பத்தாயிரம் தலைமுறைகளின் ஆசான் (1)

சீனத் தத்துவ ஞானி கன்ஃப்யூஷியஸின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது சீனர்களின் வழக்கம். அவர் வகுத்தளித்த கோட்பாட்டை மதமென்று சொல்வதா தத்துவமென்று சொல்வதா என்பதில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலையே இருந்து வருகிறதென்றாலும், கன்ஃப்யூஷியனிஸம் மரபார்ந்த சீனக் கலாசாரத்தின் தூணாக விளங்கி வருகிறது. உலகச் சீனர்களிலேயே இரண்டு விதமாகவும் பார்க்கும் இருசாரர் உண்டு. ஸியா, ஷாங் மற்றும் ஜோவ் முடியாட்சிகளின் போதான கலாசார அடித்தளத்தில் உருவான இந்தக் கோட்பாடு 2000 ஆண்டுகளாக சீனத்தின் வரலாற்றையும் சமூக கட்டமைப்பையும் உருவாக்கியதில் மிகமிக முக்கிய பங்காற்றியது.
 
கன்ஃப்யூஷியஸின் போதனைகள் ஹ்ஹான் முடியாட்சியில் (கி.மு 202) துவங்கி முடியாட்சிகளின் இறுதியான கி.பி 1911 வரை அரச நெறிகளாக விளங்கியுள்ளன. சீனர்களின் தனிமனித இயல்பு உருவானதற்கும் கன்ஃப்யூஷியஸின் கோட்பாடுகள் மிகப் பெரிய பங்காற்றியதாக சீனர்களே பெருமையுடன் சொல்வார்கள். சிந்தனையாளராக, அரசியல்வாதியாக, கல்வியாளராக இருந்த கன்ஃப்யூஷியஸ் உயரிய விழுமியங்கள் கொண்ட அறிவுஜீவியாக இருந்திருக்கிறார். உண்மை, அன்பு மற்றும் பூரணத்துவம் ஆகியவை கன்ஃப்யூஷியஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பண்புகள்.

கன்ஃப்யூஷியஸ் பிறப்பதற்கு முன்பான காலகட்டத்தில் சமூகத்தின் விழுமியங்களும் நெறிகளும் தொய்வடைந்ததிருந்தது. ‘நெறிகளும் இசையும் சரிவடைந்த காலம்’ என்று குறிப்பிடப்பட்ட அந்தக் காலத்து அறிஞர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்தும் எந்த மாதிரியான சிந்தனைகள் சமூகத்துக்கு நிலைத்தன்மையைக் கொடுக்கும் என்பதிலும் பெரிய தெளிவில்லாதிருந்தனர். சமூகத்தில் ஏராளமான கோட்பாடுகளும் சிந்தனைகளும் இருந்ததால் தொடர்ந்து பெரும் குழப்பமே நிலவி வந்தது. எந்தவொரு கோட்பாடுக்கும் திடமான இடமும் இருக்கவில்லை. ஆகவே, அறிவாளிகளுக்கு ஒருபுறம் சவாலாகவும் மறுபுறம் ஒருவித உற்சாகமாகவும் இருந்தது. தனிமனித ஒழுக்கத்தை மீட்டெடுக்கவும் ஜோவ் முடியாட்சிகால நெறிகளை முறைப்படுத்தவும் கன்ஃப்யூஷியஸ் பல்வேறு வழிமுறைகளை முன்வைத்தார்.

இன்று ஷாங்தோங் என்றறியப்படும் மாநிலத்திலிருக்கும் ச்சூஃபூ எனும் ஊரில், கி.மு 551 ல் கன்ஃப்யூஷியஸ் பிறந்தார். அக்காலத்தில் அது லூ என்றழைக்கப்பட்ட நாடு. சீனத்தில் கன்ஃப்யூஷியஸின் பெயர் கோங் ச்சியூ. கோங் என்பது அவரது குலப்பெயர். பெற்றோர், நிச்சியூ எனும் மலையின் மீதிருந்த ஆலயத்தில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வேண்டிப் பிறந்தவர் என்பதால் ச்சியூ என்பது அவருக்கு இட்ட பெயர். அவரது தந்தை இறந்த போது அவருக்கு மூன்றே வயது. தாயும் மகனும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தனர். கன்ஃப்யூஷியஸ் ஒரு இடையனாக, குமாஸ்தாவாக, கணக்கராக, ஆடுமாடு மேய்ப்பவனாக வேலை செய்திருக்கிறார். 15 வயதில் கல்விக்குத் தன்னை முழுமையாக அர்பணித்தார் கன்ஃப்யூஷியஸ். 16-17 வயதில் கல்வி கற்றுத் தேர்ந்த மகனைக் காண அவரது கல்வி தாகத்துக்கு துணை நின்ற தாய் உயிருடன் இல்லை. தாய் இறந்ததும் மகன் அக்கால வழக்கப்படி மூன்றாண்டு துக்கமனுஷ்டித்தார்.

நாட்டுப்பற்று இளம் கன்ஃப்யூஷியஸினுள் கனன்றபடியே இருந்தது. இதுவே அவரைக் கல்வியில் சிறந்து விளங்கிட உந்து சக்தியாக அமைந்தது. அரசியலில் ஈடுபட எண்ணியிருந்த கன்ஃப்யூஷியஸ் கல்வியின் மூலம் உயர் பதவியைத் தன் லட்சியமாகக் கொண்டு இயங்கினார். 30 வயதுக்குள் அவர் ஓரளவு புகழ் பெற்றார் என்ற போதிலும் 51 வயதில் தான் அவரது அரசியல் வாழ்க்கை அதிக முக்கியத்துவம் பெற்றது. நான்காண்டுகளுக்கு விறுவிறுப்பாக முன்னேறி சட்டென்று முடிவுக்கும் வந்தது.

மேலதிகாரிகளுடன் ஒத்துப் போகாததால் தன் உயர் பதவியை கன்ஃப்யூஷியஸ் ராஜினாமா செய்தார். அவரது கருத்துக்களும் சித்தாந்தங்களும் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தன. ஆகவே, அவர் தன் ஊரை விட்டுவிட்டு வெளியேறி அண்டை நாடுகளெங்கும் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். 14 ஆண்டுகள் பல்வேறு ஆபத்துகளுக்கிடையேயும் உயிருக்கு வைக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கிடையேயும் பயணம் செய்து பத்து இடங்களுக்குச் சென்று அங்கிருந்த ஆறு சிற்றரசர்களிடம் மனித நேயம் மிகுந்ததொரு அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து விளக்கினார். அவர்கள் தன் சித்தாந்தங்களை ஏற்று நடப்பார்கள் என்று மிகவும் நம்பினார். ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறு. ஒருவர் கூட பின்பற்றத் தயாராய் இல்லை. எல்லோருக்கும் தம் நாட்டை வளப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் முறை தவறி நடப்பதில் கொஞ்சமும் கூச்சமில்லை. கன்ஃப்யூஷியஸ் சொன்ன எதையும் புரிந்து கொள்ளக் கூட அவர்களால் முடியவில்லை. அவர் சொன்னதெல்லாம் தமக்கு மிகக் குழப்பமாக இருந்ததாகச் சொன்னார்கள். அந்தச் சர்வாதிகாரிகளைக் கண்டு மனம் நொந்தவர், ‘கொடுங்கோல் அரசு கொடூரமான புலியை விட பயங்கரமானது’, என்று சில இடங்களில் சொல்லியிருப்பார்.

அவரது 68 ஆவது வயதில் கன்ஃப்யூஷியஸை மீண்டும் லூவிற்கு வரவேற்றனர். உயர் பதவியிலும் அமர்த்தினர். நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் என்றும் சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இல்லாத இடைப்பட்ட காலத்தில் சில அறிஞர்கள் உயர்பதவிகளில் உரிய அதிகாரத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசாங்கத்துக்கும் தலைமைத்துவத்துக்கும் நீதித்துறைக்கும் பெரியளவில் உதவினார். அதற்கான பலனும் நாட்டில் தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும், அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்த வேறு சிலருக்கு அவரது போக்குகளில் உடன்பாடில்லாதிருந்தது. கன்ஃப்யூஷியஸ் தமது திட்டங்களை நடைமுறைப் படுத்தவிடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்தினர். ஆகவே, கன்ஃப்யூஷியஸ் விலகத் தீர்மானித்து சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

வரலாற்று பதிவுகளின் படி, லூவின் பலம் கூடி வருவதைக் கண்டு அண்டை நாடான ச்சீ மிகவும் கவலை கொண்டது. ச்சீயின் அரசன் லூவின் அரசனுக்கு நூறு உயர்ஜாதிக் குதிரைகளையும் எண்பது அழகிகளையும் அனுப்பி அரசனைத் திசைதிருப்ப நினைத்தான். அதன்படியே நடக்கவும் நடந்திருக்கிறது. லூவின் அரசன் கட்டற்ற கேளிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தான்.

கன்ஃப்யூஷியஸுக்கு அதைக் கண்டு அரசன் மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டதால் லூவை விட்டு வேறிடம் போய் நல்வாய்ப்புக்களைத் தேட முன்பைவிடத் தீவிரமாக யோசித்தார். திடீரென்று விலகிச் சென்றால் அரசனின் ஒழுக்கக் குறைவு வெளிப்பட்டு தான் சேவையாற்றி வரும் அரசாங்கத்திற்கு இழுக்கு ஏற்படலாம் என்று கருதித் தயங்கினார். வேறொரு சிறிய தவறை அரசன் செய்யும் வரையில் காத்திருந்தார். சீக்கிரமே, அவ்வாறான ஒரு தவறை அரசன் செய்தான். கன்ஃப்யூஷியஸுக்குரிய படையலிட்ட இறைச்சியின் பங்கை அரசன் அனுப்பத் தவறியதும், இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இதையே காரணமாகச் சொல்லி விட்டு கன்ஃப்யூஷியஸ் தன் பதவியையும் நாட்டையும் துறந்தார்.

பிறகான காலத்தில், கன்ஃப்யூஷியஸ் ஒரு பள்ளியை நிறுவி ஏராளமான மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார். சமூக அந்தஸ்துக்களையும் கடந்து ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பித்தல் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் கன்ஃப்யூஷியஸ். அன்றைய காலகட்டத்தில், இது மரபை உடைக்கக் கிளம்பிய கோட்பாடாகப் பார்க்கப் பட்டது. ஏனெனில், அப்போது சீனச் சமூகத்தில் கல்விச் செல்வம் மேட்டுக்குடியினருக்கு மட்டுமே உரியது. ‘படிப்பவன் சிந்திக்கா விட்டால் காணாமல் போவான். சிந்திப்பவன் படிக்கா விட்டால் பெரும் ஆபத்தில் விழுவான்’, என்பது கல்வி குறித்த கன்ஃப்யூஷியஸின் கோட்பாடுகளில் ஒன்று. மாணவனின் இயல்புக்கேற்ப கல்வி போதிக்க வேண்டும் என்று அன்றைய கால கட்டத்திலேயே அவர் சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த ஆச்சரியத்துக்குரியது.

போதிப்பதுடன் நின்று விடாமல் முன்னுதாரணமாக வாழ்ந்த கன்ஃப்யூஷியஸின் ஆளுமை அவரது மாணவர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி நீடித்தது. தன் சீடர்களைத் தன் பிள்ளைகள் போல நடத்திய பாசமும் நேசமும் கொண்டவராகவே ஆதாரங்கள் சொல்கின்றன. நேர் சிந்தனையும் நல்ல நகைச்சுவையுணர்வும் கொண்ட கன்ஃப்யூஷியஸ் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து சீனர்களாலேயே போற்றவும், தூற்றவும் பட்டுள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் ஒன்றும் பதிந்து வைக்கவில்லை. அவற்றை அவர் பிறருடன் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லையாதலால் மற்றவர் பதியும் வாய்ப்பும் இல்லாமலே போனது. கன்ஃப்யூஷியஸின் திருமணம் குறித்த பதிவுகளை அவரது சீடர்கள் வேண்டுமென்றே தவிர்த்தார்கள் என்பது வரலாற்றாய்வாளர்களின் கணிப்பு. 19 வயதில் மணம் முடித்து 23 வயதில் மணவிலக்கும் செய்தார் என்று மட்டும் அறிய முடிகிறது. இறுதி வரை தனியாகவே வாழ்ந்தார் என்பதும் தெரிகிறது. மற்றபடி, மணவிலக்குக்கான காரணம் பெரிய புதிராகவேயுள்ளது. ஒரு கணவனாகவோ தந்தையாகவோ அவரைக் குறித்து பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

(‘கனவிலே ஒரு சிங்கம்’)-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author