நீல நிற நிழல்கள் (13)

மலா நேரு பார்க்குக்குப் பின்புறம் இருந்த ஜோஷியின் பங்களா போர்டிகோவில் ஆர்யா காரை நிறுத்தியபோது அவளுடைய மணிக்கட்டில் இருந்த கடிகாரம் பத்தரை மணியைக் காட்டியது.

"வா ஆர்யா! நீ இப்போ இங்கே வந்தது நல்லதாப் போச்சு. கடந்த அரை மணி நேரமா டாக்டர் சதுர்வேதிக்கு போன் பண்ணிப் பேச எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலை. டெலிபோன் ரெண்டு பக்கமும் ஃபால்ட். மழை கொஞ்சம் விட்டதும் நானே புறப்பட்டு வரலாம்னு நினைச்சேன்…"

ஆர்யா நெற்றியைச் சுருக்கினாள்.

"நீங்க எதுக்காக சார் டாக்டர்கிட்ட வர நினைச்சீங்க…?"

"உள்ளே வா… சொல்றேன்…"

ஆர்யாவைக் கூட்டிக்கொண்டு ஜோஷி உள்ளே போனார். ஹாலைக் கடந்து, எதிர்ப்பட்ட மாடிப்படிகளில் ஏறி ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் நிரம்பிய முதல் அறைக்குள் நுழைந்தார்.

அவரைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்த ஆர்யா, ஸ்லோமோஷனில் திடுக்கிட்டாள்.

அறையின் சுவரோரமாய் அந்த நபர் விழுந்து கிடந்தான். தலையின் ரத்தக் காயத்துக்கு பாண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது, 

ஜோஷியை ஏறிட்டாள் ஆர்யா.

"யார் சார் இது?"

ஜோஷி கோணலாய்ப் புன்னகைத்தார். "ஒரு மணி நேரத்துக்கு முந்தி பொறிக்குள்ளே மாட்டிக்கிட்ட எலி இது. மெட்ராஸ் எலி. பேர் ஹரிஹரன்."

"எலி உயிரோடுதானே இருக்கு?"

"ஆமா… ஆமா…"

"இந்தத் தலைக்காயம்…?"

"வாட்ச்மேன் வால் சந்தோட கைங்கரியம்" சொல்லி விட்டுச் சிரித்தார் ஜோஷி.

******

"மாமா…!"

ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு வெளியே கொட்டியிருந்த இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாசிலாமணி, பின்பக்கமாய் எழுந்த கீதாம்பரியின் குரல் கேட்டுத் திரும்பினார்.

கீதாம்பரி வயிற்றைத் தூக்கிக் கொண்டு ஆயாசமாய் நின்றிருந்தாள். அவளுக்கு முகத்தை முழுசாய்க் காட்டாமல் "என்னம்மா…?" என்றார்.

"சாப்பிட வாங்க மாமா!…" கீதாம்பரி அவருக்கு எதிரே வந்து நின்றாள்.

"எனக்கு எதுவும் வேண்டாம்மா! ஒரு டம்ளர் பால் மட்டும் போதும்."

"பாலாவது சாப்பிட ஒப்புக்கிட்டீங்களே. அத்தையை விட நீங்க எவ்வளவோ பரவாயில்லை. ஹால் சோபாவில் வந்து உட்காருங்க மாமா… பத்தே நிமிஷத்துல பாலைக் காய்ச்சிக் கொண்டாந்துடறேன்" வலதுகையை இடுப்பில் வைத்துப் பம்மிய வயிற்றோடு சமையலறையை நோக்கிச் செல்லும் மருமகளையே மனம் கனக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஹாலைக் கடந்து மனைவி திலகம் இருந்த அறைக்குள் நுழைந்தார் மாசிலாமணி. ஒருக்களித்துப் படுத்திருந்த திலகம், காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினாள். கண்கள் நனைந்திருந்தன.

"திலகம்…"

"எ… என்னங்க…?"

"மனசைத் திடப்படுத்திக்கிட்டு, கீதாம்பரி தூங்கப் போகிற வரைக்குமாவது ஹால் சோபாவில் வந்து உட்கார்! அவ சந்தோஷமா இருக்கணும்னா… நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சாகணும்."

"என்னால முடியாதுங்க! ரணமாகிப் போன மனசை வெச்சுக்கிட்டு எப்படிங்க முகத்துல சிரிப்பைக் காட்ட முடியும்?"

"திலகம்…" என்று ஆரம்பித்து ஏதோ சொல்ல முயன்ற மாசிலாமணி, வேலைக்காரி பதற்றமாய் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி அவளை ஏறிட்டார்: "என்ன…?"

அவள் கையை உதறிக்கொண்டு பதற்றக்குரலில் சொன்னாள்:

"ஐயா! சமையலறைத் தரையில் சிந்தியிருந்த எண்ணெய்ல சின்னம்மா கால் வெச்சு வழுக்கி விழுந்துட்டாங்க. எங்கே அடிபட்டதோ தெரியலை… பேச்சு மூச்சில்லாம கிடக்கிறாங்க."

"என் ராசாத்தி…!" திலகம் பதறியடித்துக் கொண்டு சமையலறையை நோக்கி ஓட, மாசிலாமணி தவிப்பாய்ப் பின்தொடர்ந்தார்.

ஹாஸ்பிட்டல்.

லேபர் வார்டுக்கு வெளியே, தீப்பற்றிக்கொண்ட இதயங்களோடு திலகமும் மாசிலாமணியும் காத்திருந்தார்கள்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டாக்டர் மனோரஞ்சிதம் கவலை ஈஷிய முகத்தோடு வெளிப்பட்டாள். நெற்றியில் சரம் சரமாய் வியர்வை.

மாசிலாமணி தவிப்பாய்க் கேட்டார்:

"டாக்டர்… கீதாம்பரிக்கு இப்போ எப்படியிருக்கு?"

மனோரஞ்சிதம் அவரை ஏறிட்டாள்.

"கீதாம்பரி வழுக்கிக் கீழே விழுந்ததுல வயித்துல பலமான அடிபட்டிருக்கு. அதனால பெரிய உயிர், சின்ன உயிர் ரெண்டுக்குமே ஆபத்து ஏற்பட்டிருக்கு. இரண்டு உயிரையும் காப்பாத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு."

மாசிலாமணியின் கண்களில் கலக்கம் கொடி பிடித்துக்கொண்டு ஊர்வலம் போக, அதிர்ந்த குரலோடு டாக்டர் மனோரஞ்சிதத்தை ஏறிட்டார்.

"டா… டாக்டர்… நீங்க என்ன சொல்றீங்க?"

"யெஸ். நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பே இல்லை. குழந்தையைக் காப்பத்தணும்னா உடனே ஆப்ரேஷன் பண்ணிக் குழந்தையை எடுக்கணும். பெரிய உயிர் இப்ப ஆபரேஷனைத் தாங்காது."

பக்கத்தில் இருந்த திலகம் தவிப்பாய்க் குறுக்கிட்டாள். "டாக்டர்…! என் மருமகளை எப்படியாவது காப்பாத்திடுங்க!"

"நாங்களும் அந்த முடிவுக்கு வந்துட்டோம். ஆபரேஷன் செய்யப் போறதில்லை."

டாக்டர் சொல்லிவிட்டு லேபர்வார்டை நோக்கி வேகமாய்ப் போக, திலகத்தை அங்கிருந்த நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிட்டு டாக்டரைப் பின்தொடர்ந்தார் மாசிலாமணி.

"டாக்டர்! உங்க பின்னாடி நான் இப்போ வர்றதுக்குக் காரணம், உங்ககிட்ட ஒரு கோரிக்கை வைக்கத்தான்."

"கோரிக்கையா…?" மனோரஞ்சிதம் நின்றாள்.

"யெஸ். இது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது… முக்கியமா என் மனைவிக்கு."

"சொல்லுங்க… என்ன கோரிக்கை?"

"டாக்டர்… ஆபரேஷன் செய்து என் மகனுடைய வாரிசையாவது காப்பாத்திடுங்க டாக்டர்!…"

மனோரஞ்சிதத்தின் பெரிய நெற்றியில் வியப்பு வரிகள் உற்பத்தியாக, அணிந்திருந்த கண்ணாடிக்குள் கண்கள் திகைத்தன.

"நீங்க என்ன சொல்றீங்க… பெரிய உயிர் வேண்டாமா…?"

"வேணும் டாக்டர்… அதைவிட முக்கியமா அந்தக் குழந்தை வேணும்!"

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

ஒரு விபத்தில் தன் மகன் ஹரிஹரன் இறந்துபோன செய்தியிலிருந்து எல்லாவற்றையும் தெளிவாக டாக்டரிடம் சொல்லி முடித்த மாசிலாமணி, "டாக்டர்! புருஷன் இறந்துட்டான்னு தெரிஞ்சு அந்த அதிர்ச்சியில அவளோட உயிர் பிரியறதைக் காட்டிலும் ஒரு வாரிசைப் பெத்துக் கொடுத்துட்டு அவ சந்தோஷமாப் போய்ச் சேரட்டுமே!"

மனோரஞ்சிதம் அதிர்ச்சியோடு தன் கண்களில் இருந்த கண்ணாடியைக் கழற்றினாள்.

"உங்க மகன் ஹரிஹரன் இறந்துட்ட செய்தி தெரிஞ்சா கீதாம்பரியோட உயிர்க்கு ஆபத்துன்னு சொல்றீங்களா?"

"நிச்சயமா! கீதாம்பரியைப் பத்தி எங்களுக்குத் தெரியும். உறவு முறையில் எங்களுக்கு மருமகளாயிருந்தாலும் இந்தப் பொண்ணு… எங்க குடும்பத்துக்கு மக மாதிரி. பாசமாப் பழகின பக்கத்து வீட்டுப் பெரியவர் ஒருத்தர் திடீர்னு இறந்துபோன அதிர்ச்சியைத் தாங்கிக்க முடியாம மயக்கமாயிட்டா… அதுக்கப்புறம் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு அவ சரியாவே சாப்பிடலை. யாரோ ஒருத்தரோட மரணத்துக்கே இடிஞ்சு போயிடற கீதாம்பரி, புருஷனோட இழப்பை எப்படித் தாங்கிக்குவாள்னு நினைக்கறீங்க டாக்டர்?"

"…………"

"டாக்டர்! கீதாம்பரி ரெண்டு வருஷம் சந்தோஷமா மணவாழ்க்கையை நடத்தியிருக்கா, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கா… இந்தச் சந்தோஷங்களோடு புருஷன் இறந்த செய்தி தெரியாமலேயே அவ போய்ச் சேர்ந்துட்டாக் கூடப் பரவாயில்லை. அவளை இந்த வயசுல விதவைக் கோலத்துல பார்க்க எங்க யாருக்கும் சக்தியே இல்லே."

"அப்ப… குழந்தையைக் காப்பாத்த உடனே முடிவு எடுக்கச் சொல்றீங்க… அப்படித்தானே?"

"ஆமாம் டாக்டர்! கீதாம்பரி வாழ்க்கை ஹரிஹரனோட முடிஞ்சு போச்சு. ஆனா, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கை இனிமேதான் தொடங்கப்போறது… அதை அழிக்கக்கூடாது டாக்டர்!"

"சரி… என்னாலான அளவு இரண்டு உயிரையுமே காப்பாற்ற முயற்சிக்கிறேன். உடனே ஆபரேஷன் செய்து குழந்தையைக் காப்பாத்திடறேன். அதுக்கு மேலே கடவுள் இருக்கார்!" என்று கூறிவிட்டு டாக்டர் மனோரஞ்சிதம் லேபர் அறைக்குச் சென்றாள்.

"போதும் டாக்டர்!…" மாசிலாமணி ஈரமான கண்களை மேல்துண்டால் ஒற்றிக்கொண்டார்.

தேசமயத்தில், சாலையில் தேங்கியிருந்த மழைத் தண்ணீரைக் கிழித்தபடி ஓட்டல் சில்வர் ஸாண்ட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது போலீஸ் ஜீப்.

ஜீப்பின் உள்ளே ரமணி, திவாகர், இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா உட்கார்ந்திருக்க… கான்வாஸ் படுதா மழைத் தண்ணீரைத் தடுக்கும் கேடயமாய் மாறியிருந்தது!

ரமணியின் மனசுக்குள் இனம்புரியாத கலக்கம். விபத்தில் இறந்தது ஹரிஹரன் இல்லை என்பது ஊர்ஜிதமானதும் உடம்பெங்கும் பரவியிருந்த சந்தோஷம், இப்போது குழப்பமாக மாறியிருந்தது.

திவாகர் முதலில் பேசினான். "துவாரகநாத்தும் சீட்டலும் ஹரிஹரனுக்கு எந்த ஆபத்தையும் உண்டாக்கியிருக்க மாட்டாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா சார்?

"ஷ்யூர்! போலீஸ் ரெக்கார்ட்ஸ்படி, அந்த ரெண்டு பேரும் சூட்கேஸ் லிஃப்டர்ஸ் மட்டும்தான். கொலைகளைச் செய்யக்கூடிய ஆபத்தான பேர்வழிகள் இல்லை. ஹரிஹரன் காணாமப் போனது சம்பந்தமா ஓட்டல் ஸ்டாஃப்கிட்டே ஒரு விசாரணை நடத்தினா, ஏதாவது விவரம் கிடைக்கலாம். அது ஒரு பக்கம்… இப்போ என் மனசுக்குள்ளே சில கேள்விகள் இருக்கு. கேட்கலாமா…?"

"கேளுங்க இன்ஸ்பெக்டர்!"

"ஹரிஹரன் லிக்கர் சாப்பிடுவாரா?"

"மாட்டார்."

"பெண்கள்…?"

"நெவர்! சார், நீங்க நினைக்கிற மாதிரி ஹரிஹரன்கிட்ட எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. சுயக்கட்டுப்பாடும் நாகரிகமும் ஹரிஹரனுக்கு அதிகம்."

பேசிக்கொண்டிருக்கும்போதே ஜீப் சில்வர் ஸாண்ட் ஓட்டலுக்குள் நுழைந்து, போர்டிகோவில் மெளனமாயிற்று.

மூன்று பேரும் இறங்கினார்கள்.

திவாகர் சொன்னான்: "ரமணி! மொதல்ல உங்க வீட்டுக்கு போன் பண்ணி ‘லாரி விபத்துல இறந்தது ஹரிஹரன் இல்லை’ என்கிற விஷயத்தைச் சொல்லிவிடலாம். அதன் மூலமா அங்கே இருக்கறவங்களுக்கு ஒரு தற்காலிகச் சந்தோஷம் கிடைக்கும்."

டெலிபோன் கெளண்ட்டரை நெருங்கினான் ரமணி. "மெட்ராஸுக்கு ஒரு எஸ்.டீ.டி செய்து கொள்ளலாமா?"

கேட்டுக்கொண்டே டெலிபோனைத் தொட முயல, ரிசப்ஷனிஸ்ட் ஜாங்கிரிக் குரலோடு கொஞ்சினாள். தித்திப்பான ஆங்கிலம்.

"மன்னிக்க வேண்டும்… மழையின் காரணமாய் டெலிபோன் இணைப்புகள் உயிரோடு இல்லை. இணைப்பு சரியாகச் சிறிது நேரமாகலாம்."

"எவ்வளவு நேரம்?"

"சுமார் இரண்டு மணி நேரம்."

திவாகரும் ரமணியும் ஆயாசமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

மல்ஹோத்ரா ரிசப்ஷனிஸ்ட்டிடம் இந்தியில் சம்பாஷிக்க ஆரம்பித்தார்.

"மிஸ்டர் ஹரிஹரன் தங்கியிருந்த அறைச் சாவி வேண்டும்!"

"சீல் வைத்த அந்த அறைதானே சார்?"

"ஆமாம்."

வெள்ளிப் பூச்சோடு பளபளத்த சாவியை எடுத்துக் கொடுத்தாள்.

"அந்த அறைக்கு சர்வீஸ் பேரர் யார்?"

"யாதவ்."

"ப்ளீஸ் கால் ஹிம்!"

ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காமில் யாருடனோ பேச, ஒரு இருபது வருடங்களை விழுங்கிய அந்த யாதவ், சீருடையில் ஓடிவந்தான். அந்த மழைக் குளிரிலும் முகத்தில் வியர்வை.

"ஸாப்…!"

"ரூம்ல தங்கியிருந்த ஹரிஹரனுக்கு நீதானே சர்வீஸ் பண்ணினே?"

"ஆமா ஸாப்!…"

"அவர் ரூம்ல இருந்த சமயம் அவரைப் பார்க்க யாராவது வந்தாங்களா?"

"நான் கவனிக்கலை ஸாப்!"

"அவருக்கு ஏதாவது சர்வீஸ் பண்ணினியா?"

"சாப்பாடு கொண்டுவரச் சொன்னார்… கொண்டு போனேன்."

"வேற ஏதாவது கேட்டாரா?"

"இல்லை."

"நீ அவரோட ரூம்ல இருக்கும்போது அவருக்கு போன் ஏதாவது வந்ததா?"

"போன் வரலை ஸாப்… ஆனா, ஒரு டெலிபோன் நம்பருக்காக டைரக்டரியைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்." 

மல்ஹோத்ராவின் மூளைப்பகுதியில் இருந்த சில நியூரான்கள் ‘ஜே’ கோஷம் போட்டன!

(தொடரும்)

About The Author