நேரம் – இசை விமர்சனம்

மலையாளம், தமிழ் இரண்டிலும் ஒரே நேரம் வெளிவந்திருக்கிறது இந்த ‘நேரம்’. இசை ராஜேஷ் முருகேசன். இயக்கம் அல்போன்ஸ் புத்திரன்.

நேரம் தீம் ட்ராக்

நேரத்தின் பொதுத் தன்மையைப் பேசும் பாடல். உலகில் பொதுவானது நேரம் மட்டுமே என்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பின், இசை நீள்கிறது. பாதிக்கு மேல் அழகாக பேஸ் கிதாருடன் தடம் மாறித் தாளம் போட வைக்கிறது. நம்மூர் மேளத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.

காதல் என்னுள்ளே

காதல் வந்ததைக்கூடக் கவனிக்காமல் நேரம் ஏன் இப்படி வேகமாகச் செல்கிறது என நாயகன் காலத்தைப் பழிப்பதும் காதலைப் புகழ்வதும்தான் பாடல். கிதாரின் மென் மீட்டல்களுடன், தொடங்கும்போதே கட்டிப்போடுகிறது. இந்தக் காதல் பேசும் பாடலைப் பாடியிருக்கிறார் ரஞ்சித் கோவிந்த். நிச்சய வெற்றியை இதற்கு எதிர்பார்க்கலாம்.

உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரமெல்லாம் நானும் தேடிப் பார்ப்பேன்! – காதல் வரவைக்கும் வரிகள்.

காற்று வீசும்

அடுத்தும் ஒரு காதல் சொல்லும் பாடல். பாடியிருக்கிறார் ஹரிச்சரண். இதிலும் கிதாரின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. பாடல் முழுவதும் வந்தாலும் வரிகளுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இடம்பெற்றுள்ளது இந்தக் கிதார் இசை. கேட்டு முடித்தவுடன் “அடடே, பாடல் சீக்கிரம் முடிந்து விட்டதே!” என்று நினைக்க வைக்கிறது. விரைவில் இதைப் பல அலைபேசிகளில் கேட்கலாம்.

எங்கேயும் நீயடி! போகுதே உயிரடி!
வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ! – காற்றாய் வீசிய வரிகள்.

எவன் அவன்

சற்றே நரம்புகளை முறுக்கேற்றும் ஒலிகளுடன், போராடச் சொல்லிக் கொடுக்கும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் பென்னி தயாள். நிறைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருந்தும் அது பாடலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ரத்தமின்றி யுத்தம் இல்லை!
யுத்தமின்றி வெற்றியில்லை!
வெற்றியின்றி யாருமில்லை!
துரத்திப் போ நேரமில்லை! – முறுக்கேற்றும் வரிகள்!

The phone booth

இது வெறும் இசைக்கோவைதான். நரம்பிசைக் கருவிகளின் சீண்டல் ஒலிகளுடன் தொடங்கி நம்மையும் அதனுடன் பயணிக்க வைக்கிறது. அவ்வப்போது வரும் டிரம்ஸ் பீட்டுகளும் தாளம் போட வைக்கின்றன. இடையில் சற்றே நிதானமாகிப் பின்னர் இறுதியில் மீண்டும் வேகம் எடுத்து முடிகிறது.

திருட்டு இசை

பீத்தோவனின் இசையை மறு கட்டமைப்புச் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். திரில்லர் பாணி இசை. இசையமைப்பாளரின் உழைப்பு அதில் தெரிகிறது. 1.14 நொடிகளுக்கு இசை மட்டும்தான். நிறுத்த மனம் வராது.

ஆல்பத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, ஒலிச்சேர்ப்பின் துல்லியம்! மிகவும் கவனம் செலுத்தி இருப்பார்கள் போல, சிறு சிறு சப்தங்கள் கூடத் தெளிவாகக் கேட்கின்றன.

நேரம் – நில்லாமல் ஒலிக்கும்!

About The Author