நிபந்தனையற்ற நேசம்

நன்மையும் தீமையும் நாணயத்தின் இரு பங்கங்கள் போல என்பார்கள். எத்தனை நன்மை தருகிற விஷயமானாலும் அதில் தீமைக்கான சாத்தியக் கூறுகளும் எவ்வளவு கொடுமையான நிகழ்வாக இருந்தாலும் அதில் எள்ளளவு நன்மையும் இருப்பதை கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் உணர முடிகிறது. அதே போல, அளவுக்கதிகமாய் தீமைகள் விளைகிறபோது மனிதத்தின் உள்ளொளி சுடர்விட்டுப் பிரகாசிப்பதையும் காணமுடிகிறது. இயற்கைப் பேரழிவுகளுக்குப் பின் பொங்கி எழுகிற கருணையில் இது தெளிவாய்ப் புலப்படும். அழிவையும் இழப்பையும் உண்டாக்கும் போர்களுக்கு மத்தியிலும் கூட மனிதம் முற்றிலும் சாகாமலிருப்பதற்கான சான்றுகள் சில விநோத நிகழ்வுகள் மூலம் வெளிப்படுவதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம்… அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் தெரு ஒன்றில் அமெரிக்கப் படை வீரன் ஒருவன் உலவிக் கொண்டிருந்தான். அவன் போருக்குச் செல்லும் வழியில் அமைந்து போன பயண இடைவெளி அது. மறுநாள் காலையில்தான் இரயில். பொழுதைக் கழிக்க வேடிக்கை பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தவனின் அருகில் ஒரு கார் வந்து நின்றது. காரின் பின் கண்ணாடியை இறக்கி, ஒரு அட்டையை நீட்டிய ஒரு மனிதர், அதைக் கொண்டு போய் ஊரின் மிகப் பெரிய ஹோட்டல் மேலாளரிடம் கொடுக்கச் சொன்னார். அந்தப் படைவீரனும் வேறு வேலை ஒன்றும் இல்லாத காரணத்தால் அந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து அதன் மேலாளரிடம் அந்த அட்டையைக் கொடுத்துவிட்டுத் திரும்ப யத்தனித்தான். மேலாளரின் ஒரு கைச் சொடுக்கில் அவனது பயணச் சுமைகளைப் பெற்றுக் கொண்டார்கள் பணியாளர்கள். திகைத்து நின்ற அவனிடம் அந்த மேலாளர் விளக்கினார், "உங்களிடம் இந்த அட்டையைக் கொடுத்த மனிதர் தன் மகனைப் போரில் இழந்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் மூன்று போர் வீரர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வார். இன்று உங்களுக்குத் தங்க இடமும் உணவும் அவர் அளிகிறார்" என்று விளக்கினார். ஊட்டி வளர்த்த தன் மகனின் இழப்பில் முடங்கிப் போய்விடாமல் ஊரார் பிள்ளைகளில் தம் குழந்தையைக் காணும் பலம் வியக்க வைக்கிறது.

கிட்டத்தட்ட அதே காலகட்டம். அயர்லாந்து நாட்டில் ஒரு கிராமம். போரில் ஈடுபட்டுக் களைத்து நொந்த பெல்ஜியம் படையின் ஒரு பிரிவுக்கு அங்கு முகாம் அமைக்கப்பட்டது. கடும் குளிர். காலில் அணிந்து கொள்ள பூட்ஸ் கூட இல்லாத நிலையில் அட்டைகளை மடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் படைவீரர்கள். புது இடம். மொழி தெரியாத அவஸ்தை வேறு.

பார்த்தார்கள் உள்ளூர் மக்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீரனைத் தத்தெடுத்துக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்கள். தம் வீட்டு விழாக்களுக்கு அவர்களை அழைத்தார்கள். தாங்களும் அவர்களது விழாக்களில் கலந்து கொண்டார்கள். தம் குடும்பத்திலொருவர் போல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்தப் படைவீரர்கள் போருக்குத் திரும்புகையில் மொத்த கிராமமும் கண்ணீர் சிந்தியது. பொதுவாகவே போர்க்காலங்களில் தம் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களின் மேல் பொதுமக்களுக்கு நன்றியுணர்ச்சி எழுவது இயற்கை. ஆனால் நேசநாட்டுப் படைவீரர்களைக் கனிவோடு நடத்திய இந்தக் கிராமத்தின் கதை நெகிழ வைக்கிறது.

எதிரி நாட்டு மக்களனைவரும் எதிரிகளல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் முதிர்வு பலருக்கு வாய்ப்பதில்லை. அதுவும் எதிரிகளைக் கொன்று குவிக்கப் பயிற்சியளிக்கப்பட்ட, போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட போர் வீரர்களிடம் இந்தப் புரிதல் இருக்குமானால் அது கொண்டாடத் தகுந்தது. கெயில் ஹல்வொர்ஸனிடம் அது இருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற தருணம். ஆட்டிப்படைத்த அடால்ஃப் ஹிட்லரின் கொட்டம் ஒடுக்கப்பட்ட ஜெர்மனி பசியின் கொடுமையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. கேப்டன் கெயில் கடமையினிமித்தம் பெர்லின் சென்றிருந்தார். அவரைக் கண்ட மாத்திரம் குழந்தைகள் கூட்டமாய் அவரைச் சுற்றிக் கொண்டு பிச்சை கேட்டனர். அவரிடம் இரு சூயிங் கம் பாக்கெட்டுகளைத் தவிர ஏதுமில்லை. அவற்றைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய கெயிலுக்கு மனம் ஆறவில்லை. அவர் எப்போதெல்லாம் விமானத்தில் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கச் சென்றாரோ அப்போதெல்லாம் இனிப்புப் பொட்டலங்களையும் சூயிங் கம் பாக்கெட்டுகளையும் குழந்தைகளுக்காக அனுப்பிவைத்தார். அதோடு மட்டுமல்லாமல், சோவியத் பிடியிலிருந்த ஜெர்மனியிலும் இனிப்புப் பொட்டலங்களை விமானத்திலிருந்து வீசினார். அவரை மற்ற பைலட்டுகளும் பின்பற்ற ஆரம்பித்தனர். இந்த விஷயம் மேலதிகாரிகளுக்குத் தெரியவந்த போது அவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். அதன்பின் அமெரிக்க நிறுவனங்களே எதிரிநாட்டுக் குழந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக இனிப்புப் பொட்டலங்களை அனுப்ப ஆரம்பித்தன. கெயில் அன்று அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தது இனிப்பு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்துக்கு அவர் அளித்த நம்பிக்கை என்று எழுதியிருக்கிறார் ‘தி பவர் ஆஃப் ஹ்யூமன் கைண்ட்னஸ்’ நூலின் ஆசிரியர் ரூபல் ஷெல்லி. இந்த நிகழ்வு ஜெர்மன் மற்றும் அமெரிக்க மக்களின் பரஸ்பர வெறுப்பை மாற்ற உதவியதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

‘சிக்கன் சூப் ஃபார் த வெடரன்ஸ் சோல்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ள மற்றொரு சம்பவம், பாறையைப் பிளந்த பசுஞ்செடியைத்தான் நினைவுபடுத்துகிறது. இது நடந்தது வியட்நாமில். அமெரிக்க இராணுவ மருத்துவமனையிலிருந்து பிரதான மருத்துவமனைக்கு நோயாளிகளைச் சுமந்து சென்றது அந்த ஹெலிகாப்டர். தினமும் பலமுறை நடக்கும் நிகழ்வுதான் இது. இராணுவ மருத்துவமனைக்கு வியட்நாமியப் பொதுமக்களும் பெருமளவில் சிகிச்சைக்கு வருவதுண்டாதலால் எப்போதுமே ஹெலிகாப்டரில் கூட்டம் நிரம்பி வழியும். அன்றும் அப்படித்தான். கும்பல் காரணமாய் ஹெலிகாப்டர் மேலெழும்பவே சிரமப்பட்டது. அதனை மேலே எழுப்பிப் பின் தன் உதவியாளரிடம் ஒப்படைத்த பைலட் அப்போதுதான் தனக்கும் தன் உதவியாளருக்கும் இடையில் அமரவைக்கப் பட்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்தார். அவள் தன் கையில் பச்சிளங்குழந்தையைத் துணியில் மூடி வைத்திருந்தாள். அதனைக் கவனித்த பைலட், துணியை விலக்கிக் குழந்தையைக் காணும் ஆவலுடன் அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டார். அவள் புன்னகையுடன் தலையசைத்ததும் துணியை விலக்கி அந்தப் பிஞ்சு முகத்தைக் கண்ட பைலட் அதன் பரிசுத்தத்தில் தன்னையே மறந்தார். அந்தப் பெண் தன் குழந்தையை அவரிடம் நீட்டினாள். அவளின் நம்பிக்கையைக் கண்டு திகைத்த பைலட் தயக்கத்துடன் குழந்தையைப் பெற்றுக் கொண்டபோது, தன் சகாக்களை இழந்த போது கூட ஈராமாகாத அவரது கண்களில் நீர் நிறைந்தது. தன் வாழ்நாளில் தனக்குக் கிடைத்த மிகப்பெரும் பரிசாகவும் மரியாதையாகவும் அதனைக் கருதுவதாகவும் இந்த சம்பவம் போர் குறித்த தனது மனப்பாங்கையே மாற்றிவிட்டதென்றும் அந்த பைலட் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் சந்திக்கிற மனிதர்களின் வாழ்க்கையை மாற்றுகிற ஆற்றல் இருக்கிறதென்று மேலே கூறிய சில சம்பவங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு படைப்பிரிவினருக்கு ‘பெரும்போர்’ என்று அழைக்கப்படும் முதலாம் உலகப் போரையே நிறுத்தவல்ல ஆற்றல் இருந்தது.

1914ம் ஆண்டு. உலகப் போர் ஆரம்பித்த சமயம். பெல்ஜியத்தின் மேற்கு முனையில் போரிட்டு வந்த ப்ரிட்டிஷ் – ஜெர்மன் படைகள் கிறிஸ்துமஸ் அன்று போரை நிறுத்திவிட்டு, பொதுவான பகுதியில் கூடி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடியதோடு கால்பந்துப் போட்டியும் கூட நடத்தியதாக கடிதங்கள் வாயிலாகத் தெரிய வந்திருக்கிறது. அதோடு எதிர்த் தரப்பு வீரர்களின் உதவியோடு அவர்கள் பகுதியில் கிடந்த தத்தம் வீரர்களின் சடலங்களை மீட்டு முறைப்படி அடக்கம் செய்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. கூப்பர் என்ற பிரிட்டிஷ் வீரர் டிச.27 ,1914 அன்று எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"நான் சொல்வதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை ஒரு மணிக்கு நான் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிப் பகுதியிலிருந்த வீரர் ஒருவர் எனக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் காலை வணக்கமும் சொன்னார். காலை வெளிச்சத்தில் ஜெர்மன் படைவீரர்கள் பதுங்கு குழிகளின் அருகில் அமர்ந்து கொண்டு எங்களை நோக்கிக் கையசைத்து கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். எனது வாழ்க்கையின் மிகப் பெரிய ஆச்சர்யம் இதுதான்.

கிறிஸ்துமஸ் தினம் முழுவதும் எந்தத் தாக்குதலும் நடத்தப் படவில்லை. சில ஜெர்மன் வீரர்கள் எங்கள் பகுதிக்கு வந்து எங்களுக்கு சிகரெட்டுகளையும் சாக்கலெட்டுகளையும் பரிசளித்தனர். நாங்களும் அவர்களுக்கு சில பரிசுகள் தந்தோம். கடந்த இரு வாரங்களாக இவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் துப்பாக்கி சூடு நடத்துமுன் எங்களை விலகிக் கொள்ளும்படி எச்சரித்துவிட்டு எங்கள் தலைக்கு மெலே சில குண்டுகளை அனுப்பினர். கண்ணால் பார்க்காமல் யாரால் இதனை நம்ப முடியும்?"

ஒருவரை ஒருவர் கொல்வதற்குப் பணிக்கப்பட்ட இந்த படைப்பிரிவினர் இந்த நேசப் போக்கை நிலைநிறுத்தி அதற்கு மேல் போரிடுவதில்லை என்ற உறுதியைக் கடைபிடித்திருந்தால் முதலாம் உலகப் போர் முற்றுமுன்னே முடிவடைந்திருக்குமோ என்னவோ?! உலக சரித்திரத்தின் புதிரான நிகழ்வுகளில் இந்த ‘கிறிஸ்துமஸ் சமாதானமும்’ (Christmas Truce) ஒன்றாகக் கருதப்படுகிறது.

நமக்கு விநோதமாய்த் தோன்றும் இந்த நிகழ்வுகளின் மூலம் வெளிப்படும் நிபந்தனையற்ற நேசம்தான் மனிதத்தின் சாரம் என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால் இந்த சாரத்தை மனிதர்களிடம் நிரந்தரமாய்ப் பிரகாசிக்கச் செய்வதெப்படி என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

(நன்றி
புதிய பார்வை)

About The Author