நய்யாண்டி -இசை விமர்சனம்

‘களவாணி’ புகழ் சற்குணம் இயக்க தனுஷ் செய்யும் ‘நய்யாண்டி’. ஜிப்ரான் இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றுள் ஒன்று சோகப்பாடல்.

டெட்டி பியர்

வீடியோ கேம் சாயலுடைய இசை! செம ஜாலியான பாடல் என்று உறுதியளிக்கிறது. விவேகா போதுமான அளவு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதியிருக்கிறார்! தனுஷ் ஈடுபாட்டுடன் பாடியிருக்கிறார். இருந்தாலும் அரை போதையில் பாடியது போலவே இருக்கிறது.

காக்காவும் பீகாக் ஆகும்!
ஹார்மோன்கள் அட வீக் ஆகும்!

ஏலேலே எட்டிப் பார்த்தாலே…

அவனை அவள் பார்த்துவிட்டாள், அவ்வளவுதான். மீதி அனைத்தையும் அவனது அபரிமிதமான கற்பனையில் எழுதியிருக்கிறார் அறிவுமதி. சுந்தர் நாராயண ராவின் மயக்கும் குரல் பாடலுக்குக் கூடுதல் பலம். குறிப்பாக, பாடலில் ஸ்ருதி ஏறும் இடத்தில் ஈர்ப்பு அதிகம்.

கவிதை எழுதிட நிலவினைக் கிழிக்கிறேன்!
உயிரை உனதிடம் உயிலெனக் கொடுக்கிறேன்!
வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்!
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்!
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே!

இனிக்க இனிக்க

திருக்குறளின் மூன்றாம் பால் பேசுகின்றன கார்த்திக் நேத்தாவின் வரிகள். ரஞ்சித், சூசன் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஆர்கெஸ்ட்ரா பாணியில் ஆரம்பித்து, பின்னர் இயல்பாக ஒலிக்கிறது. நல்ல டூயட்! லேசாக வத்திக்குச்சியின் ஞாபகம் இந்தப் பாடலில் பற்றிக் கொள்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம்.

சிலந்தி வலையில் வெளிச்சம் போல்
எனக்குள் பரவுவாய்!
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்!

மேரேஜ் மார்கெட்டில்

பெண் கேட்கும் படலம்தான் மொத்தப் பாடலும். ராமசாமியின் வரிகள் இயல்பாகக் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. இதையும் பாடியிருக்கிறார் சுந்தர் நாராயண ராவ். காமிக்கலான பாடலாக இதை எதிர்பார்க்கலாம். கல்யாணம் பண்ண இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ என்று எண்ண வைக்கிறது.

சோறு பொங்கவும் வேண்டாமே!
வீடு கூட்டவும் வேண்டாமே!
பொண்ணு குடுங்களேன் பொண்ணு குடுங்களேன்
பொம்மை போலவே பாத்துக்குறோம்!

முன்னாடி போற புள்ள

இங்கே மீண்டும் டூயட். அவளைப் பார்த்து இவன் மயங்குகிறான். பிறகு என்ன, காதல் மலர்கிறது. பாடலை எழுதியிருக்கிறார் கார்த்திக் நேத்தா. திவ்யகுமார், ஸ்வேதா மேனன் பாடியிருக்கிறார்கள். இசையும் தன் பக்கம் சுண்டி இழுக்கிறது. அதற்குப் பாடலின் ரிதமும் முக்கியக் காரணம். இதற்காகவே ஜிப்ரானைப் பாராட்டலாம்.

ஒரு துளி மழையில குளிச்சேன் குளிச்சேன்!
தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன்!
காயவச்ச ஈரத்துணி போல பேசுற
காடை முட்டை கண்ணுக்குள்ள காதல் அறிகிறேன்!

ஏண்டி பாதகத்தி :

மிகச் சிறிய சோகப்பாடல் இது. தேவேந்திரன் எழுத தேவராஜ் பாடியிருக்கிறார். பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

ஜிப்ரான் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார்!

நையாண்டி – அனைவருக்கும் பிடிக்கும்.

About The Author

1 Comment

Comments are closed.