புராணத் துளிகள் (10)

துர்கா ஸப்த சதி!

துர்கா ஸப்த சதி மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது.
இதில் 13 அத்தியாயங்களே உள்ளன.
முதல் அத்தியாயத்திலிருந்து 13ஆம் அத்தியாயம் முடிய, ஒவ்வொரு அத்தியாயத்திலும் முறையே 104, 69, 44, 42, 129, 24, 27, 63, 41, 32, 55, 41, 29 என்கிற எண்ணிக்கையில் ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றைக் கூட்டினால் வருவது மொத்தம் 700 ஆகும். (ஸப்த சதி என்றால் எழுநூறு என்று பொருள்.)
துர்கா ஸப்த சதியின் ப்ரவக்த ரிஷி சுமேதா.

-மரீசி கல்பம்

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

முன்னொரு காலத்தில் ஜலப் பிரளயம் ஏற்பட்டது. அந்தப் பிரளய வெள்ளத்தில் உலகமெல்லாம் முழுகிப் போயின. சராசரங்களெல்லாம் ஒழிந்து போயின. ஜலத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரம தேவர் ஆயிரம் கண்களும் ஆயிரம் கால்களும் கொண்டு மஹாவிஷ்ணு ரூபம் கொண்டார். மூன்று கண்களை உடைய சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானம் செய்து கொண்டு அந்தப் பிரளயத்தில் அவர் படுத்துக் கொண்டிருந்தார். நரன் என்று பெயர் கொண்ட சிவபெருமானால் உண்டாக்கப்பட்டபடியால் ஜலத்துக்கு ‘நாரம்’ என்று பெயர் உண்டாயிற்று. அந்த ஜலத்தில் பள்ளி கொண்டிருந்தபடியால் அந்த பிரம்மாவுக்கு ‘நாராயணன்’ என்று பெயர் உண்டாயிற்று. அப்போது சிவபெருமான் அந்த பிரமனுக்குத் தகுந்த பலத்தைக் கொடுத்து "பாதாளத்தில் அழுந்தி இருந்த பூமியை எடுத்து நிறுத்து" என்று கட்டளை இட்டார். அந்த நாராயணன் உடனே ஆகாயமளாவும்படியான ஒரு பெரிய வராக ரூபம் கொண்டான். பின்னர், பாதாளம் போய் அங்குள்ள பூமியைக் கொம்பினால் ஏந்திக் கொண்டான். அதைப் பார்த்து தேவர்கள் எல்லோரும், "உலகங்களையெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய். ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய். இது உனக்குப் பெரிதாகுமா, என்ன!" என்று புகழ்ந்து கொண்டாடி, ‘இத்தகைய மஹிமையை உடைய உமக்கு நமஸ்காரம் பண்ணுகிறோம்’ என்று துதித்தார்கள். திருமால் பூமியை முன் போல நிலை நிறுத்தி, மறுபடியும் முன் போலப் பிரம்மாவாய் விட்டார்.

-ஸ்கந்த புராணம் – சூத சம்ஹிதை, சிவமான்மிய காண்டம், எட்டாவது அத்தியாயம்.

தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?

சத்யம் – உண்மை
மன: – மனம்
இந்த்ரிய நிக்ரஹ – இந்திரியங்களை அடக்குதல்
தயா – தயை (அல்லது இரக்கம்)
ஜலம் – நீர்
ஆகிய இந்த ஐந்தால் தூய்மை ஏற்படும்.

சத்யசௌசம் மன: சௌசம் சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: I
சர்வபூதே தயா சௌசம் ஜலசௌசம் ச பஞ்சமம் II

சத்யசௌசம் – வாய்மையால் தூய்மை.
மன: சௌசம் – மனத்தால் தூய்மை.
சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: – இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால் தூய்மை.
சர்வபூதே தயா சௌசம் – அனைத்து உயிர்களிடமும் தயையுடன் இருப்பதால் தூய்மை.
ஜலசௌசம் – நீரினால் தூய்மை.
ச பஞ்சமம் – ஆகிய இந்த ஐந்தும் தூய்மை (தரும்).

-கருட புராணம் 113- 37.

நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!

ஸ்ருத – அறிவு
சீலம் – ஒழுக்கம்
குலம் – குலம்
கர்மம் – செய்கை
ஆகிய நான்கையும் வைத்து ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை எடை போடுங்கள்!

த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா

த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே – நான்கு கூறுகளை வைத்து மனிதனைப் பரிட்சை செய்தல் வேண்டும்.
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா – அறிவு, ஒழுக்கம், குலம், செய்கை (ஆகியவற்றின் மூலம் நிர்ணயித்து விடலாம்).

-கருட புராணம், 112-3

மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!

கீழே ஏழு உலகங்கள் உள்ளன.
1) அதல 2) விதல 3) நிதல 4) ரஸாதல 5) தலாதல 6) சுதல 7) பாதாள ஆகியவை.

– ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், ப்ரம்மவைவர்த புராணம், நாரதீய புராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்ரீமத் பாகவதம்.

இதே போல 1) பூலோகம் 2) புவ லோகம் 3) ஸ்வ லோகம் 4) மஹ லோகம் 5) ஜனக லோகம் 6) தப லோகம் 7) சத்ய லோகம் என மேலே ஏழு உலகங்கள் உள்ளன.

– ஸ்கந்த புராணம், ப்ரம்மவைவர்த புராணம், நாரதீய புராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு சம்ஹிதா, சாம்ப புராணம், ஆருணிகோபநிஷத்.

About The Author