பிரதி எடுக்காதீர்கள்!

வால்மீகி எழுதிய இராமாயணம் போலவே தன்னைப் பற்றியும் ஒரு காவியம் எழுத வேண்டும் என்று தன் அவைப்புலவர்களை அழைத்துக் கூறினான் முகம்மது பின் துக்ளக்.

புலவர்களோ எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டனர்.

"என்ன விழிக்கிறீர்கள்? இராமனை விட நான் எந்த விதத்தில் குறைந்தவன்? உங்களால் எழுத முடியுமா, முடியாதா?" என்று தன் அவைப்புலவர்களிடம் கர்ஜித்தான் துக்ளக்.

"ஏன் முடியாது? உங்களுக்கு என்ன குறை? ஆனால், ஒரு சந்தேகமிருக்கிறது. அதைத் தாங்கள் தீர்த்துக் கொடுத்தால் இன்றே அதற்கான வேலைகளை ஆரம்பித்து விடலாம்" என்றார் ஒரு புலவர்.
"என்ன சந்தேகம்?" என்றான் துக்ளக்.

"இராமாயணத்தில் இராமனின் மனைவியை இராவணன் தூக்கிக் கொண்டு போய்விடுகிறான்…" என்று சொல்லி விட்டு துக்ளக்கைப் பார்த்தார் புலவர்.

புலவர் சொல்ல வந்ததை உணராத துக்ளக், "ஆமாம். அதற்கென்ன?" என்று கேட்டான்.
"அதைப்போல, தங்களின் காவியத்தில் தங்களுடைய மனைவியைத் தூக்கிக் கொண்டு செல்பவர்…" என்று புலவர் சொல்லி முடிப்பதற்குள் துக்ளக் சொன்னான். "நீங்கள் காவியமே எழுத வேண்டாம். இங்கிருந்து போய்விடுங்கள்" என்று!

துக்ளக்கைப் போலத்தான் நம்மில் பலரும் இருக்க முயல்கிறோம், ஆசைப்படுகிறோம். "எனக்கு இவர்தான் ரோல் மாடல். அவரை மாதிரியே நானும் ஆகப் போகிறேன்" என நினைப்பதில் தவறில்லை. ஆனால், மாறாக அவராகவே மாற முயல்கின்றோம். அப்படி முயலும்போதுதான் முட்டுக்கட்டைகளும் முளைத்து எழுகின்றன. காந்தியடிகளின் போராட்ட முறையைக் கையிலெடுத்த மார்ட்டின் லூதர்கிங் காந்தியடிகள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. தான் போராட்டத்தில் நிற்கின்ற களத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப, மக்களுக்கு ஏற்ப வழிமுறைகளை மாற்றிக் கொண்டு செயல்பட்டார். அத்தகைய செயல்பாடுதான் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

‘போலச் செய்தல்’ ஒருநாளும் வெற்றியைத் தராது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம்முடைய வாழ்வியல் முறைகளில் பள்ளி தொடங்கி, வேலையிடம் வரை ஒவ்வொருவருமே போலச் செய்தல் வழிமுறைகளுக்குத்தான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அவ்வாறே நம்மைச் சார்ந்து வளரும் குழந்தைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். சக குழந்தைகள், சக ஊழியர்களை ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுக் கொள்வதில்தான் போலச் செய்தல் என்பது ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பம் ஒருநாளும் வாழ்க்கையை மேம்படுத்தித் தராது; தன்னை வெற்றியாளராக அடையாளப்படுத்தாது என எவருமே உணர்வதில்லை. உங்களின் வெற்றிக்கான வாசல் விசாலமடைய வேண்டுமானால் போலச் செய்தல் மனநிலையை முதலில் மூட்டை கட்டுங்கள்! நீங்கள் மற்றொருவராக மாற எதுவும் செய்யவில்லை. உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளவும், உங்களுடைய இலக்கை வெற்றி இலக்காக மாற்றவும் செய்கின்ற விசயங்கள் பிரதி எடுத்தலாக இல்லாமல் இருப்பது அவசியம், அத்தியாவசியம்!

போலச் செய்தலுக்கு பதிலாக, செய்ய வேண்டிய விசயங்களை மாற்றுச் சிந்தனைகளோடு அணுகுங்கள். ‘மாத்தி யோசி’ என்பது வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் பிரம்ம சூத்திரம்! அந்த சூத்திரத்தின் வழி உங்களுக்கான இருப்பை எப்பொழுதுமே உறுதி செய்ய முயலுங்கள்.
ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரத்தைத் தன் மூன்று மகன்களில் யாருக்குத் தருவது என்று முடிவு செய்வதற்காக அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்தார். யார் அதிக அளவு சீப்புகளை புத்தமடாலயத்திற்கு விற்கிறார்களோ அவர்களிடம் வியாபாரத்தை ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலையுடன் புத்தமடாலயத்தில் இருக்கும் பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஆனால், அது மட்டுமே தன் தந்தையிடம் இருக்கும் வியாபாரத்தைத் தனக்கு மாற்றித் தர வைக்கும் என்பதால் மூவரும் வியாபாரத்திற்குச் செல்ல முடிவு செய்தனர்.

சில நாட்கள் சென்றதும் வியாபாரி மூன்று மகன்களையும் அழைத்து "ஒவ்வொருவரும் எவ்வளவு சீப்பு விற்று இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். முதல் மகன், "நான் இரண்டு சீப்புகளை விற்றேன்" என்றான். "எப்படி?" என்றார் வியாபாரி. அதற்கு அவன் "இந்தச் சீப்புகளைக் கொண்டு முதுகு கூடச் சொறியலாம் என்றேன். அதைக் கேட்ட அங்கிருந்த புத்த பிக்குகளில் இருவருக்கு அது சரி எனப் பட்டதால் இருவர் மட்டும் சீப்பை வாங்கிக் கொண்டனர்" என்றான். இரண்டாவது மகன், “நான் பத்து சீப்புகளை விற்றேன்" என்றான். சந்தோசப்பட்ட வியாபாரி, எப்படி என்றதும், "மலைமேல் உள்ள இந்த புத்தமடாலயத்திற்கு வரும் வழியெல்லாம் காற்று பயங்கரமாக வீசுவதால், இங்கு வருகின்றவர்களின் தலைமுடியெல்லாம் காற்றில் கலைந்து அவர்கள் பார்க்கவே பயங்கரமானவர்களைப் போல் தோற்றமளிக்கிறார்கள். அமைதியையும், அன்பையும் போதித்த புத்தரை இங்கு தரிசிக்க வருபவர்கள் அப்படி வருவது புத்தரை அவமதிப்பது போல் உள்ளது. அதனால் கூடத்தில் ஒரு நிலைக்கண்ணாடியையும், சீப்புகளையும் வைத்தால் அப்படி வருபவர்கள் தங்களுடைய தலைமுடியைச் சரிசெய்து கொண்டபின் புத்தரை தரிசிக்க முடியும் என்றேன். நான் சொன்னதை ஏற்றுக் கொண்ட புத்த பிக்குகள் அங்கு வைப்பதற்காக என்னிடமிருந்து பத்து சீப்புகளைப் பெற்றுக் கொண்டனர்" என்றான்.

மூன்றாவது மகனோ, "ஆயிரம் சீப்புகளை விற்பனை செய்தேன்” என்றான். அதைக் கேட்ட வியாபாரி அசந்து போனான். “எப்படி உன்னால் முடிந்தது?" என்று ஆச்சரியமாகக் கேட்டான். "அந்த புத்தமடாலயத்திற்கு வருபவர்களில் பலர் அம்மடாலயத்திற்குப் பொருளுதவி செய்கிறார்கள். அவர்களின் உதவியைப் போற்றி, புத்தரின் ஆசி அவர்களை வழிநடத்திச் செல்லும் எனச் சொல்லும் வகையில் அவர்களுக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கலாம் என்றும், அப்படிச் செய்வதால் மடாலயத்திற்கு இன்னும் அதிக உதவிகள் கிடைக்கக்கூடும் என்றும் சொன்னேன். அதற்கு அந்த மடாலயத்தலைவர், ‘நல்ல யோசனைதான். ஆனால், அதிக விலையுள்ள நினைவுப்பரிசுகள் வாங்கி அவ்வளவு பேருக்கும் தருவது சாத்தியமில்லை. அதனால், வேறு நினைவுப்பரிசு ஏதுமிருந்தால் சொல்லுங்கள்’ என்றார். நான் புத்தரின் வாசகங்களைப் பொறித்து வைத்திருந்த சில சீப்புகளை எடுத்து நீட்டினேன். இந்தச் சீப்புகளை உபயோகிக்கும் பக்தர்களுக்கு அதிலிருக்கும் வாசகம் தினமும் கண்ணில் படும். அதைப் பார்க்கும் நேரமெல்லாம் அதிலுள்ள புத்தரின் வாசகங்கள் அவர்களை வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்றேன். என்னுடைய அந்த யோசனை அவருக்குப் பிடித்துப் போகவே புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகளை வாங்க ஒப்புக் கொண்டதோடு தொடர்ந்து வாங்கவும் உறுதியளித்துள்ளார்" என்றான். அசந்து போன அந்த வியாபாரி யாரிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்திருப்பான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிகழ்விலிருக்கும் சூட்சும விதிக்கு வருவோம்.

மூன்று பேருமே ஒரே வியாபாரத்திற்குத்தான் சென்றார்கள். ஆனால் முதல் மகன், எல்லோரையும் போல் சீப்பைத் தலைவாருவதற்கு உதவும் பொருளாக மட்டுமே பார்க்காமல், அதற்கான ஒரு புதிய பயன்பாட்டைக் கண்டுபிடித்தான். இரண்டாவது மகன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பயன்படாது என்றபோதும் அதற்கு சம்பந்தமுள்ளவர்களை மையப்படுத்தி அந்த இடத்தில் தன் வியாபாரத்தைச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டான். வெற்றிவாகை சூடிய மூன்றாம் மகன் யாரும் அணுகாத கோணத்தில் சீப்பை விற்பதற்குரிய வழிகளைத் தேடினான். மாற்றுச் சிந்தனையின் வழி தன்னை அவன் நிலைநிறுத்திக் கொள்ளச் செய்த முயற்சி அவனுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அதோடு இல்லாமல், தொடர் பலனையும் கொடுக்க வழி செய்தது. சிறு சிறு மாற்றங்கள் பெரிய விளைவுகளைத் தருவதைப் போலச் சிறு சிறு மாற்றுச் சிந்தனைகளின் வழி நீங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தொடர் இயக்கத்திற்கும் உருவாக்கிக் கொள்ளும் வழிகள் உங்களின் வாழ்வையே மொத்தமாக மாற்றியமைத்து விடும். வியாபாரியின் மூன்றாவது மகனைப் போல் சிந்தித்துத் தன் நிறுவனத்தை வெற்றி பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக மாற்றிக் காட்டியவர் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால் நிறுவனங்களின் அதிபர் சந்திர மோகன்!

வால்ஸ், குவாலிட்டி போன்ற ஐஸ்கிரீம் ஜாம்பாவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காலூன்றி விட்டுச் சென்னைக்கு வந்தது அவருடைய அருண் ஐஸ்கிரீம். கடும் போட்டி நிலவி வந்த சூழலில் தன்னுடைய ஐஸ்கிரீமை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த நினைத்த சந்திர மோகன் எல்லோரையும் போலக் கூவிக் கூவி விற்கவில்லை. வாசலில் நின்று, வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கம் சொல்லவில்லை. அப்படிச் செய்வது பெரும் அபத்தம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் மாறுபட்டு ஏதாவது செய்தால் மட்டுமே மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று நினைத்தார். எட்டு ரூபாய் நுழைவுக் கட்டணம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்குப் பரிசு என்று அறிவிப்புச் செய்தார். அந்த ஒரு மாறுபட்ட அறிவிப்பு – வித்தியாச சிந்தனை நான்காயிரம் பேரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அருண் ஐஸ்கிரீம் சென்னைக்குள் நுழைந்து மற்ற நிறுவனங்களோடு போட்டி போடுவதற்கான வாசலைத் திறந்துவிட்டது.
இதே போன்ற மாற்றுச் சிந்தனையில் ஜெயித்த இன்னொருவர் கிருஷ்ணன். இவர் கோகுலத்துக் கிருஷ்ணரல்ல, கோயம்புத்தூர் கிருஷ்ணர்!

ஆன்மிகம் தவிர்த்து ‘கிருஷ்ணா’ என்ற பெயரை உலகம் முழுக்கத் தனது ஸ்வீட்ஸ் மூலம் கொண்டு சென்றவர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன். அந்தக் காலக் கட்டத்தில் எல்லாப் பலகாரக் கடைகளும் ‘இங்குள்ள இனிப்புகள் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல’ என்று போர்டு மாட்டி வைத்திருக்க, இவரோ ‘எங்களுடைய ஸ்வீட் சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டது’ என்று போர்டு மாட்டி வைத்ததோடு அறிவிப்பும் செய்தார். அந்த அறிவிப்பு இவருடைய கடையை நோக்கிப் பலரை இழுத்து வந்தது. வந்தவர்களைத் தன்னுடைய இனிப்பின் மூலம் தக்க வைத்துக் கொண்டார். இன்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்பது இனிப்புப் பலகாரங்களின் அடையாளங்களுள் ஒன்றாகி விட்டது.
‘எல்லோரையும் போல்’ என்ற சொல் உங்களுடைய வெற்றியை, அடையாளத்தை மிகத் தொலைவில் கொண்டு போய் வைத்து விடும். நாரினாலான மட்டைக்குள் எப்படிச் சுவையான நீரைக் கொண்ட தேங்காய் இருக்கிறதோ, அப்படித்தான் பிரச்சினைகளுக்குள் தீர்வுகள் ஒளிந்து கிடக்கின்றன. நீங்கள் அணுகும் விதத்தில்தான் அது வெளியே தலைகாட்ட ஆரம்பிக்கும். நம் அடிமனதில் பழக்கத்தால் பதிந்து போய் இருக்கின்ற எண்ணங்கள் இப்படிச் செய்தால் போதும் என்று அனிச்சையாகச் சில முடிவுகளை எடுக்க வைத்து விடுகின்றன. “காய்ச்சலா? பாராசெட்டமால் போடு” என மருத்துவம் படிக்காமலே நம்மில் பலரும் காய்ச்சலுக்குத் தீர்வு சொல்வது இந்த அனிச்சைச் செயலின் வெளிப்பாடுதான். சிலருக்கு இந்த அனிச்சைச் செயலின் அளவு முற்றிப் போகும்போது அவர்களே மருத்துவர்களாக மாறிப் பலரின் வாழ்க்கையோடு விளையாடி விடுகிறார்கள். காவல்துறையிடம் மாட்டிக் கம்பி எண்ணப் போய்விடுகிறார்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் உங்கள் உள் உணர்விலிருந்து கிடைக்கும் பதிலை முடிவானதாகக் கொள்ளாதீர்கள். அதற்கு வேறு தீர்வு இருக்கிறதா எனப் பாருங்கள். அந்தப் பார்வை, மாற்றுச் சிந்தனை தரும் தீர்வுகள் மட்டுமே மற்றவர்களின் பார்வையை உங்களை நோக்கித் திருப்பும். உங்களைப் பத்தோடு ஒன்றாக ஆக்காமல் பத்தில் ஒன்றாய் ஆக்கும்!

About The Author