பாரதியும் பெண்மையும்! (2)

பெண் விடுதலை என்ற ஒரு அருமையான கட்டுரையில், சமநீதித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒன்பது கட்டளைகளைப் பட்டியலிடுகிறார் இப்படி:

1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4. சொத்தில் சம உரிமை தர வேண்டும்
5. திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும்
6. பிற ஆடவருடன் பழகும் சுதந்திரம் வேண்டும்
7. உயர் கல்வி அனைத்துத் துறையிலும் தரப்பட வேண்டும்
8. எவ்விதப் பணியிலும் சேரச் சட்டம் துணை நிற்க வேண்டும்
9. அரசியல் உரிமை வேண்டும்

பெண்களுக்கு வேண்டிய உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், இவையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத காலத்திற்கு முன் சிந்தித்த தீர்க்க தரிசனமும், பெருமையும் பாரதியாரைச் சாரும்.

பெளத்தப் பெண்கள் நிலை, இசுலாமியப் பெண்கள் நிலை, தென் ஆப்பிரிக்கப் பெண்கள் நிலை ஆகியவை குறித்து பாரதியார் விவாதித்திருப்பது அவருடைய சிந்தனைகள் முழுமையாக மனித குலத்தைத் தழுவியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

பெண்மையின் பெருமை குறித்து இவ்வாறு கூத்திடுவார் பாரதி:

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பநற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்!

"போற்றித்தாய்" எனத் தாளங்கள் கொட்டடா!
"போற்றித்தாய்’ எனப் பொற்குழல் ஊதடா!
காற்றிலேறி அவ்விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே…
எனப் பாடுவார்!

பெண்மை என்பது என்ன?

அன்பு, அமைதி, ஆசைக் காதல், துன்பம் தீர்ப்பது, சூரப் பிள்ளைகளைப் பெறுவது, வலிமை சேர்ப்பது தனது முலைப் பாலால், மானஞ்சேர்க்கும் வார்த்தைகள், கலி அழிப்பது, கைகள் கோர்த்துக் களித்து நிற்பது! எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூற்றுப்படி சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் பாரதி.

"தையலை உயர்வு செய்" என்பது பாரதியின் புதிய ஆத்திசூடி.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடு மீசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.

கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்.

என்று பெண்மையைப் பேணி வளர்க்க வேண்டியதின் இன்றியமையாமையைக் குறிப்பிட்டார்.

"தமிழ்த் திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா"

என்று தமிழ்த்திருநாட்டையும், தாயையும் கும்பிட வேண்டியதின் சிறப்பைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.

பெண் விடுதலைக்காக முதன் முதலில் ’புதுமைப் பெண்’ படைத்த புதுமைக் கவிஞர் அல்லவா பாரதி? பெண்களே நமது நாட்டின் கண்களாவார்கள் என்பதில் மிகத் தெளிவான கருத்துக் கொண்டிருந்தவர் அவர். எனவேதான் அக்கவிஞர் பெண்மை பற்றிப் பலபல பாடல்களை இயற்றினார். பெண்மையின் சிறப்பை உணர்த்த எழுதப்பட்ட உன்னதக் காவியமே அவரது பாஞ்சாலி சபதம்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும் என அவர் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்துகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கும்மி அடிக்கின்றனர். எதைப் பாடி?

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி! என!

பாரதியாரின் பெண்மை பற்றிய கருத்துக்களை இதுவரை கண்டோம். பெண்களின் நிலை ஒருவகையில் மேம்பட்டிருந்தாலும், இன்னும் நமது சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் குறைந்த பாடில்லை. தெருக்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் மகிழ்வோடும், அமைதியாகவும் இருக்க முடியாது அவதிப்படும் நிலை இன்னும் நீடிப்பது வேதனைக்குரியது.

அண்ணல் காந்தி அடிகள் கூறினார்: " நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது" என்று!

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும், பஞ்சாயத்து ஆட்சிகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் அரசு படும் பாட்டைப் பார்த்து வேதனை ஏற்படுகிறது.

அந்த நிலையைக் கொண்டு வருவதற்கு ஒவ்வொருவரும் தனது பங்கை அளிக்க வேண்டும். பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் மனப்பாங்கு ஏற்பட வேண்டும். பெண்கள் போகப்பொருளே என்ற அருவருப்பான எண்ணம் மக்கள் மனங்களிலிருந்து அறவே அகற்றப்பட வேண்டும்.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு மிகவும் அதிகம். இதை ஒரு வேள்வியாக ஏற்று அனைவரும் பாடுபடுவோம். பெண்மை உயர்ந்தால், சமுதாயமும் நாடும் உயரும் என்பதை மனதார ஏற்று, மதித்து வாழக் கற்றுக் கொள்வோம்!. இதுவே பாரதிப் பெருமகனாருக்கு நாம் செய்யும் நன்றியும் அஞ்சலியுமாகும்!

About The Author