பார்வை

அந்த ரயில் வண்டி நகரத் தொடங்கியது. வேலைக்குச் சென்று திரும்பும் ஆண்கள், பெண்கள், கல்லூரியில் படிக்கும் இளம் மாணவ, மாணவிகள் எனப் பல தரப்பட்ட வயதினர் அந்தப் பெட்டியில் பயணம் செய்தனர். ஜன்னலுக்கு அருகே ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ‏இளைஞனும், அவனது வயதான தந்தையும் அமர்ந்திருந்தனர்.

ரயில் வேகமாக நகர நகர, அந்த மகன் வெளியே தெரியும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மிகவும் ஆனந்தத்துடன் தன் தந்தையைப் பார்த்து மகிழ்ச்சிக் கூச்சலிடுகிறான், “அப்பா….அப்பா! வெளியே மரங்களும், செடிகளும், மலைகளும், கட்டிடங்களும் ஓடுவது எவ்வளவு அழகாக உள்ளது பாருங்களேன்!”

ஓர் இளைஞனின் குழந்தை போ‎‎‎ன்ற இந்தச் செயல் சக பயணிகளுக்கு விசித்திரமாகவும், எரிச்சல் ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

எல்லோருமே அவனைப் பற்றி தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர்.

புதியதாக கல்யாணம் ஆன ஒருவன் தன் மனைவியிடம் "அவன் சுத்த லூஸாக இருப்பான் போலிருக்கு" என்றான்.

சற்று நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. திறந்திருந்த ஜன்னல் வழியாக மழைத்துளிகள் பயணிகள் மேல் பொழிய ஆரம்பித்தன.

மழை நீர் தன் மீது பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து துள்ளிக் குதித்த அவன், தன் தந்தையிடம், "அப்பா….அப்பா! மழை எவ்வளவு அழகாகவும், நம் மீது படும் போது எவ்வளவு மகிழ்ச்சியாகவும் உள்ளது பாருங்கள்!” என சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தா‎ன்.

புதுப் பட்டுப் புடவை மழைச்சாரலால் நனைய ஆரம்பித்ததில் புது மனைவியி‎ன் எரிச்சல் மிகவும் அதிகமானது.

அவள் கணவன் அந்த முதியவரிடம் "ஐயா! மழை பெய்வது தெரியவில்லையா? ஜன்னலை உடனே மூட வேண்டும் என்று உமக்குத் தோன்றவில்லையா? உமது மகனுக்கு மன நிலை சரியில்லை என்றால் அவனை மெண்டல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று வைத்தியம் பாருங்கள்; அதை விடுத்து இது போல பொது மக்களுக்கு, பொது இடத்தில் தொந்தரவு செய்யாதீர்கள்" என்றான்.

இதைக்கேட்ட பெரியவர் சற்று நேரம் சங்கடத்துடன் அனைவரையும் நோக்கி விட்டு, மெதுவான குரலில்…. "நாங்கள் இருவரும் ஆஸ்பத்திரியிலிருந்து, இன்று காலையில் தான் டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். அவன் பிறந்த  நாளிலிருந்தே கண் பார்வை தெரியாதவன். சென்ற வாரம்தான் அவனுக்குக் கண் பார்வையே கிடைத்தது. இந்த இயற்கைக்  காட்சிகளும், மழையும் அவன் கண் பார்வைக்கு இன்று மிகவும் புத்தம் புதியவை; இருப்பினும் உங்களுக்கு இன்று ஏற்பட்ட தொந்தரவுகளுக்கு எங்களை மன்னிக்கவும்" என்றார்.

ரயில் பெட்டியில் கனத்த மௌனம் விழுந்தது.

About The Author