பிடாரிக்குளம்

தண்ணிக் காட்டேரி பிடாரிக்குளத்தில் இறங்கிவிட்டது. இனி ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ நாள் முழுக்கவோ – எப்போது கரையேறும் என்பது தெரியாது. நல்ல ஆழம், அல்லிச் செடிகளையும் தாமரைப் பூக்களையும் பாசிப்பரப்பையும் வேகவேகமாக விலக்கிவிட்டு கழுத்தளவு ஆழத்திற்கு வந்து முழுக்கு போட்டது. குளக்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் குதூகலத்தோடு பார்த்து கையசைத்தது. நடுக்குளத்திற்கு வந்து ஒரு சுற்று நீச்சலடித்து வேடிக்கை காட்டியது. திரும்பவும் திரும்பவும் முழுக்கு. வட்டவட்ட அலைகள் சுற்றிலும் எழுந்து பெரிதாகிப் போவதை அலட்சியமாகப் பார்த்தது. ஆகாயத்தைப் பார்த்தது. போதும் என்ற திருப்தி முகத்தில் தென்படவில்லை. ஈரம் சொட்டச் சொட்ட மேலே ஏறி வந்தது.

இப்படித்தான் எங்காவது குளக்கரையில், கிணற்றடியில் ஆற்றில் வாய்க்காலில் தண்ணீர் கண்ட இடங்களிலெல்லாம் விடுவிடுவென ஓடிப்போய் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கும். எந்த இலக்குமில்லாமல் ஈரப்புடவையோடு அலையும். இரக்கப்பட்டு யாராவது ஏதாவது கொடுத்தால் தயங்காமல் வாங்கிச் சாப்பிடும். உடனே தண்ணீர் கண்ட இடத்தில் குளியல் – தெருவில் நடக்கும்போது சட்டென்று காலில் ஏதோ கூடாதது தட்டுபட்டாற்போல் நின்று முகத்தை அருவெறுப்பாக்கிக் கொண்டு தண்ணீர் தேடி ஓடும். திரும்பவும் குளியல்.

காவேரியம்மா என்று அதற்குப் பெயர் இருப்பதாக பெரியப்பா சொல்வார். சின்ன வயசிலேயே புருஷன் அவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அப்போதே குளியல் பிசாசு. நாளைக்கு ஏழு தடவை. இந்த இம்சையை எந்தப் புருஷனால் தாங்கிக் கொள்ள முடியும்.

ஒரு பழைய புடவை, ரவிக்கை – சாயம்போன துண்டை கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்டு எதையும் லட்சியம் செய்யாததைப்போல் கைகளை நீளநீளமாக வீசிக்கொண்டு போவது வேடிக்கையாக இருக்கும். திடீரென்று நினைத்துக் கொண்டு கண்களில் பட்ட யார் வீட்டு கொல்லைக்காவது வேலிப்படலைத் தள்ளிக் கொண்டு நுழைந்து கிணற்றடிக்குப் போய் வாளி வாளியாக மொண்டுமொண்டு தலையில் ஊற்றிக் கொள்ளும். அவளுடைய ஆவேசத்தைத் தடுப்பது யார். ஆட்சேபிப்பது யார்?

– – – காலமே தண்ணீரைப் படைத்தது. அனைத்தையும் தூய்மைப்படுத்தும். அதுவே ஆதாரம். எல்லாமே அதற்குள் இயங்குகின்றன- – –

எப்போதும் தண்ணீரின் தேவதை மாதிரிதான் தெரிந்தாள். தண்ணீரைத் துதிப்பது மாதிரி இருந்தது. போற்றுவது மாதிரி இருந்தது.

"நீரின் அடிப்படை மூலமாய் ஒளிர்கின்ற ஒளி நானே. துன்பம் தருவதாக, தூய்மையற்றதாக, அமைதியைக் குலைப்பதாக தண்ணீரில் உற்ற அனைத்தும் விலகட்டும். நீரில் உறைகின்ற அவர் நம்மைக் காப்பாற்றட்டும் – என்று யாரோ சதா சொல்லிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. ஆகாயத்திலிருந்து வரும் அந்த ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு தண்ணீரோடு ஐக்கியமாகிப் போவதும் புரிந்ததாயிருந்தது.

அடை மழைக் காலங்களில் தண்ணிக் காட்டேரிக்கு அலாதியான பூரிப்பு. நாள் முழுதும் மழையிலேயே வாசம். பூமியைத் துளைக்கும் வலிமையான மழைக் கீற்றுகளின் மேல் நேசம் கொண்டு அதில் இதம் காணுவதைப்போல பரவசமாய் மேலத் தெருவிலும் கீழத் தெருவிலும் மாறிமாறி நிற்கும். கிடுகிடுவென அய்யனார் குளம் நிரம்பி வழிவதை உற்சாகத்தோடு பார்த்துக் கொண்டே சுற்றிவரும்.

"ஏ தண்ணிக் காட்டேரி என்று மழையில் நனையும் ஆரவாரத்தோடு ஓடிவரும் குழந்தைகளை வாஞ்சையோடு அணைத்துக் கொள்ளும். அந்த நேசம் இணையற்றது. எல்லையற்றது.

"மகிழ்ச்சியான வழிகள் மூலம் எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்வாய். எங்கள் ஊரும் நாடும் உலகும் வளம் கொழிக்கட்டும். எங்களின் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இன்னும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தருவாய்."

பிடாரிக்குளத்தின் பிரம்மாண்டம் சொல்லி மாளாது. கண்ணிற்கெட்டிய தூரம் வரை தண்ணீர் ததும்பும். காற்றின் தாலாட்டில் நுரைநுரையாய் அலைகள் கரைதொட்டு ஒரு வகையான சங்கீதத்தைப் பாடித் திரும்பிக் கொண்டிருக்கும். அந்த அலைகளின் ஆர்ப்பரிப்பும் சங்கீதமும் ஏராளமான சேதிகளைச் சொல்லும் ‘இந்த உலகம் நிலைபெற நான் காரணமாக இருக்கிறேன். என் துளிகளிலிருந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் ஒளியைத் தருவேன். என் ஆளுமை எப்போதும் நிலைபெறும். அசைவைத் தருவேன். என் ஆக்ஞைக்கு உட்பட்டே மேகங்கள் மின்னலுடன் இரவும் பகலும் மழை பொழிகிறது. எல்லா வித்துக்களும் நன்றாக முளைத்து வளர்கின்றன’.

கருணையல்ல – கடமையிது என்பதேபோல் அதுவோர் அற்புதம்.

தண்ணிக் காட்டேரியின் பிரசன்னம் குறித்து யாரும் கவலைப்பட்டதில்லை. அக்கறையுமில்லை. எதற்கும் உபயோகமற்ற விஷயத்தில் அக்கறை கொண்டு ஆகப் போவதென்ன?

சுவாமி புறப்பாடு – ஊரே திமிலோகப்பட்டது. நாதஸ்வரக்காரர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். வாண வேடிக்கைகள். ஆகாயப் பரப்பு நெடுக வர்ண ஜாலங்கள். வெகுகாலமாக நின்று போயிருந்த திருவிழா – கோயில் மரியாதை முதலில் யாருக்கு என்பது குறித்து பிரச்சினை. வருஷக்கணக்காக கோர்ட் கேஸ் என்று இழுத்துக் கொண்டு – இரண்டு ஊர்கள் மல்லுக்கு நின்றன. வெட்டு குத்து வேறு. எல்லைகளைப் போட்டுக் கொண்டு வேலிகளைப் போட்டுக் கொண்டு, அம்மன் பதினேழு வருஷங்களாக ஜெயிலுக்குள் இருப்பது மாதிரி கம்பிக் கதவுகளுக்குள் இருட்டில் பட்டினி கிடந்தாள். சர்க்கார் கடுமையாக உத்திரவு போட்டது. ஒரு வழியாக முதல் மரியாதை யாருக்கென்று முடிவானது. அந்த மகிழ்ச்சியில் ஏக ஆர்ப்பாட்டம். "தேவீ உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்றறியாத மக்களைக் குறித்து கேலி செய்கிறாயா. உன் மென்னகையுடனான பார்வையின் பொருளென்ன?"

பக்கத்து ஊர்க்காரர்கள் ரகசியமாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். கோப முகங்கள். ஒரு கோஷ்டி அரிவாள்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. "கோர்ட்டாவது தீர்ப்பாவது. சாமி தெக்குத் தெரு வரதுக்குள்ளே நாலு தலை உருளணும்". அவர்களுடைய உடம்பு முழுவதும் பிரவாகிக்கும் கொலை வெறியை இன்னும் இன்னும் கூடுதலாக்கும் வண்ணம் பெரிசுகள் பழைய வன்மக் கணக்குகளை நினைவூட்டிக் கொண்டிருந்தன.

எந்தச் க்ஷணம்? – வெட்டு குத்து ரத்தக் குவியல் – தண்ணிக் காட்டேரி கைகளிரண்டையும் ஆகாயத்திற்கு மேல் தூக்கிக் கொண்டு சிரித்தது – "ஹோ… ஹோ… ஹ்ஹோ..". நர்த்தன மிடுகிறதா ஜதியோ தாளமோ இன்றி – வெறும் குதித்தல் எனலாமோ. அம்பிகை சிரித்தாள். தண்ணிக் காட்டேரி என்ன வந்தது உனக்கு. "உரக்க சப்தமெழுப்பினாள். முகத்தில் தெரிந்தது சாந்தமா குரூரமா… உக்கிரமா, கோபமா, புலப்படவே இல்லை. கூந்தல் அவிழ்ந்து நாலாபக்கமும் சுழன்றது. "தண்ணிக் காட்டேரிக்கு சாமி வந்திடுச்சி."

கூட்டம் சற்று திகிலோடு சூழ்ந்து நிற்க – கிழக்கே ஒரு நீளமான மின்னல். அந்தப் பிரதேசத்தையே கூசச் செய்தது. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய் கொடிக் கொடியாய் பிரபஞ்சத்தையே கூறுகூறாக ஆக்கிவிடுவதைப்போல – பளிச்… பளிச்… தொடர்ந்து பேரிடி… ஊழியா…?

சடசடவென பேய் மழை. தடிமனான மழைக் கம்பிகள் பூமியைப் பிளந்தன. பேய் மழையோடு யுத்தம் செய்வதைப் போல பெருங்காற்று சுழன்றடித்தது. நிமிஷத்தில் மக்கள் அஞ்சி ஓடி கிடைத்த இடங்களில் ஒளிந்து கொண்டனர். அரிவாள்களும் கத்திகளும் நீண்ட வேல் கம்புகளும் அவசர அவசரமாக தூக்கியெறியப்பட்டன. தாக்கு பிடிக்க முடியாத பெருமழை.

அம்மன் நடுத்தெருவில் வாகனத்தோடு உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். தண்ணிக் காட்டேரி குந்தாளம்மனைப் பார்த்து சிரித்தாள் பதிலை எதிர்பார்த்து. அவள் மௌனத்தின் பொருள் ஏராளம் என்று தோன்றியது. இருவரும் முழுக்க நனைந்து மேலும் மேலும் நனைந்து குளிரக் குளிர நனைப்பதன் மூலம் பூமியின் தேவையற்ற உக்கிரம் குறையட்டும். கோபம் குறையட்டும். வன்மம் குறையட்டும். உலகம் முழுவதும் காணப்படுவது எதுவாயினும் கேட்கப்படுவது எதுவாயினும் பேசப்படுவது எதுவாயினும் உள்ளும் புறமும் வியாபித்தபடி அவள் இருக்கிறாள்.

"ஒரு வாரமா விடாம மழை பேஞ்சு பார்த்ததே இல்லை. தெக்கே எல்லா ஏரிகளும் வழியுது. வடக்கே அய்யனார் குளம் உடைப்பெடுத்துக்குமோ… பிடாரிக்குளம் மேல் படிவரை தண்ணி… யப்பாடி…"

எல்லா அழுக்குகளும் துடைத்தெறியப்பட்டாற்போல் எங்கும் பளிச்…

"எலே ஆத்தா ஊர்வலம் கிளம்பட்டும்டா. வாங்க வாங்க…. நாதஸ்வரக்காரரே வாசிங்க… நனைஞ்சா கரைஞ்சு போயிட மாட்டோம்… ஆத்தா இதோ வந்துட்டோம்…

உலகம் அமைதி பெறட்டும். அமைதி பெறுவதன் மூலம் பூரணமாக நிலை பெறட்டும் – நெடிய இனிமை – இனிமையின் வாசம் – வாசத்தின் வீச்சு – எல்லாமும் ரம்மியமே.

அதிகாலைப்பனி. நல்ல குளிர். கோட்டுருவங்களாய் இரண்டு. "யாரது?, யார் இவர்கள்? எங்கே அவசரப் பயணம்? எதன் பொருட்டு?" ஊடுருவிப் பார்த்தபோது தெற்குத்தெரு பவானியும் பக்கத்து ஊர் முருகேசனும் – தண்ணிக்காட்டேரி அறியும்

"உங்கள் பயணம் இனிதாகட்டும். அன்பும் மேன்மையும் நம்பிக்கைகளும் கனவுகளும் கொண்ட இந்தப் பயணம் அதன் இலக்கை இனிதே அடையட்டும். சீக்கிரமே அடையட்டும்."

"தண்ணீ தண்ணீ…டீ தண்ணிக் காட்டேரி நம்மூரு பவானியைப் பாத்தியா. எந்தப் பக்கம் போனாங்க. பாத்தியா பாத்தியா அந்தப்பய ஆருன்னு பாத்தியா.. எப்படிப் போனாங்க? சாத்துங்கடா… அப்பத்தான் வாயத் தொறப்பா…." தெற்கே பிரதான சாலை வழியாக குறுக்கே போய் அவர்கள் பத்திரமாய்ச் சென்றதை நிச்சியப்படுத்திக் கொண்டு வந்ததைச் சொல்லலாமோ சொல்ல முடியுமோ. "நற்செயல்களுக்குத் துணை போவோம். நற்செயல்களைப் பேணுவோம். நற்செயல்கள் உலகத்தின் ஜீவன். அவை தெய்வங்கள்" – அடித்துத் துவைத்தார்கள். கடைவாய் வழியாக ரத்தக்கோடுகள் – தண்ணிக் காட்டேரி சிரித்தது. உஷைதேவியின் ஒளி மயமான கிரணங்கள் கிழக்கில் தெரிகின்றன. அவை மகிழ்ச்சியை ஓங்கச் செய்கின்றன. அடர்ந்த இருளை விலக்குகின்றன. பிரபஞ்சத்தை எந்நேரமும் பிரகாசமாகவே தேவி வைத்திருக்க விரும்புகிறாள்.

வானம் வெறிச்சோடிக் கிடந்தது. தண்ணிக் காட்டேரி பிடாரிக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு மூழ்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் மூழ்கி எத்தனை தடவை என எண்ணிக்கையில்லை. அலுப்பில்லை. சலிப்பில்லை என்பதுதான் ஆச்சர்யம்! முகத்தில் எல்லையற்ற பிரகாசம். ஈரம் சொட்டச் சொட்ட நிற்பதே வித்யாசமாக இருந்தது – இத்தனை தடவை குளிக்கும் தண்ணிக் காட்டேரிக்கு ஏதேனும் உடம்புக்கு வராதா? – அறிவியலுக்கு அப்பாலும் இருக்கிறது சூட்சுமம். யார் வீட்டுக் கிணறாய் இருந்தாலென்ன? உரிமையோடு வேலிப்படலைத் திறந்து கொண்டு வாளியால் மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ளும். தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளவா. அல்லது உலகத்தின் அசுத்தம் குறித்து எல்லையற்ற கவலையா. குளியலே வாழ்க்கை – குளிப்பதே வாழ்வின் லட்சியம் என்பதுபோல் ஒருவித கர்வம். ஈரப்புடவையோடு வலம்வரும். சட்டென்று நின்று மேலும் கீழும் பார்க்கும். திருப்தியடையாததைப்போல பிடாரிக் குளத்திற்கு ஓடி தொப்பென்று குதித்து மூழ்கி மூழ்கி எழும்.

"தண்ணீரோடு ஐக்கியமானபின் தண்ணீராகவே ஆகி, பிரிக்க முடியுமோ, நான் தண்ணீர் தேவதை –

உச்சி வெயில் ஊரையே எரித்துவிடும் உத்தேசத்தில் கொளுத்தியெடுத்தது. என்ன கோபம். மரங்களும் அசைவற்று மௌனம் காத்தன. பேரச்சம் – தண்ணிக்காட்டேரிக்கு யாரோ புதுப்புடவை வாங்கிக் கொடுத்திருந்தனர். தாறுமாறாகச் சுற்றிக் கொண்டு பிடாரிக் குளத்தில் மூழ்கி உடம்போடு ஒட்டிக் கொண்டு சரக் சரக்கென்று சப்திக்க தெருவை வலம் வந்தது. நடந்த இடமெல்லாம் ஈர வழிப்பாதை – தனக்குள்ளேயே ஏதோ பேசிக் கொண்டது.

"காலம் புரிபடாதது. காலம் புதிரானது. அதைப் புரிந்து கொள்ள காலத்தைத் துதிக்க வேண்டும். காலமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கும். காலமே விருப்பமானதைச் செய்யும்."

ஆலமரத்திலிருந்து ஒற்றையாய் ஒரு காகம் கரைந்தது. லேசான நடுக்கம்.

பிடாரிக்குளத்தின் பக்கம் ஜனத்திரள். லாரிகள் வரிசை வரிசையாக நின்றிருந்தன. மண்ணும் கல்லுமாய்க் கொண்டு வந்து குளித்தில் கொட்டின. மீண்டும் வந்தன. நகரத்தின் இடிபாடுகளையும் ஏராளமான குப்பைகளையும் கொட்டின. மீண்டும் மீண்டும் வந்தன. ஓய்ச்சலில்லை. பிடாரிக் குளத்தில் ராட்சசத்தனமாய்க் கொட்டின. அதை மூடப்போகிறார்களாம், தேவையில்லையாம். இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறதாம். குளத்தை மூடிவிட்டு கடைகள் கட்டி வாடகைக்கு விடப் போகிறார்களாம். வருமானம் பார்க்கப் போகிறார்களாம். குடிநீர்க் குழாய் பதித்து வீடு வீடாய்க் கொண்டுபோய் அருவியாய்க் கொட்ட வழியிருக்கும்போது இவ்வளவு பெரிய குளம் எதற்கு என்று அதிகாரிகள் போலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த பிரம்மாண்டத்தை மூட முடியுமோ, சாத்தியமோ! பெரிய பெரிய இயந்திரங்கள் அசுரத்தனமாய் இயங்கும் வேகத்தைப் பார்த்தால் சமுத்திரத்தையே மூடி விடலாம். இதுவென்ன பேச்சு?

லாரிகள் பெரிய பெரிய இயந்திரங்கள் – இவற்றின் பேரிரைச்சல் – தெரு நாய்களும் ஒரு நாள் முழுதும் குரைத்துப் பார்த்துவிட்டு எங்கோ பதுங்கிக் கொண்டன. இவ்வளவு குப்பைகள் எங்கிருந்து கிடைக்கின்றன? கட்டிட இடிபாடுகள் – நகரத்தின் அத்தனை கட்டிடங்களையும் இடித்துவிட்டு புதிதாகக் கட்டப் போகிறார்களா? அல்லிகளும் தாமரைகளும் நசுங்கி ஓரமாய் ஒதுங்கிக் கிடந்தன. மெல்லிய முனகலும் சாத்தியமில்லை. குளத்தின் நீர் மளமளவெனக் குறைந்து கொண்டிருந்தது. வண்டல் நிறம் – சேறு. அலைகள் காணாமல் போயிருந்தன. "அமைதி பெறுவதற்கான வழிகளைக் காட்டட்டும். இப்போது அவற்றின் தேவை நெருங்கிவிட்டது. இதற்காக யாரை நோக்கிப் பிரார்த்திப்பது. தண்ணீரின் ஆதாரத்தை அறிந்தவன் எவனோ அவன் நிலை பெற்றவனாகிறான் –

இரவின் நிசப்தம் பயமுறுத்தியது. ராத்திரிப் பட்சிகள் கூட பொந்துக்குள் புகுந்து கொண்டு மௌனம் அனுஷ்டித்தன. எங்கும் காரிருள் அணுகியுள்ளது. அது எங்களை அணுகாதிருக்கட்டும்." தண்ணிக்காட்டேரி தெருக்களில் கோபமாக அங்குமிங்கும் அலைவது குறித்து யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

‘என்ன சிக்கல். யாருக்குச் சிக்கல்’. குந்தாளம்மன் கோயில் உஷைக்கால மணியோசையிலும் நடுக்கம்.

"டீ…. ஒரு வாளி தண்ணி கொடேன். ராத்திரி குளிச்சது. டீ… ஒரு வாளி… ஒரு சொம்பு கொடு… போதும்… ஒரே ஒரு சொம்பு ஜலம் போதும்டீ… குளிக்கணும்… குளிக்கணும் தண்ணீ… தண்ணீ…" இப்படியொரு கெஞ்சலை யாரும் கேட்டிருக்க முடியாது.

"எங்கே போறது. கிணத்திலோ சொட்டு தண்ணி இல்லே. எங்கே போறது தண்ணிக்கு? இருக்கறதக் கொடுத்து மாளாது உனக்கு. குடிக்கக்கூட இனி தண்ணி கிடைக்காது போலிருக்கு. பத்து மணிக்கு மேலே அரைமணி நேரம் விடுவானாம். தண்ணிக்கும் கணக்கு. அவா கொடுக்கறப்பதான் குளிக்கணும் குடிக்கணும். தண்ணிக் காட்டேரி அப்படிப் பாக்காதே. டீ அப்படிப்பாக்காதே எரிஞ்சு போயிடுவோம்… போ… போ… போய்த் தொலை…"

பிடாரிக்குளத்தின் சுற்றுச் சுவர்களை சகட்டுமேனிக்கு இடித்துத் தள்ளினார்கள். மேல் படித்துறை கீழ்படித்துறை எல்லாம் துவம்சமானது. குப்பைகள் கல், மண், பெரிய பெரிய பழைய டயர்கள் துருபிடித்த பெரிய டின்கள் என மேலும் மேலும் கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.

‘ஹோ…ஹோ…ஹோ…’ யார் கத்தியது. சுற்றியிருந்த மரங்களிலிருந்து ஏராளமான பறவைகள் நாலா பக்கங்களிலும் பறந்தன. தம் பத்திரம் குறித்த சந்தேகம் –

தண்ணிக் காட்டேரி அங்குமிங்குமாய் ஓடியது. "டீ… ஒரு சொம்பு தண்ணி தரமாட்டியா… ஒரு சொம்பு ஒரே ஒரு சொம்பு ரங்கம், மஞ்சு, லே சங்கரா. ஒரு சொம்பு தண்ணி…".

வெயிலின் உக்கிரம் – நெருப்பு பறந்தது எங்கும். பிடாரிக் குளத்தைச் சுற்றி வந்த தண்ணிக் காட்டேரி சப்தமிட்டது கோபமாய் பெரும் குரலில் சிரித்தது. சட்டென்று முகம் கோரமாய்ச் சிவந்தது. "டீ… ஒரு சொம்பு தண்ணி… ஒரே ஒரு சொம்பு…."
யார் தண்ணீரின் ஆதாரத்தை அறிகின்றார்களோ அவர்கள் நிலை பெற்றவர்களாகிறார்கள். அதன் ஆதாரம் மேன்மை யானது. அதை உதாசீனப்படுத்தினால் துன்பத்திற்கு அப்பால் செல்ல முடியாது….

"டீ ஒரு சொம்பு தண்ணி.."..

ஒரு க்ஷணம் – தொபீரென பிடாரிக்குளத்தின் தெற்கு மூலையில் குதித்தது. அங்கே லேசாய் ஈரம். சேறாய் சிறுவட்டமாய் கலங்கலாய் தண்ணீர் – இதுபோதும் இதுபோதும்….

"தண்ணிக் காட்டேரி வெளியே வா… அது கிணறு இருந்த இடம்… ஒரே சேறு… ஏகப்பட்ட ஆழம்… எதையாவது பிடிச்சுக் கொண்டு மேலே வா… செத்துப் போயிடுவே…"

கடைசியாக இரண்டு விரல்கள் மட்டும் மெல்ல மெல்ல அசைந்தன. ஏதோ செய்தியைச் சொல்வதுபோல்.
எங்கும் கூக்குரல்கள்…

தண்ணிக் காட்டேரி பூமிக்குள் முழுவதுமாய்ப் புகுந்து கொண்டது பத்திரமாய்.

About The Author