பாசச்சுவடுகள்

ஹேய்ய்ய்ய்ய்ய்!

குழந்தைகளின் மகிழ்ச்சிக் கூச்சலும், கூடவே நாயின் குரைப்புச் சத்தமும் தோட்டத்தையே இரண்டுபடுத்தியது! காற்று அந்த சத்தத்தை ரேகாவின் காதுகளில் கொண்டு சேர்த்து, அவள் உதடுகளில் மகிழ்ச்சிப் புன்னகையைத் தோற்றுவித்தது.

ரேகா, ராம்குமார் தம்பதியரின் குழந்தைகள் வருணும், வித்யாவும். சென்னையின் மிகச்சிறந்த பள்ளிகளுள் ஒன்றில் ஐந்தாம் வகுப்பும், மூன்றாம் வகுப்பும் படிக்கி‎ன்றனர். ராம்குமார் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கண்டிப்புக்குப் பேர் போனவர். தனக்கு விருப்பமில்லாத எதையும் தன் ஆளுமைக்குட்பட்டவர்கள் செய்வதை ஒப்பமாட்டார். குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், அன்பை வெளிக்காட்டியது மிகவும் அபூர்வமான சந்தர்ப்பங்களில்தான். அவருக்கு விருப்பமில்லாத காரணத்தாலேயே தனது பொறியியல் படிப்பு வீணாவதையும் பொருட்படுத்தாமல் தான் பார்த்து வந்த வேலையைக் கைவிட்டு முழுநேர இல்லத்தரசியாக மாறிப்போனாள் ரேகா.

அவரது கண்டிப்பு பிள்ளைகளையும் பெருமளவு கட்டுப்படுத்தியது. குழந்தைகள் இருவருமே படிப்பில் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தார்கள். ஆனாலும் பள்ளி விட்டு வீடு திரும்பினால் எ‎ந்நேரமும் படிப்பு, படிப்பு, படிப்புதான். அவருக்கே மனம் வந்தால் போனால் போகிறதென்று அரைமணி நேரம் விளையாட அனுமதிப்பார். அவரது அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளுக்கு ரேகா பழகி விட்டாலும் பிள்ளைகளை எண்ணி அவளுக்குக் கவலைதான்! அவளது கவலையை அதிகரிக்கும் வகையில் வகுப்பில் முதல் இரண்டு ராங்குகளுக்குள் இருந்த வருண் சமீபமாக படிப்பில் ஆர்வம் இழந்து கொண்டிருந்தான். அதனால் ராம்குமாரிடம் அவன் வாங்கும் திட்டுகளும் அதிகமானது.

இவர்களது வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதில் சளைத்தவர்களல்லர்! அந்தத் தெருவே அவர்களை ரோமியோ, ஜூலியட் என்று விளையாட்டாக அழைக்கும் அளவிற்கு தங்களது வயதான காலத்திலும் காதல் மாறாமல் வாழ்ந்து வந்தவர்கள்.

சென்ற அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு வழக்கம்போல் அவர்களது பேரன் பிரதீப் விடுமுறைக்கு வந்திருந்தான். இம்முறை ஒரு நாய்க்குட்டியோடு! ஒவ்வொரு விடுமுறைக்கும் மாமா வீடு, தாத்தா வீடு என்று கொண்டாடுபவன் பிரதீப். அந்த விடுமுறைக்கு அவனது மாமா வாங்கிக் கொடுத்த நாய்க்குட்டியோடு பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். வருணும் வித்யாவும் பனிக்குழைவினால் செய்த வெண்பந்து போலிருந்த நாய்க்குட்டியுடன் மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடினார்கள். அக்கம்பக்கத்து குழந்தைகளுடன் பழகுவதை அனுமதிக்காத ராம்குமார் அதிசயமாக பிரதீப் வரும்போது மட்டும் அவனுடன் சிறிது நேரம் விளையாடுவதைத் தடுக்க மாட்டார், அவனது தந்தையும் ராணுவத்தில் இருப்பவர் என்ற மரியாதை காரணமோ என்னவோ!

பிரதீப் ஊருக்குச் சென்றதும் வருண், வித்யாவிற்கு மறுபடியும் வெறுமை சூழ்ந்தது, இந்த முறை நாய்க்குட்டி சென்றுவிட்ட சோகமும்!

இருவருமாக ரேகாவிடம் வந்து எப்படியாவது ராம்குமாரிடம் ஒரு நாய்க்குட்டி வளர்ப்பதற்கான அனுமதி வாங்கித் தரச் சொல்லி கோரிக்கை வைத்தனர். அவர்களது சோக முகம் கண்ட ரேகாவிற்கு மறுக்க மனமில்லாமல் ராம்குமார் நல்ல மனநிலையில் இருந்த சமயமாய்ப் பார்த்து அக்கோரிக்கையை முன்வைத்தாள். எப்போதும் போல் மறுத்த ராம்குமார், ரேகாவின் இடையறாத கெஞ்சல்களுக்குப் பணிந்தார். ரேகாவும் திருமணமானதிலிருந்து தனக்காக எதுவும் வேண்டுமென்று கேட்டதில்லை. அதனால் அவரால் அக்கோரிக்கையை மறுக்க இயலவில்லை. முடிவில், "சரி, உன்னோட கெஞ்சலுக்காக நாய்க்குட்டி வாங்கித் தர்றேன். ஆனா பிள்ளைங்க அது கூடவே விளையாடிப் பொழுதுபோக்கினாலோ, இல்ல.. பரீட்சையில மார்க்கு குறைஞ்சிட்டாலோ நான் பொல்லாதவனாய்டுவேன். மறுநாளே நாய்க்குட்டியை எங்காவது விட்டுவிடுவேன்" என்ற கண்டிஷனுடன் ஒத்துக்கொண்டார்.

திடீரென்று ஒரு நாள் ஒரு அல்சேஷன் குட்டியுடன் வீட்டுக்கு வந்தார். பிரதீப்பினது போல வெண்பஞ்சுக் குழைவாய் ஒரு நாய்க்குட்டியை எதிர்பார்த்த குழந்தைகளுக்குச் சற்றே ஏமாற்றம்தான். ஆனாலும் நாய்க்குட்டி தனது விளையாட்டுகளாலும், அவர்கள் இருவரையும் வாலைக் குழைத்துச் சுற்றி வந்தும் கவனத்தைக் கவர்ந்தது. வருண் அதற்கு ரோவர் என்று பெயரிட்டான்.

ரோவர் மிகவும் புத்திசாலியாக இருந்தது. வந்த சிறிது நாட்களிலேயே அதற்கு ராம்குமாரின் கண்டிப்பு எப்படித்தான் புரிந்ததோ! அவர் வீட்டிலிருக்கும் நேரம் அமைதியாய் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும், வெளியில் சென்று விட்டாலோ ரேகாவையும், குழந்தைகளையும் சுற்றிச் சுற்றி வந்து கலாட்டா செய்யும். வருணோ, வித்யாவோ பந்தை வீசினால் ஓடிப்போய் எடுத்து வந்து அவர்கள் கையிலேயே கொடுத்து மறுபடியும் தூக்கிப் போடச் சொல்லி விளையாடும். தோட்டத்தில் அங்குமிங்குமாக ஓடிச்சென்று பட்டாம்பூச்சியைப் பிடிப்பதும், காக்கை, குருவியை விரட்டுவதுமாக எப்போதும் ஒரே கலாட்டாதான். ஆனால் இத்தனையும் ராம்குமார் இல்லாதபோது மட்டும்தான். அவர் வந்து விட்டால் தனது இடத்தில் போய்ச் சுருண்டு கொள்ளும் அல்லது மாடிப்படி வளைவில் ஒளிந்து கொள்ளும்.

ரோவர் ஆறு மாதங்களில் நன்றாக வளர்ந்து விட்டது. குடும்பத்தில் அதுவும் ஒரு உறுப்பினராகிவிட்டது. வந்த புதிதில் பிள்ளைகளின் படிப்பு சற்றே குறைந்தாலும், ரேகா அவர்கள் இருவருக்கும் ராம்குமாரின் கண்டிஷனை நினைவுபடுத்தியதில் சுதாரித்து விட்டனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும். ரோவருக்கும் அன்று காலை மட்டும்தான் ராம்குமார் இருக்கும்போதே விளையாடும் சலுகை! அன்று கிடைக்கும் அரை நாள் சலுகையை வருணும், வித்யாவும் முழுமையுமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அன்றும் அப்படித்தான் தோட்டத்தில் ரோவருடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தோட்டத்தின் மறுபுறம் ராம்குமார் எப்போதும் போல் வெள்ளை பனியன் அரைக்கால் சட்டையுடன், முதல் நாள் வீசிய பேய்க்காற்றில் குப்பையாகக் கிடந்த தோட்டத்தை சீர்படுத்திவிட்டு செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். ரேகா சமையலறையில் காலை உணவுத் தயாரிப்பில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தாள். திடீரென தோட்டத்தில் பிள்ளைகளி‎ன் கூச்சல் கேட்டு அடுப்பை அப்படியே விட்டுவிட்டு தோட்டத்துப் பக்கம் ஓடினாள்.

அங்கே, பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ரோவர் திடீரென்று மிரட்சியான பார்வையுட‎ன் ராம்குமாரை நோக்கி வெகுவேகமாய் ஓடியதும் பிள்ளைகள் ஒரு கணம் மூச்சு விட மறந்தார்கள். வருண்தான் முதலில் சமாளித்துக் கொண்டு "ரோவர், ரோவர், இங்க வா, ஓடாதே" என்று கத்திக் கொண்டே ஓடினான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது.

தண்ணீர் பாய்ந்து குழைந்து கிடந்த மண்ணில் ஓடிய ரோவர் அப்படியே ராம்குமார் மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளியது. ரெளத்ரமான ராம்குமார் கீழே விழுந்த வேகத்திலேயே கையில் கிடைத்த கல்லால் ரோவரின் மண்டையைப் பதம் பார்த்தார். அவர் கையிலிருந்த கல் ரோவரைத் தாக்கிய நேரம், மளாரென்ற ஓசையுடன் அத்தனை நேரம் அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு பெரிய மரக்கிளை வீழ்ந்தது.

வருணின் கூச்சலைக் கேட்டு ஓடி வந்த ரேகாவிற்கு கிளை முறிந்து விழுந்ததைப் பார்த்து ஒரு கணம் நெஞ்சம் நின்று துடித்தது. எவ்வளவு பெரிய மரக்கிளை அது! அவர் தலையில் விழுந்திருந்தால் நிச்சயம் பலத்த அடிபட்டிருக்கும்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ரேகாவின் கவனத்தை யாரோ எதையோ வெட்டும் சத்தம் கலைத்தது. தோட்டத்தில் வந்து எட்டிப் பார்த்தால், தெருவோரம் ‏ இருந்த மரங்களில் ஒ‎ன்றில் ஏறி அதை வெட்டத் தொடங்கியிருந்தனர் இளைஞர் இருவர். அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டாள் ரேகா. ஆனால் அரைகுறையாக அவர்கள் வெட்டி விட்டுச் சென்ற கிளை இப்படி ஒரு ஆபத்தை விளைவிக்கக் கூடுமென்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.

அடி வாங்கிய ரோவர் ம்ங்… ங்… என்று முனகிக் கொண்டே வருணிடம் ஓடி வந்தது. பெரிய காயமாக ‏இல்லாவிட்டாலும் கடுமையான வலி என்பது அதன் அழுகையிலிருந்து தெரிந்தது. அதன் அழுகை வருண், வித்யாவின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அப்பாவிற்கு அடிபட்டிருக்குமே என்ற அதிர்ச்சி வேறு!

அழுது கொண்டே அதை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினார்கள். கீழே விழுந்ததில் ராம்குமாரின் கால் பிசகி நடக்க முடியாமல் ரேகாவின் தோளைப் பிடித்துக்கொண்டு மெல்ல அறைக்குள் போனார். வீடு சாதாரண நிலைக்குத் திரும்ப வெகு நேரம் பிடித்தது.

சாய்வு நாற்காலியில் கண்மூடிச் சாய்ந்திருந்த ராம்குமார் ஏதோ முணுமுணுப்புச் சத்தம் கேட்டதில் லேசாகக் கண் திறந்து பார்த்தார். வருணும் வித்யாவும்தான் அறை வாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

"அண்ணா, அப்பா நல்லா தூங்கறார், அப்படின்னா வலி குறைஞ்சிருக்கும்தானே!"

"ஆமாண்டி, அப்பா கீழே விழுந்ததும் எனக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சி, பாவமில்லே!"

"ஹ்ம்ம் ஆமாண்ணா, ஆனா ரோவர் அப்பாவைக் கீழே தள்ளி இருக்கலேன்னா அந்த மரம் அப்பா மேலதானே விழுந்திருக்கும். ரோவர் எவ்ளோ சமத்து இல்லே!" என்ற வித்யா சட்டென்று பெரிய மனிதத் தோரணையில், "சரி.. சரி.. வா நாம போய்ப் படிக்கலாம், அப்பாவுக்குத் தூக்கம் கலைஞ்சிடப் போகுது" என்று அதட்டினாள்

ராம்குமார் நன்றாகக் கண்களைத் திறந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கு இல்லை. ரோவர் மட்டும் அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "இங்க வா" என்று அருகில் அழைத்தவரை ஒரு நம்பாத பார்வை பார்த்தது. மறுபடியும் "வா" என்று அவர் அழைப்பு விடுத்ததும் பாய்ந்தோடி வந்து அவரது கைகளை நக்கியது. சில நொடிகள் அதன் தலையைத் தடவிக் கொடுத்த ராம்குமார் அப்படியே தூங்கிப் போனார்.

மறுநாள் காலை நேரம் பிள்ளைகள் வழக்கம்போலப் படிப்பில் ஆழ்ந்திருந்தனர். ரேகா குளியலறையில் இருந்தாள். வழக்கமான நடைப்பயிற்சியைச் செய்ய முடியாவிட்டாலும் செய்தித்தாளாவது படிக்கலாம் என்று தட்டுத்தடுமாறி வாசலை நோக்கி நடந்த ராம்குமாரைப் பார்த்து ஒரு கணம் வாலாட்டிய ரோவர் மறுநொடி வாசலை நோக்கிப் பாய்ந்தது! திரும்பி வரும்போது அதன் வாயில் அன்றைய செய்தித்தாள்!!

திகைத்துப் போனார் ராம்குமார்! அதற்கு எப்படி தன் மனம் புரிந்தது என்ற வியப்பு அவர் மனதில் ஓடியது.

காபி எடுத்து வந்த ரேகா முந்தைய நாள் அவர் அணிந்திருந்த வெள்ளை பனியன் மேசை மீதிருந்ததையும், அதை ஏதோ யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த ராம்குமாரையும் பார்த்துப் பதற்றமானாள். "மன்னிச்சுக்குங்க. நேத்து நடந்த களேபரத்துல இதைத் துவைக்க விட்டுப் போயிடுச்சி, இப்போ துவைச்சிப் போட்டுடறேங்க, கோவிச்சிக்காதீங்க" என்றவாறு அதைக் கையில் எடுத்தாள்.

"வேணாம்மா.." இந்த மென்மையான குரல் ராம்குமாருடையதா? ஆச்சரியம் ரேகாவின் கண்களில் பிரதிபலித்தது.

"பாவம் ரோவர், என்னைக் காப்பாத்த வந்ததைப் புரிஞ்சிக்காம அடிச்சிட்டேன். அப்படி இருந்தும், அன்போட தடவிக் கொடுத்ததுக்கே சந்தோஷமாயிடுச்சி. என்னோட மனசைப் புரிஞ்சி நடந்துகிட்டு, வாலை ஆட்டிகிட்டு வருது. பசங்க… அவங்க கிட்ட நான் என்னிக்குமே அன்பா பேசினது கிடையாது. அப்படியும் எனக்கு அடிபட்டுதுன்ன உடனே பிள்ளைங்களால தாங்க முடியல. அதுக்கு அவங்களை நீ வளர்த்த முறையும் காரணம்னு நினைக்கறேன்". கூச்சத்தில் தலை குனிந்தாள் ரேகா.

"அன்பு மனசுல இருந்தா மட்டும் போதாது, அதை வெளிப்படுத்தவும் தெரியணுங்கறதை என்னோட சின்ன தடவலுக்கே சந்தோஷப்பட்ட ரோவரோட செய்கை, எனக்குப் புரிய வெச்சிடுச்சி. இந்த சம்பவத்துக்கு சாட்சியா இந்த பனியன் ரோவரோட சுவடுகளோட அப்படியே இருக்கட்டுமே".

ரேகாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.

About The Author