பெஸ்ட் சாய்ஸ் (1)

வினு இப்படிச் செய்வாளென்று வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்கள் வீட்டின் கடைக்குட்டிப் பெண்தான் வினு. என் தங்கை.. எல்லோரிடமும் செல்லம். இந்தக் காரணத்தினாலேயே அவள் விரும்பிய எல்லாமே அவளுக்குக் கிடைக்கும். சிறு வயதில் இருந்தே அவளுக்குப் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். படபடவென்று பேசும் குணம் – துறுதுறுவென்று ஏதாவது செய்து கொண்டே இருக்கும் இயல்பு – இதனாலேயே எல்லோரையும் கவர்ந்து விடுவாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு உணவின் போது ”அப்பா, நான் முத்துவையே கல்யாணம் செஞ்சுக்கலாமானு யோசிக்கிறேன்” என்றாள் வினு. எங்கள் மூவருக்கும் அதிர்ச்சியில் பதில் பேச முடியாமல் இருந்தாலும் நான் சமாளித்து, அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, ”என்ன வினு திடீர்னு இப்படி..?” என்றேன். ”ஃபிரெண்ட்லியாத்தான் பழகினோம். இப்போ அவன்தான் எனக்கு பெஸ்ட் சாய்ஸ்னு தோணுது!” என்றாள் வினு.

அப்பா அம்மாவிடம் மெளனம்! அவர்களும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான். நான் ஷரத்தை லவ் பண்ணுவதாகச் சொன்ன போதும் அவர்கள் எதிர்க்கவில்லை. ஷரத் ஒரு ப்ராஜெக்ட் விஷயமாய் U.S-ல் இருக்கிறார். நானும் அவரும் ஒரே கல்லூரியில் படித்தோம். ஷரத் எனக்கு இரண்டு வருடம் சீனியர். இருந்தபோதும் அப்போது எங்களுக்குள் பழக்கம் இல்லை. நான் மூன்றாவது வருடம் படிக்கையில், கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்தபோதுதான் நெருக்கம் ஏற்பட்டு காதல் கொண்டதெல்லாம்.

ஷரத் திறமைசாலி. கல்லூரியில் அனைத்து மேடைகளிலும் அவர் பாடல் அரங்கேறிவிடும். வாலிபால் டீமின் கேப்டன். பெரும்பாலான நாட்கள் ஷரத்தை கல்லூரியில் பார்க்கவே முடியாது. ஏதாவது கல்ச்சுரல்ஸ், டோர்ணமெண்ட் என்று சுற்றிக் கொண்டே இருப்பார். படிப்பு கொஞ்சம் கம்மிதான். அப்போது எங்களுக்குள் அறிமுகம் இருப்பினும், சினேகம் இல்லை. அந்த நட்பு, காதல் எல்லாம் கல்லூரிக் காலத்துக்கு பின் வளர்ந்தவையே. இன்று நான் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்.

ஷரத் பற்றி எனது வீட்டில் நான் முதன்முதலாகச் சொன்ன போது, எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. அவர் U.S-ல் இருந்து வந்ததும் அவர் வீட்டில் பேசி நிச்சயம் செய்து விடலாம் என்று முடிவானது.

எனக்கும் வினுவுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். என்றுமே எங்களுக்குள் தோழமை இருந்ததில்லை. இருவரின் எதிரெதிரான இயல்புகளாலோ என்னவோ நாங்கள் தோழிகளாக இருக்க முடிந்ததில்லை. இருப்பினும் ஷரத் விஷயம் அவள் அறிந்ததே. அதனால்தான் அவள் தன் காதலை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினாள்.

முத்துவும் எங்களுக்கு புதிய நபரல்ல. வினு அடிக்கடி தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவாள். அதுபோல் முத்துவும் வந்திருக்கிறான். வினு எம்.எஸ்.ஸி. பயோகெமிஸ்ட்ரி முடித்துவிட்டு ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் பணியில் உள்ளாள். அதே மருத்துவமனையில் இன்னோரு பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறான் முத்து.

பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை. மெலிந்த உடல்வாகு. வறுமையை பிரதிபலிக்கும் உருவம். பார்ப்பதற்கு ரவுடிபோல் தெரிந்தாலும், எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன் என்று வினு சொல்லியிருக்கிறாள். முத்துவின் அப்பாவிற்கு நுரையீரல் சம்பந்தப்பட்டப் பிரச்சினை. அவரின் பரிசோதனைக்காக அடிக்கடி லேபிற்கு வருவான். அந்த பழக்கம் நட்பாகி வீடுவரை வந்திருந்தது.

முத்து வினுவிற்கு பெஸ்ட் சாய்ஸாகத் அவளுக்குத் தோன்றினாலும், எங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

”முத்து ஃபேமிலி பத்தி உனக்கே நல்லாத் தெரியும். அவன் மேல பரிதாபப்பட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தியா?” – அம்மா கேட்டாள்.

”அம்மா, பரிதாபப்பட்டுக் கொடுக்க இது கடனல்ல, காதல்!’ என்றாள் வினு.

”காதலும் இல்ல.. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. ஜஸ்ட் இன்ஃபேக்சுவேஷன். அவ்ளோதான்..” வேகமாகப் பேசினேன் நான்.

”அனு.. 23 வயசுல வர்றது இன்ஃபேக்சுவேஷன் இல்ல, இது என் லைஃப், நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்து இருக்கேன்.” நிதானமாக பதில் வந்தது வினுவிடமிருந்து.

”முடிவெடுத்துட்டியா..? நீ சொன்னத பார்த்தா ஒப்பீனியன் கேட்ட மாதிரியில்ல இருந்தது..” என்றேன் விடாப்பிடியாக நான்..

”சாரிப்பா, தயக்கமா இருந்ததால அப்படி ஆரம்பித்தேன்..” இது வினு.

”ஏன் தயக்கம்? தப்பான முடிவோ என்ற பயம் இருக்கிறதாலதானே தயக்கம்..?” அவள் மாட்டிக் கொண்டாள் என்பதை பிரதிபலித்தது அப்பாவின் கேள்வி..

”அப்படியில்லப்பா, என் முடிவை நீங்க தப்பா புரிஞ்சிப்பீங்களோனுதான். நான் பயந்த மாதிரியே ஆயிட்டுது” வருத்தப்பட்டாள் வினு.

”நாங்க தப்பா புரிஞ்சுக்கல. நீதான் சரியான முடிவு எடுக்கல. அவனப் பார்த்தா உன்னோட வயசு மாதிரிதான் தெரியுது. வயசு வித்தியாசம்கூட இல்லையே!” இது அம்மாவின் அங்கலாய்ப்பு..

”அம்மா.. வயசுங்கறது வெறும் நம்பர்தான, அதுக்கான பக்குவம் கஷ்டத்துல அடிப்பட்ட அவன்கிட்ட அதிகமாவே இருக்கு!” வினு விடாப்பிடியாக தொடர்ந்தாள்.

அடுத்தடுத்து ஏற்பட்ட விவாதங்கள் அன்றைய தினத்தின் தூக்கத்தை வெகுவாக பாதித்தன.

(மீதி அடுத்த இதழில்)

About The Author