நிலா பேசுகிறேன்

"தியானம்தான் சமாதானத்துக்கு வழி" – இப்படிச் சொன்னது ஒரு ஆன்மிக குருவாகத்தானிருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கொரில்லா போரில் ஈடுபட்டுப் பின் மொசாம்பிக் நாட்டின் அதிபரான ஜொகிம் ஆல்பர்டோ சிஸானோதான் இப்படிக் கூறியிருக்கிறார்.

அறுபதுகளிலிருந்து விடுதலைக்காகப் போராடி, விடுதலை பெற்றபின் உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமாகி, அண்டைநாடுகளுடன் பிரச்சினைகளில் சிக்கிச் சீரழிந்து பஞ்சத்திலும் பட்டினியிலும் எண்பதுகள் வரை வாடிய மொசாம்பிக் இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்வதும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையிலும் நிலையான வளர்ச்சியைக் காண்பதும் உலக வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனை.

இந்த சாதனை சாத்தியப்பட்டதன் பின்னணியைக் காண்பதற்கு முன் ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்:
தன்னிடம் புதிதாக வந்த மாணவனிடம் குரு சொன்னார், "உனக்குள் எப்போதும் இரு ஓநாய்கள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று பேராசை, கோபம், பயம், வெறுப்பு போன்ற எதிர்மறை குணங்களின் மறு உருவம். மற்றது அன்பு, அடக்கம், கருணை, சமாதானம் போன்றவற்றின் திரு உருவம்"

மாணவன் கேட்டான், "எந்த ஓநாய் வெல்லும், குருவே?"

"நீ எதைப் போஷிக்கிறாயோ அது" என்றார் குரு.

ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளுமிருக்கும் இந்த ஒநாய்களின் கூட்டுப் பிரதிபலிப்புத்தான் வெளியுலகம். தீய ஓநாய்கள் வெல்லும் பட்சத்தில் அவற்றின் கூட்டுப் பலத்தின் அளவைப் பொறுத்து சிறு சிறு சச்சரவுகளோ அல்லது பேரழிவை உருவாக்கும் போர்களோ உருவாகின்றன. எனவேதான் ஆன்மிகவாதிகள் உலக சமாதானம் தனிமனிதனிலிருந்து ஆரம்பிக்கிறது என்கிறார்கள்.

தனி மனித மன அழுத்தமே அனைத்துத் தீமைகளுக்கும் மூல காரணம் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் ஆழ்நிலை தியானம். மனதை சாந்தப்படுத்தும் இந்த வழிமுறையை வேதங்களிலிருந்து மீட்டெடுத்துப் பிரபலப்படுத்தியவர் மகரிஷி. மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் ஆழ்நிலை தியானத்தைக் கடைப்பிடித்தால் ஒரு நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம் என்று மகரிஷி 1960ல் குறிப்பிட, அதனை ஒட்டி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்து வந்த ஆய்வு முடிவுகள், கூட்டு தியானம் கடைபிடிக்கப்பட்ட நகரங்களில் குற்றங்களும், விபத்துக்களும் குறைந்ததாகவும், பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தன. இதனை மகரிஷி விளைவு என அழைத்தார்கள். இந்த விளைவுக்கு அறிவியல் பூர்வமான விளக்கமும் தரப்பட்டிருக்கிறது. ஆழ்நிலை தியானத்தின் போது மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய செரொடோனின் என்ற வேதிப் பொருள் மூளையில் சுரப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதோடு கூட்டு தியானம் கடைபிடிக்கப்படும் இடங்களில், இந்த வேதிப்பொருள் தியானத்தில் பங்கு பெறாதவர்களிடமும் அதிகரித்தது வியக்கத் தக்கதாக உள்ளது.

மொசாம்பிக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஆழ்நிலைத் தியானத்தை 1992-ல் மகரிஷி பல்கலைக் கழகம் பரிந்துரைத்தபோது, அதிபராக இருந்த சிஸானோ முதலில் தானே அதனை முயன்று பார்க்க விளைந்தார். தியானம் கற்றுக்கொண்டு அதன் பலனை அனுபவித்த பின், தனது சகாக்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிந்துரைத்தார். ஒரு கட்டத்தில் தியானத்தை இராணுவத்தினருக்கும் விஸ்தரிக்கும் எண்ணம் எழுந்த போது, மூத்த இராணுவ அதிகாரிகளின் பலத்த பரிசீலனைக்காளானது இந்த செயல்முறை. உள்நாட்டுப் போரால் தள்ளாடிக் கொண்டிருந்த தம் நாட்டுக்கு சமாதானம் அதிமுக்கியத் தேவை என்பதனை உணர்ந்த அதிகாரிகள், தீமைகளைத் தடுக்க, தனிமனித மனநிலையைக் கருவியாகப் பயன்படுத்தும் இந்த முற்றிலும் மாறுபட்ட வழிமுறையை முயற்சி செய்து பார்க்கத் தீர்மானித்தனர்.

1994-ல் இராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு ஆழ்நிலை தியானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர்களின் அன்றாடக் கடமைகளில் இருமுறை கூட்டு தியானத்தில் ஈடுபடுவது இணைக்கப்பட்டது. படைத் தளபதிகளும் அதிபர் சிஸானோவும் கூட தினம் இருமுறை ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டனர். சுமார் பதினாறாயிரம் வீரர்கள் இந்தக் கடமையில் இணைந்தனர். அதோடு, இராணுவப் பாடத்திட்டத்திலும் ஆழ்நிலை தியானம் புகுத்தப்பட்டது.

இதன் பலன் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அப்போது தலைமைத் தளபதியாக இருந்த டோபியாஸ் டாய், எங்கெல்லாம் தியானமுறை அமல்படுத்தப் பட்டதோ அங்கெல்லாம் குற்றங்கள் 20 சதவீதம் வரை குறைந்ததாகவும் எப்போதெல்லாம் கூட்டு தியானம் கைவிடப்பட்டதோ அப்போதெல்லாம் வன்முறை அதிகரித்ததாகவும் கூறியிருக்கிறார். கொரில்லாப் படையான ரெனாமோவுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக ஆழ்நிலை தியானத்தைக் குறிப்பிடுகிறார் அதிபர் சிஸானோ. மேலும், ஆழ்நிலை தியானத்தின் மூலம் பஞ்சம் தவிர்க்கப்பட்டதாகவும் பொருளாதாரத்தில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிஸானோவின் ஆட்சியில் சராசரியாக எட்டு சதவிகித பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகவும் 30 இலட்சம் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், குழந்தைகளின் மரண எண்ணிக்கை 35% குறைந்ததாகவும் தி இண்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது. சிறந்த தலைமைக்காக, உலகிலேயே அதிக மதிப்புள்ள மோ இப்ராஹிம் பரிசினை 2007ஆம் ஆண்டு பெற்ற சிஸானோ, ஆழ்நிலை தியானத்தால் தம் நாடு பெற்ற பலன்கள் குறித்து மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என அறிவித்திருக்கிறார்.

இந்த வெற்றியினால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க இராணுவ அதிகாரியான டேவிட் லெஃப்லர், பிரக்ஞை அடிப்படையிலான இராணுவ பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து தனது முனைவர் பட்டத்தை ஈட்டினார். தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மனித மனநிலையைக் கருவியாய்க் கொண்ட வெல்லற்கரிய பாதுகாப்புத் தொழில்நுட்பம் என்ற புதிய உத்தியை உலகமெங்கும் பரப்பி வருகிறார் லெஃப்லர்.

"தற்சமயம் இராணுவப் பாதுகாப்பு என்பது பயத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. சமூக நிலையை மேம்படுத்தத் தேவையான நிதி, அச்சத்தின் காரணமாக ஆயுதங்களைப் பெருக்குவதற்கு பயன்படுத்தப்படுவதால், ஆயுத நிறுவனங்கள் வளம் பெறுகின்றனவே ஒழிய, சாமானிய மனிதனின் வாழ்க்கை நிலை பின் தங்கியே இருக்கிறது" என்று வருந்துகிறார் இவர். பேரழிவை ஏற்படுத்தவல்ல அணு மற்றும் உயிரியல் ஆயுதங்களைக் கூட கறுப்புச் சந்தையில் பெற முடியும் என்கிற ஆபத்தான நிலை உலகில் காணப்படுவதற்கு அடிப்படைக் காரணம் பயத்தின் அடிப்படையிலான செயல்முறையே என்கிறார் லெஃப்லர். மேலே சொன்ன குட்டிக் கதையின் படி இது தீய ஓநாயைப் போஷிப்பதற்குச் சமானம்.

இத்தனை காலமாய் வழக்கத்திலிருக்கும் இந்த செயல்முறை மென்மேலும் பயத்தையும், நாடுகளுக்குள் ஆயுதப் போட்டியையும், பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தையுமே உருவாக்கி இருப்பதால் இதற்கு கண்டிப்பாக ஒரு மாற்று தேவை என்று கூறும் லெஃப்லர், இராணுவத்தில் போர் தடுப்புப் படைப்பிரிவை உருவாக்கும்படி பரிந்துரைக்கிறார். மொத்தப் படையில் 2-3% வீரர்களைக் கொண்ட இந்தப் படைப் பிரிவு திரளாகக் கூடி ஆழ்நிலை தியானத்தைத் தினமும் இருமுறை கடைப்பிடித்தால் எதிரி உள்ளிருந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம், உலகத்தில் சமாதனம் பெருகும் என்பது இவரது கணிப்பு. கடந்த 40 வருடங்களில் 33 நாடுகளில் நடத்தப்பட்ட 600 ஆய்வுகள் இவருக்கு பலத்த ஆதாரமாக விளங்குகின்றன. லெபனானில் தினமும் இருநூறு பேர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்ட போது போரில் 71% குறைவான உயிர்ச்சேதமும் காயம்பட்டோரின் எண்ணிக்கையில் 68% வீழ்ச்சியும் காணப்பட்டது ஒரு சிறிய உதாரணமே என்கிறார் இவர்.

டாக்டர் லெஃப்லருடன் இணைந்து இந்த வெல்லற்கரிய பாதுகாப்புச் செயல்முறையின் அவசியத்தைப் பலநாடுகளிலும் பரப்பி வருகிறார் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் குல்வந்த் சிங் அவர்கள். 35 வருட காலம் இந்தியாவில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடிய இவர், "ஆயுதங்கள் ஒரு போதும் சமாதானத்தை வழங்கப் போவதில்லை. சாமாதானத்தைக் கொண்டு வர அதன் மூலகாரணமான சமூக மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்" என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இராணுவ பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை இந்த செயல்முறைக்காகப் பயன்படுத்தினாலே சிறந்த பலனைக் காண முடியும் என்று இவர்கள் கூட்டாக வலியுறுத்தி வருகிறார்கள்.

உலக நாடுகள் ஒரு மாற்று செயல்முறையின் அவசியத்தை உணர்ந்திருப்பதால் இவர்களின் குரல் பல இராணுவ அமைப்புகளை எட்டி இருக்கிறது. அமெரிக்கா, பெரு, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் இந்த செயல்முறையில் ஆர்வம் காட்டி ஆய்வுகளை ஊக்குவித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் வேதம் பிறந்த இந்தியாவில் இந்த செயல்முறையை அமல்படுத்துவது எளிதாக இருக்க வேண்டுமாதலால், இந்திய இராணுவம் இதில் முன்னோடியாக விளங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

About The Author

1 Comment

  1. Radha

    Sir,

    nenga ranuvathoda neringi palagiyavangala….. neraiya nala karuthukkal pormunaila irunthu kidaka petrathai nam arivom…ASOKAR..serantha eduthukatu…. nan vetukkula than amaiti venum nu solrean …un vedai paru apuran un teruvai par..un orai par… unnatasi kakkum ..parukninaippu thanal varum… criket la jeisha natupatu…tootha… illayaaa…?vendam…. muthalil..nam kaiviral pola ulla nam vetai parpommm… ithu en karuthu… nalathu thanea sir..?

Comments are closed.