பெண் பால் (1)

(குமுதம், 15.10.2001)

"ஏம் மச்சான், ஒங்காத்தா எப்ப வரும்?"

மாராப்பு மறைவில் குழந்தைக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்த சிவகாமி புருஷனைக் கேட்டாள்.

"என்னத்துக்குக் கேக்க?"

"என்னத்துக்கா, கொழந்தயப் பாக்கத்தான். ஒங்காத்தா வந்துச்சுன்னா நம்ம புள்ளக்கி என்ன பேரு வக்யன்னு ஆத்தாவயும் கேட்டுக்கலாம்ல?"

சிவகாமி ஆசையோடு பேசினதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாதிரி பீடி ஊதியபடி உட்கார்ந்திருந்தான் மாடசாமி.

"ஒன்னயத்தாங்கேக்கேன் மச்சான், நம்ம புள்ளக்கி…"

அவள் வாக்கியத்தை முடிக்குமுன் மாடசாமி வழி மறித்தான்.

"அட, சும்மாக் கெட புள்ள. ஆத்தாட்ட கேட்டா அல்பாயுசுன்னு பேரு வக்யச் சொல்லும்."

சிவகாமி அதிர்ந்து போனதில், குழந்தையின் வாய் விடுபட்டுப்போய் அது அழத்தொடங்கியது.

"என்ன மச்சான் இப்டி அபசகுனமாப் பேசுத. பேரு என்ன வக்யலாம்னு கேட்டா…"

"அதத்தாம்புள்ள சொல்லுதேன். ஆத்தா ரொம்பக் காட்டத்துல இருக்கு. பலவேசம் அண்ணாச்சி நேத்து ஆத்தாவப் பாத்தாவளாம். பேத்தியப் பாக்கப் போவலியான்னு கேட்டிருக்காவ. ஆமா போவணும், கள்ளிப் பாலுக்குச் சொல்லி வச்சிர்க்கேன், அத வேங்கிட்டுத்தாம் போவணும்ன்னுச்சாம்."

கிலிபிடித்த குரலில் கணவனைக் கேட்டாள், "என்ன சொல்லுத மச்சான், ஒங்காத்தா எம்புள்ளயக் கொல்லவாப் பாக்குங்க?"

இவளுடைய பதற்றத்தை அங்கீகரிக்காமலே மாடசாமி பேசினான்.

"பெரிய வார்த்தயெல்லாஞ் சொல்லாத புள்ள. ஊரு ஒலகத்துல நடக்கதுதான இது? ஆத்தா அன்னிக்கே சொல்லிச்சி திருநவேலியில பெரவேட் ஆசுபத்திரியில வயித்துக்குள்ள இருக்க புள்ள ஆம்பளயா பொம்பளயான்னு கண்டு பிடிச்சிச் சொல்ல மிசின் இருக்காம். போய்ப் பாருங்க. பொட்ட புள்ளன்னா அங்ஙனயே கலச்சிப் போட்டு வந்துருங்க, செலவ நாம் பாத்துக்கிருதேன்னு சொல்லிச்சி. நீதான் கெத்தா முடியாதுன்ட்ட. இப்ப பொட்ட புள்ளயாப் போச்சி. ஆத்தாக்கு ஆங்காரம் வரத்தான செய்யும்?"

சிவகாமிக்குக் கண்ணீரும் வியர்வையும் கலந்து முகத்தில் வியாபித்தன.

"ஏம் மச்சான், அது சரிதான்னு நீயும் சொல்லுதியா? எப்டி மச்சான் இந்தப் பச்ச மண்ணக் கொல்லணும்னு மனசால சொல்லுத. நீ பெத்த புள்ள மச்சான்!"

"இனியும் பொறத்தான போறேன். அடுத்தவாட்டி உருப்படியா ஒரு ஆம்பளப் புள்ள பெத்துக்குடு. அட என்னத்துக்குப் புள்ள வெட்டியா அளவுத! போன மாசங்கூட மேலத் தெருவு எச்சுமி வூட்ல இது நடக்கலியா? அதுக்கும் ஆத்தாவத்தாங் கூப்ட்டாவ! ஆத்தா பேய்த்தாங் கழுக்கமாக் காரியத்த முடிச்சிப்போட்டு வந்திச்சி. அதுக்கு முந்தி எங்க தச்சநல்லூர்ப் பெரியம்மா வூட்ல…"

"ஒங்க ஆத்தா இதே சோலியா அலையுது போல."

"எளா, முந்தாநாள் பொறந்த பொட்டக் களுதக்யாக ஆத்தாதாவக் குத்தம் புடிக்காத, பெறவு எனக்குக் கெட்ட கோவம் வரும் பாத்துக்க."

இவனுடைய ஆத்தாளை எதிர்கொள்ள நேரும் முன் இவனைச் சரிக்கட்டியாக வேண்டும். அது எப்படி என்று யோசனையாயிருந்தது. குழந்தை உறங்கி விட்டிருந்தது. அதைக் கைகளில் ஏந்திக் கொஞ்சம் எட்டப் பிடித்துப் பார்த்தாள், கண்ணீரினூடே. பிறகு குழந்தையை நெஞ்சோடு பதித்து நெற்றியில் முத்தமிட்டாள் வாஞ்சையோடு. தூளியில் குழந்தையைத் தூங்கப் போட்டுவிட்டுப் புருஷனை நோக்கி வந்தாள், ஒரு தப்பித்தல் திட்டத்தோடு.

"மச்சான் எனக்கு ஒரேயொரு ஒத்தாச மட்டும் பண்ணு மச்சான்" என்று கெஞ்சினாள்.

நுரையீரல் நிரம்ப பீடிப்புகையை இழுத்து விட்டு, "என்ன பண்ணச் சொல்லுத" என்றான் சர்வ அலட்சியமாய்.

"என்ன வல்லநாட்டுக்கு பஸ்ல ஏத்தி வுட்ரு மச்சான். நா எங்கப்பன் வூட்டுக்குப் போயிருதேன், எம்புள்ளயக் கொண்டுக்கிட்டு. எங்க அம்மெ உசுரோட இருந்திருந்தா அங்ஙன வல்லநாட்ல வச்சே பெரசவம் பாத்துருப்பாவ. நா நாதி கெட்ட அநாதியாப் பேய்ட்டேனேய்யா! நல்லாயிருப்ப மச்சான், இந்த ஒபகாரம் மட்டும் செஞ்சிரு மச்சான். ஒங்காலப்புடிச்சிக் கேக்கேன். எம்புள்ளயக் காப்பாத்து மச்சான்!"

தடாலென்று தரையில் விழுந்து அவனுடைய கால்களைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

"சீ, எந்தி புள்ள" என்று மாடசாமி கால்களை உதறியபடி எழுந்து கொண்டான்.

"இந்தா பாரு, ஆத்தாட்ட மல்லுக்கட்ட என்னால ஏலாது. ஆத்தாக்கு இது பளக்கப்பட்ட சமாசாரந்தா, புள்ளக்கி நோவே தெரியாம சுளுவாக் காரியத்த முடிச்சிப்புடும். ஒரு நாலு நாளக்கி நீ பெனாத்திட்டிருப்ப, அப்பால எல்லாஞ் சரியாப் போயிரும். மேக்கொண்டு ஒனக்குப் புள்ள பொறக்காமயா போயிரப் போவுது?"

தரையில் விழுந்திருந்த நிலையிலிருந்து எழுந்து நின்ற சிவகாமி, கூப்பிய கரங்களோடு புலம்பினாள். "வேணாஞ்சாமி, எம்புள்ளயக் கொன்னுப்புடாதீக. என்ன பஸ்ஸு ஏத்தி வுட்ருங்க. நாம் போயிருதேன். எங்கப்பன்ட்ட சொல்லி மொறப்பநாட்டு வயக்காட்ட ஒம்பேருக்கு எளுதிக் குடுக்கச் சொல்லுதேன் மச்சான்."

உதட்டிலிருந்த பீடியைப் பிடுங்கியெறிந்து விட்டு மாடசாமி அவளைப் பார்த்தான்.

"சும்மனாத்துக்கும் சொல்லுத புள்ள. ஒங்கப்பன் வயக்காட்ட எழுதிக் குடுப்பான்னாக்கும்?"

இந்த அஸ்திரம் கொஞ்சம் வேலை செய்யும் போலத் தெரிந்தது. சிவகாமி இதையே கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

(தொடரும்)

About The Author

3 Comments

  1. Natarajan kalpattu

    தமிழ் நாட்டில் அடிக்கடி நடைபெரும் பெண் சிசு கொலையினை மையமாக வைத்து அழகாகப் புனையப் பட்டுள்ள கதை. எப்படி முடியுமோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கத் தோன்றுகிறது.

  2. narayanan

    Tஅமிழ் நாடில் மட்டும் இல்ல. இன்தியவில் பல இடங்கலில் இது போல் நடன்து கொன்டு தான் இருக்கிரது. இதை தடுக்க அரசு தான்முடிவு செய்ய வேன்டும். பென்ஙல் இல்லாமல் நாம் எங்கிருந்து வன்தொம்.

  3. dubukku

    தமில் நாட்டில் மட்டும் நடக்குது என்ரு சொல்லமுடிடகு.

Comments are closed.