பகுத்துண்டு

கடிதத்தை என்னிடம் தரவில்லை. மாறாக, வீசி எறிந்துவிட்டுப் போனார் அவர். அவர் எனக்குத் தெரிந்தவர்தான். ஆனால், இக்கடிதத்தைக் கொண்டு வந்ததையோ என்னிடம் தந்ததையோ அவர் அறிந்திருக்கவில்லை. அவர் பேசிச்சென்ற சொற்கள் என்முன் இங்கும் அங்கும் அலைந்து திரிந்த நிலையில் அவற்றில் இக்கடிதம் ஒட்டிக் கொண்டிருந்ததைக் கண்டெடுத்தேன்.

கடிதத்தில் என் பெயரோ முகவரியோ இல்லை. ஆனாலும் படிக்கும் ஆர்வம் மேலோங்கியது. பொதுவாகவே எனக்கு அடுத்தவர் கடிதங்களைப் படிக்கும் ஆர்வம் அதிகம். குறிப்பாகக் காதல் கடிதங்கள். ஆனால், இந்தக் கடிதம் அந்த அளவிற்குக் கிளுகிளுப்பை ஊட்டுமா என்பது சந்தேகம்தான். காரணம், கடித்தின் நான்கு மூலைகளிலும் கறுப்பு மை தடவப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட, இக்கடிதம் மரணம் பற்றிய ஒரு கடிதமாக இருக்கலாம் என்று தோன்றியது. யாருமற்ற பகல்பொழுதில் அதைப் படித்து முடிப்பதென உறுதி செய்துகொண்டேன். நீங்களும் என்னோடு சேர்ந்து படித்துக் கொண்டு வரலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. காரணம், இது என் அந்தரங்கக் கடிதமல்ல. படித்துவிட்டு நான் சொல்வதைவிட உங்களுக்கான பிரதியை உங்களுக்கே அனுப்புகிறேன். முடிந்தால் கடிதம் படித்து முடித்ததும் மனமும் நேரமும் அனுமதித்தால் பேசுவோம். இதோ உங்கள் பிரதி.

“வணக்கம்! நான் யார் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். அதற்கும் இக்கடிதத்தை நீங்கள் வாசிப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும், இக்கடிதத்தை வாசிக்க உங்களுக்கு அது ஒரு கூடுதல் தகுதி என்று கருதுகிறேன். முகம் தெரியாத மனிதனின் மார்பில் விழுந்து அழ எனக்கும் ஆசையாயிருக்கிறது. இக்கடிதம், என் உறவினர்களுக்கோ காவல்துறைக்கோ நான் எழுதும் சாட்சிக்கடிதம் அல்ல. இது அப்படிப் பயன்பட்டுவிடக் கூடாதென்பதே என் எண்ணம்.

நான் இன்னும் சில கணங்களில் உயிர்விடத் தீர்மானித்திருக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டதென்றால் நான் செத்துவிட்டதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். துயரங்கள் துரத்துகிற மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் இந்த வாழ்க்கை. இவ்வோட்டத்தில் உயிர்சுமந்துகொண்டிருக்கும் வரைக்கும் ஓடவேண்டும் என்கிற விதி என்னைப் பயமுறுத்திக் களைப்படையச் செய்துவிட்டது. சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து சொடுக்கும் சாட்டை அடிகளுக்கு அஞ்சி ஓடித்தான் ஆக வேண்டியிருக்கிறது. வேறுவழியின்றி, உயிர் விட்டுவிட்டால் ஓடவேண்டியதில்லை என்கிற விதியினை நினைவூட்டிக் கொண்டேன். இதில் மற்றுமொரு நன்மையும் உண்டு. என் கால்களோடு என் மனைவியையும் பிள்ளைகளையும் மாப்பிள்ளைகளையும் பிணைத்திருக்கிறார்கள். ஆட்டத்திலிருந்து விடுபடுவதோடு மட்டுமன்றிக் கால்களும் விடுவிக்கப்படும். இழுத்துக்கொண்டு ஓடுதல் சுலபமல்ல என்று நீங்கள், எதிர்படுகிற மாடுகளைக் கொண்டு அறிந்து கொள்ளமுடியும். கூர்மையான கண்ணாடித் துண்டினைத் தயார் செய்துகொண்டு, கைவிரல்களை மடக்கி, புடைக்கும் நாடி நரம்புகளைப் பார்த்தேன். எளிதாக நரம்புகள் தென்பட்டுவிட்டன. கண்ணாடி பாய்ந்து நரம்புகள் அறுபட்டுப் போகும் கணத்திலிருந்து நினைவுச்சுமைகள் குறைய ஆரம்பிக்கும். எல்லாம் மங்கலாகி இருள் அடைந்துவிடும். அதற்கு முன்பாகச் சிலவற்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். கடைசியாக அவற்றை நினைப்பதன் மூலம் என் முடிவு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது போலவும் இருக்கும் என்று பட்டது. நான் உயிர் துறந்ததும் முதலில் பாதிக்கப்படப்போவது என் மனைவிதான். அவள் பற்றிய நினைவுகள் முந்திக் கொண்டு வந்தன.

இந்த இருபத்தைந்து வருடங்களில் அவளை நான் இப்படிப் பார்த்ததில்லை. கடந்த ஒரு வருடத்தில் அவள் மடி வற்றிப்போன ஒரு பசுவைப்போல மாறியிருந்தாள். அவளுள் இருந்து அவநம்பிக்கை ஊற்றினைப் போலப் பெருகிக் கொண்டிருந்தது. அது அவள் பேச்சாக, செயல்களாக, அழுகையாக, ஆங்காரமாக, மௌனமாக எப்பொழுதும் வெளிப்பட்டவண்ணம் இருந்தது. தொலைபேசியின் சத்தத்தையோ அல்லது அழைப்புமணியின் சத்தத்தையோ அவள் வெறுப்பவளாகவும், அவற்றால் நடுக்கமுறுபவளாகவும் ஆகிப்போனாள். அவளுடைய இந்தக் கழிவிரக்கம் பொங்கும் நிலைக்கு நான் பெரும் காரணமாயிருக்கிறேன் என்பதுதான் என் வேதனைகளுக்கான வேராகயிருந்தது.

அவளை நான் திருமணம் செய்துகொண்டபோது அவளுக்கு வயது இருபத்திரண்டு. பருவத்தின் வசந்தகாலத்தில் இருந்தாள். நான் எழுதுகிற எந்தக் கவிதையையும்விட அவள் அழகாக இருந்தாள். அவளே கவிதையாக இருந்தாள். இருவரும் இணைந்து ஒவ்வொரு கவிதையாய்த் தேடிப்பிடித்து வாசித்தகாலம் அது. அதன் பலனாகப் பிறந்தவள்தான் எங்கள் முதல்பெண். அதுவரை இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. பெண் பிறந்துவிட்டாள், அதனால் பொருள் சேர்க்கவேண்டிய அவசியம் மிகுந்து விட்டதாக அவள் கருதத் தொடங்கிய நாளிலிருந்து அவள் என்மீதான கருத்துகளையும் மாற்றிக் கொண்டுவிட்டாள். பொதுவாக என் மீதிருந்த குற்றச்சாட்டு, பணம் பற்றிய பொறுப்பின்மை உள்ளவன் என்பதுதான். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கத்தான் செய்தது. பணம் சேர்க்கும் சாமர்த்தியம் இல்லாதவனாகவே நான் இருந்தேன். வாழ்க்கைக்குப் பயன்பெறாத விசயங்களில் என் கவனம் இருப்பதாக அவள் குற்றம்சாட்டினாள். எனக்கு அதில் உடன்பாடில்லை. அடுத்து ஒரு மகன் வேண்டும் என்று அவள் என்னை நாடி வந்து கூடிய நாட்களில் மீண்டும் மலர்ந்தது பூ ஒன்று. அடுத்ததும் பெண்ணாகப் பிறந்த அன்று உதிர்ந்துவிட்டது. அவள் அதன் பின்னான காலம் முழுதும் முட்களைத் தின்று சலிப்பைத் துப்புகிறவளாக ஆகிப் போனாள்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறேன். அதில் வரும் வருமானம் எனக்கும் என் குடும்பத்துக்கும் போதும் என்பதுதான் என் கணிப்பாக இருந்தது. ஆனால், அத்தகைய எண்ணம் என் குடும்பத்திற்கு இல்லை. அவர்கள் எப்பொழுதும் பற்றாக்குறைகளைப் பட்டியலிட்டபடி இருந்தார்கள். எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் ஒரளவிற்கு நிறைவேற்றவும் செய்தேன். புறநகரில் கொஞ்சம் நிலம், அதில் கடன்பட்டு வீடு என நடுத்தர வர்க்கத்திற்கான கௌரவ அடையாளங்களைக்கூடப் பெற்றுவிட்டேன். மீதம் இருந்த சேமிப்பில் முதல் பெண்ணுக்குத் திருமணமும், கொஞ்சம் சேமிப்பும் அதிகக் கடனும்பட்டு ஒரு வருடத்துக்கு முன்பு இரண்டாம் பெண்ணுக்குத் திருமணமும் செய்யமுடிந்தது.

எல்லாம் சமாளிக்கும் நிலையில்தான் இருந்தன. அதுவும் ஆறு மாதங்களுக்கு முன்பு வரை. ஆறு மாதங்களாக, வேலை பார்க்கும் இடத்திலிருந்து சம்பளம் வரவேயில்லை. ஆறு மாதங்களாகத் தொழிற்சாலை இயங்கவேயில்லை. பெரும்பாலானவர்கள் வேறு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் நான் மட்டும் நின்றுவிடமுடியாத தர்மசங்கடமான நிலையில் இருந்தேன். காரணம், உரிமையாளரின் காரியதரிசியாக நான் வேலை பார்த்ததுதான். முப்பது வருடங்களாக தினப்படி அவரைப் பார்க்கிறேன். அவரோடு பயணிக்கிறேன். தினமும் பேசுகிறேன். சம்பளம் தாண்டி அவரோடு உணர்வுப்பூர்வமாகப் பிணைக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் என்னால் பிறரைப்போலச் சட்டென்று நின்றுவிட முடியவில்லை.

ஆறு மாதங்களில் கையிருப்பு கரைந்தாயிற்று. சின்னவளுக்கு இந்த ஆண்டுதான் தலைதீபாவளி. இன்னும் கடன்பட வேண்டியதாயிருந்தது. ஏற்கெனவே, அவள் கல்யாணத்தோடு வாங்கிய கடனே இன்னும் அடைபட்டபாடில்லை. கடன் கொடுத்தவர்கள் இன்னும் வாசலில் இருந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், பெரியவள் ஒருகாரியம் செய்தாள். கல்யாணச் சீர்வரிசையென்னவோ பெரியவளுக்குச் செய்ததைப் போலத்தான். டி.வி மட்டும் அதிகமாகக் கேட்டுவிட்டார்கள். வேறுவழியின்றிச் செய்வதாயிற்று. பெரியவளுக்கு அதில் வருத்தமோ என்னவோ, தன் வீட்டில் டி.வி வேலைசெய்யவில்லை என்று ஏதேதோ சொல்லி இங்கு இருந்த டி.வி-யைத் தூக்கிச் சென்றுவிட்டாள். காட்டுக் கத்து கத்தும் கடன்காரர்களே தேவலை என்று பட்டது.

விடிந்ததும் யாராவது வீட்டின் முன்பு நிற்பது வழக்கமாயிற்று. மனைவியோ கடன்காரர்களின் சத்தத்திற்கு அஞ்சுபவளாக இருந்தாள். அதனால், அவள் எப்போதும் ஒரு நடுக்கத்தோடே இருந்தாள். அவமானம் தன்னைத் தின்பதாகவும் செத்துப்போகப் போவதாகவும் சொல்லி அழுதுகொண்டேயிருப்பாள். முடிந்த வரை ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவள் அழுகை வற்றாத மணல்வெளியைப் போலப் பெருகிக்கொண்டே இருந்தது. ஒரு நிலையில் அவள் ஒரு பைத்தியம்போல ஆகிப்போனாள். சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இரவு அவள் தன் மூத்தபெண் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். பிள்ளைகள் எப்போதும் அம்மா மீது கொஞ்சம் பாசமானவர்கள்தான். என்னைத்தான் அவர்கள் ஏற்பதில்லை. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்குக் கவலைப்பட ஆயிரம் இருந்தது.

வேறு வேலை தேடிக் கொள்வதென்றாலும், இந்த வயதில் என்ன வேலை கிடைக்கும் என்ற அச்சம் ஒருபுறம், அப்படியே கிடைத்தாலும் எப்படி அதைச் சொல்லி அனுமதி கேட்பது என்ற தயக்கம் மறுபுறம். எப்படியும் இந்த மாதம் சம்பளம் வந்துவிடும், அடுத்த மாதம் வந்துவிடும் என்று நாட்களை நம்பிக்கையோடு கழித்ததெல்லாம் வீணாகிப்போனது. உணவுக்குத் திண்டாடும் நிலையில்கூட நான் சரியாக வேலைக்கு வந்துவிட வேண்டும் என்கிற எஜமானனின் எதிர்பார்ப்பு எனக்கு வியப்பாக இருந்தது. அர்த்தமற்று அவர் காரில் சுற்றிக் கொண்டிருக்கும் நாட்களில் அவரோடு சேர்ந்து சுற்றுவது அலுப்பூட்டுவதாக இருந்தது. எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளிவிடும் நேரங்களில் அவர் நட்சத்திர ஹோட்டல்களுக்குள் நுழைந்து மிதமிஞ்சிக் குடித்துவிட்டு மூன்று மணிநேரம் கழித்து வருவதும், ஷாப்பிங் என்ற பெயரில் அவர் வாங்கும் குப்பைகளைச் சுமந்து திரிவதும் வாடிக்கையானதுதான் என்றாலும் இப்பொழுதெல்லாம் எரிச்சலூட்டுகிறது. இடையிடையே, சந்திக்க வரும் பெண் நண்பர்களைக் கூட்டிவந்து கொண்டுபோய் விடும் வேலை வேறு. சம்பளம் தருவதில்லை என்கிற அசூயை கொஞ்சமும் இன்றி வேலைவாங்கும் அவர் மனோபாவம் எனக்கு ஆச்சரியமாகயிருக்கிறது. இந்த ஆறு மாதங்களில் அவர் எதையும் குறைத்துக் கொண்டவராகத் தெரியவில்லை. எனக்கு எல்லாம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவர் அறிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்துகொள்ள விருப்பமில்லாதவராக இருந்தார்.

வழக்கம்போல இன்றும் கடன்காரர்களின் சத்தத்தோடு விடிந்தது. வந்தவர்களில் ஒருவன் முரடனாக இருந்தான். அவனை, என்னை மிரட்டும் பொருட்டு அழைத்து வந்திருக்க வேண்டும். பேசிக்கொண்டிருக்கும்போதே கன்னத்தில் பளார் என்று அறைந்தான். கூட்டி வந்தவரே ஒரு கணம் ஆடிப்போனார். எனக்கோ வலித்தது என்பதைவிட அவமானமே அதிகமாகப் பெருகி வந்தது. அவன் கைராசி, எல்லாக் கடன்காரர்களும் இந்த நாளில் வந்துபோய்விட்டார்கள். ஒட்டுமொத்தமாக எல்லோரும் நாளையே பணம் வேண்டும் என்கிறார்கள். என்னால் எப்படியாவது பணம் ஏற்பாடு செய்துவிடமுடியும் என்று அவர்கள் இன்னும் நம்புவதுதான் எனக்கு ஆச்சரியமாகயிருக்கிறது. பணம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டிப் போயிருக்கிறார்கள். என்னைக் கொன்றுவிட்டால் யார் அவர்களுக்குப் பணம் தருவது?

நண்பர்களுக்கெல்லாம் போன் செய்தேன். சிலர் பேசிக் கை விரித்தனர். சிலர் லைனிலேயே வராமல் இல்லை என்று பொய் சொன்னார்கள். மகள்களுக்குப் போன் செய்தேன். தயவு செய்து இங்கு வந்துவிட வேண்டாம் என்றார்கள். மனைவி முடியாமல் இருப்பதாகவும் அவளிடம் நான் பேசாமல் இருப்பதே நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டேன்.

காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததாலே கடுமையாகப் பசித்தது. சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். நண்பர்கள் யாராவது வரக்கூடுமென்று பார்த்துக் கொண்டிருந்தேன். சந்தித்தால் பணம் கிடைக்கிறதோயில்லையோ ஒரு டீ கிடைக்கும் என்று பட்டது. அப்படி ஒரு நண்பன் வந்துசேர்ந்து டீயும் வாங்கித் தந்துவிட்டுப் போனான். முதலாளிக்குப் போன் செய்தேன். அவர் வீட்டில் இல்லை என்றார்கள். அன்றைய தினத்தில் பற்றிக்கொள்ள எந்த நம்பிக்கையும் கிடைக்கவில்லை.

தீவில் தனித்து விடப்பட்டவனைப் போல உணர்ந்தேன். வீடு வெறுமையாய் இருந்தது. ஏறக்குறைய நாளையோ இல்லை மறுநாளோ வீட்டுக்கடன் கட்டாததற்காக இங்கிருந்து துரத்தப்படலாம். அப்படி ஒருநிலையில் எங்குபோய் நிற்பது என்பதே பெரும் கேள்வியாக இருந்தது. ஓட்டம் சலித்தும் களைத்தும் போனது. இனி ஓடுவதாகயில்லை. நான் ஓடுவதை நிறுத்துவதால் யாருக்கும் நட்டமில்லை. இது சுயநலம் மிகுந்ததாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை. ஒருவேளை எல்லோரும் எதிர்பார்ப்பதும் அதைத்தானோ என்னவோ? கடன்கொடுத்தவர்கள் பாவம்தான்! ஆனால், அவர்களிடம் பெற்ற கடன்களுக்கு மேலாக அவர்கள்பொருட்டு அவமானத்தைச் சுமந்தாகிவிட்டது. அவர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பவர்களாக ஆகிப்போனதுபோல் தோன்றுகிறது. இனி, நாளை விடியலுக்கு என எந்த வேலையும் இருப்பதாகப் படவில்லை.

சாவதென்று முடிவு செய்தபின்பு அதற்கு முன்பாக ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது. எப்போதும் நான் என்னைப் பரிசோதித்துக் கொள்வது வள்ளுவனில்தான். திருக்குறளை எடுத்துக் கொண்டேன். விரல்களால் பக்கங்களை விசிறி, பட்டென்று ஒரு பக்கத்தைத் திறந்தேன். கொல்லாமை என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

போதும் என்று பட்டது. ஏதோ பேருண்மைக்குள் புகுந்துவந்த திருப்தி கிடைத்தது. போலீசுக்கும் பிறருக்கும் ‘என் கொலைக்கு நான் காரணமில்லை’ என்று ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டேன். கூர்மையான கண்ணாடித் துண்டைத் தேடியெடுத்தேன். அதன்பின் நிகழ்ந்தவற்றை நீங்களே அறிவீர்கள். முடிந்த வரை படித்ததும் கடிதத்தைப் பறக்கவிட்டுவிடவும். உங்கள் நேரத்தை என் வார்த்தைகளுக்குத் தந்ததற்கு மிக்க நன்றி!”

கடிதத்தைப் பறக்கவிட்டேன். காற்றுவீச்சு இல்லாததால் அது மூலையிலேயே நீண்ட நேரமாகக் கிடக்கிறது. நாளை வீசும் புதுக் காற்றில் அது பறந்துவிடலாம். ஆனாலும் அதிலிருந்து புறப்பட்ட பிணவாசனை என் மூக்கிலிருந்து அகல நீண்ட நாட்கள் ஆகும் என்றுபட்டது.

About The Author