பொருத்தம்தானா?

வீட்டுக்குள் நுழைந்தவர்களை ஆச்சர்யமாகப் பார்த்தாள் கனகா.

"அண்ணா… நீங்களா!"

"என்ன கனகு, உங்கண்ணனைப் பார்த்த குஷியில என்னைக் கவனிக்க மறந்துட்ட?" அண்ணி கிண்டலிக்க, கனகாவின் முகம் சிவந்து விட்டது.

"அண்ணி வாங்க! உங்களையெல்லாம் இங்கே வரச் சொல்லி எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். இப்பதான் வழி தெரிஞ்சுதா?"

அண்ணன் மகன் மனோகர், இவர்களைப் பார்த்துச் சிரித்தபடி நின்றான்.

"என்னடா பெரிய மனுஷா! கிட்ட வரமாட்டியா?" கேலியும் சிரிப்புமாக வீடே களை கட்டி விட்டது.

"என்ன விஷயம்? சும்மா வர மாட்டிங்களே!" கனகா விசாரித்தாள்.

"மனோகருக்கும் வயசாகிட்டு போவுது. கல்யாணம் செஞ்சு வச்சுரலாம்னு."

"பொண்ணு பார்த்தாச்சா? என்ன செய்யறாங்க… கூடப் பொறந்தவங்க எத்தனை பேரு… சொத்து எவ்வளவு…?" அடுக்கிக் கொண்டே போனாள்.

"இரு… இரு! விட்டா கல்யாணமே முடிஞ்சிரும் போல இருக்கே! யம்மாடி!! நல்ல எடமா இந்த ஊர்ல இருக்கற வெவரம் தெரிஞ்சுது. சரி, உள்ளூர்க்காரி நீயி. உன்னையும் கலந்துக்கலாம்னு."

"யாரு பொண்ணு?"

"தெற்கு வீதியில… சிவகாமின்னு."

"அ… வளா!" கனகா ஒரு வினாடி திடுக்கிட்டுப் போனாள்.

"என்ன கனகா?"

"இல்ல… மேலே சொல்லுங்க!"

"தெரிஞ்சவங்கதானே?"

"ஆமா."

"நல்லா செய்வாங்க போல. பொண்ணும் நல்ல லட்சணமா இருக்குன்னு கேள்வி. சரி, முடிச்சுரலாம்னு."

கனகா தன் கணவனைப் பார்த்தாள். ‘சொல்லி விடட்டுமா?’

‘வேண்டாம்’ என்பது போலச் சைகை செய்தான்.

"என்ன, ரெண்டு பேரும் அபிநயம் பிடிக்கிறீங்க? எதையோ சொல்ல வேணாம்னு மறைக்கிற மாதிரி?…" அண்ணிக்கு நிச்சயம் கூர்மையான பார்வைதான். எதுவும் தப்பாது.

"ஒண்ணுமில்ல. அவங்க ரொம்ப வசதியாச்சே! நமக்குக் கட்டுப்பட்டு வருமான்னு கேட்கறா."

"நாம் மட்டும் என்ன குறைவு? உங்க அண்ணிகிட்ட இல்லாத பணமா காசா?" அண்ணன் பெரிதாகச் சிரித்தார்.

கனகா தனிமையில் கணவனைக் கேட்டாள். "என்னங்க! அந்தப் பொண்ணு யாரையோ லவ் பண்ணுச்சுன்னு பேச்சு அடிபடுதே?"

"அதெல்லாம் சும்மா."

"என்னங்க சொல்றீங்க நீங்க!" என்றாள் அதிர்ந்து.

"இப்ப என்ன சொல்ற? அவ ஒருத்தனை விரும்பினது நிஜம். ஆனா தப்புத் தண்டா எதுவும் நடக்கல. அதுவும் நிஜம். ஏன்னா அந்தப் பையன் என் சினேகிதன்தான்."

கனகா தன் கணவனைப் புதிராகப் பார்த்தாள்.

"அவனுக்கு சரியான வேலை இல்ல. அதனால அவனே அவ காதலை ஏத்துக்க மாட்டான்."

"என்னதான் இருந்தாலும், அவ மனசுல…"

"கனகா! நீயா இதைச் சொல்றது." கணவன் முகம் பார்த்து விழித்தாள்.

"நினைவில்லியா? உன்னை உங்க மாமனுக்குக் கட்டி வைக்கிறதா முன்னால பேசியதாகவும், பிறகு எனக்குக் கட்டி வச்சதாகவும் நீயே சொல்லியிருக்க. நீ இல்ல எனக்கு…? அனுசரணையா, அமர்க்களமா குடும்பம் நடத்தலியா? நாம் என்ன மோசமாவா இருக்கோம்." கனகா தலையசைத்தாள்.

"இப்ப புரியுதுங்க. சிவகாமியும் நம்ம மனோகருக்கு ஏத்தவளா நிச்சயம் இருப்பா. பெண்ணா இருந்துக்கிட்டு, நானே அவளுக்கு அமையற வாழ்க்கையைக் கெடுக்க இருந்தேன். உங்களை மாதிரி வருமா?"

"என்ன, புருஷனை ஒரேயடியா புகழ்ந்துக்கிட்டே இருக்கே!" அண்ணி உள்ளே வர, அவர்களுக்குள் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

About The Author

1 Comment

  1. santhosh

    மனிதருல் சிலர் நல்லவர்கலாகவும் இருக்கிரார்கல் என்பதர்க்கு உதாரனமக உல்ல சிரந்த கதை

Comments are closed.