தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

மனமும், உடலும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு நல்ல உறக்கம் அவசியம். ஆனால் பலர் சரியான உறக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.

உறக்க முறைகளை, பழக்கங்களை நெறிப்படுத்த துயிலன் சொல்லும் பத்து வழிகள் இதோ:

(அலுவலகத்தில் ஃபைல்களுக்கு இடையே தூங்குபவர்களுக்கும், பேருந்துகளிலும், ரயில்களிலும் பக்கத்திலிருப்பவர்களின் தோளில் சாய்ந்துகொண்டு எந்த நேரத்திலும் தூங்க முடிபவர்களுக்கும் இது அவசியமிராது!)

1. எப்போது நன்றாக தூக்கம் கண்களை அழுத்துகிறதோ அப்போதே தூங்கவும். (எவ்வளவு பெரிய தத்துவம்!). இது படுக்கையில் உறக்கம் வராமல் நீங்கள் புரளும் நேரத்தைக் குறைக்கும்.

2. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதையும், விழிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யவும். (சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதுதானே கஷ்டம்!)

3. படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் உறக்கம் வராவிட்டால் படுக்கையை விட்டு எழுந்திருந்து தூக்கம் வரும் வரையில் ஏதாவது ஒன்றைச் செய்யவும். (ஹி.. ஹி.. நிலாச்சாரலில் என் கட்டுரைகளைப் படிக்கலாமே..)

4. மிகவும் தாமதமாக எதையும் அருந்துவதையும், சாப்பிடுவதையும் தவிர்க்கவும். படுக்கைக்குச் செல்லும் முன், சுமார் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்னதாகவே உணவை முடித்துக் கொள்ளவும்.

5. உறங்குவதற்கு முன்பாக மனதை தளர்த்திக் கொள்ள புத்தகம் படிப்பது, இசை கேட்பது போன்ற உங்கள் மனதிற்குப் பிடித்த செயல்களில் ஈடுபடவும்.

6. உங்களுடைய உறங்கும் அறை மிகவும் உஷ்ணமாகவோ அல்லது மிகக் குளிராகவோ இல்லாமலும், மிகுந்த சப்தம் இல்லாமல் அமைதியாக இருப்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளவும். படுக்கையில் அமர்ந்து கொண்டு எதையாவது கொறிப்பதையும் , டி. வி. பார்ப்பதையும் தவிர்க்கவும்.

7. பகலில் பூனைத் தூக்கம் போடுவதை முடிந்தவரை தவிர்த்துவிடவும்.

8. காஃபி, டீ, புகையிலை சம்பந்தபட்டவற்றை படுப்பதற்கு ஆறு மணி நேரம் முன்னதாகவே முடித்துக் கொள்ளவும்.

9. தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். படுப்பதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த உடற்பயிற்சியையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

10. முக்கியமாக, தூக்கம் வருமென்ற நியாயமான நம்பிக்கையுடன் தூங்க முயற்சியுங்கள். மனதில் வேறு எதையும் அசைபோட வேண்டாம்.

இந்த பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டவுடனேயே உறக்கம் வரவில்லையே எனக் கவலையுற வேண்டாம். நாளடைவில் சரியாகிவிடும்.

சிரித்துக் கொண்டே தூங்கலாமே!

அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அண்ணாசாமி இரவு முழுவதும் தூக்கம் வராத ‘இன்சோம்னியா’ என்ற வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். விடியற்கால வேளையில் மட்டும் அவருக்கு சற்று தூக்கம் வருவதால், அலுவலகத்திற்கு எப்போதும் தாமதமாகவே வந்து மானேஜரிடம் திட்டு வாங்குவார். மனமுடைந்த அவர், ஒரு மருத்துவ நிபுணரிடம் சிகிச்சைக்குச் சென்று சக்தி வாய்ந்த மாத்திரைகளை வாங்கி உபயோகித்தார். அன்று இரவில் மிக அருமையான தூக்கம் அவருக்கு. காலையில் மிகவும் சுறுசுறுப்பாக விழித்து அலுவலகத்திற்கு முன்னதாகவே வந்து விட்டார்.

மானேஜரிடம் பாராட்டை எதிர்பார்த்தபடி சொன்னார். "பார்த்தீர்களா, இன்று நான் மிகவும் சீக்கிரமாகவே வந்துவிட்டேன். டாக்டர் கொடுத்த மருந்து மிகவும் நன்றாகவே வேலை செய்தது"

மானேஜர் சொன்னார். "ரொம்ப சந்தோஷம்.. ஆமாம்.. நேற்று ஏன் நீ ஆபீஸுக்கு வரவில்லை?"”

About The Author

2 Comments

  1. ambujamadhavan

    துக்கம் கன்கலை தழுவட்டும் ரொம்ப நன்னா இருந்தது.

  2. Rishi

    ஜோ,
    கிளியர்டிரிப் பற்றி உபயோகமான தகவல். ரொம்ப நன்றி. படு வேகமா செக் பண்ண முடியுது. வாழ்க அஜாக்ஸ் தொழில்நுட்பம்!
    இப்போதான் 4 டிக்கெட் போட்டேன்.

Comments are closed.