பார்கவி பக்கங்கள்-15

வ.ரா என்ற வ.ராமஸ்வாமி ஐயங்கார் பாரதியாரைத் தம் குருவாகக் கருதியவர். சிறந்த எழுத்தாளர். பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவர் வரலாற்றை உண்மையாகவும் சுவைபடவும் எழுதியுள்ளார். பாரதியாரைப் போலவே முற்போக்குச் சிந்தனைகள் உடையவர். ‘அக்கிரகாரத்தின் அதிசயப் பறவை’ என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர். பக்கிம் சந்திரரின் நாவல் ஒன்றை ‘ஜோடி மோதிரம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பைப் பாராட்டிய பாரதியார், “வசனத்துக்கு வ.ரா போதும்; கவிதைகளை மட்டும் நான் கவனித்துக்கொள்கிறேன்” என்றார். (பாரதியாரின் உரைநடையும் சிறப்பு வாய்ந்ததே என்பது வேறு விஷயம்!).

வ.ரா புதுச்சேரியில் முதன்முதலாக பாரதியாரைச் சந்தித்தது சுவாரஸ்யமான நிகழ்ச்சி! பார்த்த உடனேயே, “குருவின் காலில் குப்புற வீழ்தல்” என்று இசைக்கவி ரமணன் சொல்லுவாரே, அப்படி வீழ்ந்து விட்டார். புலி பாய்வதைப் போலப் பாய்ந்து நிறுத்தி, “நமஸ்காரம் வேண்டாம்! நீர் யார்? வந்த காரியத்தைச் சொல்லும்!” என்றார் பாரதியார். மாட்டிக்கொண்டார் வ.ரா. “I am Va.Ramaswami from Chennai; I am a great admirer of your poems and writings” என்றெல்லாம் ‘பீட்டர்’ விட்டிருக்கிறார். பாரதியார் தம்முடன் இருந்த பயில்வான் என்கிற பாலுவைக் கூப்பிட்டு, “அடே, பாலு! வந்திருக்கிறவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா! அவரிடம் நமக்கு வேலையில்லை! நீ பேசிக்கொள்!” என்று சொல்லி விட்டு உள்ளே கிளம்பி விட்டார். வ.ரா தமிழில் பேச ஆரம்பித்ததும்தான் உரையாடல் தொடர்ந்தது. பாரதியாரின் மன வேதனையை வ.ரா-வால் உணர்ந்து கொள்ள முடிந்தது. “ஒரு தமிழன் இன்னொரு தமிழனுடன் இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று பாரதியார் கூறுவதைக் கேட்ட வ.ரா-வுக்கு அழுகையே வந்து விட்டது.

தொடர்ந்து பாரதியார்,

“மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே! – எங்கள்

வாள்வலியும் வேல்வலியும் போச்சே!

விண்முட்டிச் சென்ற புகழ் போச்சே! – இந்த

மேதினியில் கெட்ட பெயராச்சே!”

என்று தொடங்கும் மறவன் பாட்டை உணர்ச்சி பொங்கப் பாடிக் காட்டியிருக்கிறார். பின்னர், நாட்டின் விடுதலையைப் பற்றி இவ்வாறு பேசியிருக்கிறார், “நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்! பாஷைக்கு விடுதலை வேண்டும்!” என்று.

வ.ரா சொல்கிறார், “தேமதுரத் தமிழோசையை அன்று நான் நேரில் கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக்கூடவில்லை. தமிழுக்கு உயிரும் வலிமையும் பொலிவும் மென்மையும் உண்டு என்று அன்றுதான் கண்டேன்!” என்று.

இந்தச் சந்தர்ப்பத்தில் நமது மனக்குமுறல்களை வெளியிடாமல் இருக்க முடியவில்லை. தமிழ் படிப்பது, தமிழில் பேசுவது கேவலம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். மாணவர்கள் இன்று தமிழில் பேசினால் பள்ளிகளில் தண்டனை விதிப்பது யதார்த்தமாகி விட்டது. குழந்தையும் தாயும் இன்று வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசுவது வாடிக்கையாகிவிட்டது! நாம் இருப்பது இங்கிலாந்திலா தமிழ்நாட்டிலா என்பதே சந்தேகமாக இருக்கிறது!

“வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ!

வீட்டு வார்த்தை கற்கிலாய் போ, போ, போ!”

என்று பாடிய உனக்கு நாங்கள் அளிக்கும் மறுமொழி இதுதான். என்ன செய்வோம் பாரதி!

About The Author

1 Comment

Comments are closed.