பாரதியார் பகவத் கீதையிலிருந்து…

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில்புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால்,தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் ‘தொழில் செய், தொழில் செய்’ என்று போதிக்கின்றார். இதனினின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்யவேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத்தக்கது.

பற்று நீக்கித் தொழில்!, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இதுதான் முக்கியமான பாடம்!.

தொழில்தான், நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே, அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக்கொள்ளாதே!. அவற்றால் இடர்ப்படாதே!. அவற்றால் பந்தப்படாதே!. தளைப்படாதே!. இதுதான் முக்கியமான உபதேசம்.
எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. ‘ஸம்சயாத்மா விநச்யதி’ – ‘ஐயமுற்றோன் அழிவான்’ என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அவையாவன காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும்!. இந்த விஷயத்தை பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது.

அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை . எல்லாம் இயற்கையின்படி நடக்கிறது.” (கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்.).

எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப் பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா!. தன் செயல்களுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால், அவன் பிற உயிர்களுடன் முரண்படுதலும் வேண்டா!.

“கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்” (5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்) என்று பகவான் சொல்லுகிறார்.

எனவே, கண்ணபிரான், மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்கு உள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.
எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? ‘ஸர்வமிதம் ப்ரஹ்ம’,. பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்’., இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி!.

About The Author