பழமொழி – புதிய பார்வை (1)

பழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி வருகின்றன. அவற்றை அவர் முதுமொழி (பொருளதிகாரம் – நூற்பா 479) என்கிறார். அதற்குப் பழைய சொல் என்றுதான் அர்த்தம். அதே பொருளில்தான் அகநானூறு 101- ஆம் பா "தொன்றுபடு மொழி" என்கிறது.

மக்கள் தங்கள் அனுபவங்களையும், காண்கின்ற நிகழ்ச்சிகளையும், கேட்கிற செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குத் தோன்றும் கருத்துகளைச் சுருக்கமாகவும், மனதைக் கவரும் விதமாகவும் வெளியிட்டால் அவை பழமொழியாகக் கூடும். அப்படியாவதற்குப் பலராலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுப் பரவ வேண்டியது அவசியம்.

எல்லாப் பழமொழிகளும் ஏற்புடைய கருத்துகளையே கொண்டிருக்குமா? அப்படிச் சொல்வதற்கில்லை.

சில காட்டுகளைப் பார்ப்போம்:

1. நாற்பது வயதில் நாய்க்குணம்.
2. அரணை நக்கினால் உடனே மரணம்.
3. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
4. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

இவை உண்மையல்ல!

ஆணாதிக்கப் பழமொழிகள் இருக்கின்றன.

1. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை.
(அவனுக்கு முதல் ஆசிரியையாய் இருந்து அறிவூட்டி ஆளாக்கியவள் பெண்தானே!)

2. பெண்புத்தி பின்புத்தி.
(புத்தியில் ஆண், பெண் இல்லை.
"எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்….." – பாரதியார்)

3. பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது.
(சேவல் கூவுவதால்தான் விடிகிறதா? எது கூவினாலும், கூவாவிட்டாலும் பொழுது அன்றாடம் விடிந்தே தீரும்).

4. புகையிலை விரித்தால் போச்சு, பெண்பிள்ளை சிரித்தால் போச்சு.
(சிரிக்கும் உரிமை கூடப் பெண்ணுக்கு இல்லையாம்!)

உடற்குறை உடையவரை இழிவுபடுத்தும் பழமொழிகளுக்குப் பஞ்சமில்லை.

காட்டு:

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது.

உயரம் குறைந்த ஒருவரை நம்பி ஏமாற்றம் அடைந்த யாரோ இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அது பொது உண்மையல்ல. ஏமாற்றுகிறவர்களுக்கும் அவர்களின் தோற்றத்துக்கும் என்ன தொடர்பு? ஒல்லியானவர், பருமனானவர், உயரங்குறைந்தவர், நெட்டையாய் உள்ளவர், குழந்தை, முதியவர், ஆண், பெண் என எல்லாத் தரப்பினருள்ளும் ஏமாற்றுக்காரர்களும் உண்டு, நேர்மையானவர்களும் உண்டு. எனவே உருவம் கண்டு பண்பை நிர்ணயிப்பது தவறு.

இவ்வாறு பெண்கள், அங்க ஈனர், மனநிலை பிறழ்ந்தவர் ஆகியோரைப் பழிக்கும் அல்லது தாக்கும் பழமொழிகளைப் பயன்படுத்தல் பண்பாடு ஆகாது, நீதியும் அல்ல. சாதிகளைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துகின்றவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.

பொருந்தாத கருத்துடைய இன்னொரு பழமொழி:

“உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு.”

தொண்டன் என்பவன் களைப்பறியாத பலசாலியாய்த்தான் இருப்பானா? அப்படியிருந்தால்தான் தொண்டனுக்கும் என்று ‘உம்’ சேர்த்துச் (உம்மை கொடுத்து) சொல்லலாம். தொண்டன் நோஞ்சானாகவும், இருக்கலாம், தொண்டு மனப்பான்மைதான் முக்கியம்.

அது ஒருபுறமிருக்க, உண்பது என்ன வெட்டி முறிக்கிற வேலையா? அதிலே என்ன களைப்பு? கொண்டது, கொள்ளாதது தெரியாமல் தொண்டை வரை திணித்து அவதிப்படுகிற மிகச் சிலப் பெருந்தீனிக்காரர்களைத் தவிர மற்ற பெரும்பாலோர் களைப்பு ஏற்படும் அளவு உண்பதில்லையாதலால் தள்ள வேண்டிய பழமொழி இது!

விலக்கவேண்டிய பழமொழிகளுள் வேறொரு ரகம் உண்டு. அவை வன்செயல்களை ஊக்குவிப்பவை.

1. அடியாத மாடு படியாது.

2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.

3. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

4. மயிலே மயிலே என்றால் இறகு போடாது.

(சித்த மருத்துவம் பயன்படுத்தும் மருந்துச் சரக்குகளுள் மயிலிறகும் ஒன்று. இது தேவைப்படும்போது மரத்தின் மீது அமர்ந்திருக்கும் மயிலை நோக்கி, "மயிலே, மயிலே, இறகு ஒன்றைப் போடேன்" என்று கெஞ்சிக் கேட்டால், "இந்தா, எடுத்துக் கொள்" எனச் சொல்லித் தன் இறகையொடித்து அது போடுமா? போடாது. அதைத் துரத்திப் பிடித்து அமுக்கி இறகைப் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்று இப்பழமொழி போதிக்கிறது. நயமாகப் பேசினால் இணங்காதவரை வன்முறையால் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது கருத்து.)

வன்முறையை ஆதரிக்கிற பழமொழிகளைப் பரப்புவது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் தீங்கு பயக்கும்.

பழமொழிக்காகவே ஒரு நூல் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

(தொடரும்)

About The Author

7 Comments

  1. kalayarassy G

    நல்ல பயனுள்ள கருத்துக்களைக் கொண்ட தொடர். பெண்களை, மாற்றுத் திறன் கொண்டோரை இழிவுப் படுத்தும் பழமொழிகளைப் புழக்கத்திலிருந்து அறவே நீக்க வேண்டியது அவசியம்.

  2. P.Balakrishnan

    மேட்டுப் புஞ்சயை விதைச்சவனும் போச்சு, மேனா மினுக்கியைக் கட்டினவனும் போச்சு என்பது போன்றவை அனுபவப்பட்டவர்கள் வழி வந்த சொலவடை போலும்.

  3. chitra

    ஆய்வு முறையில் எழுதப்பட்டுள்ள தரமானக் கட்டுரை.வாழ்த்துகள்!

  4. S.Gnanasambandan

    பின்னூட்டம் எழுதியவர்களுக்கு நன்றி. நான் அறியாத பழமொழி ஒன்றை அறியச்செய்த பாலகிருஷ்ணன் அவர்களூக்கு இரட்டிப்பு நன்றி
    சொ.ஞானசம்பந்தன்

  5. P.Balakrishnan

    நன்றி. சில பகுதிகளில் மேட்டுப் புஞ்சைய உழுதவனும் போச்சு..என்றும் சொல்வார்கள்.

  6. Dr. S.Subramanian

    Regarding pugaiyilai viriththAl pOccu peNpiLlai siriththAl pOccu” it has a lesson. I do not think it is derogatory to women. The reason is: when women smile at somebody and if that somebody happens to be a man it will lead that man to think that woman likes him (whether he is handsome or ugly) and he might resort to devious means to go after her. It is to protect women from such nefarious deeds of (some) men that pazhamozhi came into parlance.”

Comments are closed.