பெண்ணிடம் ரகசியம்

ஒரே வீட்டில் அப்பா, அம்மா, குழந்தைகள், பேரக்குழந்தைகள்… என்ற கூட்டுக்குடும்ப அமைப்புகள் ஒளிமங்கி, ஒரே தெருவிலேயே அப்பா அம்மாவும், மகள் மருமகனும் எனப் பக்கத்து வீடுகளில் வசிக்கிற நாகரிக உலகம்! ஆனால்… பஸ் நெரிசலை விலக்குகிற பாவனையில் ஷேர் ஆட்டோவில் கூட்டு சேர்ந்து கொள்கிறது என நினைக்க, புன்னகை வந்தது அவளுக்கு. இந்த மனோபாவம் பெற்றவர்களைக் கூடவைத்துக் கொள்வதில் காட்டலாமாய் இருந்தது.

பஸ்சுக்கே கதவு மாட்டுகிற காலம் இது. நம்பிக்கையம்சம் குறைந்துகொண்டே வருகிறதில் உலகத்தின் நிம்மதிதான் சீர்கெட்டுப் போகும் அல்லவா, என்றிருந்தது. தான் தன்னுலகம் என்ற இந்த பாவனை ஆரோக்கியமானது அல்ல. வேலைக்குப் போகிற பெண் ஷேர் ஆட்டோவில் ஏறிய ஜோரில் காதுகளை மூடிக்கொள்கிறாள். மொபைல் ஃபோனில் என்னவோ பேசிக்கொண்டோ, குறைந்தபட்சம் பாட்டு கேட்டுக்கொண்டோ தனக்குள்ளே ரசித்து, புன்னகைத்து வாழ்கிறாள். கூட அமர்ந்திருக்கிறவருக்கு அதில் இடம், மரியாதை இல்லை. அல்லது அவரைத் தொந்தரவு செய்யாதது என் உலகம் என்கிற மரியாதை… பரிச்சயமற்றே, அது தேவையில்லை என்கிற அளவிலேயே, ஒருவரை ஒருவர் இறங்கிய ஜோரில் மறந்து போகிறதாய் இருக்கிறது…

உறவுகளே அற்ற மனித பாவனை அவளுக்கு ஆச்சர்யமான ஒன்று. மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான வித்தியாசமே இந்த உறவுசார்ந்த அடையாளங்கள் என அவள் நம்பினாள்.

கண்ணைத் திறந்து வெளியே பார்க்க, பரந்து கிடக்கும் கவிதானுபவம். இந்த எழுபது வயசிலும் பட்டணத்துப் போக்குவரத்துக்குத் திகைத்து, பதறித் தெருவைக் கடக்கும் முதியவர். அவர் பக்கத்தில் இருக்கும் இளம் பெண்ணைப் பார்த்தபடி, போக்குவரத்தைக் கவனியாமல் அவள் கூடவே கடக்கும் இளைஞன்… என உலகில் வெளி சுவாரஸ்யங்களுக்குக் குறைவில்லை…

அன்றொருநாள் கவனித்தாள். பார்வையற்ற தந்தை. கையைப் பிடித்துக்கொண்டு கூட வரும் மகன். சட்டென்று அப்பா காலில் கல் தட்ட அவர் வாய் உடனே "கல்லுடா மகனே பாத்து வா" என்கிறது!

எதிரே வந்தவரைப் பார்த்து "ஹலோ" என்று அழைத்தால், அவசரத்தில் "ராங் நம்பர்" என்கிறார்கள்!

மனசைப் பட்டம் போலத் திரிய விடுவதில் சாரதாவுக்கு எப்பவுமே பிரியம் அதிகம். அவளுடையது ஆடிப்பட்டம். காற்றுக்கு ஜோராய் ஏறும் உயரே! படிக்கிறது என்பதற்குத் தனி நேரம் ஒதுக்கினாள். இரா.முருகனும், வண்ணதாசனும், நாஞ்சில்நாடனும் பிடிக்கும் அவளுக்கு. ஆனால், பயணநேரம் படிக்கவோ பாட்டு கேட்கவோ அல்ல. இதனால் எதையும் – படிப்பதையோ பயணம் செய்வதையோ, ஒழுங்காகச் செய்ய முடியாது. உற்சாகமாகப் பாட்டு கேட்டுக்கொண்டே வரும் காரோட்டி, குறுக்கே வந்தவனைப் பார்த்து எரிச்சல் படுகிறான்… தன் கவனமும் சாலையில் அல்ல, பாட்டில் என்பதை மறந்து.

மழைக்குப் பயந்ததுபோல் வானமே கருமையாய்க் குடைவிரித்துக் கொண்டது. நிழல்கள் கெட்டிப்பட்டாப் போலத் தெருவோர மரங்கள் கருமைதாங்கி நின்றன. இன்றைக்கு வீடு திரும்பத் தாமதமாகி விட்டது. சின்ன வேலை என நினைத்து கையில் எடுக்கப்போய் நேரமிழுத்துவிட்டது. "வெச்சிட்டுப் போங்க மேடம்! நாளைக்கு வந்து மீதியப் பாத்துக்கலாம்…" என்றார் மேனேஜர்.

ஆனால், அந்த முகத்தில் முழுச் சிரிப்பு இல்லை. இவள் இருந்து முடித்துவிட்டுப் போனால் சந்தோஷப்படுவார் என்று பட்டது. சாரதா "முடிச்சிறலாம் சார்" என்று கண்ணைக் கணினியில் பதித்தாள்.

பவர் பாயின்ட் வேலை. எப்படியும் காலையில் வந்ததும் அவசரப்படுத்தவே செய்வார். இப்பவே முடித்து அவர் கண்ணில் காட்டிவிட்டுப் போனால், காலையில் சிறு மாற்றங்களை அவர் முன்வைக்க வசதி. அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். புதுசாய் எதும் தோன்றினால் உடனே அதைச் செயல்படுத்தத் துடிப்பான மேனேஜர். அநாவசியப் பேச்சு, சிரிப்பு இல்லா டு-தி-பாயின்ட் மேனேஜர். அலுவலகத்தில் எல்லாப் பெண்களுக்குமே அவரைப் பிடிக்கும்.

வீட்டுக்கு வர இருட்டிவிட்டது. பிரதாப் வந்திருந்தான். நல்ல கணவன் அவன். அவள் வரத் தாமதமாகிறதில் தானே காபி ஃபில்டரில் இறக்கி, தான் குடித்துவிட்டு அவளுக்கும் டிகாக்ஷன் வைத்திருந்தான். அலுவலகம் விட்டு வீடு திரும்பினால் காபி என்பது பழக்கமாகித்தான் விட்டது. உதைபந்தாட்டம் பார்த்துக் கொண்டிருந்தான் பிரதாப். தலைதூக்கிப் பார்த்துவிட்டு "குட் ஈவ்னிங்" என்றான். "ரொம்பக் களைச்சிப் போய் வந்திருப்பே… காபி நான் போடட்டுமா?"

"சரி" என்றபடி உள்ளேபோய் உடை மாற்றிக்கொண்டாள் சாரதா. அவள் மாற்றிக்கொள்ளுமுன் காபி ஆவி பறக்க அவள்முன் நீட்டினான். "நான் குடித்துவிட்டேன், ஆனாலும் உன் கப்பில் கடைசி மடக்கு என்னுடையது…" என்றான்.

"நான் அலுத்து வந்திருக்கிறேன். இரவு ஒருவேளை தூங்கிவிடுவேன்" என வேடிக்கையாய் எச்சரித்தாள் சாரதா.

"உன்னை உற்சாகப்படுத்த ஒரு செய்தி உண்டு… யூகி பார்க்கலாம்!"

அவள் உண்மையில் களைத்திருந்தாள். மனசு றெக்கைகளைக் கீழே போட்டுச் சோர்ந்திருந்தது. கூடடைந்த பறவை.

"என்ன செய்தி தெரியாது. உங்களுக்கு அது உற்சாகம் அளிப்பதை யூகிக்கிறேன்…" என்றாள் புன்னகையுடன். "இரவுக்கு இட்லியா, தோசையா?"

"ஹா! எனக்கு என்ன பிடிக்கும் என்பதை சரியாக உன்னால் யூகிக்க முடியும்… காரணம்…"

"காரணம்…?"

"நீ என்ன செய்தாலும் எனக்குப் பிடிக்கும்!"

"ஆக இரவு என் தூக்கத்துக்கு வேட்டு என யூகிக்கிறேன்… வாட் மிஸ்டர், எதுவும் படம் கிடம் பார்த்தீர்களா?"

"நோ தியரி… ஒன்லி டாஷ்!"

"நோ டாஷ், ஒன்லி தியரி டுடே…" என்றாள் அவளும் விடாமல்.

"சரி செய்தி என்னவோ சொல்ல வந்தீங்க?" என்றாள்.

"தோசையே பண்ணு" என்றான் இரகசியத்தை இன்னும் பரபரப்பாக்கும் நோக்கில்.

அவனது சவாலை அவள் ஏற்றுக்கொண்டாள். என்னிடம் எதையும் மறைக்க அவனால் முடியாது. ஒரு விஷயம் என்னிடம் சொல்லவேண்டும் என அவனுக்குப் பட்டுவிட்டால் அதை வெளியேவிடாமல் மண்டை வெடித்துவிடும். அலுவலக வேலையாய் வெளியூர் போக நேர்ந்தால், பாதி ராத்திரி கூட அவளை எழுப்பி என்னவாவது பேசுவான். "உனக்கு தூக்கம் வருதா இவளே?" என்று அக்கறையாய்க் கேள்வி வேறு. சில பேர் தொலைபேசியில் கூப்பிட்டு "உங்களோடு பேசலாமா இந்நேரம்?" என்பார்கள். அதான் தொந்தரவு பண்ணியாச்சே, பிறகென்ன.

சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம், என்பது பழமொழி. ஒவ்வொரு பெண்ணிடமும் எத்தனையோ ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. யாரிடமும், தன் கணவனிடமே கூட சொல்லமுடியாத, சொல்லக்கூடாத ரகசியங்கள்…

"யூகித்தாயா?"

"சரியாக யூகித்தேன்…"

"எதைப் பத்தி?"

"நீங்கள் தோசை கேட்பீங்கன்னு தெரியும்…"

"அடியே என் செல்ல நாயே! நான் என் அபிமான உதைபந்தாட்டத்தை விட்டுவிட்டு அதைவிட சுவாரஸ்யமான விஷயத்தை உன்னோட பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன்."

"சரி."

"நீ என்னைப் போட்டு பாக்கறதுன்னு முடிவு பண்ணிவிட்டாய். ஒரு குறிப்பு தர்றேன்… ஒரு கடிதம். மீதி யூகி நீ. மதியூகியான்னு நான் சொல்றேன் உன்னைப் பத்தி!"

"கங்கிராஜுலேஷன்ஸ்! உங்களுக்கு பதவி உயர்வு…"

"நீ வேணுன்னே தப்பா யூகிக்கறே. அதாவது யூகிக்கறா மாதிரி நடிக்கறே…"

"சரி வேறென்ன கடிதம்… உங்க அப்பா எழுதியிருக்காரா ஊருக்கு வரச்சொல்லி? அன்பொழுக கூப்பிட்டுருப்பாரு. நீங்க அப்டியே உருகியிருப்பீங்க, கோன் ஐஸ்கிரீம் போல…"

"கடிதம் சரி. அப்பா கடிதம் சரி… எங்க அப்பா இல்ல, உங்க அப்பா…"

அவளுக்கு லேசான ஆச்சர்யம் ஏற்பட்டது. சரி, விஷயம் நான் எதிர்பார்த்ததை விட முக்கியமானதுதான் போலும், என்றிருந்தது. என்னிடம் அடிக்கடி பேசுவார் அப்பா.

ஆஹா… கிட்டத்தட்ட அந்த முழு விஷயமும் அவள் நினைவில் தட்டியது.

பிரதாப்புக்கு ஒரு தம்பி. நவநீதன். எம்.பி.ஏ முடித்து நல்ல வேலையில் அரை லகரம் சம்பளத்தில் இருக்கிறான். எப்பவும் முழுக்கைச் சட்டையும், கையில் மடிக்கணினிப் பெட்டியுமாகவே அவனைப் பார்க்கமுடியும். அலுவலகத்தில் அவனுக்குக் கார் தந்திருக்கிறார்கள். வாட்டசாட்டமாய், சிவப்பாய், இளமைப் பொலிவுடன் அதற்கேற்ற கம்பீரத்துடன் இருப்பான். தம்பியைப் பற்றிப் பிரதாப்புக்குப் பெருமை உண்டு. தன்னைவிட அதிகச் சம்பளம், தன்னைவிட உயர்ந்த படிப்பு என்று எப்பவும் அவனைப் புகழ்ந்து பேசுவான். அவனுக்கும் தம்பிக்கும் ஏழெட்டு வயது வித்தியாசம். பிரதாப் வேலைக்கு வந்து தம்பி மேல்படிப்புக்கு என்று காசைக் காசாய்ப் பார்க்காமல் உதவி செய்ததெல்லாம் அவளுக்குத் தெரியும்.

திருமணமாகி இத்தனை வருடமாகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில் அவள் நவநீதனைத் தன் குழந்தை என்பதுபோலவே நினைத்திருந்தாள். வயசு என்று பார்த்தால் ஒட்டாவிட்டாலும், குடும்ப ஸ்தானத்தால் அவளுக்கு அவனைப் பற்றி அப்படித்தான் உணர முடிந்தது. அவனும் வீட்டுக்கு வந்தால், அண்ணி அண்ணி, என்று சுற்றி வருவான்…

"சாரு!"

வேலை மும்முரத்தில் இருந்தாள் அவள். என்றாலும் சட்டென்று அப்பா குரல் பிடிபட்டது. "சொல்லுங்கப்பா! எதும் அவசரம்னா இப்ப சொல்லுங்க. மெதுவாப் பேசலாம்னா மதிய இடைவேளைல நானே உங்களைக் கூப்பிடறேன். உங்களுக்கு எதுக்கு காசு விரயம்?" என்றாள்.

"நல்ல செய்திதான். நம்ம விஜிக்கு உன் கொழுந்தன் நவநீதனைப் பார்க்கலாம்ன்னு ஒரு யோசனை…"

"… …"

"சாரு?"

"ம். கேக்குதுப்பா."

"அதான் உன்னாண்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு அப்பறமா மாப்ளைகிட்ட காதுல போடணும்…"

"இப்ப வேலையா இருக்கேம்ப்பா. நானே உங்களைக் கூப்பிடறேன்…"

"சரிம்மா" என்று தொலைபேசியை வைத்தார் அப்பா. மதுரையில் இருந்து பேசுகிறார் பாவம். அவர் கவலை அவருக்கு.

விஜயலெட்சுமி பள்ளிக்கூட ஆசிரியை வேலை பார்க்கிறாள். அவள் தங்கை. தாம்தூம் என்று அலங்காரம் எல்லாம் பிடிக்காத எளிமையான பெண். சின்ன வயசிலேயே கண்ணாடி வேறு மாட்டிக்கொள்ள வேண்டி வந்தது அவளுக்கு. ஆங்கிலத்தில் தடித்தடியான புத்தகம் வாசித்துப் பழகியவள். ஒரு ராத்திரிக்கு ஒரு புத்தகம். ஷெல்டன், லுட்லும், ஆர்ச்சர்… நன்றாகப் பாடுவாள்.

நவராத்திரி வந்தால் அவளுக்கு அந்தத் தெருவில் கிராக்கி ஏற்படும். எல்லாரும் கொலுவில் பாட என்று அவளைக் கூப்பிடுவார்கள். வீட்டிலும் மாலைகளில் டியூஷன் எடுப்பாள்.

அவள் அப்பாவோடு பிறகு பேசவில்லை.

"என்ன விஷயம்னு கேட்க மாட்டியா?"

"எங்கப்பாவுக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கும். எனக்கு என்ன தெரியும்?" என்றாள் சாரதா விஷமத்தனத்துடன்.

"நல்லாதான் அலட்டறே… அப்பறம் தூக்கம் வருதுன்னு அப்டியொரு சிணுங்கல் வேற… பெண் ஜென்மமே ஆம்பளைங்களைப் போட்டுப் பாக்கவே பொறப்பு எடுத்திருக்கு…"

"அன்ட், வைஸ்வெர்சா…" என்று அவள் உதட்டைச் சுழித்துக் காட்டினாள்.

"உன் உதட்டில் ஒரு விறுவிறுப்பு ஓடுவதாகத் தெரிகிறது…"

"ஐயோ தோசை கருகறது…" என்று அடுப்பைக் கவனித்தாள் சாரதா.

அவன் காத்திருந்தான். அவனுக்கு ஒன்று புரிந்தது. அப்பா கடிதம் என்றபோது அவள் ஓரளவு விஷயத்தை யூகித்திருக்க வேண்டும். என்ன என்று பேச முன்வரவில்லை. என்பதாலேயே அதன் விவரங்கள் அவள் அறிவாள் என அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

அவளிடம் சொல்லாமல் அவள் அப்பா அவனுக்கு இப்படியொரு கடிதம் போட்டிருக்க வாய்ப்பில்லை. தன் தம்பி நவநீதனை, இவள் தங்கை விஜயலெட்சுமிக்குத் திருமணம் பேசலாமா, என்கிறதாய் இருந்தது அந்தக் கடிதம்.

விஜயலெட்சுமியைப் பற்றிக் குறையாய் ஒன்றுமில்லை. எளிமையான நல்ல பெண். அக்காபோல் அழகு என்று சொல்ல முடியாது. குடும்பத்துக்கு ஏற்றவளாகத்தான் கல்யாணம் பேச வேண்டும். அழகு என்பது அப்புறந்தான் என்பது அவன் கருத்து. நவநீதன் என்ன நினைக்கிறான் தெரியாது. ஆனால், அண்ணா சொன்னால் கேட்டுக் கொள்கிறவன் என்றுதான் நம்பிக்கையாய் இருந்தது. தெரியாத இடத்தில் பெண் எடுத்துப் பிற்பாடு யோசிக்கிறதை விட, இவள் தங்கை என்பது அவனுக்கு நல்ல முடிவாகத்தான் இருந்தது.

இவனிடம் பேசிவிட்டு, பிறகு அவன் மாமனார், தன் சம்பந்திக்கு, இவன் அப்பாவுக்கு எழுதுவாராய் இருக்கும்.

"என்ன நீ பிடிகுடுக்காமலேயே இருக்கே?" என்றான் பிரதாப் தாபத்துடன். இராத்திரி பற்றிப் பேசுகிறானா, அப்பா கடிதம் பற்றிப் பேசுகிறானா என்றே குழப்பமாகி விட்டது.

"ஏன் என் தம்பிக்கு என்ன?" என்றான்.

"அவருக்கு என்ன, ஒண்ணில்லையே…" என்றாள் சாரதா.

"உங்கப்பாவுக்கு நம்ம சம்மதத்தைச் சொல்லிறலாமா?…" என்றவன், "நீயே என்கிட்ட உங்கப்பா அபிப்ராயத்தைப் பேசிருக்கலாமே…" என்று தொடர்ந்தான்.

அவள் மௌனமாய் இருந்தாள்.

"உங்கப்பா கிட்ட நீ இதுபத்தி உன் அபிப்ராயத்தைச் சொல்லவே இல்லியா?…"

"… …"

"என்னாச்சி சாரு, கம் ஆன்…"

"என் தங்கைக்கு இந்த வரன் வேணான்னிருந்தது…."

அவன் அயர்ந்துபோய் அவளைப் பார்த்தான். பின் தாடையை வருடிக்கொண்டான்.

அதுவரை பாவ்லா காட்டிக் கொண்டிருந்த மழை மெல்ல ஆரம்பித்தது வெளியே. திரைச்சீலைகள் புதுக்காற்றின் குளிர்ச்சியில் ஆடின.

"ம். ஓரளவு நான் இதை எதிர்பார்த்தேன்… பட் ஒய் சாரு? நீயா இப்பிடிப் பேசறே… அவன் உனக்கு மகன் மாதிரின்னு நீயே என்னாண்ட சொல்லீர்க்கே. நானே கேலியடிப்பேன் உன்னை…"

"அவன் அப்படி நினைக்கல போலருக்கு" என்றாள் சன்னமாய்.

படுக்கையில் படுத்திருந்தவன், திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தான். "வாட் டு யூ மீன்?"

"ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் எத்தனை ரகசியங்கள்… அவை ரகசியங்களா இருக்கறது குடும்பத்துக்கு நல்லது!" என்று புன்னகை செய்தாள்.

"ஐ ஸீ…" என்றவன், அவள்கிட்டே வந்து "ஐம் சாரி… எனக்குப் புரியுது" என்றான்.

"உங்களுக்கு ஒண்ணும் புரிய வேண்டாம்! பெண்ணிடம் ரகசியம் தங்காதுன்னு சொல்வாங்க. அவங்ககிட்டதான் புதைஞ்சு கிடக்கும் அவை. அப்படிப் புதைஞ்சு கிடக்கிறதுதான் நல்லது" என்று சிரித்தாள் சாரதா. "தியரி ஆர் டாஷ்?" என்று கேட்டாள் கண்சிமிட்டி.

ஒரு நிமிடம் யோசித்தான்.

"யுவார் கிரேட் சாரதா!. ஐம் ப்ரௌட் ஆஃப் யூ" என்றவன், "டாஷ்" என்றான்.

வெளியே மழை முழக்க ஆரம்பித்தது. போய் ஜன்னல்களைச் சாத்தினான் அவன்.

About The Author

2 Comments

Comments are closed.