பாபா பதில்கள்

Q. விரக்தி வருவது ஏன்? அதிலிருந்து மீள்வது எப்படி? கடன் தொல்லையினாலோ, கஷ்டம் என்பதினாலோ வருகிற விரக்தி அல்ல. சத்சங்கத்திற்கு வந்தால் கிடைக்கும் சந்தோஷம், மற்ற நேரங்களில் கிடைப்பதில்லையே – இது ஏன்?

நீங்கள் ஞானியாகிக் கொண்டு வருகிறீர்கள் என்பதற்கு இந்த உணர்வுதான் அத்தாட்சி. யாருக்கு இந்த உலகம் அநித்யமான வஸ்து, இந்த உலகத்தில் நாம் தேடுகிற சுகங்கள் எல்லாம் மாயை, போலியானவை என்று தோன்றுகிறதோ அவர்கள் ஞானத்தில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

உலக தத்துவங்களைத் தெரிந்து கொண்ட நிலையில் லோகம் ஷீணமயம், லோகம் சூன்யமயம் என்று கூறியதால் சித்தார்த்தன் புத்தர் ஆனார். அதற்கான அறிகுறி உங்களுக்கும் வருகிறது என்றால் நீங்களும் புத்தராகிக் கொண்டிருக்கிறீர்கள், அல்லது புத்திசாலியாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். விரக்தி என்பது புத்தருடைய தத்துவம். இந்த மெய் – பொய். சுடுகாட்டில் எரிக்கப்படும் வஸ்து. இதனுள் ஒரு ஜோதி இருக்கிறது. அதை நாம் போஷிக்க வேண்டும், ரட்சிக்க வேண்டும் அதை மேலே கொண்டு போக வேண்டும் என்கிற வித்தையை தெரிந்து கொண்டுவிட்டால் நீங்களும் ஞானியாகிவிடுவீர்கள். எனவே யாருக்கு, இப்படிப்பட்ட விரக்தி ஏற்படுகிறதோ, அவர்களெல்லாம் ஞானத்தை நோக்கிய சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சத்சங்கத்தில் கிடைக்கின்ற ஆனந்தம் வீட்டிற்குச் சென்றால் கிடைக்கவில்லை என்றால், சத்சங்கம் நடக்கின்ற இடத்திலே இருக்கிற ஆத்மாக்களின் ஆனந்த அலைகள். ஒரு கோயிலில் இல்லாத ஆனந்தம் சத்சங்கத்தில் எப்படி வந்தது என்றால் சம்ரட்சணாவில் எப்போதும் நல்ல எண்ணங்களே இருக்கின்றன. காலையிலிருந்து இரவு வரை இறைவனைப் பற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். நித்திய ஹோமமும், வேத பாராயணமும், அபிஷேகமும், அன்னதானமும் நடைபெறுவதன் சமத்காரம்தான் அந்த ஆனந்தம் என்பது!

எப்போதும் உயர்ந்த எண்ணங்களும், உயர்ந்த செயல்களும் நடைபெறுகிற இடத்திலே தெய்வீகம் நிரப்பப்படுகிறது. சத்சங்கம் என்பது ஒரு combined effort. நான் என்று pronounce செய்கிறபோது உதடு பிரிந்திருக்கிறது. நாம் என்று pronounce செய்கின்றபோது உதடு சேர்கிறது. நான் என்பது தனி சிந்தனை.

ஆதிசங்கரர் "சத்சங்கத்வே நித்சங்கத்வம், நித்சங்கத்வே நிர்மோகத்வம், நிர்மோகத்வே நிஸ்சலதத்வம், நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி" என்கிறார். சத்சங்கத்தில் இருந்தால் கெட்ட எண்ணங்கள் நீங்கும். அதனால் மோகம் குறைந்து மனது நிர்மலமாகிவிடும். அப்படி ஆகிவிட்டால் மோட்சத்திற்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார். எனவே, மோட்சம் வரை கொண்டு போகக் கூடிய விஷயம் சத்சங்கம்.

About The Author