பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் -6.1

சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர்!

மணி அடித்தது. பூகோள ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் மாணவர்கள் எல்லோரும் மரியாதையாக எழுந்து நின்றனர். ‘மரியாதையாக எழுந்து நின்றனர்’ என்று கூறுவதைவிட ‘நடுநடுங்கிக் கொண்டே எழுந்து நின்றனர்’ என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆம், அந்த ஆசிரியர் அவ்வளவு பொல்லாதவர்! அவருக்குக் கோபம் வந்து விட்டால், மாட்டை அடிப்பது போல் மாணவர்களை அடித்துவிடுவார்!

அவர் வகுப்பிலே வந்து உட்கார்ந்ததும், கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

"அடே நரேந்திரா, எழுந்திரு" என்று கூறிவிட்டு, முதல் நாள் நடந்த பூகோளப் பாடத்தில் ஒரு கேள்வி கேட்டார்.

நரேந்திரன் உடனே எழுந்தான். கேட்ட கேள்விக்குச் சிறிதும் தயக்கமில்லாமல் விடை அளித்தான்.

அவன் கூறிய பதிலைக் கேட்டதும் ஆசிரியர், "அடே, என்னடா தப்பாக உளறுகிறாய்?" என்று மிரட்டினார்.

"இல்லை ஐயா! சரியாகத்தான் சொல்லுகிறேன்."

"என்ன! சரியாகத்தான் சொல்லுகிறாயா? அப்படியானால், என்னை முட்டாள்
என்கிறாயா?"

"இல்லை ஐயா, நான் சொன்ன விடை சரியானதுதான்."

"தவறான விடையைக் கூறிவிட்டு எதிர்த்து வேறா பேசுகிறாய்? மடையா!" என்று கோபமாய்க் கூறிக்கொண்டே அவர் எழுந்து வந்தார். பிரம்பினால் நரேந்திரனை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் என்னதான் அடித்தாலும் நரேந்திரன், தான் சொல்வதே சரி என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினான். திரும்பத் திரும்பச் சொன்னதையே அவன் சொல்லி வந்ததால் அவருடைய கோபம் அதிகமாகி விட்டது. கோபம் அதிகமாகி விட்டால்தான் தலைகால் தெரியாதே! ஆத்திரத்தில் அவர் நரேந்திரனை அடி அடியென்று நன்றாக அடித்து விட்டார்.

கடைசியில் கை ஓய்ந்த பிறகே அவர் இடத்தில் போய் உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்றது. அவரது கோபம் அடங்கியது. நிதானமாக யோசித்தார். நரேந்திரன் கூறிய விடை சரிதான் என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. தம் தவற்றை உணர்ந்தார். உடனே, எழுந்து நரேந்திரனிடம் வந்தார். "நரேந்திரா, உன்னை நான் தவறாக அடித்து விட்டேன். நீ சொன்னதுதான் சரி. என்னை மன்னித்துவிடு" என்று வருத்தத்துடன் கூறினார்.

வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் எல்லோரும் இக்காட்சியைக் கண்டு வியந்தனர். அந்த உபாத்தியாயரும் அன்று முதல் தம்முடைய ‘பிரம்படி வேலை’யை நிறுத்திக் கொண்டார்.

சரியான விடையளித்தும் தண்டனை பெற்றானே அந்த மாணவன், அந்த நரேந்திரன் பிற்காலத்தில், டாக்டர் நரேந்திரனாகவோ, முதலாளி நரேந்திரனாகவோ வரவில்லை. உலகமே போற்றும் ஒரு சிறந்த வேதாந்தியாக – இந்து மதத்தின் உயர்ந்த கொள்கைகளை உலகுக்கு எடுத்துக் காட்டி வியக்கச் செய்த ஒரு பெரிய மகானாக விளங்கலானான்!

அந்த மாணவன் பிற்காலத்தில் ஒரு மகானாக விளங்கியது போலவே, நரேந்திரன் என்ற அவனுடைய பெயரும் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று விளங்கலாயிற்று!

* * *

விவேகானந்தரின் அப்பா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவரிடம் தினந்தோறும் பல கட்சிக்காரர்கள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக நடத்தப்படுவார்கள். சிலர், வந்ததும் அங்கிருக்கும் ஆடம்பரமான நாற்காலியில் உட்காருவார்கள். சிலர் தரையிலே உட்காருவார்கள். சிலர் கால் கடுக்க அப்பாவின் முன் நின்றுகொண்டே பேசுவார்கள். சிலர் வீட்டுக்குள் வராமல் வெளியிலேயே கைகட்டி நிற்பார்கள்.

‘ஏன் இந்த வேற்றுமையெல்லாம்?’ என்று சிறு பையனான விவேகானந்தருக்குப் புரியவில்லை.

‘இவர் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். அவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். அவனைத் தொடக் கூடாது’ என்று ஒரு சமயம் அவரிடம் ஒருவர் கூறினார்.

"ஏன், தொட்டால் என்ன? குடி முழுகிப் போய் விடுமா? அல்லது, செத்துப்போய் விடுவோமா? நான் இப்படிப்பட்ட எத்தனையோ பேர்களைத் தொட்டிருக்கிறேனே! அவர்கள் கொடுத்த தின்பண்டங்களையும் வாங்கித் தின்றிருக்கிறேனே! நான் செத்தா போய் விட்டேன்? இன்னும் உயிருடன்தானே இருக்கிறேன்!" என்று விவேகானந்தர் கூறிச் சிரித்தார்.

‘ஜாதி வேற்றுமை கூடாது’ என்று அந்தச் சிறு வயதிலேயே அவர் நினைத்தார். நினைத்ததைக் கடைசிவரை பேசி வந்தார்; எழுதியும் வந்தார்.

* * *

விவேகானந்தர் மாணவராக இருக்கும்போதே அற்புதமாக வீணை வாசிப்பார்; அருமையாக மிருதங்கம் வாசிப்பார்; இனிமையான குரலில் இசையோடு பாடுவார். அவற்றுடன் சிலம்ப விளையாட்டிலும் தீரராக விளங்கினார்!

ஒரு சமயம் சிலம்ப வித்தையில் கெட்டிக்காரனான ஒருவன் வந்தான். அவன் வயதில் பெரியவன். பல இடங்களில் வெற்றி பெற்றவன். அவனை எதிர்த்து விளையாட விவேகானந்தர் முன்வந்தார்.

–நிகழ்ச்சிகள் தொடரும்…

படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்

About The Author