நீல நிற நிழல்கள் (21)

ஜோஷியின் இதய மையத்தில் பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தை வெகு இயல்பாய் வைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவை ஏறிட்டார்.

"பேர்… என்ன சொன்னீங்க?"

"ஹரிஹரன்."

"இதே ஊரைச் சேர்ந்தவரா?"

"இல்லை. மெட்ராஸ்."

ஜோஷி யோசிக்கிற தினுசில் முகத்தை முப்பது விநாடிகள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு மெள்ளத் தலையாட்டினார்.

"தெரியலையே…"

"ஹரிஹரன் மெட்ராஸில் பெரிய பிசினஸ்மேன். நேற்றைக்கு ராத்திரி பம்பாய்க்கு வந்து இன்னிக்குக் காலையில ஃப்ராங்ஃபர்ட் போறதுக்காக ஓட்டல் சில்வர் ஸாண்ட்ல தங்கியிருந்தார். மலபார்ஹில்ஸில் யாரையோ பார்க்கிறதுக்காக நேத்து ராத்திரி டாக்ஸி பிடிச்சு வந்திருக்கார். அதுக்கப்புறம் அவரைக் காணலே…"

தன் முகத்துக்கு ஒரு செயற்கைத் திடுக்கிடலைக் கொடுத்தார் ஜோஷி. "எ… எ… என்னது… காணலையா?"

"யெஸ்."

"ஹரிஹரன் மலபார்ஹில்ஸுக்குத்தான் வந்தார்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அவரை இங்கே கொண்டுவந்து விட்ட டாக்ஸி டிரைவர்தான் சொன்னார். டாக்ஸி தெருமுனையில் ரிப்பேராகி நின்னுட்டதால ஹரிஹரன் டாக்ஸியை அங்கேயே வெயிட் பண்ணச் சொல்லிவிட்டு இறங்கி இந்தத் தெருவுக்குள்ளே நுழைஞ்சிருக்கார். போனவர் போனவர்தான், திரும்பி வரவேயில்லைங்கிறது டாக்ஸி டிரைவரோட ஸ்டேட்மெண்ட். டிரைவரையும் கூட்டிட்டு வந்திருக்கோம். அவர் வெளியே நிற்கிறார்."

ஜோஷி உள்ளுக்குள் தகர்ந்தார். மல்ஹோத்ரா தொடர்ந்தார். "ஒரு போகஸ் ப்ராடக்ட் விஷயமா, ஹரிஹரன் வியாபார சம்பந்தப்பட்ட ஒருத்தரைப் பார்க்க வந்திருக்கார். அந்தப் பார்ட்டி யார்னு கண்டுபிடிக்கிற முயற்சிதான் இந்த விசாரணை."

ஜோஷி புன்னகைத்தார். "மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! பம்பாய்ல நான் வெல்நோன் பிஸினஸ்மேன்… என் கையில ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு. இந்தியாவுல இருக்கிற எல்லா முக்கியமான பிசினஸ் பார்ட்டிகளையும் எனக்குத் தெரியும்… ஆனா, நீங்க சொல்ற ஹரிஹரனைப் பத்தி எனக்குத் தெரியாது. அவர் என்ன ப்ராடக்ட் தயாரிக்கிறார்?"

ரமணி குறுக்கிட்டுச் சொன்னான். "எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட ப்ராடக்ட்ஸ்… கம்பெனி பேர் ப்யூச்சர் ப்ரைட்."

"ஸாரி… இந்தப் பேரை நான் கேள்விப்பட்டதே இல்லை."

ரமணி கையெடுத்துக் கும்பிட்டான். "மிஸ்டர் ஜோஷி! என் பேர் ரமணி. ஹரிஹரனோட ப்ரதர். இவர் திவாகர். ஹரிஹரனுக்குப் ப்ரதர்-இன்-லா. ரெண்டு பேரும் போலீஸ் உதவியோடு ஹரிஹரனைக் கண்டுபிடிக்கப் படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கோம்.

ஹரிஹரன் நிச்சயமா யாரோ ஒரு பிஸினஸ் பார்ட்டியைப் பாத்து ‘போகஸ் ப்ராடக்ட்’ விஷயமாப் பேச இங்கே வந்திருக்கார். அந்தப் பார்ட்டி யார்னு தெரிஞ்சாப் போதும். அந்தப் பார்ட்டியைக் கண்டுபிடிக்க நீங்கதான் உதவி பண்ணணும்…"

ஜோஷி தன் குரலில் கவலையைத் தீற்றிக்கொண்டு ரமணியை ஏறிட்டார். "ஸாரி… மிஸ்டர் ரமணி. இந்த மலபார்ஹில்ஸில் இருக்கிற பிசினஸ்மேன்களில் பாதிப் பேரை எனக்குத் தெரியாது. புதுசு புதுசா யார் யாரோ பிஸினஸ் தொடங்கறாங்க. இதுல போகஸ் ப்ராடக்ட் தயார் பண்றது யார்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம். என்னைப் பொறுத்தவரைக்கும் செய்யற தொழில் தெய்வம் மாதிரி. தயார் பண்ணினா தரமான பொருள்களைத் தயார் பண்ணணும். இல்லைன்னா அந்தத் தொழிலையே விட்டுடணும். இதுதான் என் பிஸினஸ் பாலிஸி. உங்க ப்ரதர் ஹரிஹரன் இந்த ஏரியாவில் இருக்கிற யாரைப் பார்க்க வந்திருப்பார்னு எனக்குப் பிடிபடலை. இருந்தாலும் சில பார்டீஸோட பெயர்ப் பட்டியலைத் தர்றேன். நீங்க போலீஸ் உதவியோடு விசாரிச்சுப் பாருங்க. இந்த விஷயத்தில் என்னோட முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு."

"தேங்க்யூ வெரி மச் சார்!…" ரமணி பரவசமாய் மறுபடியும் கையெடுத்துக் கும்பிட்டான்.

**********

புகைபோக்கியின் வழியாக டாக்டர் சதுர்வேதியின் பங்களாவுக்குள் இறங்கிய வால் சந்த், கண்களுக்கு இருட்டு பழக்கமாகும் வரை அப்படியே நின்றான். பின் மசமசவென்று தெரிந்த பொருட்களுக்கு நடுவே எதன் மீதும் இடித்துக் கொள்ளாமல் பூனைநடை நடந்து லாபரட்டரி இருந்த பக்கமாய்ப் போனான்.

பங்களா முழுக்க ஆழ்கடல் அமைதி.

திடீரென்று ஏதாவது ஒரு பக்கமிருந்து நிஷா வெளிப்பட்டுத் தன்னைத் தாக்கக் கூடும் என்ற பயத்தை இரண்டு கண்களிலும் நிரப்பிக்கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தபடி சர்வ ஜாக்கிரதையாய் முன்பக்கம் வந்தான்.

இருட்டுச் சாயத்தில், பீரோவுக்குப் பக்கத்தில் டாக்டர் சதுர்வேதி ஒரு குப்பைக்காகிதம் போல் மயங்கி விழுந்திருப்பது தெரிந்தது. வால் சந்தின் நடு முதுகில் வியர்வைக் கால்வாய் ஒன்று உடைப்பெடுத்துக்கொண்டது. மூளையின் ஓர் ஓரமாய் நிஷாவைப் பற்றிய பயம் உட்கார்ந்து கொண்டு அவஸ்தையாய்ப் பிறாண்டியது.

துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, இரும்புத் தூண்களாய் மாறிவிட்ட கால்களைச் சிரமமாய்ப் பெயர்த்தெடுத்து நடந்து டாக்டருக்குப் பக்கத்தில் வந்தான்.

பார்வையை பீரோவுக்குப் பின்னால் துரத்திப் பார்த்துவிட்டு, சதுர்வேதிக்கு அருகே மண்டியிட்டு உட்கார்ந்தான்.
உடம்பைப் புரட்ட, அவர் கைகளைப் பரப்பிக்கொண்டு மல்லாந்தார். ரத்தம் பிசுபிசுத்தது.

"வால் சந்த்…" கிசுகிசுப்பான குரல் கேட்டுப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான் வால் சந்த்.

க்ரில் ஜன்னலுக்கு வெளியே ஆர்யாவின் முகம் நிழலுருவமாய்த் தெரிந்தது.

சொன்னது: "டாக்டர் உயிரோட இருக்காரான்னு பாரு…"

வால் சந்த் தன் இடது புறங்கையைச் சதுர்வேதியின் நாசி அருகே வைத்துப் பார்த்தான்.
லேசான வெப்ப மூச்சு ஸ்பரிசம்.

பதற்றமாகி ஜன்னலை நோக்கிக் குரல் கொடுத்தான். கிசுகிசுப்பான குரல்.

"அம்மா…"

"என்ன வால் சந்த்?"

"டாக்டர் அய்யாவுக்கு உயிர் இருக்கு…"

"எ… என்ன?" சந்தோஷமானாள் ஆர்யா.

"ஆமாங்கம்மா…" ஜன்னலுக்குப் பக்கத்தில் ஓடிவந்து சொன்னான்: "லேசா மூச்சு வந்துட்டிருக்கு…"

"ரத்த சேதம் அதிகமா தெரியுது. காயம் எப்படீன்னு பாரு…"

வால் சந்த், பக்கத்தில் போய் ஒரு தீக்குச்சியை உரசி அந்தப் பதினைந்து விநாடி வெளிச்சத்தில் டாக்டரின் முகத்தைப் பார்த்தான்.
முன் வழுக்கையில் ஒரு ரத்தப் பொத்தல் தெரிந்தது. உடம்பின் மற்ற எந்த இடத்திலும் காயம் இல்லை. தலையினின்றும் வழிந்த ரத்தம் மட்டும் அங்கங்கே உறைந்து போயிருந்தது.

தீக்குச்சி வெளிச்சம் அஸ்தமித்துப்போக, மறுபடியும் ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்தான்.

"அம்மா..! டாக்டர் அய்யாவுக்குப் பெருசா காயம் எதுவும் இல்லை… நெத்தியில் மட்டும்தான் காயம்… பயப்படற மாதிரி இல்லை."

"வால்ச்சந்த்! நீ உடனடியா ஒரு காரியம் பண்ணணும்…"

"சொல்லுங்கம்மா…"

"நிஷா, டாக்டரைத் தாக்கிட்டு இதே பங்களாவுக்குள்ளே ஏதாவது ஒரு பக்கம் ஒளிஞ்சுக்கிட்டிருக்கலாம். இல்லேன்னா… பயத்துல மூர்ச்சையாகிக் கிடக்கலாம்."

"பார்த்துடறேன்மா…"

"ஜாக்கிரதை! கையில் ஏதாவது எடுத்துக்க. நிஷா தாக்க முயற்சி செஞ்சா நீ யோசனையே பண்ணாதே… ஒரே போடா போட்டுடு."

"சரிங்கம்மா…"

"மொதல்ல கேஜ் ரூம் பக்கமாப் போய்ப்பார். அங்கே இல்லைன்னு ஊர்ஜிதமானதும் லாபரட்டரி கதவைச் சாத்திட்டு வாசல் கதவு பக்கம் வா…"

"நீங்க தைரியமா இருங்கம்மா! இனிமே அந்தப் பொட்டைக் கழுதையை நான் பார்த்துக்கிறேன்." சொன்னவன் சுவருக்குச் சாய்த்து வைத்திருந்த டெஸ்ட் ட்யூப் இரும்பு ஸ்டாண்டைக் கையில் எடுத்துக்கொண்டு, கேஜ் ரூம் இருந்த லாபரட்டரி பக்கம் மெதுவாய்ப் போய் இருட்டில் கரைந்தான்.

ஆர்யா ஜன்னலுக்கு வெளியே தடதடக்கிற இதயத்தோடும் பிசைந்துவிடுகிற அடிவயிற்றோடும் காத்திருக்க ஆரம்பித்தாள்.
விநாடிகள் நொண்டியடித்தன.

ஒரு நிமிஷம்.

இரண்டு நிமிஷம்.

பங்களாவுக்குள் கொட்டியிருந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்யா.

எந்தச் சலனமும் தெரியவில்லை.

மூன்றாவது நிமிஷத்தின் ஆரம்பித்திலிருந்த ஆர்யாவின் அட்ரினல் சுரப்பி பயத்தின் சதவிகிதத்தை அதிகப்படுத்த, வியர்த்தாள்.

‘லாபரட்டரிக்குள் போன வால் சந்தை எங்கே இன்னும் காணோம்?’

‘குரல் கொடுத்துப் பார்க்கலாமா?’

"வேண்டாம். இன்னும் ஒரு நிமிஷம் பார்க்கலாம். வால் சந்துக்கு அவ்வளவாய்ப் பழக்கமில்லாத இடம் இது. அதிகப்படியான நிதானம் எடுத்துக் கொண்டிருக்கலாம்…!"

ஆர்யா இருட்டையே பார்த்தபடி, க்ரில் கம்பிகளைப் பிடித்தபடிக் காத்திருக்க நான்காவது நிமிஷமும் ஐந்தாவது நிமிஷமும் மெளனமாய்க் கரைந்து போயின.

ஆறாவது நிமிஷம் ஆரம்பமாயிற்று.

ஆர்யா காதுகளுக்கு உன்னிப்பைக் கொடுக்க, பங்களாவுக்குள்ளே ஒரு சின்ன சத்தம்கூட இல்லை. ரத்த ஓட்டத்தில் பயம் கலந்துகொள்ள, ஆர்யா முடிவுக்கு வந்தாள்.

‘குரல் கொடுக்க வேண்டியதுதான்…!’

"வால் சந்த்…!" என்று குரல் கொடுக்க வாயைத் திறந்த விநாடி…

பங்களாவுக்குள் அந்தச் சத்தம் கேட்டது.

"ப்ளக்…"

லாபரட்டரியின் கதவு மூடப்படும் சத்தம். ஆர்யா தன் விழிகளை விரித்துக் கொண்டு இருட்டையே பார்க்க, அந்த உருவம் அசைந்து அசைந்து வந்தது.

‘வருவது யார்…?’

‘வால் சந்தா…?’

‘இல்லை நிஷாவா…?’

உருவம் பிடிபடாமல் குழப்பமாய், அதிர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆர்யா. இதயத்துடிப்பு பி.டி.உஷாவாய் மாறியது.

************

கீதாம்பரி, மாசிலாமணியின் முகத்தைப் பார்த்தாள்.

"எ… என்ன மாமா… பே… பேச்சையே காணோம்…?"

மாசிலாமணி சுதாரிப்புக்கு வந்து, வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு மருமகளைப் பார்த்தார்.

"நீ… என்னம்மா கேட்டே…?"

"கு… குழந்தை பிறந்த… வி… விஷயத்தை ஜெர்மனியில் இ… இருக்கிற உ… உங்க மகனுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டீங்களா
மாமா?…"

"இனிமேத்தாம்மா பண்ணணும்…"

"இ… இன்னுமா பண்ணலை?"

"இப்போ பண்ணிடறேம்மா…"

"மா… மாமா…"

"சொல்லும்மா…"

"நான் அவர்கூடப் பேசணும்… போன் இருக்கிற ரூமுக்கு என்னையும் ஸ்ட்ரெச்சர்ல வச்சுக் கூட்டிட்டுப் போங்க…"
பக்கத்தில் நின்ற திலகம், கீதாம்பரியின் தலைக்கேசத்தை மெள்ளக் கோதிவிட்டாள்.

"இதோ பாரம்மா! உன் உடம்பு இருக்கிற நிலைமையில உன்னை நீ படுத்திக்கக்கூடாது! நீ பெத்து கண்ணை முழிச்சுப் பார்க்கிறதுக்குள்ளே… நாங்க பட்டபாடு இருக்கே… அது அந்த செளடேஸ்வரிக்குத்தான் தெரியும். உடம்பு தேறின பின்னாடி உன் புருஷன்கிட்ட பேசலாம். இப்ப என்ன அவசரம்?"

"அத்தே…! அவர் குரலைக் கேட்கணும் போலிருக்கு. அவர் படற சந்தோஷத்தை அனுபவிக்கணும் போல் இருக்கு…"

"நாளைக்கு போன் பண்ணிப் பேசலாம்…"

"ஊ… ஹும்… இப்பவே…! "

"சொன்னாக் கேட்கணும்…"

திலகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…

கதவைத் திறந்து எட்டிப் பார்த்த நர்ஸ், மாசிலாமணியிடம் சொன்னாள்.

"சார்! பம்பாயிலிருந்து உங்களுக்கு போன். உங்க சன் ரமணி லைன்ல காத்திட்டிருக்கார்… வர்றீங்களா?"

‘பம்பாயிலிருந்து ரமணியின் போன் காலா?’ மனசுக்குள் ஏதோ பொறி தட்ட, கீதாம்பரியின் முகம் கலவரப் பிரதேசமாயிற்று.

(தொடரும்)

About The Author