பந்தல்கால்கள் (2)

மேலே மாடியிலும் நெருக்கடி. குழந்தைகளும், பெண்களும், ஆண்களுமாக நிறைவு. திடீரென்று ஊரில் இருப்பது போன்று இருந்தது. மண்ணின் மணம் சார்ந்த பேச்சுகள் – அழைப்புகள் – சிரிப்புகள்! பெண்களும் குழந்தைகளுமாய்க் கூடிச் சிரிக்கும் போது அது எப்படி மனங்கவரும் மத்தாப்புப் பொறிகளாக உருமாற்றம் பெறுகிறது? கண்களுக்கும், காதுகளுக்குமான இனிப்பு உணவு வழங்கப்பட்டதுபோல் இருந்தது. அபுல்ஹஸனுக்கு அவர்கள் உறவினர்களே என்ற போதும், தூரத்து உறவினர்களாய் இருந்தபடியால் ஜபருல்லாவை விடவும் அவன் அனைவரையும் ரசித்தவனாக நடந்தான். அடுத்திருந்த பெரிய அறையின் நடுநாயகமாக ஃபைசூன் பீவி வீற்றிருந்தாள்.

மணமகளின் ம்மா பரகத்நிஸா அபுல்ஹஸனை வாய் கொள்ளாத சிரிப்புடன் வரவேற்றாள். "என்ன கொழுந்தன்? சாவகாசமா, ஒய்யாரமா வாறீரே?" அபுல்ஹஸன் அந்தக் கேலியை ரசித்துச் சிரித்தவனாக பரகத்நிஸா மச்சியின் முன் போய் நின்றான்.

"எங்கே தங்கச்சியும் புள்ளையும்?" என்று மச்சியின் கண்கள் அலையலாயின. அபுல்ஹஸன் வாயில் தயாராக இருந்தது பொய்.

"புள்ளைக்குப் பரீட்சை நேரமாச்சே! அதுதான் ஒங்க தங்கச்சியும், புள்ளையும் வரல்ல" பரகத்நிஸாவுக்கு முகம் வாட்டமுற்றது.

"என்னவே கொழுந்தன், இது மாசப் பரீட்சை நடக்குற நேரம்தான். இதுக்குப் போயா விட்டுட்டு வரணும். பாத்து வருசக் கணக்கா ஆச்சு. அவ எப்படி வாரேன்னு நச்சரிக்காம கெடந்தா?" என்று பரகத்நிஸா தன் ஆய்வு வேலையைத் தொடங்கியது, அபுல்ஹஸன் நைஸாக அப்பால் நகர்ந்தான்.

பெயரும், உறவும் அறியமுடியாதபடி தென்பட்ட மனிதர்கள் அவன் பொதுவாய்ப் பார்த்துச் சிரிக்கவும், அதற்குப் பதிலாய் அவர்கள் புன்னகையைத் தருவதுமாக நாடகக் காட்சிகள் வேகமாய் நகர்ந்தன. ஒரு இளம்பெண் இடைமறிப்பவள் போல் எதிரில் வந்து நின்று, "அஸ்ஸலாமலைக்கும் சின்னாப்பா. சுகமாயிருக்கீங்களா?" என்றாள். "நல்லாருக்கேம்மா, சுகம்தானா?" என்ற பரஸ்பர விசாரிப்புக்கு அவன் தயாரானாலும் அவள் யார் என்று அவனுக்குப் புலப்படவே இல்லை. தன்னாலேயே பிறரை அடையாளம் காண முடியாதபடிக்கு ஆன போது, அவள் உறவுமுறை கூறி இவனை விசாரித்ததால் அவன் திணறும்படி ஆகிவிட்டது. "சின்னாப்பாக்கு நான் யாருன்னு தெரியல்லியோ? நான் பொண்ணுக்கு தாத்தா. இப்போ ம்மா இங்க உங்ககிட்டே பேசிக்கிட்டிருந்தத வச்சி நீங்க இன்னாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்" என்று அவள் சொன்னதும் இவனும் பதிலுக்குச் சிரித்துப் பேசலானான். அவள் பேசுவதைப் பார்க்கப் பிடித்திருந்தது. "சின்னாப்பா, ஒங்க பயனுக்கு சுன்னத்துக் கல்யாணமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா தெரிஞ்சிக்கிட்டேன். யாராலேயும் வர முடியாமப் போச்சுது. அதுல ஏதும் கோபமா?" என்றாவறே பின் நகர்ந்து வந்தாள் அவள். "அதுக்கென்ன உன் மவன் சுன்னத்துக்கு வந்துடாம இருந்துடறேன்" என்றான் அபுல்ஹஸன்.

சாதிக் மச்சான் அவர் தம் சாச்சியோடு பேசிக்கொண்டு இருந்த அறைக்குள் நுழைந்தான் அபுல்ஹஸன். "தங்கச்சி மாப்பிள்ளை வந்திருக்காரு சாச்சி" என்றார் சாதிக். இடுங்கிய கண்களோடு கூர்மையாகப் பார்த்தார் சாச்சி. அவனின் மங்கலான பிம்பம் கண்களில் விழுந்ததற்கு ஏற்ப தலையசைத்து அங்கீகரித்தார்கள். ஜபருல்லாவை அடுத்து அபுல்ஹஸனும் அமர்ந்துகொண்டான். இவன் தாகத்தை உணர்ந்தவனாய் யாரிடமிருந்து தண்ணீர் கேட்டால் கிடைக்கும் என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு ஒல்லியான சிறு பெண் இவனைப் பார்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அபுல்ஹஸன் தண்ணீருக்கான சமிக்ஞையைக் காட்டினான். அந்தச் சிறுமி முகம் சுழிக்காமல் நகர்ந்து சென்று தண்ணீர் கொண்டு வந்தாள். பின்னாலேயே வந்த பரக்கத்நிஸா "கொழுந்தன் – இது யாரென்று தெரியுமா? என் மூத்த மக வயித்துப் பேத்தி. வயசுக்கு வந்துட்டா!" "மச்சி! நீங்க பெரிய கிழவியால்லா ஆயிட்டீங்க போலிருக்கு. ஆனா நானும் உங்களை இன்னம் சைட் அடிக்கலாம்ங்குற, குமரி மாதிரி தானே இருக்கீங்க!" என்றான். பரக்கத்நிஸா மச்சிக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்து, பனிமலை குளிர்ச்சி பரவிவிட்டது.
எல்லோருக்கும் மத்தியில் அமர்ந்து கொழுந்தன் இப்படிப் போட்டு உடைத்ததில் செக்கசெவேலென முகம் சிவந்து போனாலும், உள்ளுக்குள் மனசு ரொம்பவும் குதூகலித்துக் கொள்ளலானது. மச்சியின் பேத்திக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. செவ்வரி படர்ந்த பரக்கத்நிஸா அந்த முத்திரையோடேயே கூட்டத்துக்குள் நுழைந்து கொண்டாள். தனக்கு மேல் புரளும் எத்தனை எத்தனை வேலையானாலும் எவ்வளவு அவசரமிக்க ஜோலிகள் பரக்கத்நிஸா மச்சிக்காகக் காத்திருந்தாலும் அந்தச் செம்மையின் துளிர்ப்பு இம்மியளவும் குறையப் போவதில்லை என்று புரிந்துகொண்டான் அபுல்ஹஸன். இதற்காகவே மச்சி தன்னை நீண்ட நாள் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடும் என்று எண்ணினான்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author