பாரதியார் பகவத் கீதையிலிருந்து (3)

சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது, பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக்கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு என்று எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் தவறான கருத்தை நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன், சொல்லியவனும் சந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர்கள். குடும்ப வாழ்விலிருந்தோர்.

"அதெப்படிச் சொல்லலாம்? அர்ஜுனன் ஜீவாத்மாவென்றும், கண்ணன் பரமாத்மாவென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்ன?” என்று நீங்கள் கேட்டால் அதையும் விட்டுவிடலாம்.

பரமாத்மா ஜீவாத்மா இருவருமே உலகக் காரியங்களில் தளைபட்டுத்தானிருக்கிறார்கள். புகழ்பெற்ற வங்கக் கவியாகிய ஸ்ரீமான் ரவீந்திரநாத் தாகூர் கடவுளை நோக்கி, "ஐயனே! நீயே சம்சார வலையில் அகப்பட்டிருக்கிறாயே? யான் இதினின்றும் விடுதலை அடைவது எங்ஙனம்?” என்று பாடியிருக்கிறார். சம்சார விருத்திகள் கடவுளுடைய விருத்திகள். செயலெல்லாம் சிவன் செயல்.

‘அவனன்றி ஓரளவும் அசையாது’ என்பது பெரியோர் வாக்கு.

கீதையிலே பகவான் சொல்லுகிறான்:-

"அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனி செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கை என்று எனக்குக் கிடையாது.

‘அடையத்தக்கது, ஆனால், என்னால் அடையப்படாதது’ எனவொரு பேதமில்லை. எனினும், நான் தொழில் செய்துகொண்டுதான் இருக்கிறேன்."

ஏனெனில், கடவுள் சொல்லுகிறான்:- "நான் தொழில் செய்யாது இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்" என்றான்.

கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்தவண்ணமாகவும் காத்தவண்ணமாகவும் அழித்தவண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா?
கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி, மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான்.

நாட்டில் மனிதக் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க்கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது. எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும், மரம்,செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருட்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக்கொண்டு, அவற்றுடன் வாழ்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் வாழ்வதைக் காட்டிலும் எளிதென்றும் கவலைக் குறைவு என்றும் கருதுவோன் தவறாக யோசனை செய்கிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய், நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வது ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை.
ஆனால், ‘கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடும் நன்றே’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகக் கஷ்டமாக்கக்கூடிய மனிதரும் இருக்கக்கூடுமென்பது மெய்யே! ஆனால், இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பெண், பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இதே ஸ்ரீபகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை.

பெண், பிள்ளைகளையும், சுற்றத்தாரையும், இனத்தாரையும், நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி செய்கிறான்.

துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?

"அறந்தா னியற்றும் அவனிலுங் கோடி யதிகமில்லந்
துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறவுடையோன்
மறந்தான் அறக்கற்று அறிவோ டிருந்துஇரு வாதனையற்று
இறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே!"

இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சதகோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள்  தாம் துறவியாதலால் இங்ஙனம் கூறினார். உள்ளத் துறவு செய்தற்குரியதென்றும் மனைத் துறவு செய்யவொண்ணாததொரு பாவமென்றும் நான் சொல்லுகிறேன். பாவமாவது யாது? புண்ணியம் என்பதெதனை?

தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்.

ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை. ‘இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை’. கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சொர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலமாகும்.

வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடைந்து அதன் உச்சியில் கடவுளைக் காணமாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார். வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன்முக்தராய் வாழ்தல் மேலான வழியாகும்!

தொடரும்

About The Author

1 Comment

Comments are closed.