புலியூரில் அருள்புரியும் வியாக்கிரபுரீஸ்வரர்

கரூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் இருக்கிறது இந்த ஊர். ‘வியாக்கிரபுரி’ என்பது சம்ஸ்கிருதப் பெயர். தமிழ்ப் பெயர் புலியூர். கோயில் பாளையம் அருகே இந்த சிவஸ்தலத்தைக் காணலாம்.

புலிக்கால் முனிவரான வியாக்கிரபாதர் சிவனை விடாமல் வழிபட்ட ஸ்தலம் இது. இங்கு அருள்புரியும் ஈசனின் பெயரும் ‘வியாக்கிரபுரீஸ்வரர்’. பக்தனின் பெயரையே தானும் சூட்டிக்கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார் பரமேஸ்வரன்.

கோயில் அருகில் அமராவதி நதி ஓடுகிறது. மூலவர் வியாக்கிரபுரீஸ்வரர் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாளின் பெயர் கருணாகடாக்ஷி. இவள் கிழக்கை நோக்கி நின்றபடி காட்சி அளிக்கிறாள். பெயரிலேயே, இவள் கருணை பொழியும் கண்களைக் கொண்டவள் என்பது புரிகிறது. அவளிடம் போய் அவள் கண்களைப் பார்த்தபடி நின்றால் போதும். கருணையைப் பொழிந்துவிடுவாள்.

இந்தக் கோயிலின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஈசனுக்கும் தேவிக்கும் நடுவில் தாய் தந்தையைப் பார்த்தபடி வேலன் நிற்கும் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு நிற்கும் குமரன் தனது வலக் கையில் தாமரை மலரை ஏந்திக்கொண்டு இடக் கரத்தை இடையில் வைத்தபடி குழந்தை முருகனாக அருள்புரிகிறார். மக்கள் இவரை ‘பாலசுவாமி’ என்றே அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலின் திருப்பணி மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னன் செய்து வைத்ததாக ஒரு கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கிறது. முதன் முதலில் திரிபுவனச் சோழச் சக்கரவர்த்தி என்பவர்தான் பழமையான இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து புதுப்பித்தாராம். அப்படி என்றால் இந்தக் கோயில் எத்தனை பழமையானது என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்!

தன் பக்தனுக்காக ஈசன் எதையும் பொறுத்துக்கொள்ளத் தயங்க மாட்டார். பிட்டுக்கு மண் சுமந்திருக்கிறார். பிரம்படி பட்டிருக்கிறார். ஒரு பக்தனிடம் கல்லடி வாங்கியிருக்கிறார். கோடரியால் வெட்டப்பட்டிருக்கிறார். இங்கும் புலியூரில் நகங்களால் கீறல் பட்டிருக்கிறார். இதன் புராணக்கதையைப் பார்ப்போம்!

மாத்யந்தன முனிவர் ஈசனின் பரம பக்தர். தன் வாழ்க்கையையே சிவனுக்காகக் காணிக்கையாக்கி விட்டவர். சிவனுக்காக அழகான மலர்ந்த பூக்களை தினமும் புதிதாகப் பறித்துப் பூஜை செய்வார். பூக்களைப் பறித்த பின் அவற்றில் ஏதாவது புழு பூச்சி இருக்கிறதா, வாடல் அல்லது அழுகல் இருக்கிறதா என்று மிகக் கவனமாகப் பார்ப்பார். பல தடவை மலர்களைப் பூச்சிகள் அரித்திருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். நல்ல மலர்கள் வேண்டுமென்றால் காலையில் பூக்கும் நேரம் பறிக்க வேண்டும். மரங்களின் மேல் உள்ள பூக்களை ஏறிச் சென்று பறிக்க வேண்டும் என்று எண்ணி காலை முகூர்த்த வேளையில் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தார். ஆனால், இருள் அதிகமாக இருந்ததால் மலர்கள் இருக்கும் இடம் சரியாகத் தெரியவில்லை. தவிர, பனியில் மரம் ஏறக் கால் வழுக்கியது. முனிவர் மனம் வருந்தியது. இதற்காக ஈசனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்தார். சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள், பரமேஸ்வரனின் அசரீரி ஒலித்தது.

"மாத்யந்தனரே! உங்கள் பக்தியில் மனம் மகிழ்ந்தேன். உங்கள் கவலை எனக்குப் புரிந்தது. மரங்கள் ஏறும்போது வழுக்காமல் இருக்கவும் பூக்களைப் பறிக்கவும் வசதியாக உங்கள் நகங்களை மிகவும் கூரியதாக, புலி நகம்போல் ஆக்கிவிடுகிறேன். இருளில் பூக்கள் தெரிய விரல்களில் கண்கள் தோன்றட்டும்! இனி கவலையில்லாமல் சிறந்த மலர்களைப் பறிக்கலாம்; மகிழ்ச்சிதானே?"

முனிவருக்குப் பேச்சே வரவில்லை. கண்களில் நீர் பொழிய, நன்றி தெரிவித்து வணங்கினார். அன்றைய தினத்திலிருந்து வியாக்கிரபாதர் ஆனார்.

பல சிவாலயங்களுக்குச் சென்று மலர்கள் பறித்து ஈசனுக்கு அணிவித்து அழகு பார்த்தார். நடந்து நடந்து அமராவதிக் கரைக்கு வந்து சேர்ந்தார். அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இடத்தின் பெருமைகள் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். கிருதாயுகத்தில் மகாலட்சுமி அங்கு பூஜை செய்தாளாம். திரேதாயுகத்தில் கருடனும், துவாபரயுகத்தில் ஆஞ்சநேயரும் வந்து அங்கு ஈசனை பூஜித்தனராம்.

வியாக்கிரபாத முனிவர் அங்கு பல நாட்கள் தங்கினார். அப்போது ஈசன் அவருக்குச் சிறு பரீட்சை வைத்துப் பார்க்க ஆர்வம் கொண்டார்.

வழக்கம் போல் சிவலிங்கத்தைப் புதிய மலர்களால் பூஜித்தார் வியாக்கிரபாதர். ஆனால், அன்று ஈசன் அவருக்கு தரிசனம் தரவில்லை. இதனால் முனிவர் மனம் வருந்தி அழுது பக்தி மேலிட்டு அந்த லிங்கத்தை அப்படியே தழுவிக்கொண்டார். அப்பொழுது, அவரது புலி நகங்கள் லிங்கத்தைக் கீறின. ஈசன் மேல் கீறல்கள் தெரிய அவர் பதறிப்போனார். பெரிதாக விசும்பி விசும்பி அழ ஆரம்பித்துவிட்டார். ஈசனும் அவர் முன்னே தோன்றி, "உன் பக்தியை மெச்சினோம். பல பக்தர்கள் முன் உன்னை அடையாளம் காணவே இது நிகழ்த்தப்பட்டது" என்று கூறி மறைந்தார்.

அன்றைய நிகழ்ச்சிக்குப் பின் இந்த இடம் புலியூர் என்று மாறியது. ஈசனும் வியாக்கிரபுரீஸ்வரர் ஆனார்.

இதன் தல விருட்சம் வில்வமரம். கோயிலில் விநாயகர் முதலில் அமர்ந்திருக்க பிராகாரத்தில் துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் எல்லாரையும் காணமுடிகிறது. சனி பகவான் மட்டும் தனி சந்நிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு முன் இரு நந்திகள் இருக்கின்றன. ஒன்று ஆன்ம நந்தி; மற்றொன்று தர்ம நந்தி. இது எப்படி நடந்தது?

பல்லாண்டுகளுக்கு முன் அங்கிருந்த நந்தி சற்று பின்னமாக, வேறு புது நந்தியைச் செய்து பழைய நந்தியை அமராவதி ஆற்றில் போட ஏற்பாடு செய்யப்பட்டதாம். ஆனால், ஒரு சிவ பக்தர் கனவில் ஈசன் தோன்றி, " ஏம்பா! உங்கள் வீட்டில் யாருக்காவது கை கால் ஊனமானால் வீட்டை விட்டு அனுப்பி விடுவீர்களா? அது போல், என்னுடன் காலங்காலமாக இருந்த நந்தியை எப்படி நதியில் போட மனம் வந்தது? அதைக் கோயிலை விட்டு அனுப்ப வேண்டாம்" என்று கூறியவுடன் கனவு கலைந்தது. ஆகையால், பழைய நந்தியையும் சரியாக்கி, இரண்டு நந்திகளுடன் பிரதோஷம் மிக விமரிசையாக நடக்கிறது. சிவலிங்கம் பல மலர்களுடனும் வில்வ மாலைகளுடனும் எல்லோரையும் கவருகிறது. லிங்கத்தை அபிஷேகத்தின்போது பார்த்தால் அவரது திருமேனியில் புலி நகக்கீறல்கள் தென்படுகின்றன. இதைப் பார்க்கும்போதே உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது.

மிகப் பழமையான இந்தக் கோயிலுக்குச் சென்று உள்ளன்போடு ‘நமசிவாய’ என்று சொன்னாலே நம் பாபங்கள் விலகும். கேட்பது கிடைக்கும்.

About The Author