பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் (5.1)

பெயர் தெரியாத கவிஞர்!

அது ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடம். அங்கே படித்துக் கொண்டிருந்தான், ஒரு மாணவன். அவனுக்குத் தமிழிலே ஆர்வம் அதிகம். அவனுக்குப் பாட்டு இயற்றவும் நன்றாகத் தெரியும். ஆனாலும், தனக்குப் பாட்டு எழுதத் தெரியும் என்பதை அவன் வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

ஒருநாள் அந்த மாணவன் மனத்திலே ஒரு பாட்டுத் தோன்றியது. அதை ஒரு காகிதத்தில் எழுதினான்; படித்துப் பார்த்தான். படிக்கப் படிக்க அது மிகவும் நயமாக அமைந்திருப்பது போல அவனுக்குத் தோன்றியது.

‘இந்தப் பாட்டை நாம் யாரிடமாவது காட்ட வேண்டும். அவர்களுடைய கருத்தை அறிய வேண்டும்’ என்று நினைத்தான்.

ஆனால், பிறரிடத்தில் காட்டுவதற்கு அவனுக்குக் கூச்சம்; காட்டாமல் இருக்கவும் மனமில்லை.

சிறிது நேரம் சிந்தித்தான்; இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தான்.

அதன்படி, மறுநாள் மிகவும் சீக்கிரமாக அதாவது எல்லோருக்கும் முன்பாகப் பள்ளிக்குச் சென்றான்; தான் இயற்றிய பாட்டை ஒரு தாளில் எழுதினான்; ஆசிரியர் உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்துவிட்டுத் தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.

சிறிது நேரம் சென்று மற்றொரு மாணவன் அங்கு வந்தான். அவன் தரையில் காகிதத்தில் ஏதோ எழுதிக் கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்தான்; படித்தான்; பிறகு தமிழாசிரியரிடம் அதைக் கொண்டு போய்க் கொடுத்தான்.

தமிழாசிரியர் பாட்டைப் படித்துப் பார்த்தார். "அடடா! இந்தப் பாடல் எவ்வளவு அழகாயிருக்கிறது! இதை இயற்றிய கவிஞர் யார்? பெயர் போடவில்லையே!" என்று சொல்லிவிட்டுத் திரும்பத் திரும்ப அதைப் பாடி மகிழ்ந்தார்; மாணவர்களுக்கும் அதைப் பாடிக் காட்டினார்; பாட்டில் உள்ள சொல் அழகையும் பொருள் அழகையும் எடுத்துக் கூறினார்.

மாணவர்கள் யாவரும் அந்தப் பாடலின் பெருமையை உணர்ந்தனர். ‘இதை இயற்றிய கவிஞர் யாராயிருக்கும்?’ என்று அவர்களும் சிந்தித்தனர்.

ஆனால், அதை இயற்றிய கவிஞர் அதே வகுப்பில் அவர்களுக்கு மத்தியிலேயே உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை!

இப்படி ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் இப்போது யாருக்குத்தான் தெரியாது!

* * *

கவிமணி சிறு பிள்ளையாயிருக்கும்போது, ஒரு மடத்திலுள்ள தம்பிரானிடம் தமிழ் கற்று வந்தார். அவருடன், அவர் வயதுச் சிறுவர்கள் சிலரும் படித்து வந்தார்கள்.

அன்று வழக்கம்போல் கவிமணியும், அவர் நண்பர்களும் மடத்துக்கு வந்தனர். அப்போது, அங்கே அப்பமும், வடையும் ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் சிவராத்திரியாதலால் கோவிலிலிருந்து மடத்திற்கு அவை வந்திருந்தன.

கவிமணியையும், மற்றவர்களையும் தம்பிரான் அருகில் அழைத்தார். “இப்போது நான் இந்த அப்பம், வடை முதலியவற்றை உங்களுக்குத் தரப் போகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. இதோ என் கையில் தேவாரத் திரட்டு இருக்கிறது. இதிலிருந்து முதலில் நான் ஒரு பாடலைப் பாடுவேன்; பிறகு உங்களிடம் புத்தகத்தைத் தருவேன்… நீங்கள் புத்தகத்தைப் பார்த்து அதே பாடலை ஒரு முறை படியுங்கள். பிறகு, நான் புத்தகத்தைத் திரும்ப வாங்கி மற்றொரு முறை அதே பாட்டைப் பாடுவேன். அப்புறம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்தப் பாடலைத் தவறு இல்லாமல் மனப்பாடமாக ஒப்புவிக்க வேண்டும். சரியாகச் சொல்லுகிறவர்களுக்குப் பாட்டு ஒன்றுக்கு ஓர் அப்பம் அல்லது ஒரு வடை வீதம் தருவேன். எங்கே, பார்க்கலாம்!” என்று சொன்னார்.

எல்லோரும், ‘சரி’ என்று கூறித் தலையை ஆட்டினர்.

–நிகழ்ச்சிகள் தொடரும்...

படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்

About The Author