நீல நிற நிழல்கள் (9)

டாக்டர் சதுர்வேதியும் ஆர்யாவும் மின்சாரம் செத்துப் போயிருந்த அந்தக் கெட்டியான இருட்டில் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றார்கள். சில விநாடி கலக்கமான நிசப்தத்துக்குப் பிறகு, ஆர்யா பிசிறடிக்கிற குரலில் கூப்பிட்டாள்.

"டாக்டர்…!"

"ம்…"

"இந்த நேரம் பார்த்து நம்ம ஜெனரேட்டரும் ரிப்பேர். ரெண்டு நாளைக்கு முந்தி ஜெனரேட்டரை ரிப்பேர் பார்க்க வந்த ஆளை ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது."

"ஆர்யா! அதையெல்லாம் பேசிட்டிருக்க இது நேரமில்லை. டார்ச்சை எடுத்துக்கிட்டு உள்ளே போய்ப் பார்க்க வேண்டியதுதான்."

"வே… வேண்டாம் டாக்டர்…!"

"வேண்டாமா… ஏன்…?"

"லாபுக்குள்ளே யாரோ இருக்கிற விஷயம் சர்வ நிச்சயமாயிடுச்சு. டார்ச் வெளிச்சத்தை நம்பி நாம உள்ளே போறது ரொம்பவும் ரிஸ்க். உள்ளே இருக்கிற அந்த எக்ஸ் கையில் ஏதாவது கனமான ஆயுதம் கிடைச்சுட்டா உங்களுக்கும் எனக்கும் கபால மோட்சம்தான்."

"இப்ப என்னதான் பண்ணலாங்கிறே?"

"கரண்ட் வர்ற வரைக்கும் காத்திட்டிருப்போம்."

டாக்டர் தாழ்ந்த ஸ்தாயியில் கோபப்பட்டார். "ஆர்யா முட்டாள்தனமாய் உளறாதே! இப்ப போயிருக்கிற கரண்ட் மறுபடியும் எப்ப வரும்ன்னு தெரியாது. இது மழைக்காலம். ராத்திரி பூராவும் கரண்ட் வராமலேயிருக்க வாய்ப்பு உண்டு. லாபுக்குள்ளே நுழைஞ்சிருக்கிற ‘எக்ஸ்’ பார்வைக்கு டெலிபோன் பட்டுட்டா போலீஸுக்கு போன் செய்யவும் முயற்சிக்கலாம்."

ஆர்யாவைப் பயம் வருடிவிட்டது. "நான் அந்தக் கோணத்தை யோசிச்சுப் பார்க்வேயில்லை டாக்டர்!"

"இப்போ கரண்ட் போய் இருட்டுல லாப் இருக்கிறதும் நமக்கு ஒருவகையில் சாதகம்தான். உள்ளே நுழைஞ்சிருக்கிற எக்ஸ் பார்வையில் லாப் விபரீதங்கள் எதுவும் தட்டுப்பட வாய்ப்பில்லை. கரண்ட் வந்து அதெல்லாம் தட்டுப்படறதுக்கு முந்தி நாம எக்ஸை மடக்கியாகணும். நீ டார்ச் வெளிச்சத்தோடு முன்னாடி போ! நான் கையில் ரிவால்வரோட உன் பின்னாடியே வர்றேன்."

"டா… க்… ட… ர்…!"

"பயப்படாதே ஆர்யா! இது மாதிரியான நேரங்களில்தான் மனசைத் தைரியமா வெச்சிருக்கணும். லாப் நமக்குப் பழகிப்போன இடம். உள்ளே நுழைஞ்சிருக்கிற ‘எக்ஸ்’க்குப் புதிரான இடம். சீக்கிரத்திலேயே மடக்கிடலாம்."

உள்ளே நுழைந்தார்கள்.

லாப் பிரதேசம் முழுக்க மகா இருட்டு. எல்லாத் திசைகளிலும் கறுப்பு நிறக் கார்பன் படுதாக்கள்.

சதுர்வேதி லாப் கதவை உட்பக்கமாய்த் தாழிட்டு லாக் செய்தார். சாவியைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னார்.

"ஆர்யா, டார்ச்சை ஆன் பண்ணு!"

பொத்தான் அழுத்தப்பட, ஆர்யாவின் கையிலிருந்த டார்ச், வெளிச்சக் கற்றைகளை உற்பத்தி செய்து இருட்டுச் சாயத்தைச் சில சதவிகிதம் கழுவியது.

"முன்னாடி நட!…"

ஆர்யா சிரமமாய்க் கால்களைத் தரையினின்றும் பிரித்து மெள்ள அடியெடுத்து வைத்தாள். வெளிச்சம் லாப் சுவரோரமாய் ஊர்ந்தது. சதுர்வேதியின் கையில் இருந்த ரிவால்வர் தன் ஒற்றைக் கண்ணோடு சுற்றும் முற்றும் பார்த்தது.

"ஆ… ஆர்யா…!"

"டாக்டர்!…"

"டார்ச் வெளிச்சத்தை நாலா பக்கமும் துரத்து! முக்கியமா பீரோக்களுக்குப் பின்னாடி."

டார்ச் வெளிச்சம் அரக்கப்பரக்க எல்லாப் பக்கமும் அலைந்து, இருளைத் துடைத்து லாபில் இருந்த பொருட்களைக் காட்டியது. பார்த்துக்கொண்டே நடந்தார்கள்.

வெளியே மழை பெய்கிற சத்தம் பாம்பின் சீறல் மாதிரி கேட்டது. லாபின் முதல் பகுதியைக் கடந்து இரண்டாவது பகுதிக்கு வந்ததும் ஆர்யா வியர்த்த முகமாய்ச் சதுர்வேதியை ஏறிட்டாள்.

"டாக்டர்!…"

"ம்…"

"மொதல்ல டெலிபோன் இருக்கிற அறைக்குப் போய் டெலிபோன் கனெக்ஷனைக் கட் பண்ணிட்டா என்ன?"

"நானும் அதைத்தான் நினைச்சேன். கிளம்பு!"

நடந்து கொண்டிருந்த பாதையின் போக்கை மாற்றினார்கள். டார்ச் வெளிச்சம் தரையில் தத்தியது.

"டாக்டர்! ரிவால்வரை அலர்ட்ல வையுங்க! உருவத்தைப் பார்வையில் வாங்கினதும்… விநாடி நேரம்கூடத் தாமதிக்காம ட்ரிக்கரை அழுத்திடுங்க! அது யாராயிருந்தாலும் சரி, யோசனையே பண்ணாதீங்க!"

சதுர்வேதி அந்த இக்கட்டான நிலையிலும் புன்னகைத்தார். "நான் யோசனை பண்ணாலும் என் கையில் இருக்கும் ரிவால்வர் யோசனை பண்ணாது ஆர்யா. அதுக்கு ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்து ரொம்ப நேரமாச்சு."

டெலிபோன் இருந்த அறைக்குப் பக்கத்தில் வந்தார்கள். கதவு சாத்தியிருந்தது. ஆர்யா கதவைத் தள்ள முயன்ற விநாடி, டார்ச் வெளிச்சம் எதேச்சையாய்ப் பத்தடி தள்ளி நின்றிருந்த ஷெல்ஃபின் திரைச்சீலையில் போய் விழ, அவள் பார்வை ஆணியடித்தது.

அப்படியே நின்றாள்.

சதுர்வேதி அவளுடைய தோளைத் தொட்டார்.

"என்ன ஆர்யா… கதவைத் தெறக்காமே அப்படியே நின்னுட்டே?"

ஆர்யா சட்டென்று குரலைத் தாழ்த்தினாள். அவருக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொன்னாள்.

"டாக்டர்! அந்த எக்ஸ் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்."

"எங்கே?"

"வலது பக்க ஷெல்ஃப் திரைச்சீலைக்குப் பின்னாடி" சொல்லிக்கொண்டே கையில் இருந்த டார்ச் வெளிச்சத்தை அந்தப் பக்கமாய்த் திருப்பினாள்.

சதுர்வேதி பார்வையை அந்தப் பக்கம் கொண்டுபோக, ஷெல்ஃப் திரைச்சீலைக்குக் கீழே ஒரு ஜோடிக் கால்கள் தெரிந்தன.

********

மாசிலாமணி சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் கம்பெனிக்குப் போய், டெலிபோனுக்குப் பக்கத்திலேயே தகிக்கிற இதயத்தோடு காத்திருந்தார். பக்கத்திலேயே, அழுது அழுது உலர்ந்துபோன கண்களோடு திலகம்.

சரியாய் ஆறரை மணிக்கு டெலிபோன் துடித்தது. கைவிரல்கள் லேசான நடுக்கத்துக்கு உட்பட்டிருக்க, ரிஸீவரை எடுத்தார் மாசிலாமணி. "ஹ… ஹலோ…!"

மறுமுனையில் ரமணியின் குரல்.

"அப்பா!…"

"எ… என்னாச்சு ர… ரமணி…?"

"போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு அண்ணனோட பாடியை வாங்கிட்டோம். இன்னும் பத்து நிமிஷத்துல ஒரு வேன்ல வெச்சு மின்சார மயானத்துக்குக் கொண்டு போயிடுவோம்."

மாசிலாமணிக்கு அடிவயிற்றில் துக்கம் வெடித்துக் கண்ணீர் பீரிட்டது. உதடுகள் துடித்தன.

"ஹ… ஹ… ஹரி…"

"அ… அப்பா…"

"ம்…"

"நம்ம குடும்ப வழக்கப்படி ஏதாவது ஈமக்கிரியை பண்ணணுமானு போலீஸ் கேட்டாங்க. அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா பண்ணிடலாம்!"

"எதைப் பண்ணி என்ன பிரயோஜனம்?" அனலாய்ப் பெருமூச்சுவிட்டார் மாசிலாமணி. பின், தொண்டை அடைத்துக்கொண்ட குரலில் சொன்னார்.

"அஸ்தியை மட்டும் ஒரு சின்ன சொம்புல கொண்டாந்துடு ரமணி! காவிரிக்குக் கொண்டுபோய்க் கரைச்சுடலாம்."

"அப்பா! அண்ணி எப்படியிருக்காங்க?"

"புருஷன், செத்துப்போன விஷயம் தெரியாம, போன்ல ஹரி சரியாப் பேசாததை மனசுல வெச்சுக்கிட்டுத் திட்டித் தீர்த்துட்டிருக்கா. போன்ல சரியாப் பேசலைங்கிற ஒரு சின்னக் காரணத்துக்காகவே இடிஞ்சு போயிட்ட உன் அண்ணிக்கிட்ட ஹரி உயிரோடு இல்லைங்கிற விஷயத்தைச் சொன்னா அவ நிலைமை என்னாகும்னு யோசிச்சுப் பார்க்கவே ‘பகீர்’ ன்னு இருக்கு."

மாசிலாமணி தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திலகம் அழுகையில் உடைய, சத்தம் ரிஸீவரைத் தொட்டு மறுமுனையில் இருந்த ரமணியின் காதை இம்சையாய் ஸ்பரிசித்தது.

"அ… அப்பா…!"

"ம்…"

"பக்கத்துல யாரு… அம்மாவா?"

"ஆ… ஆமா…!"

"இப்ப வீட்ல அண்ணி தனியாவா இருக்காங்க?"

"இல்ல. அண்ணியோட அம்மா துணைக்கு இருக்காங்க. நானும் அம்மாவும் கோயிலுக்குப் போறதாச் சொல்லிட்டு கம்பெனிக்கு வந்துட்டோம்."

"அந்த அம்மா அழுதுகிழுது அண்ணிக்கு விஷயம் தெரிஞ்சுடப் போவுதுப்பா!"

"இல்ல ரமணி! அந்த அம்மா நம்மைக்காட்டிலும் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்காங்க. கண்ல தண்ணியைக் காட்டாம உணர்ச்சிகளையெல்லாம் அடக்கிக்கிட்டு… வாயும் வயிறுமா இருக்கிற பொண்ணுக்குப் பிரசவம் நல்லபடியா முடியறவரைக்கும் விஷயம் தெரியக்கூடாதுங்கிற அக்கறை நிறையவே இருக்கு. அம்மாவைத்தான் கண்ட்ரோல் பண்ண முடியலை. வீட்ல வாய்விட்டு அழமுடியாம உங்கம்மா தவிக்கிற தவிப்பு இருக்கே… கண்கொண்டு பார்க்க முடியாது!"

டெலிபோனில் சில விநாடிகளுக்கு வேண்டாத கனத்த நிசப்தம். அதை மாசிலாமணியே கலைத்தார்.

"பம்பாயிலிருந்து நீ என்னிக்குக் கிளம்பறே ரமணி?"

"அஸ்தியைச் சேகரம் பண்ணிக்கிட்டு நாளைக்குக் காலை ஃப்ளைட்ல நானும் திவாகரும் புறப்படறோம்."

"வேண்டாம்!"

"ஏம்பா?"

"உன் அண்ணிக்குப் பிரசவம் நடந்து முடியறவரைக்கும் நீ பம்பாய்ல இருந்துக்கிட்டே பேசணும். தினசரி ஒரு தடவையாவது போன் வரலைன்னா உன் அண்ணி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா. ஸோ… நான் சொல்ற வரைக்கும் நீயும் திவாகரும் பம்பாயிலேயே இருங்க!"

"அப்பா! தினசரி அண்ணன் ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து அண்ணிக்கிட்ட பேசற மாதிரி நான் பேசணும். அவ்வளவுதானே?"

"ஆமா…"

"அதுக்குப் பம்பாயில் இருந்துகிட்டுதான் பேசணும்ங்கிற அவசியம் இல்லை. மெட்ராஸ்ல இருந்துகிட்டே பேசலாமே? அண்ணியோட நடவடிக்கைகளை வீட்டில் அப்ஸர்வ் செய்து, அதுக்குத் தகுந்த மாதிரி நான் வெளியே போய் ஏதாவது ஒரு இடத்திலிருந்து டெலிபோன் பண்ணி ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து பேசற மாதிரி பேசிடறேன். அண்ணிக்கும் இதனால சந்தேகம் வர வாய்ப்பில்லை."

"எதுக்கும் யோசனை பண்ணு!"

"இதுல யோசிக்க ஒண்ணுமே இல்லேப்பா! நாளைக்கு மார்னிங் ஃப்ளைட்ல நானும் திவாகரும் புறப்பட்டு வர்றோம்."

"சரி! ஃப்ராங்ஃபர்ட்டுக்கு ஃப்ளைட் ஏர்றதுக்கு முந்திக் கீதாம்பரிக்கு போன் பண்றதாச் சொல்லியிருக்கே…"

"ஆமா!"

"போன் பண்ணி ஹரி மாதிரி பேசிடு!"

"ம்…"

"கொஞ்சம் பிரியமா, ஹரி மாதிரியே பேசு! வேண்டா வெறுப்பாப் பேசாதே!"

"எனக்கு உடம்பெல்லாம் கூசுதப்பா!"

"கஷ்டம்தான்… வேற வழியில்லை! ஹரி பேசற மாதிரியே பேசி அவளைச் சந்தோஷப்படுத்து!"

"சரிப்பா!"

*******

கேபிள் டி.வியில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த கீதாம்பரி, பக்கத்து அறையில் டெலிபோன் அலறுவதைச் செவிமடுத்ததும் வயிற்றில் பிள்ளை இருப்பதையும் மறந்து விலுக்கென்று ஒரு நேர்க்கோடு மாதிரி எழுந்தாள். பக்கத்தில் அவளுடைய அம்மா பர்வதம் பதறினாள்.

"பார்த்துடி!…"

"அம்மா போன் பண்றது உன்னோட மாப்பிள்ளைதான். போய்ச் சண்டையை கன்டினியூ பண்ணணும்."

சுவரைப் பிடித்துக்கொண்டு வேகமாய்ப் போய் அறைக்குள் கத்திக்கொண்டிருந்த ரிஸீவரை எடுத்தாள்.

"ஹலோ…" குரல் கொடுத்தாள்.

நல்ல ஆங்கிலத்தில் மறுமுனை கேட்டது. "இது ஹரிஹரன் வீடுதானே?"

"ஆமாம்!"

"பம்பாய் சில்வர்ஸாண்ட் ஓட்டல் ரிசப்ஷனிலிருந்து பேசுகிறோம்…"

(தொடரும்)

About The Author