புரட்டியதும் திரட்டியதும்

உலகப் புத்தக நாள்

பாரிஸ் நகரில் 1995ஆம் ஆண்டு நடந்த 28ஆவது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்படும்". (நன்றி: விக்கிப்பீடியா).

அதன்படி, அன்று முதல் உலகம் முழுவதும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில், இலக்கியவாதிகள் பலர் இந்த நாளில் பிறந்தோ, இறந்தோ இருக்கிறார்கள். குறிப்பாக, ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்நாளில் மறைந்தார். அவரைப் பற்றிக் கொஞ்சம்…

1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் இலண்டனில் உள்ள ஸ்ட்ராட்போர்டு என்னும் ஊரில் ஏழை விவசாயத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார் ஷேக்ஸ்பியர். படிப்பில் ஆர்வம் இருந்தும், வறுமையின் காரணமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். என்றாலும் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு, நாடகம், கவிதை எழுதியும், நாடகத்தில் நடித்தும் புகழ் பெற்றார். தாம் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 38 நாடகங்களையும், 154 உரைநடைக் கவிதைகளையும் உலக இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். முறையான கல்வி கற்காமலேயே ஆங்கில மொழியினை இவர் கையாண்டுள்ள விதம் மொழிக்கே தனிப் பெருமையை ஏற்படுத்தியுள்ளது எனில் அது மிகையாகாது. ஆங்கிலம் உள்ள வரை இவருடைய படைப்புகளின் புகழ் நிலைத்து நிற்கும். 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஷேக்ஸ்பியர் புகழுடம்பு எய்தினார். இவர் நினைவாக இந்த நாள் ‘உலகப் புத்தக நாளா’கக் கொண்டாடப்படுகிறது.

புத்தகங்களைப் பற்றிய சில சிந்தனைகள்…

புத்தகங்களோடு உள்ள உறவு மிக அந்தரங்கமானது, அதைக் காரணம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. தொட்டிக்குள் நிசப்தமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப்போலச் சொற்கள் புத்தகங்களுக்குள் நிசப்தமாக நீந்திக்கொண்டிருக்கின்றன. அவற்றின் இயக்கம் நம் கண்கள் அறிவதில்லை. மாறாக மனதால் உணரப்படக்கூடியது. வாசிக்கத் துவங்கும் வரை புத்தகம் சலனமற்றது. ஆனால், புத்தகத்திற்குள் பிரவேசித்த பின்பு அது பெரும் ஆரண்யம் என விரிந்து செல்லத் தொடங்குகிறது. உணவு எப்படி நம் உடலை வளர்க்கிறதோ அப்படிப் புத்தகங்கள் நம் மன ஆரோக்கியத்தை வளர்க்கின்றன. புத்தகங்கள் வெறும் காகிதங்கள் மட்டுமல்ல, அவை நினைவுகள். வாழ்ந்தும் அறிந்தும் கண்ட நினைவுகள் எழுத்துருவம் கொண்டிருக்கின்றன. எல்லாப் புத்தகங்களும் பேசக்கூடியவை. யாரோடு எந்த மன நிலையில் என்பதுதான் சொல்லி விளக்க முடியாதது.

–எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ஆதலினால்’ நூலிலிருந்து.

"வாழ்வதற்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்று சொல்பவர்கள் புத்தகம் படிப்பது என்றால் என்ன என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்!" – எட்வர்ட் மார்கன்.

"ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு, அதை நீங்கள் எழுத வேண்டியதுதான்!" – டோனி மாரிசன்.

"ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்." -ஆர்.டி.கம்மிங்.

"எப்போதும் நல்ல புத்தகத்தைப் படியுங்கள். அதைப் பாதி படித்துக் கொண்டிருக்கும்போது ஒருவேளை நீங்கள் இறந்து போனாலும், அப்போதும் இனிமையான முகம் கொண்டு இருப்பீர்கள்." -ஓ’ரூர்கே.

"எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்." – சேகுவாரா.

"உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்கள் தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்." – வால்டேர்.

"ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அவனைவிடப் பெரிய முட்டாள்." – அரேபியப் பழமொழி.

"உலகிலுள்ள அனைத்து வகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது." – கூகி வா திவாங்கோ.

"ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தெரியாதவனை விட எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை!" – மார்க் ட்வைன்.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என்று பதிலளித்தார் அறிஞர் அண்ணா!

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது, எது நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்!

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

வாசியுங்கள்! வாழ்க்கை அர்த்தப்படும்!

About The Author

2 Comments

  1. கவிஞர் இரா .இரவி

    புத்தகம் பற்றிய முக்கியம் சிறப்பு

Comments are closed.