பழமொழிகள் (3)

3. எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை.

குதிர் என்பது நெல்லைச் சேமிப்பதற்காகக் களிமண்ணால் செய்த பெரிய கூடு. மரப்பத்தாயம் போன்றது. ஆனால் உருளை வடிவம். அதனுள் ஓர் ஆள் இறங்கி நிற்க இயலும்.

கடன் தந்தவர் வருவதைக் கண்ட ஒருவர், தாம் ஒளிந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று தம்முடைய குழந்தையிடம் எச்சரித்துவிட்டுக் குதிருக்குள் பதுங்கிக் கொண்டாராம். அந்தப் பிள்ளையோ, வந்தவர் எதுவும் கேட்பதற்கு முன்பே புத்திசாலித்தனமாய் பேசுவதாய் எண்ணி, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே!" என்றதாம். இதைக் கேட்டவுடனே உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டார் வந்தவர்.

ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைப்பதாய்க் கருதித் தன்னையறியாமலே போட்டு உடைத்துவிடுகிற அப்பாவித்தனத்தைக் குறிக்க இப்பழமொழி உதவுகிறது.

4. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள், குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும் அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா ஆயினர்.

தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பொன் செய்யும் மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும் (அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.

வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்

என்று அவர் பாடியுள்ளார்.

இதன் பொருள் : தழலில் – தீயில். இரதம் வைத்து – இரசம் வைத்து (அதாவது பாதரசம் பயன்படுத்தி). ஐந்து உலோகத்தையும் – ஐம்பொன் எனப்படுகிற செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, (சிறுஅளவில்) தங்கமாகிய ஐந்து உலோகங்களையும். வேதித்து – வேதியியல் முறைப்படிப் பொன்னாக மாற்றி. விற்றுண்ணலாம்- விற்றுச் செல்வம் சேர்க்கலாம்.

சிறிய அளவில் பொன், பெரிய அளவில் மற்ற உலோகங்கள் சேர்த்து எல்லாவற்றையும் தங்கமாக்க எண்ணுவது பேராசை அல்லவா?

ரசவாதிகளை நோக்கி யாரோ ஓர் அறிவாளி கூறிய உபதேசந்தான் இந்தப் பழமொழி.

"பொன் செய்யும் மருந்து தேடிப் படாத பாடுபடுகிறீர்களே! நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் பேராசை மேன்மேலும் பொன் வேண்டும் என்று தூண்டுமாதலால் மன நிறைவு ஒருக்காலும் ஏற்படாது. போதும் என்ற மனத்தைப் பெறுங்கள். உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழலாம்" என்ற அவரது புத்திமதி ரசவாதிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே எக்காலத்தும் பொருந்துகிற பொன்னுரையாகும்.

சில பழமொழிகள் தவறாக உருமாறிப் பிழைப்பொருள் தருகின்றன. அப்படிப்பட்ட இரண்டைப் பார்ப்போம்.

1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முயல்பவரே வைத்தியர். அவரை கொலைகாரராகச் சித்திரிக்கிறதே இது! இதன் திருத்தமான வடிவம் எது?

சிலருடைய கருத்து, ‘ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்’ என்பது. வேரைக் கண்டால் வைத்தியரா?

“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்பதே சரி.

மூலிகை, மரப்பட்டை, இலை, வேர் முதலியவற்றைச் சித்த மருத்துவர் மருந்தாகப் பயன்படுத்துகிறார். வேரைக் கொன்றவர் என்பது வேரைப் பிடுங்கிப் பயன்படுத்தியவர் என்று பொருள்படும். ஆயிரம் வேரைப் பயன்படுத்தினாலும் அரை வைத்தியர்தான். முழுமையடைவதற்கு மேன்மேலும் புதுப்புது வேர்களைப் பயன்படுத்தவேண்டுமென்று, மருத்துவத்தில் முன்னேற ஊக்குவிக்கிற பழமொழி இது.

வேரைக் கொல்லுதல் என்பது பொருந்துமா என்றால் பொருந்தும். "இளைதாக முள்மரம் கொல்க" என்ற குறளில் ‘மரம் கொல்லுதல்’ என்ற தொடரைக் காண்கிறோம்.

2. தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்கக் கூடாது.

இதன் சரியான பொருளைக் கண்டறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் முயன்றிருக்கிறார். ஊருணியொன்றின் கரையில் இருந்த கல்லில், "தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்கக்கூடாது" எனச் செதுக்கியிருந்ததைப் படித்துத் தம் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிழைத்தல் என்பதற்குப் பிழை செய்தல், கெடுத்தல் என்பது பழைய பொருள்.தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது என்று பழமொழி அறிவுரை கூறுகிறது.

இந்த விவரங்களைத் ‘தாயார் கொடுத்த தனம்’ என்ற தம் நூலில் கவிஞர் தெரிவித்திருக்கிறார்.

பழமொழியும், சொலவடையும் ஒன்றுதானா? இல்லை என்பார் சிலர். கிண்டல் தொணிக்கும் பழமொழியே சொலவடை என்று கூறுகிற அவர்கள்,

“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.“

“துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம்.”

“அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரம் கருக்கரிவாள்.”

என்று உதாரணங்கள் சொல்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட பழமொழிகள் மிக மிகக் குறைவு. ஆகையால் அவற்றுக்குத் தனிப்பெயர் தேவையில்லை.

சொலவடை என்பது நெல்லை மாவட்ட வழக்கு, பழமொழி பொதுவழக்கு எனக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளைவிடத் தமிழில்தான் பெரும்பாலான பழமொழிகள் எதுகை மோனை பெற்றுச் செவிக்கு விருந்தளிக்கின்றன என்பதை எண்ணி நாம் பெருமிதங்கொள்ளலாம்.

About The Author

5 Comments

  1. P.Balakrishnan

    குதிர் என்பது நெல்லை மாவட்டத்தில் குலுக்கை என்று பேசப்படுகிறது.

  2. P.Balakrishnan

    மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. அளவற்ற பொன் வைத்திருந்தாலும் ரசவாத வித்தையைத் தெரிந்துகொள்ள அலைந்துகொண்டே இருப்பான் என்பார் தாயுமான சுவாமிகள்.

  3. S.Gnanasambandan

    இரட்டைப் பின்னூட்டம் தந்த பாலக்ருஷ்னன் அவர்களுக்கு இரட்டை நன்றி
    சொ.ஞானசம்பந்தன்

  4. Surya

    ரொம்ப பயனுல்ல தகவலாக இருந்தது. ஐயா அவர்கலுக்கு நன்ட்ரி. நிலாசாரலை ஒவ்வொரு முரை படிக்கும் பொதும் மிகுந்த எதிர்பார்புடன் படிக்கிரஎன்.

  5. rakini

    இந்த வலை மிகவும் பயனுள்ளதும் இனிமையானதும் ஆக உள்ளது. இதை கடந்த பட்து வருடங்களாக வாசிக்கிரேன். மிகவும் அற்புதம்.

Comments are closed.