பச்சைப் பட்டாணி பட்டீஸ்

தேவையான பொருட்கள்:

உரித்த பச்சைப் பட்டாணி – ½ கிலோ,
வெங்காயம் – ¼ கிலோ,
உருளைக்கிழங்கு – 1 கிலோ,
கடலை மாவு – 100 கிராம் ,
பச்சை மிளகாய் – 6,
முந்திரிப்பருப்பு – 50 கிராம்,
உலர் திராட்சை – 20 கிராம்,
நெய் – தேவையான அளவு,
இஞ்சி – ஒரு சிறு துண்டு,
எலுமிச்சம்பழம் – 1,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை – 3 தேக்கரண்டி,
மஞ்சள் பொடி – சிறிதளவு,
உப்பு, சர்க்கரை – சுவைக்கேற்ப,
பெருங்காயம் – சிறிதளவு,
துருவிய தேங்காய் – ½ கோப்பை,
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலைமாவும் சுவைக்குச் சிறிது உப்பும் சேர்த்துப் பிசைந்து வையுங்கள். கொத்துமல்லித் தழையைப் போலவே பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றையும் தனித் தனியாக, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சையையும் தனியாகப் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, வாணலியில் நெய் விட்டுக் கடுகைத் தாளித்துக் கொண்டு, நறுக்கிய வெங்காயத் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு முந்திரி, திராட்சையையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், பட்டாணியையும் சேர்த்து வதக்கி, சிறிது நீர் விட்டு வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி அடுப்பில் சில நிமிடங்கள் வைத்து, நறுக்கின கொத்துமல்லித்தழை, தேங்காய்த்துருவல், எலுமிச்சை ரசம் சேர்த்து மீண்டும் கிளறி ஒரு தட்டில் கொட்டி ஆற விடுங்கள்.

பின்னர், உருளைக்கிழங்கு கடலைமாவுக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொண்டு அதன் உள்ளே பட்டாணிக் கலவையைக் குட்டிக் குட்டி உருண்டைகளாக வைத்து மூடி, சிறு சிறு அடைகள் போலத் தட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது, வாணலியில் எண்ணெயைக் காய வைத்துப் பொன்னிறமாகப் பொறித்தெடுங்கள். புதினா சட்னி அல்லது சாஸுடன் இதைச் சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author