பாபா பதில்கள்-சித்ர குப்தம்

அழுதுகொண்டு வந்த ஆத்மா சிரித்துக்கொண்டு போகும்

கடவுளிடத்திலிருந்து ஒரு ஆத்மா பிரிந்து வருகிறபோது, ‘அய்யோ கடவுளே! இந்த பாழாய்போன உலகத்துக்கு துரத்திவிடுகிறாயே, உன்கிட்டேயே என்னை வைச்சுக்கக்கூடாதா?’ என்று அழுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலில் இளைப்பாறுகின்றேன். இது எவ்வளவு ஜம்னு இருக்கு! கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளுமாறு கிடைத்த குளிர்தருவே. கடவுள், ‘உனக்கு ஆசாபாசங்கள் நிறைய இருக்கு. போய் அதெல்லாம் அனுபவித்து விட்டு வா’ன்னு சொல்கிறார். கடவுளை விட்டு பிரியும்போது அந்த ஆத்மா அழுதுகொண்டே வருகிறது. அதனால், எந்த குழந்தையாகயிருந்தாலும் அது பிறக்கும்போது அழுதுக்கிட்டுத்தான் வரும். எப்போதாவது, சிரித்துக்கிட்டு வருகிற குழந்தையைப் பார்த்தால் என்கிட்டே சொல்லு. எந்தக் குழந்தையாகயிருந்தாலும் அழுதுக்கிட்டுத்தான் வரும். ஏன்னா, கடவுளை விட்டு பிரிந்து வருகிறது. இந்த உலகத்தில் வரணும். அனுபவங்கள் எல்லாம் நுகரணும். என்றைக்கோ ஒரு நாள் சாகணும்.

சித்ர குப்தம்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.
நேற்றிருந்தவன் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகத்தினுடைய பெருமையே. செத்துப்போனவங்க முகத்தைப் பார், அவங்க தூங்கிக்கிட்டு இருக்கிற மாதிரி, நிம்மதியாக, அமைதியாக இருக்கும். எனக்கே பல பேரை பார்த்தால் திருப்பி டாக்டரை கூப்பிட்டு செக் பண்ண சொல்லலாமான்னு தோணும். உறங்குவது போலவும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலவும் பிறப்பு. ஏனென்றால், சாகிறதுக்கு முன்னால், அவன் கண் இமைக்கும் முன்னால், அவனுக்கு ஒரு சினிமா காட்டுகிறார் கடவுள். அதற்குப் பெயர் ‘சித்ர குப்தம்’. சித்ரம் என்றால் ஓவியம், குப்தம் என்றால் ரகசியம். ‘நீ எதற்கு இந்த உலகத்தில் பிறந்தாய், பிறப்பதற்கு முன்னால் என்கிட்டே சொல்லிட்டு வந்தியே என்னவெல்லாம் சாதிக்கப் போறேன்னு. அதில் எவ்வளவு சாதிச்சே, எவ்வளவு சாதிக்கலை. இந்தப் பிறவியில் புதுசா என்னவெல்லாம் கர்மா சேர்த்துக் கொண்டாய்’. அதைப் பற்றிய சினிமா காட்டுவார் கடவுள். இதெல்லாம் பார்த்திட்டு கடவுள்கிட்டே போகிறோமே என்கிற சந்தோஷத்தில் அந்த முகம் ஆனந்தமாக இருக்கும். இதை திருப்பிப் போட்டுப் பார்.

ஒரு குழந்தை அழுதுகிட்டு வருகிறது. கூடியிருக்கும் சொந்தக்காரர்கள் எல்லாம், ஒரு வாரிசு வந்திடுச்சுன்னு சாக்லேட், இனிப்பு எல்லாம் கொடுத்துக்கிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த குழந்தை பெரிய ஆளாகி ஒரு காலக்கட்டத்தில் மண்டையைப் போடுகிறான். அவன் சிரித்துக்கிட்டு போகிறான். கூட இருக்கிறவங்க எல்லாம் ‘அய்யோ!’ன்னு ஒப்பாரி வைச்சுக்கிட்டிருக்காங்க. அழுதுகொண்டு வந்த ஆத்மா சிரித்துக்கொண்டு போகும். சிரித்துக்கொண்டு நின்றிருந்த சொந்த பந்தங்கள் அழுதுகொண்டு விடையனுப்பும். அந்த இடைப்பட்ட காலம்தான் வாழ்க்கை.

About The Author

3 Comments

  1. manomany

    மிகவும் உண்மை!!!!!!!இது அறியாமல் நாம் இன்னும் அறியாமையில் இருக்கின்றோம். யாருடைய தவறு????????? இறைவா எங்களை உன்னையன்றி யார் காப்பாற்றுவார்???????

  2. Dr. S. Subramanian

    Hello Editor:
    You seem to be very selective in publishing comments—the ones that are complimentary but not critical. I submitted a response to this discourse four days ago. You decided not to publish it because it is a dissenting opinion. So be it. A community which suppresses dissent is not at all healthy. Blind faith is bliss, it seems, for this ezine!

  3. Nila

    முனைவர். சுப்ரமணியன்,
    தங்களுடைய எத்தனையோ கடுமையான விமரிசனங்களைப் பிரசுரித்தே இருக்கிறோம். தொழில்நுட்பக் காரணங்களால் சில பின்னூட்டங்கள் வந்து சேர்வதில்லை என்பது நமது வாசகர்களுக்குத் தெரிந்த விஷயமே. தங்களுடையதும் வந்து சேரவில்லை. அனுமானித்துப் பொதுப்படையாகப் பேசுவது பெரியவர்களுக்கு அழகல்ல.

Comments are closed.