தேனீக்கள் பற்றிய சில சுவையான செய்திகள்

தேனீக்கள் நாவுக்குச் சுவையான இனிக்கும் தேனைக் கொடுக்கின்றன என்பது நாம் எல்லாரும் அறிந்த விஷயம்தான். நாம் உண்னும் பல சுவையான பழங்களுக்கு மூலாதாரமாக இருப்பதும் தேனீக்கள்தான்.

தேனீக்கள் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானவை. பூக்களை வட்டமிட்டுத் தேன் குடிக்கின்றன. உலகம் முழுவதும் மர்மமான முறையில் இவைகள் மரிக்கின்றன. தேனீக்களுக்கு நமக்குத் தெரிந்ததைவிட அபரிமிதமான பல சக்திகள் இருக்கின்றன.

தேனீக்கள் மின்சக்தியை உணர்வதில் தனித்தன்மை கொண்டவை. அவற்றால் பூமியின் மின்காந்த அலைகளை உணர்ந்து அதன் மூலம் தாம் செல்ல வேண்டிய இடத்திற்குப் பறக்கக் கூடியவை. பசுக்களும் மீன்களும்கூட இந்த மின்காந்த அலைகளைக் கொண்டு பூமியின் வடக்கு திசையை அறியும் சக்தி கொண்டவைதான். ஆனால் தேனீக்களின் சக்தி அதற்கும் அப்பாற்பட்டவை.

பூமியின் காந்த அலைகளை உணரும் சக்தியோடு வானில் உள்ள மின்காந்த அலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் வரப்போகும் இடி, புயல்களையும் அவற்றால் முன்னதாகவே அறிய முடியும். வானத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதற்குத் தக்கவாறு புயல் மழை வருமுன்பே பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்றுவிடும். இன்னும் சொல்லப்போனால் அவைகளிடம் இருக்கும் அபரிமிதமான மின்காந்த சக்தி தேனீக்களின் பசியுணர்வைத் தூண்டிவிட்டு தேனிருக்கும் இடத்தை நாடி விரைவாகப் பறக்க வைக்கின்றனவாம்.

தேனீக்களைச் சுற்றி ஒரு மின்மண்டலம் இருக்கிறது. ஒரு தேனி இறகடித்துப் பறக்கும்போது அவைகளிடமிருந்து எதிர்மறை மின்சக்தி வெளிப்படுகிறது. இந்த சக்தியை அவை தனக்கு வேண்டிய உணவை சேகரிக்கப் பயன்படுத்துகின்றன.

மகரந்தச் சேர்க்கை பற்றி நமக்குத் தெரியும். மலரை நாடி வண்டு செல்வதை ‘தேனுண்னும் வண்டு’ என்று சொல்கிறோம். மலர்களில் ஒரு நேர்மறை சக்தி இருக்கிறது. தேனீக்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி நேர்மறை சக்தியை நாடிச் செல்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது போல மலரும் தேனீக்களால் கவரப்படுகிறது. இவ்வாறு மலருக்கு மலர் தாவி தேன் சேகரிக்கும் சக்தியை பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து குண்டு தயாரிக்கும் முறை வரை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் அறிவியலாளர்கள்.

மனிதர்கள், குரங்குகள் போன்ற உயர் இன விலங்குகளுக்குப் பிறகு தேனீக்களுக்கென்றும் தனிமொழி இருக்கிறது. நடனமாடி சைகை மூலம் நினைத்ததை வெளிப்படுத்தும் சக்தி அவைகளைவிட வளர்ச்சி அடைந்த வேறெந்த பூச்சி இனங்களுக்கும் இல்லை என்று சொல்லலாம். அவை ஒன்றுக்கொன்று மறைமுகமாக சங்கேத வழியில் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. அவைகள் சிறகடிப்பதன் மூலமாகவும், அங்க அசைவுகள் மூலமாகவும் மூன்று மைல்களுக்கு அப்பாலிருக்கும் உணவை அறிந்து உணரக்கூடியவை. அந்த தூரம் மிகச் சரியாக பதினைந்து அடி வித்தியாசங்களுக்குள் இருக்கும். அதோடு அவை எவ்வளவு வசதியாக அந்த உணவைப் பெற முடியும் அல்லது ஏதாவது ஆபத்துக்கள் இருக்கின்றனவா என்றும் உணர முடியும்.
இந்த கவர்ச்சியான நடன இயக்கத்தின் மூலம் உணவு இருக்கும் தூரம், அதன் தரம், அதை அடைய எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று அறிந்துகொள்ள முடியும்.

விஞ்ஞானிகளால் எப்படி தேனீக்களின் மொழியை அறிய முடிந்தது? ஆராய்ச்சியாளர்கள் சில தேனீக்கள் தலையில் ஆன்டனா போன்ற ஒன்றைப் பொருத்தினார்கள். ராடார் வழியாக அவற்றின் பாதையைக் கண்டறிந்தபோது, அநேகமாக எல்லா தேனீக்களும் நடன பாஷையைத் தெரிந்திருக்கின்றன என்று அறிந்தார்கள்.

தேனீக்கள் நடனமாடி ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வதோடு மட்டுமல்ல, தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வேறிடத்திற்கு போக நினைத்தால் அவைகளும் நம்மைப்போல நல்ல வீட்டைத் தேடிப்போகும் சக்தி உடையவை. அவைகள் நடனமாடிக் கொண்டே கூட வந்து மற்ற தேனீக்களுக்கும் நல்ல வசதியான இடத்தைப் பார்ப்பதற்கான உற்சாகத்தைக் கொடுக்கும். ஒரு புது இடத்தை அடைந்து ஒரு தேனி சுற்றிச் சுற்றி வந்தால் அதற்கு அந்தப் புது வீடு பிடித்திருக்கிறது என்று அர்த்தமாம். ஆனால் குறைந்தபட்சம் 15 தேனீக்களுக்காவது அந்த இடம் பிடித்திருந்தால்தான் அந்தப் புது இடத்துக்கு அவை மாறும்.

ஆனால் வேறு தேனீக்கள் இன்னொரு வீட்டைத் தேடிப்பிடித்து ‘அது நன்றாக இருக்கிறது, அங்கே குடிபெயரலாம்’ என்று நினைத்தால் என்ன நடக்கும்? அவைகளுக்குள் இறுதியான முடிவு எடுக்கும்வரை சிறு போராட்டமே நடக்கும்.

தேனீக்கள் மட்டும்தான் நமக்கு சுவையான உணவைக் கொடுக்கின்றன. தேன் சுவையாக இருப்பது மட்டும் அல்ல, அதற்குப் பலவகையான அற்புத சக்திகள் இருக்கின்றன. எத்தனை நாள் வைத்திருந்தாலும் அவை கெட்டுப் போகாது. அதோடு அதற்கு மருத்துவ குணமும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக காயங்களுக்கான மருந்தாக தேன் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருக்கும் சில இடங்களில் கிடைக்கும் தேன் வியாதிகளைக் குணப்படுத்தவும், கருவிகளை சுத்தப்படுத்தவும், கான்சருக்கு மருந்தாகவும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன. முட்டையும், பாலும் எத்தனை வகையான நோய்களைக் குணப்படுத்துகின்றன? அப்படிப் பார்க்கும்போது தேனீக்களின் மற்றும் தேனின் அருமையை நாம் உணரமுடியும்.

About The Author