பாம்படம்

அந்த நவநாகரிக அடுக்குமாடிக் குடியிருப்பில், நான்காவது தளத்தின் மூன்றாவது வீட்டின் கதவைத் தட்டினால், பழமையின் ரூபம் கொண்டு வெள்ளைச் சேலையோடும், ஜாக்கெட் இல்லாமலும் கனத்த உருவத்தோடு பாம்படம் அசையும் காதுகளுடனான பாட்டி கதவைத் திறந்து உங்களை ஆச்சரியப்படுத்துவாள். வீட்டிற்கு வருபவர்கள் யார் என்றெல்லாம் அவள் பார்ப்பதில்லை.

"வாய்யா வா… உள்ளார வா… யாரு வேணும்? என்ன வேணும்?"

வந்திருப்பது கொரியர்க்காரனானாலும் சரி, பழைய பேப்பர்க்காரனானாலும் சரி, பாட்டி அவர்களை வரவேற்பறை வரை கூட்டி வந்துவிடுவாள். வந்தவர்கள் தயங்கித் தயங்கி நிற்கும்போது கைகளைப் பிடித்தே அழைத்து வருவாள். சாப்ட் லினென் சோபாவில் அவர்களை உட்காரச் சொல்லி வற்புறுத்துவாள். அவர்கள் வேறுவழியின்றி அதன் முனையில் எப்பொழுதும் வேண்டுமானாலும் எழுந்திருக்கத் தயாராக உட்கார்ந்திருப்பார்கள். அது போதாதென்று,"ஏய் பகவதி! கொரியர் தம்பிக்குக் கொஞ்சம் குடிக்க மோருத்தண்ணி கொண்டாயா" என்று அதிகாரமாக மருமகளுக்குக் கட்டளையிடுவாள். ஏற்கெனவே பளபளக்கும் அந்த வீட்டின் தரையைப் பார்த்துப் பதற்றத்தோடு இருக்கும் அவனுக்கு இது மேலும் பயத்தை ஊட்டும்.

"அதெல்லாம் வேண்டாம் ஆயா, கையெழுத்துப் போட்டா போதும்".

"கையெளுத்து யாரு போடுவா? எங்க ஊரிலெல்லாம் கை நாட்டுதென். இரு, மருமக வருவா, அவ காலேஜ் எல்லாம் படிச்சிருக்கா. அவ போடுவா" என்று பாட்டி அவனுக்குப் பொறுப்பாகப் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள். பகவதி வரும்போது வெறும் கையோடு வந்தால் பாட்டிக்குக் கோபம் வந்துவிடும். வேறுவழியின்றி, பகவதி மோரோடு வருவாள்.

"ஐயோ பாவம்! ரொம்ப வெயிலு. நல்லாக் குடி ராசா! ஏண்டி! மோருல கருவேப்பில போட்டியா?"

பகவதி பதில் சொல்லாமல் பாட்டியை முறைப்பாள். வந்தவன் நொடிகளில் டம்ளரைக் காலி செய்துவிட்டு ஓடிப்போவான். இப்படி ஓடிப்போனவர்களுள் வந்த வேலையை மறந்துவிட்டுப் போனவர்களும் உண்டு. மாலையில் சங்கரலிங்கம் வந்ததும் பகவதி அன்று நடந்த கதைகளையெல்லாம் சொல்ல, வீட்டில் பெரிய சண்டையே நடக்கும்.

"ஏம்மா! உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்? வீட்டுக்குள்ள யாரையும் கூப்பிடக் கூடாதுன்னு? இது ஒண்ணும் நம்ம கிராமம் இல்ல; சிட்டி. இங்க என்ன வேணாயிருக்கும். இப்படித்தான் போன வாரம் யாரையோ உள்ளார கூட்டி ஒக்கார வச்சி விருந்து வைக்க, என்ன ஆச்சு? போறப்ப, டேபிள்ல இருந்த நம்ம பொண்ணோட வாட்ச ஆட்டையப் போட்டுட்டு போயிட்டான். இன்னுமா உனக்குப் புரியல" சங்கரலிங்கம் கத்தும்போது பாட்டி எதும் நடக்காதவள் போல அமர்ந்திருப்பாள்.

"ஏண்டி, வந்ததும் வராததுமா அவன்கிட்ட பத்த வச்சிட்டியா? எனக்கும் எம் புள்ளைக்கும் இடையில சண்ட மூட்டி விடறதே உனக்கு வேலயாப் போச்சு. உம் பொண்ணு முதல்ல கடியாரத்த இங்கதான் வச்சான்னு சத்தியம் பண்ணச் சொல்லு! குண்டி மறந்த கழுத! அவ சொல்லுதான்னு என்னக் கத்துதியா?" பாட்டி இப்படி மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் பேத்தி புஷ்பாதான் வந்து காப்பாற்றுவாள். புஷ்பகமலம் என்னும் பாட்டியின் பேரைத்தான் சுருக்கி அவளுக்கு வைத்திருந்தார்கள்.

"சரிப்பா, விடுங்க. பாவம் பாட்டி! கிராமத்துல சுதந்திரமாத் திரிஞ்சது. அதக் கொண்டுவந்து இப்படிக் கட்டிப்போட்டு நிக்காத, ஒக்காராத, பேசாதன்னா எப்படிப்பா? இதவிடப் பேசாம அவங்களைக் கொண்டுபோய்க் கிராமத்துலேயே விட்டுறலாம்."

"சீக்கிரம் அதுதான் நடக்கப்போகுது" முனகிக் கொண்டே சங்கரலிங்கம் அறைக்குள் புகுந்துகொள்வார். பகவதியும் பின்னாடியே சென்றுவிடுவாள். பாட்டி, பேத்தியைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவாள். பாட்டி வாயிலிருந்து வீசும் புகையிலையின் வாசம் புஷ்பத்துக்கு ரொம்பப் பிடிக்கும். நன்கு மூச்சுக்குள் இழுத்துக் கொண்டு அவளும் அவள் அறைக்குள் புகுந்துகொள்வாள். பாட்டி ஆள் அரவமற்ற அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் குளிர் நடுக்கத்தோடு அமர்ந்திருப்பாள். எல்லோரும் உறங்கிவிட்ட பின்பும் பாட்டி உறங்காமல் விழித்திருப்பாள். ஆகாசம் தெரியாத அறைக்குள் அவளுக்குத் தூக்கம் வருவதில்லை. ஏ.சி-யை அணைத்துவிட்டுப் பால்கனிக் கதவைத் திறந்து, அங்கு தன் புடவையை விரித்துப் படுத்துக் கொள்வாள். அவள் தூங்கும்போது வெள்ளி முளைத்திருக்கும்.

******

பாட்டிக்குச் சர்க்கரை வியாதி வந்து, தீவிரக் கவனிப்பு தேவை என்றான பின்பு சங்கரலிங்கம், அம்மாவைக் கிராமத்திலிருந்து வரவழைத்துக் கொண்டார். டாக்டரும் மற்றவர்களும்தான் பதறுகிறார்களே ஒழிய, பாட்டி பதற்றம் அடையவேயில்லை. அவள் வேண்டியதைச் சாப்பிடுகிறாள், வேண்டிய வேலையைச் செய்துகொள்கிறாள். அவள் வியாதிக்குப் பயப்படுவதேயில்லை. ஆனால், போனவாரம் புஷ்பத்திற்கு நல்ல இடத்தில் இருந்து சம்பந்தம் வந்தது. அதுமுதல் பாட்டி தன் நலனில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளத் தொடங்கினாள். பேத்தியின் கல்யாணத்தைக் காணவேண்டும் என்று அவளுக்குள் ஆசை பெருகிவிட்டதே அதற்குக் காரணம். ஒழுங்காக மாத்திரைகளைச் சாப்பிடுகிறாள். காலையில் குடியிருப்பைச் சுற்றியுள்ள புல்வெளியில் நடை பயில்கிறாள். யார் கதவைத் தட்டினாலும் கண்ணாடி ஓட்டை வழியே பார்த்துவிட்டுத்தான் கதவைத் திறக்கிறாள். சங்கரலிங்கத்திடம் சண்டை போடுவதேயில்லை. பகவதியிடம் ரொம்பவே கரிசனம். பாட்டி இப்படி ராவோடு ராவாக நல்லவளாகிப் போனது எல்லாருக்கும் ஆச்சரியம். மருமகளும் பேத்தியும் பாட்டியைப் புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால், சங்கரலிங்கம் பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாட்டியைத் திட்டுவதற்காகக் காத்திருந்தார்.

"ஏண்டா, காட்டுக்கத்து கத்தற? அடுத்தவாரம் நிச்சயம் முடிஞ்சா எண்ணி மூணு மாசம், எம் பேத்தி கல்யாணத்தப் பாத்துட்டு நான் ஊரப் பாக்கப் போயிச் சேருறேன். அதுவரைக்கும் என்னைப் பொறுத்துக்கோ" என்று பாட்டி எரிந்து விழுவாள்.

சங்கரலிங்கம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லாமல் இருக்காது. இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டி கல்யாணச் சீர்வரிசைகளைப் பற்றிப் பக்கத்து வீட்டு அம்மாளோடு விரிவாகப் பேசியிருக்கிறாள். கிலோ கணக்கிலான தங்கம் வரதட்சணையாகத் தரப்படுவது குறித்துப் பெருமையாக அவளிடம் கூறியிருக்கிறாள். இதை அந்த அம்மா அவள் கணவனிடம் கூறுகிறபோது கேட்ட அவர்கள் வீட்டு வேலைக்காரி அதை அங்கு உள்ள மற்ற வேலைக்காரர்களிடம் சொல்லியிருக்கிறாள். நகை எங்கு உள்ளது என்பது வரைக்குமான செய்தியைப் பாட்டி மிக நம்பகமான முறையில் சொல்லியிருக்க, அங்கு சும்மா சுற்றித் திரியும் பரட்டையன் வரை செய்தி போய், அவன் ஒருநாள் ஒரு சிறு கத்தியோடு வீட்டுக்குள் நுழைந்துவிட்டான். இந்த முறைக் கதவைத் திறந்தது சங்கரலிங்கம்தான். யார் என்று பார்க்காமல் கதவைத் திறந்துவிட்டார். பரட்டையன் கைக் கத்தியைப் போலப் பத்துமடங்கு பெரிய கத்தி ஒன்றை அவர் கையில் பிடித்துச் சுற்றிய காலம் உண்டு. கத்தியோடு அவன் கையைப் பற்றி முறித்து இரண்டு குத்துவிட்டார். அவன் இதெல்லாம் பழக்கப்பட்டவன் போலில்லை. இரண்டாவது அடி விழும் முன்பே விழுந்துவிட்டான். போலீஸை அழைத்து அவனை ஒப்படைத்தார்கள். போலீஸின் விசாரணையில் தனக்குத் துப்புவந்து சேர்ந்த விதத்தை அவன் சொல்ல, பாவம் பாட்டி! சங்கரலிங்கம் அடிக்கவே வந்துவிட்டார்.

"எம் பொண்ணு கல்யாணம் நடக்கணுமேன்னு பார்க்கிறேன். இல்ல, உன்னக் கொன்னே போட்டுருவேன். கல்யாணம் வரைக்கும் வாயத் தொறக்காம கிடக்கிறதுனா இங்க கிட. இல்ல வாய மூடிக்கிட்டு ஊரு போய்ச் சேரு" என்று சங்கரலிங்கம் கோபத்தில் வெடித்தார். பாட்டி என்ன சாமானியப்பட்டவளா?

"என்னடா, உம் பொண்ணு, உம் பொண்ணு? எனக்குப் பேத்தியில்லையா? என்னையா அடிக்கக் கைய ஓங்குற? அந்த மனுஷன் மட்டும் இருந்திருந்தா இப்படிக் கண்ட நாயெல்லாம் என்ன ஏசுமா, பேசுமா? நானும் எம் பேத்தி கல்யாணம் வரைக்கும்தான் இங்க இருப்பேன். அதுக்கு மேல ஒரு நா தங்கினா என்ன பிஞ்ச செருப்பாலயே அடி! நான் ஊருக்குப் போனா அங்க தாங்குவார் கோடி, தடுக்குவார் கோடி."

பாட்டி திருப்பியடித்தால் சங்கரலிங்கம் என்ன செய்வார்? வழக்கம் போலக் கோபித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துகொண்டார். புஷ்பா வழக்கம் போலப் பாட்டியைக் கட்டிப்பிடித்து அவள் வாயின் வாசத்தை மனது நிறைய வாங்கிக் கொண்டாள்.

******

அடுத்த நாள் காலையில் எல்லோரும் எழுந்துகொண்ட பின்பும் பாட்டி மட்டும் எழுந்து கொள்ளவேயில்லை. சங்கரலிங்கம் பதற்றம் கொண்டவராகிப் பாட்டியைத் தொட்டுப் பார்த்தார். உடலில் சூடு இருந்தது. ஆனால், கூப்பிடும் குரலுக்குப் பாட்டி கண்ணைத் திறக்கவேயில்லை. சங்கரலிங்கம் அவசர அவசரமாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்து பாட்டியை மருத்துவமனையில் சேர்த்தார். பாட்டியின் சர்க்கரை அளவு அதிகமாகி அது மூளை வரை சென்று பாதித்துவிட்டிருந்தது.

"பாட்டி ஏதாவது டென்ஷனா இருந்தாங்களா? ஏன்னா ஸ்ட்ரெஸ் இருந்தாக்கூட சுகர் லெவல் கூடிடும்." டாக்டர் காரணங்களை ஆராய்ந்து சொன்னபோது எல்லோருக்குள்ளும் ஒரு குற்ற உணர்வு வந்து ஒட்டிக்கொண்டது.

"முதல்ல கண் திறக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துபோனார் டாக்டர். பகவதிக்கு வேறு கவலை.

"ஏங்க, பாட்டிக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா என்னங்க பண்றது? நிச்சயதார்த்தம் வேற வருது."

"அதுக்கு என்ன பண்றது? நடக்கிறது நடக்கட்டும்!"

"இல்லைங்க, நம்ம ஜோசியர வேணாக் கேட்டுப் பாக்கலாமே!"

"யார? நம்ம ஜோசியரையா? அவந்தான சொன்னான், ஜாம் ஜாம்னு கல்யாணம் நடக்குமுன்னு? எங்க அம்மாளுக்கு நாந்தான் ஜோசியர். அவளுக்கு ஒண்ணும் ஆவாது. அவ எமனுக்கே டாட்டா காட்டினவ."

சங்கரலிங்கத்தின் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் பெரிய கதை ஒன்று இருக்கிறது. பாட்டி சாவது ஒன்றும் முதல் முறையில்லை. ஏற்கெனவே ஒருமுறை செத்துப் பாடையிலேறிப் பிழைத்தவள். இது நடந்து பதினைந்து வருடம்கூட இருக்கும். தாத்தா செத்த வருஷம்தான் அது நடந்தது. விடுமுறைக்குச் சங்கரலிங்கம் கிராமத்துக்குப் போயிருந்த சமயம். பாட்டி அளவுக்கு அதிகமான புகையிலையை வாய்க்குள் அடக்கிக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டாள். விடிந்து பார்த்தால் பாட்டியிடம் மூச்சுப் பேச்சு இல்லை. பக்கத்து ஊர் வைத்தியர் நல்லக்கண்ணுவை அழைத்து வந்து காட்டினர். அவர் பார்த்த மாத்திரத்தில், பாட்டி உயிர் பிரிந்து அஞ்சுமணி நேரமானதைச் சரியாகக் கணித்துச் சொல்லிவிட்டார். அப்புறமென்ன, அழுகையும் ஆர்ப்பாட்டமுமாகப் பாட்டிக்கு இறுதிச் சடங்குகள் துவங்கிவிட்டன. சங்கரலிங்கம் அப்போது அழவில்லை. தாத்தா செத்தபோதுகூட சங்கரலிங்கம் ரொம்பவும் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவருக்கு அவர் வாழும் நகரம் கற்றுத் தந்த பாடமாக இருக்கலாம். கட்டிக் கொண்டு அழ வந்தவர்களிடம்,"வயசாயிருச்சி போயிட்டாரு. என்ன செய்ய முடியும்?" என்று சொன்னார். ஆறுதல்படுத்த வந்தவர்களுக்கு அவர் ஆறுதல் சொன்னது ஊர் மக்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே, பாட்டியின் சாவுக்குச் சங்கரலிங்கம் அழுவார் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை. பேரன் பேத்திகள் நெய்ப்பந்தம் பிடிக்க, கோலாகலமாகப் பட்டாசு வெடியோடு பாட்டியின் சப்பரம் கிளம்பிவிட்டது. சப்பரம் தெற்குத் தெருவைத் தாண்டியது. தூக்கிப்போட்டுப் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது கை தவறி ஒரு பட்டாசு பாட்டியின் காதுக்குப் பக்கத்தில் போய் வெடித்தது. அந்த அதிர்வில் பாட்டியின் உடல் ஒரு கணம் குலுங்கி அடங்கியது. பாட்டி கண்விழித்துப் பார்த்தாள். பாட்டி கண் திறந்ததைப் பார்த்த முதல் ஆசாமி நல்லக்கண்ணு வைத்தியர்தான். அதிலிருந்து ஆறு மாசம் அவரை ஊருக்குள் காணவில்லை.

"ஏல, ஏல! சப்பரத்தைக் கீழ இறக்குங்கல! பாட்டி உசுரோடத்தான் இருக்கு"ன்னு ஒருத்தர் கத்தியதும் சப்பரத்தை இறக்கப் பாட்டியின் கை கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். பாட்டி இறங்கியதும் முதல் அடியைச் சங்கரலிங்கத்தின் கன்னத்தில்தான் விட்டாள்.

"எப்பப் போவா, எப்பக் கொண்டுபோய் வைக்கலாம்னு இருக்கியோ?" கத்தினாள். "வைத்தியர்தான் சொன்னாரு…" என்று மாமா ஒருவர் சொல்லப்போக, "யாரு வைத்தியன்? அந்தப் பொட்டக் கண்ணனா? ஏண்டா, பக்கத்தூரு தர்மாஸ்பத்திரி டாக்டர் யாரும் கிடைக்கலையாக்கும்" என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று நடந்தாள். பாட்டிக்கு என்ன நடந்தது, பாட்டி எப்படிப் பிழைத்தாள் என்பதெல்லாம் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். பாட்டி அடித்து வலிக்குமா என்ன? இப்பவும் சங்கரலிங்கம் அவ்வப்போது கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இதனால்தானா என்று தெரியாது.

******

சங்கரலிங்கம் சொன்னது சரிதான். பாட்டி கண்விழித்து விட்டாள்.

"என் ராசாத்தி கல்யாணத்தப் பாக்காது போயிருவனா?" என்று பாட்டி கண்ணீர் மல்கக் கேட்டாள். எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால், பாட்டி முன்னைப்போல எழுந்து நடமாடுவதில்லை. படுக்கையிலேயே நீண்டநேரம் கிடந்தாள். அவள் நாட்களை மனதுக்குள் கழித்துக் கொண்டே வந்தாள். நிச்சயதார்த்த நாளிலும் பாட்டி படுத்தே இருந்தாள். ஆனாலும் குரலை உயர்த்தி,
"சீக்கிரம், மொத முகூர்த்தத்திலேயே கல்யாணத்த வச்சிருங்க" என்றாள். எல்லோரும் சரியென்றே சொன்னார்கள். பாட்டி சொல்லிச் சங்கரலிங்கம் கேட்டது அதை மட்டும்தான். பாட்டி இப்பொழுதெல்லாம் புகையிலை போட யாரும் அனுமதிப்பதில்லை. எப்பொழுதும் கைப்பேசியில் தன் வருங்காலக் கணவரோடு பேசிக் கொண்டிருப்பதால் புஷ்பாவும் பாட்டி அருகே அவ்வளவாக வருவதில்லை. புகையிலை போட்டால் அந்த வாசனை பிடிக்க அவள் வருவாள் என்று பாட்டி நினைத்தாள். ஆனால், அவள் ஆசை கைகூடவில்லை. சங்கரலிங்கத்திற்கு வேலைப் பளு தலைக்குமேல் இருந்தது. வாசல் அறையிலிருந்த பாட்டி இப்பொழுது உள் அறைக்குள் மாற்றப்பட்டு விட்டாள். இதனால் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று பாட்டி தெரிந்துகொள்ள இயலாமலேயே போய்விட்டது. பகவதிகூடப் பாட்டிக்குச் சோறு கொடுக்கத்தான் வந்து போவாள். பாட்டி இரவு பகலறியாமல் நாட்களைக் கடத்தி வந்தாள். கல்யாணத்துக்கு இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருக்கின்றன என்று சங்கரலிங்கம் ஒருநாள் சொன்னது பாட்டிக்கு ஆறுதலாய் இருந்தது. அதற்குள் எதுவும் ஆகாது என்று பாட்டி நம்பினாள்.

அன்று காலை எழுந்துகொள்ளும் முன்பு பாட்டியின் கனவில் தாத்தா வந்திருக்கிறார்.

"என்னாடி, இம்புட்டு நேரம் உறக்கம்?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்திருக்கிறார். பாட்டிக்குக் கனவா நனவா என்று தெரியவில்லை. வெடுக்கென்று எழுந்து,"இதோ வந்துட்டேன்" என்று சொல்லிக்கொண்டே வாசல் வரை வந்துவிட்டாள். படுத்துக் கிடந்த கிழவி எழுந்து நடந்து வந்ததைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியம்.

பாட்டி, "ஏல, உங்க அப்பன் வந்ததே எங்க?" என்று சங்கரலிங்கத்தைப் பார்த்துக் கேட்டாள். சங்கரலிங்கம் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். சில நொடிகளிலேயே பாட்டிக்குப் புரிந்துபோனது, தான் கண்டது அனைத்தும் கனவு என்று. தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். பாட்டி, "சங்கரலிங்கம்! இன்னும் கல்யாணத்துக்கு எத்தனை நாளிருக்கு?" என்று கேட்டாள்.

"பத்து நாளிருக்கு."

பாட்டி பதில் சொல்லவில்லை. கடகடவென்று எழுந்து குளிக்கப் போய்விட்டாள். எல்லோரும் மீண்டும் பாட்டியையே வட்டமிட்டு நிற்க வேண்டியதாகப் போயிற்று.

******

குளித்து, தனது அடையாளமான வெள்ளைச் சீலையைத் திருந்தக்கட்டி, நெற்றியில் திருநீறு நிறையப் பூசி, வந்து கூடத்தில் அமர்ந்துகொண்டாள். தனது வெத்தலைப் பெட்டியைத் திறந்து பன்னீர்ப் புகையிலையை எடுத்து வாயில் இட்டுக் கொண்டாள்.

"சங்கரலிங்கம்! மாப்பிள்ளத் தம்பியக் கொஞ்சம் கிளம்பி வரச் சொல்லு" என்றாள். ‘எப்பவும் பிஸியாக இருக்கும் அவரை எப்படித் திடுதிப்புன்னு வரச் சொல்றது’ என்று சங்கரலிங்கம் தயங்கி நின்றார்.

"சொல்றதச் செய்! நீ கூப்பிடுதியா இல்ல நாங்கூப்பிடவா?"

சங்கரலிங்கம் அதற்குமேல் பேச என்ன இருக்கிறது?

"பெரியவங்க கூப்பிட்டா அதுல என்ன தப்பு? நான் உடனே வர்றேன்" என்று சொல்லி வந்தார் மாப்பிள்ளை. பாட்டி அவரை அழைத்துக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

"ஏ புள்ள புஷ்பா! இங்கன வா" என்றாள். புஷ்பாவும் அருகே வந்து நின்றாள்.

"கால்ல விழுங்க பிள்ளைகளா!" என்றாள். ரெண்டு பேரும் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர். பாட்டி பக்கத்தில் வைத்திருந்த திருநீற்றைத் தொட்டு நாகரிகமாக அவர்கள் நெற்றியில் இட்டுவிட்டாள். தனது கழுத்தில் கிடந்த இரண்டு சங்கிலிகளைக் கழற்றி ஒவ்வொன்றாக அவர்கள் கழுத்தில் போட்டுவிட்டாள். பின்பு, சாந்தமானவளைப் போல ஆனாள். அவள் எதிர்பார்த்தது போலப் புஷ்பா பாட்டியைக் கட்டிப்பிடித்துப் புகையிலை வாசனையைத் தனது மூச்சுக்குள் அடக்கிக் கொண்டாள்.

"சரி பிள்ளைகளா, நீங்க போயி சந்தோஷமா பேசிக்கிடுங்க" என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தாள். பாட்டி போட்ட செயின் குறைந்தது பத்து பவுனாவது இருக்கும். பகவதி ரொம்ப நாளாய் அதைக் குறித்து வைத்திருந்தாள். அது இப்பொழுது தன் மகளுக்குப் போனதில் அவளுக்குப் பாதி மகிழ்ச்சி, பாதி வருத்தம்.

"பகவதி!"

"என்ன அத்த?"

"கொஞ்சம் கடுங்காப்பி போட்டு எடுத்தாறியா?"

"சரி அத்த, இதோ வாரேன்" என்று சொல்லிவிட்டுப் பகவதி போனாள். பகவதி திரும்ப வந்து கடுங்காப்பியை நீட்டியபோது பாட்டி பதில் இல்லாமல் இருந்தாள். "அத்த… அத்த…" என்று பகவதி பலமுறை கூப்பிட்டபோதும் அவள் திரும்பவேயில்லை. இந்தமுறை பாட்டி நிஜமாகவே இறந்துபோனாள் என்று பெரிய பிரைவேட் ஹாஸ்பிட்டல் டாக்டர் சொன்னபின்புதான் சங்கரலிங்கம் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்தார்.

*****

பாட்டியின் இறுதிச்சடங்கு முடிந்து எல்லோரும் சாப்பிட்டு எழுந்ததும் சங்கரலிங்கம் அக்கடா என்று அமர்ந்தார். அப்போது அங்கு சம்பந்தி வந்து நின்றார். சங்கரலிங்கம் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தார்.

"சம்பந்தி, என்ன முடிவு எடுத்திருக்கீக?" அவர் சம்பந்தி என்று தொடங்கியது சங்கரலிங்கத்துக்கு ஆறுதலாக இருந்தது.

"எதப் பத்தி?"

"அதான், பிள்ளைகள் கல்யாணத்தப் பத்தி…"

"அதுக்கென்ன?"

"அதுக்கென்னவா? எவ்வளவு லெட்சம் செலவுல ஏற்பாடு பண்ணியிருக்கீக! அதெல்லாம் வீணாப் போகாதா? கிழவிக்குத் தொண்ணூறு வயசாச்சு. இதுல வருத்தப்பட என்னயிருக்கு? அதனால பதினாறாம் நாள் காரியத்த எட்டாம் நாளே முடிச்சோம்னா மறுநாளே கல்யாணத்த வச்சிக்கிடலாம். அதுக்கு சாஸ்திரத்துலயும் இடம் இருக்காம், கேட்டுட்டேன். அதத்தான் கிழவியோட ஆத்மாவும் விரும்பும். என்ன சொல்றீக?"

சங்கரலிங்கம் எதுவும் பேசவில்லை. புஷ்பா அப்பா மேல் மிகுந்த நம்பிக்கையாய் இருந்தாள். எப்படியும் அப்பா இதற்குச் சம்மதிப்பார் என்று. பகவதியும் அதை விரும்பினாள். காரணம், இதை விட்டால் அடுத்த முகூர்த்தம் இன்னும் இரண்டு மாதம் சென்றுதான் வருகிறது. காசுக்குக் காசும் வீண். நாளுக்கு நாளும் வீண்.

சங்கரலிங்கம் எழுந்து கொண்டார்.

"எல்லாரும் என்ன மன்னிக்கணும்! கல்யாணத்துக்காகப் பதினாறாம் நாள் காரியத்த முன்னாடியே செய்ய எனக்கு விருப்பமில்ல. என் ஆத்தா சொல்லிருக்கு, மனுஷன் செத்து மொதப் பதினாறு நாளும் அவன் ஆத்மா அந்த வீட்டு வாசல்ல வந்து நிக்குமாம். பதினாறாம் நாள் நாம செய்யுற சாந்திப் பரிகாரத்த வாங்கிக்கிட்டுத்தான் அது போகும், அப்படிப் போனாத்தான் அது சொர்க்கத்துக்குப் போகும்னு சொல்லிருக்கு. என் ஆத்தாவும் ஒரு பதினாறு நாளைக்கு இங்கையே சுத்திட்டுப் போகட்டும். அத ஏன் சீக்கிரம் துரத்தணும்? நான் என் அம்மாவோட நெருங்கி வாழ்ந்ததேயில்ல. ஆனா அவ போன பின்னாடி அவ எங்கூடயே நிக்கிற மாதிரியிருக்கு. என்னால அவள எட்டு நாள்ல இங்கிருந்து தள்ள மனசு வரல. அடுத்த முகூர்த்தம் எப்பன்னு சொல்லி ஜோசியரைக் கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கிடுங்க" என்று சொல்லி முடிக்குமுன்னே சங்கரலிங்கத்திடமிருந்து அழுகை ஒன்று வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.

யாரோ புகையிலை மெல்லும் வாசனை வருவதாகப் புஷ்பா உணர்ந்தாள்.

About The Author

4 Comments

  1. bala

    இல. ஷைலபதியின் ரசிகனாகி கொண்டிருக்கிறேன். அருமையான நடை.

  2. சைலபதி

    கருத்துக்கள் சொன்ன manik, sundar, bala உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Comments are closed.