புத்தியின் விலை!

பதினோரு மணி பஸ்சுக்குத்தான் ரிசர்வ் செய்திருந்தேன். மணி இப்போது பத்து. ஒரு மணிநேரம் முன்னதாக வந்து காத்திருப்பதில் அலுப்புத் தோன்றவில்லை.

கைப்பையை மடியில் வைத்து மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டேன். பஸ்டாண்ட் பாலிவினைல் இருக்கை மிக அழுக்கேறி உட்கார அருவருப்பூட்டியது. மனதே இல்லாமல் அப்போதுதான் வாங்கிய மாலை தினசரியைப் போட்டு அமர்ந்தேன்.

பக்கத்து இருக்கையில் இருந்தவர் எழுந்து போக சற்று தாராளமாக அமர முடிந்தது. இத்தனை நெருக்கமாகவா இருக்கைகள் இருக்கும்?

இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு. எத்தனை மனிதர்கள். இரவு நேர உணவுக் கடைகள். வீடியோ கோச்சிற்கு வரச் சொல்லும் தரகர்கள்.

அவள் என்னருகில் வந்து அமர்ந்தாள்.

வயது முப்பது.. முப்பத்திரண்டு இருக்கும். கையில் ஒரு துணிப்பை. இயல்பாக இருப்பது போல நான் காட்டிக் கொண்டாலும் அன்னிய ஸ்திரீயின் அருகாமை லேசாய் சங்கடப்படுத்தியது.

“சார். . ”.

என்னை அழைக்கிறாள் என்று புரிந்து திரும்பினேன்.

“நீங்க விழுப்புரம் போறீங்களா?”

“ஆமா. . ஏன் கேட்கிறீங்க. . ?”

“தயவு செஞ்சு என்னையும் உங்க கூட வந்தவ மாதிரி. . . சகஜமா பேசி. . . என்னை ரெண்டு பேரு துரத்தறாங்க. . தனியாளுன்னு நினைச்சு. . ” அவளுக்குப் பேச முடியாமல் திணறியது.

மூன்று தினங்களுக்கு முன் இதே பஸ்டாண்டில் இரவு அத்தனை நபர்களுக்கு முன் ஒரு கொலை. அவ்வப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாகச் செய்தி படிப்பதுண்டு. இன்று பெண்ணைத் துரத்தும் அநாகரீகமா?

சம்மதமாய் தலையசைத்தேன்

“ஏதாச்சும் பேசுங்க. . ”

“உங்களைப் பத்தியே பேசலாமே. அதாவது ஒண்ணும் ஆட்சேபணை இல்லேன்னா.”.

“என்னைப் பத்தியா. . ”

“ம். . எங்கே இருக்கீங்க,ஏன் தனியா கிளம்பினீங்க. பார்த்தா கல்யாணமானவங்க மாதிரி இருக்கு. அவர் எங்கே?”

இயல்பா இருக்கையில் அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பேச்சை உற்றுக் கவனித்தால் ஒழிய நாங்கள் அன்னியர்கள் என்று புலப்படாது. பேருந்து வரும் புறப்படும் நேரம் குறித்த அறிவிப்புகளும், வியாபாரக் கூச்சல்களும், சூழலை இரைச்சலாக்கி எங்களின் பேச்சை வேறு யாரும் கேட்க விடாமல் செய்தன.

“அவர் என்னோட இல்லீங்க. . ”

நிதானமாய் சொன்ன வார்த்தை என்னை ஒரு நிமிடம் புரட்டிப் போட்டது.

“புரியலே. . ”

“எங்க அக்கவோட புருஷன் தவறிப் போயிட்டாருங்க. பாண்டிச்சேரியில்தான் இருக்காங்க. அவளுக்கு ரெண்டு பொண்ணு . இவரு உதவிக்காகப் போனாரு. அங்கேயே தங்கிட்டாரு. எப்பவாச்சும் வந்து போவாரு!”

“உங்களுக்குக் குழந்தைங்க. . ”

“ஒரு பொண்ணு இருக்குது. நாலாவது படிக்கிறா. . ”

அவளைப் பார்த்தால் எந்தக் குறையும் சொல்லத் தோன்றவில்லை. மலர்ச்சி அடுத்தவரையும் தொற்றிக் கொள்கிற மாதிரி சிரிப்பிலேயே இழைத்த முகம்.

“உங்க அக்காவேவா இப்படி. . ”

“என்னவோ ஆம்பளைங்க மனசு விசித்திரங்க. நாங்க தப்பு செஞ்சா எகிறுவாங்க. அவங்களை மட்டும் எதுவும் கேட்க முடியாது. . ”.

பேசாமல் இருந்தேன்.

“அவருகிட்ட ஒருநாள் சொன்னேன். விளையாட்டுக்குத்தான். நான் உன்னை மாதிரியே யார் கூடவாச்சும் போயிட்டா என்னய்யா செய்வேன்னு. வெட்டிப் போடுவேன்னு சொன்னாரு!”

முகத்தில் ஏதோ இனம் புரியாத பரவசம்.

“நான் அந்த மாதிரி செய்ய மாட்டேன். பேச்சுக்குக் கேட்டதையே அவரால தாங்க முடியல… அது போதுங்க என்னிக்காவது என்னைத் தேடி வந்துருவாரு. . ”

“உங்க சாப்பாடுக்கு..?” யதார்த்தம் பற்றிய கவலை எனக்கு.

“ஒரு டாக்டர்கிட்ட வேலை பார்க்கிறேன். மாசம் முன்னூத்தம்பது தராரு. . பூக்கட்டற வேலை தெரியுங்க. அதுல நூறாவது தேறும். நூறு ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியிருக்கிறேன்!”

எப்படி இந்த சொற்ப வருமானத்தில் காலந்தள்ளுகிறாளோ?

மணி பதினொன்றை நெருங்கியது.

“இப்ப பாண்டிச்சேரி போறீங்களா?”

“ஆமா. அக்கா வரச்சொல்லி தகவல் அனுப்பியிருக்கு!”

புரியாத புதிர் இந்தப் பெண்கள். கணவனை அபகரித்தவள் அழைக்கிறாள். இவளும் எந்த எதிர்ப்பும் இன்றிப் போகிறாள்.

எழுந்தேன்.

“என்ன.. பஸ் வந்திருச்சா.. ”

“இல்லை புத்தி வந்திருச்சு.. ”

“புரியலீங்க.. ”

புரிய வேண்டாம். என் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு தகாத சிநேகிதம் தேடி கிளம்பியவன் நான். இந்த பெண் என் நிலைமையை புரிய வைத்து விட்டாள்.

‘நிச்சயம் அவரு என்கிட்டேதான் திரும்ப வரனுங்க. வருவாரு’ என்ற நம்பிக்கை. என்னை திசை திருப்பி விட்டது. ‘வெட்டிப் போடுவேன்னு சொன்னாரு’ . அவள் முகத்தில் தெரிந்த பரவசம்.

“பத்திரம்மா போம்மா. நிச்சயம் உன் புருஷன் உன் கிட்டே திரும்புவாரு,” என்றபடி அவளை பஸ் ஏற்றிவிட்டு என் ரிசர்வேஷன் டிக்கெட்டைக் கிழித்துப் போட்டேன்.

புத்திக்கு தந்த விலை இருபத்தியிரண்டு ரூபாய் என்று மனசு கணக்கு எழுதியது.

About The Author

3 Comments

  1. suganthe

    கதை அருமை ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் வேறு சினேகிதத்தை விரும்பியபடி.எல்லோரும் அப்படியா இல்லை ஒரு சிலரா

Comments are closed.