பாரதியார் பகவத் கீதையிலிருந்து…(1)

ஈசனைச் சரணாகதி அடைந்து, இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களிப்பில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இது கர்ம சாஸ்திரம், இது பக்தி சாஸ்திரம், இது யோக சாஸ்திரம், இது ஞான சாஸ்திரம், இது மோக்ஷ சாஸ்திரம், இது அமரத்துவ சாஸ்திரம்!

மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான பகைவன் – ஒரே பகைவன், அவனுடைய சொந்த மனமேயாகும். தன்னைத் தான் வென்றவன், தனக்குத்தானே நண்பன். தன்னைத் தான் ஆளாதவன் தனக்குத் தானே பகைவன்! இங்ஙனம் ஒருவன் ‘தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

ஒருவன் தனக்குத் தானே நட்பாகியபோது, உலகம் முழுதும் அவனுக்கு நட்பாய் ஆகிவிடுகிறது. அங்ஙனமின்றித் தன்னைக் கட்டியாளாமல் தனக்குத் தானே பகையாக நிற்பவனுக்கு இந்த உலகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை! புறப் பகை பகையன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையைக் களைந்து விட்டால், புறப் பகை தானே நழுவிப் போய்விடும்.

புறத்தே உள்ள எல்லாம் கடவுளாகப் போற்றத்தக்கவை. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் – அதாவது வேற்றுமை உணர்ச்சி – ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது. வேற்றுமையுணர்ச்சியை நீக்கி, நம்மைச் சூழ நடைபெறும் செயல்களெல்லாம் ஈசன் செயல்களென்றும், தோன்றும் தோற்றங்களெல்லாம் ஈசனுடைய தோற்றங்களென்றும் தெரிந்துகொள்ளுமிடத்தே மனத் தெளிவு உண்டாகிறது.

"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
சொல்லென்று ஹிரண்யன்தான் உறுமிக்கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணி லுள்ளான்,
நாராயணன் துரும்பிலுள்ளானென்றான்.
வல்லமை சேர்கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை!
அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை!
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ?"

"தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ? அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே" எனில், தன்னைத் தான் வென்று தனக்குத் தான் நன்மை செய்யும்போது, தன்னுடைய மனம் தனக்குத் தான் தன்மையுடையாதாகக் கருதிப் போற்றத்தக்கது.

எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போது கடவுளாகுமன்றோ? ‘எப்பொருள் யாது செய்யுமோயினும் அப்பொருள் கடவுள், அதன் செய்கை கடவுளுடைய செய்கை’யென்றும், ‘விதி மாறாதன்றோ?’ எனில், அவ்வுரை மெய்யே.

எனினும், நமக்கு உலக அனுபவம் மறுக்க முடியாத சத்தியமாகும். உலக அனுபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத்தக்கதாக மாற்றுவது சாத்தியம். அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே சாஸ்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானுகோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது, அதை ஒரேயடியாக மறந்து விடுவதில் பயனில்லை. மனம் இயற்கையாலும், தீய சகவாசத்தாலும் ஆத்மாவுக்குத் துன்பமிழைத்தல் உண்மையான ஒன்று. நல்ல எண்ணங்களாலும், பயிற்சியாலும் அதனை உபகார வஸ்துவாகச் செய்தல் சாத்தியமென்பது யோகிகளின் சர்வசாதாரண அனுபவம்.

எல்லாம் கடவுளுடைய செயலென்பது பொது உண்மை. பரமசத்தியம்! ஆயினும் மனிதனுக்குத் துன்பமுண்டு. எல்லாம் கடவுளுடைய வடிவமென்பது பரம சத்தியம். எனினும் ஜீவர்கள் துயரப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

அதாவது, கடவுளுக்கு எல்லாம் ஒன்றுபோலவேயாம், எத்தனை கோடி உயிர்கள் வாழ்ந்தாலும், எத்தனை கோடி உயிர்கள் மடிந்தாலும், கடவுளுக்கு யாதொரு பேதமுமில்லை.

பூகம்பமுண்டாய்த் தேசங்களழிகின்றன. சூரியகோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப்பொருள்கள். கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடிகோடி கோடிகோடி கோடிகோடி கோடிகோடி கோடிகோடிகோடியா? கோடியா அன்று, அநந்தம். எண்ணத் தொலையாதன! எண்ணத் தொலையாத பொருள்கள் கணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் கணந்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய உலகம் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.

கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், எங்கும் நிறைந்திருக்கிறார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது உண்மையாகும்.
அவர்களுக்கு நிஜத்தில் தீமைகளேனும், துன்பங்களேனும் இல்லை என்பது உண்மையே. ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுப்பாடுடன் வைத்தல், மனத்தை வெல்லுதல் என்பதெற்கெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்று வேறு பொருள் கிடையாதாம்.

"அஞ்ஞானமும் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்கவேண்டும்?" என்று கேட்டால், நீ ‘எல்லாம் கடவுள். ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்’ என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில், உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும், அதனாலாகிய இன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில், பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியதும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே! அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப்படாதே!

–தொடரும்...

About The Author