தெளிவு பிறந்தது!

எனது மகளனைய ஒரு பெண். பட்டம் பெற்றவள். இரண்டு மணியான குழந்தைகளுக்குத் தாய். அன்பான கணவர் ஒரு தொழிலதிபர். சொந்த வீடு. கணவரின் தொழில் அலுவலகத்திற்குச் சென்று இயன்ற பணிகளைச் செய்து வந்தார் அப்பெண்மணி. வீட்டுப் பணிகளையும் சிறப்பாகக் கவனித்துக் குழந்தைகளின் படிப்பிற்கும் உதவுவார்.

ஒரு நாள் காலை என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, "அங்கிள், நேற்று இரவு சரியாகத் தூங்கவில்லை. ஒரு
நிறுவனத்திலிருந்து, அங்கே ஒரு நிரந்தர வேலைக்கு இரண்டு நாளைக்குள் விண்ணப்பிக்கும் படி கூறியுள்ளனர். எனக்கு எப்படி முடிவெடுப்பதென்று தெரியவில்லை; ஒரே குழப்பமாக இருக்கிறது. கணவரோ உனது விருப்பப்படி செய் என்கிறார். ஒரு முடிவு எடுக்க உதவி செய்யுங்களேன்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைப் போன்ற சூழ்நிலைகள் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் வாழ்க்கையிலும், அடிக்கடி ஏற்படுவது உலகத்து இயற்கை. இச்சூழ்நிலைகளை உரிய முறையில் அணுகி, தகுந்த முடிவு எடுப்பதில்தான் தனி மனிதனின் வெற்றி அமைகிறது. தவறான முடிவு எடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் வருந்துவோரையும் பார்த்திருக்கிறோம்.

இருப்பினும் நல்ல முடிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு தகுந்த முடிவு எடுப்பதற்கு
நமது அறிவு துணை நிற்க வேண்டும். அது "தெளிந்த நல்லறிவாக" இருக்க வேண்டும் என பாரதியார் அன்னையிடம் வேண்டுவார். தெளிந்த நல்லறிவுடன் ஒரு பிரச்சினையை அணுகினால்தான் தகுந்த முடிவு எடுக்க முடியும் என்பது நமது அனுபவம் புகட்டும் பாடம்!

முறையாக முடிவு எடுக்கும் முறைதனை வள்ளுவப் பெருந்தகை பல அதிகாரங்களில் பாங்குடன் விளக்குவார்.

ஒவ்வொருவரும் தனது சொந்த வாழ்வில், இல்லற வாழ்வில், அலுவலக வாழ்வில், பொது வாழ்வில், வணிக
வாழ்வில் பல கட்டங்களில், பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும். எந்த நிலையில் உள்ளவராய் இருந்தாலும் நல்ல முடிவுகளை எடுக்கச் சில யுக்திகளைக் கையாள வேண்டும்; சீர்மையாகச் சிந்திக்கவேண்டும்; எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை அளிக்க இறைவன் அருள் கிடைக்க வேண்டும். சிந்தித்து சீர்தூக்கி எடுத்த முடிவுகளாக இருப்பினும் சில நேரங்களில் தீய விளைவுகள் ஏற்படலாம். அப்படி ஏற்பட்ட தீய விளைவுகளின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாதது.

"ரோட்டரி க்ளப்" எனப்படும் "சுழற்சங்கம்" எந்த ஒரு முடிவை எடுக்கு முன்பும், செயலைச் செய்யு முன்பும், அது அவர்களது நான்கு முகச் சோதனையைக் வெற்றிகரமாகக் கடக்கிறதா என்று சோதித்துச் செயல்படவேண்டும் எனக் கூறுகிறது.

அது என்ன நான்கு முகச் சோதனை (four way test)?

1. நாம் எடுக்கும் முடிவு / செய்ய இருக்கும் செயல் உண்மைக்குப் புறம்பாக இருக்குமா?

அப்படியிருக்காது என்றால் அப்படிப்பட்ட முடிவே நல்ல முடிவாகும். உண்மைக்குப் புறம்பானதாக அமையுமென்றால், தற்காலிகமாக நன்மையைத் தரும் என்றாலும் அது முறையான முடிவு அல்ல; தெளிவான முடிவு ஆகாது.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்

என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.

நெஞ்சறிந்து உண்மைக்கு மாறாகப் பேசினாலே, தன்னுடைய நெஞ்சே தன்னைச் சுடுமென்றால், உண்மைக்குப்
புறம்பானதாக எடுக்கக்கூடிய முடிவுகளும், செய்யக்கூடிய செயல்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரது நெஞ்சங்களுமல்லவா நம்மைச் சுட்டெரிக்கும்?! அப்படிப்பட்ட முடிவுகள் தெளிந்த முடிவுகளாக இருக்க முடியாது.

2. நாம் எடுக்கும் முடிவு / செய்ய இருக்கும் செயல் அனைவருக்கும் நியாயமானதாக இருக்குமா?

நமது முடிவுகளும், செயல்களும் எவருக்கும், எப்பொழுதும் நல்ல பயன்களை, நன்மைகளையே விளைவிப்பனவாக இருக்க வேண்டும். அப்படியில்லாதிருந்தால், அது தெளிவாகாது; தெளிவான முடிவாகாது – செயலாகாது.

3. நமது முடிவும் செயலும், நல்லெண்ணத்தையும், நட்பையும் வளர்க்குமா?

அப்படியில்லையென்றால், அந்த முடிவும் செயலும் சிந்தித்துச் சீராக எடுக்கப் பட்டதாகக் கருத முடியாது. உலகத்து மக்களெல்லாம் மகிழ்வோடும், அமைதியோடும் வாழவேண்டும் என்று இறைவனைத் துதிக்கும் நாகரிகத்திலும், கலா சாரத்திலும் வளர்க்கப்பட்டிருக்கும் நாம், நமது முடிவும் செயலும் நமது குடும்பத்தினருக்காவது நன்மை பயத்து, நல்லெண்ணத்தையும், நட்புறவையும் வளர்ப்பதாகச் செய்ய வேண்டும்.. அல்லவா?

4. நமது முடிவும், செயலும் தொடர்புடையவர்களுக்குப் பயன் அளிக்குமா?

சொல்லுக சொல்லின் பயனுடைய; சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்

என்பார் திருவள்ளுவர்.

பயனற்ற சொற்களை சொல்லுவதே சரியல்ல என்ற வழியில் வளர்க்கப்பட்டவர்கள், பயனளிக்காத முடிவை எடுப்பதும், செயலைச் செய்வதும் மடமையல்லவா?

இந்த முறையில் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டபெண்மணியின் பிரச்சினைக்கு தகுந்த, தெளிவான முடிவு எடுக்கப்பட்டது. எனக்கு நன்றி தெரிவித்ததுடன், இனி வருங்காலத்திலும் தெளிவாக முடிவு எடுக்கவேண்டிய தேவைதனையும், முறைதனையும் மனத்தில் ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.

அது என்ன முடிவாயிருக்கும்?

இப்பொழுது, கணவரது தொழில் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவதே சிறந்தது என்பதே!

About The Author

3 Comments

  1. N V Subbaraman

    நான் சுப்பராமன்”, “சுப்பாராமன்” இல்லை! கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி!”

  2. THIRUNAVUKKARASU

    OK.VERRY GOOD .CONGRATS TO SUBBARAMAN AND NILACHARAL BY THIRU-CHENNAI

Comments are closed.