நாகதோஷம்

நான் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் இருந்த அம்மணி ஒருவர் என் பயணத் திட்டம் பற்றி மிக ஆவலாகக் கேட்டார்.

நானும், "ராகு – கேது தோஷம் நீங்கத் திருநாகேஸ்வரம் போக வேண்டும்" என்றேன். அவரோ "இப்பல்லாம் அங்கு ஒரே கூட்டம்! ராகு காலத்தில் பூஜை நடக்கும்போது உள்ளே நுழைய முடியவில்லை. திருப்பதி தோத்தது போ" என்று சலித்தபடிச் சொன்னார். நானும் குழம்பி, "இப்ப என்ன செய்யலாம்? எனக்குக் கூட்டம் என்றால்… ரொம்ப நேரம் நிற்கமுடியாதே மாமி! வேறு எதாவது, அதே போல் பரிகார ஸ்தலம் இருக்கா?" என்று கேட்டேன். கொஞ்சம் யோசனை செய்துவிட்டு, "ஓ இருக்கே! அருமையான இடம்! இங்கிருந்து திருப்பனத்தாள் வழியில் மணல்மேடுன்னு ஒரு இடம் வரும்…"

"எத்தனை கிலோமீட்டர் இருக்கும்?"

"அதுவா… சுமார் 14 கிலோமீட்டர் இருக்கும். அங்கு அருள்புரிபவர் அருள்மிகு நாகநாதர்; அம்மனின் பெயர் சௌந்திரநாயகி. ராகு – கேது தோஷம் நீங்க நிறையப் பேர் அங்கு வர்றா. நீயும் கண்டிப்பா அங்க போய்ப் பாத்துட்டு வா" என்றார் மாமி.

"ரொம்ப நன்றி மாமி!" என்றபடி நான் மணல்மேடு கிளம்பினேன்.

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து நேராக வர, இந்தக் கோயில் தென்பட்டது. ஊரின் வடகிழக்குப் பகுதியில் கிழக்கு நோக்கி இந்த ஆலயம் அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தேன். கூட்டமில்லாமல் ஆனந்தமாக தரிசனம் கிடைக்கிறது.

மகா மண்டபத்தின் தென் பகுதியில் கணபதி தலவிநாயகராக அருள் புரிகிறார். நடுவில் பலிபீடம் இருக்க, நந்தீஸ்வரப் பெருமான் அமர்ந்திருக்கிறார். இந்த ஸ்தலம் பண்டைக்காலத்தில் புன்னைமரக்காடாக இருந்தது. புன்னைமரக்காடு அதிகமாக அதிகமாக, பூமியைத் தாங்கும் ஆதிசேஷனுக்குப் பாரம் தாங்க முடியவில்லை. உடம்பில் சக்தி குறைந்தது போல் தோன்ற, சிவபூஜை செய்தால் அதிக பலம் பெறலாம் என்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆகையால், இங்கு ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினான். சிவனும் அவனது தவத்தை மெச்சி அவனுக்கு தரிசனம் தந்தார்.

"மஹேஸ்வரா! எனக்கு தரிசனம் தந்த தாங்கள் இந்த இடத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலிக்க வேண்டும்" என்று ஆதிசேஷன் கேட்டுக்கொண்டபடி ஈச்வரன் அங்கேயே தங்கி நாகநாதன் என்ற பெயரில் அங்கு எழுந்தருளினார்.

இங்குள்ள தீர்த்தம் நாகதீர்த்தம், தல விருட்சம் புன்னை மரம். கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் கணபதி சன்னதியும் தட்சிணாமூர்த்தி சன்னதியும் இருக்கின்றன. மேற்குப் பிராகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி, இடும்பன், சரஸ்வதி, கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. வெளிப்பிராகாரம் முடிந்து உட்பிராகாரம் வரும்போது நடனம் ஆடும் நர்த்தன வினாயகர் நம்மை அழைக்கிறார். வடக்குத் திசையில் பிரும்மாவும், துர்க்கையும் அமர்ந்து அருள்புரிகின்றனர். உட்புறத்தில் அழகே வடிவாக, கருணைக் கண்களுடன் தெற்கு நோக்கி, புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள் அருள்மிகு சௌந்தரநாயகி. அருள்மிகு நாகநாதர் அமர்ந்திருக்கும் கருவறை சதுரவடிவில் அமைந்துள்ளது.

அது சரி, இது எப்படி ராகு – கேது பரிகாரத் தலமானது? ராகு, கேது இருவரும் திருமணம் செய்து கொண்டவுடன் மாலையும் கழுத்துமாக முதன்முதலில் இந்த நாகநாதர் கோயிலுக்கு வந்துதான் வணங்கினார்களாம். ஆகையால்தான் இது ராகு – கேது தோஷம் நீக்கும் பரிகாரஸ்தலமாக அமைந்துள்ளது. குழந்தைப்பேறு, திருமணம் என்று பலர் இங்கு வருகின்றனர்.

இடும்பன், முருகனை இங்கு மண்ணியாற்றங்கரையில் வழிபட, முருகனும் மகிழ்ந்து இத்தலத்தில் இடும்பனுக்குப் பங்குனி உத்திரத் திருநாளில் மூல மந்திரத்தை உபதேசம் செய்து அருளினார் என்று கந்தபுராணம் சொல்கிறது. ஆகையால், பங்குனி உத்திரம் அன்று இடும்பனுக்குச் சிறப்பு வழிபாடு செய்து காவடிகளும் எடுக்கப்படுகின்றன.

நாகதோஷம் நீங்க அவசியம் மணல்மேடு நாகநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்!

About The Author