒரு பாத்தி நிறைய தக்காளி. மறுபுறத்திலே ஒன்றில் கத்திரிக்காய்ச் செடிகள்; மற்றொன்றில் மிளகாய்ச் செடிகள். எதிர்ப்புறத்தில் சற்றே இடைவெளி விட்டு நான்கு காலிஃப்ளவர் கொடிகள். ஓர் ஓரமாகக் கறிவேப்பிலைக் கன்று ஒன்றே ஒன்று மட்டும்! அள்ளித் தெளித்த வகையிலே மசமசவென்று கொத்துமல்லிச் செடிகள். வீட்டிற்குப் பின்பக்கத்திலே நல்ல இடைவெளி விட்டு இரண்டு மாங்கன்றுகளும் இடையே ஒரு வாழையும் என்று பார்த்துப் பார்த்துக் கவனமாகச் செய்து வைத்திருந்தாள்.

எல்லாச் செடிகளுமே நாற்றாக வாங்கி வைத்த உடனேயே வளரத் தொடங்கி விட்டன. கறிவேப்பிலை மட்டுமே சற்றுப் பிடிவாதம் பிடித்தது. இரண்டு முறை பக்கத்து வீட்டிலிருந்து கன்றுகளை வாங்கி வந்து நட்டும் செடி தழைக்கவில்லை. மரித்துப் போய் விட்டது! மிகவும் சங்கடப்பட்டுப் போனவள் மூன்றாவது முறையாகக் கன்றை வாங்கி வந்து, சுவாமி படத்துக்கு விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு, வாயில் சுலோகங்களை முணுமுணுத்தபடியே நட்டு வைத்தது, இன்றைக்குத்தான் நடந்ததைப் போலிருக்கிறது.

பின்பக்கக் காம்பௌவுண்ட் சுவரோரமாகச் செழித்து வளர்ந்திருக்கும் மாமரம் மட்டும் இந்த வீட்டை வாங்கிய அன்றே அம்மா தன் கையால் நட்டு வைத்தது. "அம்மா" என்று நினைத்த மாத்திரத்தில் கண்கள் பனித்தன கல்பனாவிற்கு. "அம்மா நட்டு வைத்த மாமரம் மட்டும் இன்றைக்கும் இங்கேயே இருக்கிறது. அம்மாதான் இல்லை!" என்று விக்கித்தவளுக்குத் தாய் கண் முன்னே தோன்றி மறைந்தாள். "எத்தனை பிரியமானவள் ந! உனக்கு அன்பையும் ஆதரவையும் தவிர வேறு எதுவுமே தெரிந்திருக்கவில்லையே!" என்று வியந்தாள்.

இடைவிடாமல் அப்படி அன்பைக் கொட்டிய தன் தாய்க்குத் தான் திருப்பித் தந்தது என்ன? தீராத துக்கமும் மாளாத துயரமும்தானே?! எல்லா அம்மாக்களுமே அப்படித்தான் இருப்பார்களோ என் அம்மா மாதிரி!… என்னை மாதிரி எல்லாக் குழந்தைகளுமே அம்மாக்களின் மனதை நோகடிக்கத்தான் பிறக்கிறார்களோ!… என்னை மாதிரி… என் மகள் அனுவை மாதிரி…!?

"நிசி சர பதி சம்க்ஷ்யம் விதித்யா
சுர கண மத்யே கதோ வச: த்வரேதி"

என்ற அப்பாவின் கணீர்க் குரல், தோட்டத்தில் நின்றிருந்த கல்பனாவை நிலைக்குத் திருப்பியது. ஆதித்ய ஹிருதயம் முடிந்து விட்டது. "விரைந்து செயல் படுக!" என்று சூரிய பகவான் ராமரிடம் சொல்லியாகி விட்டது. இனி இரண்டு நொடிகளில் கற்பூர ஹாரத்திதான். சற்றே விரைவாகப் பூஜையறையை அடைந்தாள். ஆறடிக்கு உயர்ந்திருந்த அப்பா திருப்தியோடு தன் இஷ்ட தெய்வங்களுக்கு தீபாராதனை காட்ட ஆரம்பித்திருந்தார். சுடர் விட்டு எரியும் இரண்டு விளக்குகள்… மணக்கும் சாம்பிராணி, ஊதுபத்திகள்… காற்றில் கரைந்து கொண்டிருக்கும் கற்பூரம்… பளீரென்று அவர் நெற்றியிலே ஒளிரும் விபூதி, ஜ்வலிக்கும் குங்குமம் என்று அந்த அறையே தெய்வீகமாப்பட்டது!

காற்றில் அலையும் கற்பூர ஒளியைத் தொட்டு பக்தியோடு கண்களில் ஒற்றிக் கொண்டாள் கல்பனா. மந்திர புஷ்பம் சொல்லி, மலர் தூவி நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார் அப்பா. அறை வாசல்படி அவர் பாதத்தில் இடித்தது. சின்ன வீடு! ஊரெல்லாம் கடன் பண்ணிக் கொள்ளாமல் அப்பா கட்டிய வீடு! அவருடைய மனசைப் போலவே ரம்மியமான வீடு! ஒரே செல்லப் பெண்ணான தனக்காக வேண்டியே ஊஞ்சல் கட்டி வைக்கப்பட்ட வீடு. அவள் கேட்டு எதையுமே இல்லை என்று அப்பா சொன்னதாக அவளுக்கு ஞாபகமே இல்லை. ஆனால் அப்பாவால் கொடுக்க முடியாத ஒன்றைக் கேட்டு வற்புறுத்தியது தன்னுடைய தவறு மட்டுமே! இதற்கு அம்மாவோ அப்பாவோ எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று இப்பொழுது நினைத்துக் கண் கலங்கினாள் கல்பனா.

காலம் கடந்த ஞானம்! எல்லாமே முடிந்து வெகு காலமான பிறகு! அழகான அந்தச் சின்னஞ்சிறு குடும்பத்தின் அமைதியும், ஆனந்தமும் பறிக்கப்பட்டு விட்ட பிறகு! மென்மையான அந்த இதயங்கள் மிருகத்தனமாகப் பிசையப்பட்ட பிறகு! அது எப்படி அவ்வாறு நேர்ந்தது என்று இப்பொழுதும் எண்ணி வியந்தாள் அவள். எப்படி! அதிர்ந்தே பேசத் தெரியாத அந்த அன்பு உள்ளங்களைக் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் எட்டி உதைக்க எப்படி முடிந்தது என்னால்? எது?… எது என்னை அந்த நிலைக்குத் தள்ளியது?!

சங்கிலித் தொடராக எண்ணங்கள் வந்து முட்டி மோத, மூச்சுத் திணறிப் போனாள் கல்பனா. பூஜை முடிந்து, வேறு உடைக்கு மாறி, ஹிண்டு பேப்பரோடு ஈஸி சேரில் சாய்ந்து விட்டார் அப்பா. அவர் எழுந்திருக்க இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். இன்னும் முக்கால் மணி கழித்து இட்லிக்கு ஊற்றி வைத்தால் போதும். சாவகாசமாகப் பிறகு பதினோரு மணிக்குச் சமையலை ஆரம்பிக்கலாம். நிறைய நேரம் இருக்கிறது. பள்ளிக் குழந்தையின் குதூகலத்தோடு மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்தாள் கல்பனா. தினமும் ஒரு மணி நேரமாவது தோட்டத்தில் செலவழித்தாக வேண்டும் அவளுக்கு. ஒவ்வொரு பாத்தியாகக் கொத்தி மணலைப் புரட்டிப் போடுவாள். செடிகளுக்கு இடையே வளர்ந்திருக்கும் களைகளை மிகவும் கவனமாகப் பிடுங்குவாள். நேற்றைக்கும் இன்றைக்கும் செடிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வியப்பாகப் பார்ப்பாள். தினமும் மாமரத்திற்கென்றே தனியாகப் பத்து நிமிடங்களாவது கண்டிப்பாக உண்டு. அதைப் பார்க்கும்பொழுதும், கைகளால் தொடும்பொழுதும் தன் தாயையே பார்ப்பது போலவும், தொடுவதைப் போலவும் உணர்வாள் அவள். மனம் விட்டுச் சற்று நேரம் பேசுவது கூட உண்டு சில நாட்களில்.

உயிருக்குயிராக நேசித்த இந்தத் தோட்டத்தை விட்டுப் போவதற்குக் கூட அவள் துணிந்திருந்தாள் அப்போது. பாசத்தைக் கொட்டி வளர்த்த அப்பா, அம்மா, பார்த்துப் பார்த்துத் தானே வளர்த்த இந்தத் தோட்டம் எல்லாமே துச்சமாகப்பட்டது அவளுக்கு! மோகன் மட்டுமே எல்லாமுமாகத் தெரிந்தான். மிகப் பிரம்மாண்டமாக அவள் கண் முன்னே விரவிப் பரந்திருந்தான் அவன்! தான் படித்த படிப்பு கூட அந்தச் சமயத்தில் தன் அறிவுக் கண்ணைத் திறக்கவில்லையே என்று வியப்பாக எண்ணிப் பார்த்தாள் கல்பனா. எப்படி அது சாத்தியம்? எல்லாமே, உலகமே மறந்து போக, வேறு எதைப் பற்றிய சிந்தனையும் துளிக் கூட இல்லாமல் ஒரே நினைவாக, ஒரே பிடிவாதமாகப் போனது எப்படி? வீட்டில் கொட்டிக் கிடந்த அன்பும் பாசமும் பொய்யாகப்பட்டது எப்படி? எது தன் கண்ணைக் கட்டி இருட்டில் அப்படி அழைத்துப் போனது? எவ்வளவோ வருடங்களாகியும் அவளுக்குப் புரியாத புதிர் அது.

மாமரத்தைக் கைகளில் தொட்டபடி கண் மூடி ஒரு வினாடி தன் தாயைத் தியானித்தவள், விழி பிரித்து அண்ணாந்து பார்த்தாள். சருகாய்ப் போன பல இலைகள் உதிர்ந்து விட்டிருக்க, தரையெல்லாம் காய்ந்து போன இலைகள்! முதன் முதலாய் இப்படி இலைகள் உதிர்ந்து போன பொழுது பயந்து போனாள் கல்பனாவின் குழந்தை அனு.

"என்ன தாத்தா இது? எல்லா இலையும் கொட்டிப் போச்சே! அவ்வளவுதானா இந்த மரம்?" என்று அவள் கேட்டதும், "ஏய் என்ன பேச்சிது? அப்படி எல்லாம் சொல்லக் கூடாது!" என்று தான் பதறியதும் கல்பனாவிற்கு இன்றைக்குத்தான் நடந்ததைப் போல ஞாபகம் இருந்தன.

"ஏய்! அவ வாயை ஏன் அடைக்கிறே?" என்ற அப்பா அனுவிடம், "அனுக் குட்டி! எல்லா இலையும் கொட்டிப் போச்சோல்லியோ? பாத்துண்டே இரு! கொஞ்ச நாள்ல மறுபடியும் பச்சைப் பசேர்னு எல்லா இலையும் முளைச்சிடும்."

"எப்படித் தாத்தா? இப்பிடியே, இதே மாதிரி இலையே மறுபடியும் வருமா? இல்லேன்னா வேற மாதிரி இலையா?" என்று பத்து வயது அனு கேட்கவும், "இதே மாதிரிதாண்டா கண்ணா! எப்படிப் போச்சோ அதே மாதிரி மறுபடியும் வந்திடும். எல்லாம் அதே மாதிரி. திரும்பத் திரும்ப அதே மாதிரிதான். நடந்ததே நடக்கும். ஹிஸ்டரி ரிபீட்ஸ்!" என்று சொன்ன அப்பா அதே வார்த்தையை மறுபடியும் சொல்ல நேர்ந்தது பனிரெண்டு வருடம் கழித்து!

"உனக்கென்னம்மா தெரியும் இதைப் பத்தியெல்லாம்? நீ சுத்தப் பட்டிக்காடு. லவ்வுன்னா என்னானு உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது தெரியுமா?" என்று இருபத்தி இரண்டில் கண்கள் சிவக்க அனு கேட்டபொழுது அப்பா உள்ளேதான் இருந்தார். பளாரென்று தன் மகளை அறையத் துடித்தாள் கல்பனா. "அடிப் பைத்தியமே! கானல் நீரை நம்பாதே!" என்று எப்படி அவளுக்குச் சொல்லிப் புரிய வைப்பது? "உன் மனசை மறைப்பது ஒரு போலித் திரை! அது வெறும் மாயம். யாரும் சொல்லி அது உனக்குப் புரியப் போவது இல்லை. அனுபவம்! எஸ்! அனுபவம் மட்டுமே இதற்கு வேண்டும். இது பிரசவம் மாதிரி! எழுத்திலும் நடிப்பிலும் கொணர்ந்து விட முடியாது! நான் பெற்றவள்! அந்த அனுபவத்தை வாழ்விலே உணர்ந்தவள்!" என்று கதறினாள் கல்பனா. ஆனால் அனு நிற்கவில்லை. தன் தாய் செய்ததையே மகளும் செய்தாள்.

கோபமும் அவமானமும் கொப்பளிக்கத் தந்தையின் பரந்த மார்பில் தஞ்சம் புகுந்தாள் கல்பனா. அவ்வளவு காலமாகத் தன் பெண்ணின் மீது தான் வைத்திருந்த அன்பை, ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, ஒரே நொடியில் அவள் கேவலப்படுத்தி விட, மிகப் பெரும் அவமானம் தன்னை அழுத்துவதை உணர்ந்தாள். பெரிய சபையிலே நிர்வாணப்படுத்தப்பட்டு விட்டதைப் போல… பாஞ்சாலியைப் போல! ஆனால் பாஞ்சாலி கோபப்பட்டாள். சூளுரைத்தாள். ஏனென்றால் அவளை அவமானப்படுத்தியவர்கள் கெளரவர்கள். அதுவே பாண்டவர்களாகவே இருந்திருந்தால்…!? கல்பனாவால் சூளுரைக்க இயலவில்லை. யாரையும் வீழ்த்த அவள் விரும்பவில்லை. ஆசை ஆசையாய் வளர்த்த பெண் கொடுத்த அவமானம் அது.
கடந்த காலத்தில் இதைப் போலவேதானே தன் பெற்றோரும் பட்டிருப்பார்கள் என்று அந்த வினாடியிலே புரிந்து கொண்டாள் கல்பனா. இதை, இந்த அவமானத்தை, உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும், புரிய வைக்க முடியாது என்பதும் அவளுக்குப் புரிந்தது.

கண்களில் பெருகும் கண்ணீரோடு தந்தையைக் கட்டிக் கொண்டபொழுது அவரும் தன் மீது நெருப்பள்ளிக் கொட்டுவார் என்று பயந்தாள். "நீ செய்தாய் நான் பட்டேன். இப்போது உன் மகள் செய்து விட்டாள். நீ படு!" என்று அவரும் தன்னைக் குத்திக் காட்டுவாரோ என்று பயந்தாள். ஆனால் ஒரு குழந்தையைப் போலவே அன்றைக்கும் கல்பனாவை இறுக்கக் கட்டிக் கொண்டார் அவள் தந்தை. அன்புடன்! ஆதரவுடன்!

"பயப்படாதே கல்பனா! அனு படிச்சவோ, புத்திசாலி. பொழைச்சிண்டிடுவோ!" என்று தன் மகளின் பாசத்துடிப்பைக் குறைக்கத்தான் முயன்றாரே தவிரக் குத்திக் காட்டவில்லை அந்தப் பெரியவர்.

"அப்பா! நீங்க அடிக்கடி சொல்வேளே? அது மாதிரி, ஹிஸ்டரி ரிபீட்ஸ்!" என்று நீர் கோர்த்த கண்களோடு தன் தந்தையை நோக்கினாள் கல்பனா. "சீ பைத்தியம்! அந்தப் பேச்சை விடு இத்தோட!" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

இந்த எழுபத்தைந்து வயதிலும் தனக்காகவே வாழும் தன் தந்தையைப் பெருமையுடன் எண்ணிப் பார்த்தாள் கல்பனா. பெற்றவர்களுக்குத் துரோகம் செய்து விட்டுக் கல்பனா வெளியேறிய இரண்டு மாதங்களிலேயே படுக்கையிலே கிடந்து முடிந்து போனாள் அவள் தாய். தான் நம்பியது வெறும் கானல் நீர் என்று உணர்ந்து கல்பனா இறுதியாக வீடு திரும்பியபொழுது அவள் கையில் குழந்தை அனு! தன் தாய் உலகத்திலே இல்லை என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டாள் கல்பனா. படாரென்று விழுந்து பாண்டிய மன்னன் மாதிரி உயிரை விட்டு விட மாட்டோமா என்று துடித்தாள். தன் தாயின் கையால் நடப்பட்டு அங்குலம் அங்குலமாக வளர்க்கப்பட்ட மாமரத்தைக் கட்டிக் கொண்டு அழுதாள். அதற்குப் பொட்டிட்டாள். கோலமிட்டு விளக்கேற்றினாள். இதென்ன துளசிச் செடியா கொண்டாடுவதற்கு என்ற கேலியைக் காதில் கேட்டாள். "இல்லை! துளசி இல்லை. ஆனால் மா… அம்மா!" என்றாள். எனக்காக, என்னைப் பார்ப்பதற்காக என் வீட்டில் நின்று கொண்டிருக்கும் என் தாய் என்றாள். சில சமயங்களில் அந்த மரத்திற்கு அம்மாவின் புடவையும் சாத்தி விட்டாள்.

எண்ணக் குவியல்களில் கண்கள் பனித்துப் போய் உடல் சிலிர்க்கத் தோட்டத்தில் நின்றிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு.

"அம்மா கல்பு! பசிக்கறதே!" என்ற அப்பாவின் குரலைக் கேட்டுப் பரபரப்புடன் புடவைத் தலைப்பில் கண்களைத் துடைத்தபடித் தன்னைச் சூழ்ந்திருந்த எண்ணங்களிலிருந்து மனமில்லாமல் பிரிந்து சென்றாள். மாவை ஊற்றி இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு, மிக்சியில் சட்னிக்கு அரைத்தாள். தாளித்து விட்டு, மேசையைத் துடைத்துத் தட்டை மேசை மேல் வைத்து விட்டு இட்லியை எடுத்தாள். "ராம ராமா!" என்று அப்பா நாற்காலியில் உட்காரவும், அவர் தட்டில் சூடான இட்லிகள் ஜனிக்கவும் சரியாக இருந்தது. இரண்டாவது இட்லியை அவர் எடுக்கும்பொழுது வாசல் கேட்டை யாரோ திறக்கும் சப்தம் கேட்டது.

"யாருன்னு பாரும்மா!" என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே கை ஈரத்தைத் துடைத்தபடி, புருவத்தில் கேள்விக்குறியோடு, வெளியே வந்த கல்பனாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. கையில் ஒரு பெட்டியோடு வந்து கொண்டிருந்தது… அவளுடைய செல்ல மகள் அனுவேதான்!

"அனு!" என்று விக்கித்தாள் கல்பனா. தன் தாயைப் பார்த்தவுடன் முகம் கோணிக் கொள்ள, இறுகிப் போன உதடுகளை வெடித்துக் கொண்டு, வெளிக் கிளம்பும் கேவல்களை மிகுந்த பிரயாசையுடன் அடக்க முற்பட்டு… அது முடியாமல் போகவே சப்தமெழாமலேயே "ம்மா!… ம்மா…!" என்று குழறினாள் அனு. கல்பனாவின் செல்ல மகள்!

உன் குழந்தை… உன் குழந்தை என்று அவளின் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் எடுத்துக்காட்ட தன் ரத்தத்தின்… தன் தசைக் கோளத்தின் அழுகையைக் காணச் சகிக்காத கல்பனாவும், "அனு…ஊ!" என்று அலறினாள். அவமானத்தால் தலை குனிந்த மகளின் தோளில் ஆதரவாகக் கை போட்டாள் கல்பனா. தாயின் தோளில் முகம் அழுத்தி, வீட்டினுள் அனு வர, கல்பனாவின் கண்களில் அந்த "மா" பட்டது. மா…அம்மா!

இலையுதிர் காலமிது. மீண்டும் துளிர்க்கும் இலைகள்! மீண்டும்… பச்சைப் பசேலென்று!

About The Author

5 Comments

  1. Radha Mohan

    Kalam kadantha gyanam” These words suit everyone in the world!Great thinking Mr.Ravi!”

  2. Pavithra Srinivasan

    I think anyone can visualize themselves in the story while reading it. Any mother will have a tear or two in her eyes when she reads the story and you brought one in mine. Just great appa.

  3. Krishnan Bala

    ஆன்புல்ல றவிக்கு,
    Kஅதயின் ஒட்டமும், கருத்கும், மனதை ஆழ்ந்து பாதிக்க கோடிஅ வகயில் ஆமைந்துல்லது ! Gரமதின் வுல்ல வேடின் சுட்ரம் கோர்ந்து கவனிக்கப்பட்டு சிதரிக்கபட்டுல்லது. Mஅகலின் நீஅல்யும் தன்னை பொல் நிகழ்வுட்ட்ரது மனதை நகிழ வைக்கும்படி உல்லது ! Yஒஉ ந்ரிடெ முச் பெட்டெர் இன் Tஅமில் தன் இன் ஏங்லிஷ் அன்ட் எவெர்ய் தொஉக்க்ட் ஒf யொஉர்ச் கச் fஒஉன்ட் அன் அப்ட் ப்லcஎ இன் யொஉர் பெஔடிfஉல் ச்cரிப்ட். ஆ லொட் ஒf இமகினடிஒன் கச் கொனெ இன் டொ டெச்cரிபிங் தெ ப்ரக்மினிcஅல் ரொஉடினெ ந்கிச் என்கன்cஎச் தெ வலுஎ ஒf திச் ச்டொர்ய் !

  4. e p murali

    அன்புள்ள ரவி
    மிகவும் அற்புதமான கதை. உங்களின் உரைனடை பிரமாதம். மேலும் உங்கள் கதை தொடரட்டும்.

    இப்படிக்கு
    ES PARASURAMAN, GEETHA, MURALI, SUNDAR, ANITHA, ISWARIYA, ADITYA.

Comments are closed.