புன்னைகீழ் பகவதி

பகவதி என்றாலே நினைவுக்கு வரும் இடம் கேரளா. எர்ணாகுளம் அருகே, அங்கிருந்து சுமார் முக்கால் மணி பயணம் செய்தால் சேர்த்தலை எனும் இடம் வருகிறது. இந்த இடத்திலிருந்து வடக்கே பயணித்தால் இந்தப் புன்னை பகவதியைத் தரிசிக்கலாம். பல புன்னை மரங்கள் இருக்கும் பகுதியில் ஒரு மரத்தடியில் வீற்றிருக்கிறாள் பகவதி. இங்கிருக்கும் மக்கள் இத்தேவியை ‘புன்னைகீழ் பகவதி’ என்று அழைக்கின்றனர். இவள் இங்கு வந்த கதையே தனி…

பகவதி இங்கு வருவதற்கு முன்னால் இங்கு பரமேசன் அமர்ந்திருந்தார். இந்தச் சிவன் கோயிலால் இந்த இடமும் ‘சிவபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது.

இந்த ஊரிலிருந்த கோதை என்ற பெண் வைக்கம் எனும் இடத்தில் இருக்கும் சிவனை தினமும் விடாமல் பூஜித்து வந்தாள். சிவபுரத்தில் இருந்து வைக்கம் போகக் காயல் நதியைக் கடக்க வேண்டும். அவளும் விடாமல், தோணியில் துடுப்புப் போட்டுக் காயல் நதியை நாள்தோறும் கடந்து அக்கரையில் உள்ள வைக்கம் சிவன் கோயிலுக்குச் செல்வாள். ஆனால் காலம் கடக்க, மூப்பு ஏற அவளால் அங்கு செல்ல முடியாமல் போனது. இதனால் அவள் சிவபுரத்தில் இருக்கும் சிவனிடம் சென்று, "அப்பா பரமேச்வரா! என்னால் பழையபடி, தினமும் தோணியில் ஏறி வைக்கம் வர முடியவில்லை. நீதான் வைக்கம் சிவனாக இங்கு சிவபுரத்திலும் காட்சி தருவதாக எண்ணிப் பூஜிக்கிறேன். மன்னித்து ஏற்றுக்கொள்" என்று மனதாரப் பிரார்த்திக்கலானாள். அவளது முடிவுகாலம் வந்தது. தன் சொத்தையெல்லாம் சிவபுரம் கோயிலுக்கு எழுதி வைத்துக் கண்மூடினாள். அன்றைய தினத்திலிருந்து இந்த ஊரின் பெயரோடு கோதையின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘கோதைச் சிவபுரம்’ என்றானது.

இங்கு இருக்கும் மக்கள் பங்குனி மாதம் பரணி நட்சத்திரம் அன்று கொல்லூர் பகவதியைத் தரிசிக்கப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படிச் செல்லும் நேரம் அம்மனுக்கு ஒரு வாளும் சிலம்பும் வாங்கிப் படைப்பது வழக்கம். கூடவே ஒரு பூசாரியும் (வெளிச்சப்பாடு) சென்று அருள்வாக்கு சொல்லுவார். முதலில், சிவபுரம் சிவன் கோயிலில் மக்கள் கூடி பஜனை செய்வார்கள். பின்னர், மஞ்சள் துணியில் வாளையும் சிலம்பையும் சுற்றி, தேவி பாடல்களைப் பாடி, ஓய்வு எடுத்துக்கொண்டு பின் தோணியில் நதியைக் கடந்து அனைவரும் கொடுங்கல்லூர் செல்வது வழக்கம்.

ஒரு சமயம் யாவரும் வியக்கும் வகையில், மஞ்சள் துணியில் வைத்த வாளும் சிலம்பும் எடுக்க முடியாமல் அங்கேயே பதிந்துவிட்டன. வெளிச்சப்பாடு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார். "நான்தான் கொடுங்கல்லூர் பகவதி. நான் இந்த இடத்திலும் தங்கி அருள்புரிவேன். என்னைப் பார்க்க இனி அங்கு வர வேண்டாம்! இந்தச் சிவபுரத்திலேயே இருக்கப் போகிறேன். இந்த வாளும் சிலம்பும் இங்கேயே இருக்கட்டும்! இனி என்னைத் தரிசிக்க இங்கு வாருங்கள்" என்றார். அம்மனின் இந்த வாக்கைக் கேட்டு பக்தர்கள் பரவசமாகி, அந்த வாள், சிலம்பு இருந்த இடத்தைச் சுற்றிச் சுவர் எழுப்பினார்கள். கிழக்கைப் பார்த்து இவை இருந்தன. பின், தெற்கில் கொடுங்கல்லூர் பகவதியைக் கண்ணாடி பிம்பமாகப் பிரதிஷ்டை செய்தனர். அன்றைய தினத்திலிருந்து இந்தப் புன்னை மரத்தின் கீழே தேவி வந்து அமர்ந்துவிட்டாள்.

பல்லாண்டுகள் கழிந்தன. கொஞ்சம் கொஞ்சமாகப் புன்னை மரம் பட்டுப்போக ஆரம்பித்தது. இதனால் பக்தர்கள் மனம் வருந்தி அருள்வாக்கு சொல்லும் பூசாரியை வரவழைத்து இதைப் பற்றிக் கேட்டு, கூடவே பிரசன்னம் வைத்தும் பார்த்தார்கள். பூசாரி சொன்னபடிப் பல பரிகார பூசைகள் செய்து சிலம்பையும் வாளையும் மாற்றி வைத்துப் புதிதாக மதில் சுவர் எழுப்பினார்கள். பின்னர், பட்டுப்போன மரத்தையும் அங்கிருந்து எடுக்க முனைந்தபோது அந்த மரம் பல இடங்களில் புதிதாகத் தளிர்விட்டு வளர்ந்திருந்ததைக் கண்டனர். இதனால் மனம் மகிழ்ந்த மக்கள் வாளையும் சிலம்பையும் திரும்ப அங்கேயே வைத்துவிட்டனர்.

இந்தக் கோயிலில் தேவியின் பிரதிஷ்டாதினமான தை மாதம் அஸ்வதி நட்சத்திரமன்று உற்சவம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பலர் நேர்த்திக்கடன் செய்ய இங்கு கூடுகின்றனர். வலிய விளக்கு என்பது இங்கு நடக்கும் ஒரு சிறப்புச் சடங்காகும். அதாவது, கோயிலைச் சுற்றிக் கம்பி கட்டிவிடுவார்கள். அந்தக் கம்பியில் விளக்குகள் பல தொங்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் மறைய பெற்றோர்கள் தங்கள் செல்வங்களை மடியில் வைத்துக்கொண்டு, தேவியைப் பிரார்த்தித்தபடி நெய் விளக்கை அது அணையும் வரை மேலும் கீழும் இழுப்பார்கள். இது போல் செய்தால் ஆஸ்துமா நோய் அறவே போய்விடும் என்கிற நம்பிக்கை இருப்பதால் இதைச் செய்யக் கூட்டம் அதிகமாக வருகிறது. தவிர, குழந்தைகளின் பாலரிஷ்ட நோயும் இங்கு பிரார்த்தனை செய்தால் மாயமாய்ப் போய்விடுகிறது.

இந்தச் சிவன் கோயில், பகவதி கோயில் இரண்டும் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டவை. இத்தனை நிலம் கிடைத்தும் அற்புத சம்பவம் ஒன்றால்தான்.

வைக்கத்தில் தெற்கஞ்சேரி, வடக்கஞ்சேரி என்று இரு பிரிவு கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஒரு சமயம், வடக்கஞ்சேரி குடும்பத்தினருக்கு வரிசையாக அம்மை நோய் கண்டது. பிரசன்னம் பார்த்ததில் தேவியின் கோபத்திற்கு அவர்கள் ஆளாகி இருப்பது தெரிந்தது. ஆனால், அந்தக் குடும்பத்தலைவர் இதை நம்பவில்லை. "நான் அழைத்தால் அந்த தேவி வருவாளா என்ன?" என்று குயுக்தியாகக் கேள்வி கேட்டார். உடனே அங்கிருக்கும் ஜோசியர்கள் வைக்கத்தில் இருக்கும் தேவிகள் இருவரையும், புன்னைகீழ் பகவதி தேவியையும் சங்கல்பித்து மூன்று பீடங்கள் அமைத்தனர். குடும்பத்தலைவரும் வந்தார். அருள்வாக்கு சொல்லும் வெளிச்சப்பாடு துள்ளி வந்து "நான்தான் புன்னைகீழ் தேவி. இனி உங்கள் வீட்டில் யாருக்கும் அம்மை நோய் வராது" என்ற சொல்லியபடிப் பீடத்தில் போய் அமர்ந்தார். குடும்பத்தலைவர் பரவசமடைந்து, தேவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின், தன்னிடமிருந்த சொத்தில் அதிக நிலங்களைக் கோயிலுக்குக் கொடுத்தார்.

இங்கு பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. முதலில் அமர்ந்திருக்கும் புன்னைகீழ் பகவதியின் உற்சவம் ஆனி மாதம் கொண்டாடப்படுகிறது. சிவனின் உற்சவம் ஆவணியில் நடைபெறுகிறது. தவிர, திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோயில் காலை 4.45லிருந்து 12 வரையும், பின் 5-30லிருந்து இரவு 8 மணி வரையும் திறந்திருக்கிறது. கோயிலினுள் நுழைந்தாலே அமைதி கிடைப்பதை நன்கு உணர முடிகிறது.

About The Author