பேரழகி கிளியோபாட்ரா -11

அழகான காலைப்பொழுது அது –

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த அந்த அழகான இடத்தில் தென்றல்காற்று வீசிக்கொண்டிருந்தது. இரவிலும் அனல் தகிக்கும் அந்தப் பாலைவனபிரதேசத்தில், அதற்கு மாறாக குளுமையை வரவழைத்துக் கொண்டிருந்த அந்த இடம் சற்று வியப்பைத்தான் தந்தது.

பாலைவன அனலைத் தாங்கி வந்த வெப்பமான காற்று, இந்த இடத்தில் மட்டும் நைல் நதியில் தாகம் பருகிய பரவசத்தில் குளிர்ந்துபோய் வீசியது.

பொதுவாக வறட்சியைத் தாங்கி வளரும் கள்ளிச்செடி போன்ற தாவரங்களே காணப்படும் பாலைவனம், இங்கு மட்டும் சோலைவனமாக மாறியிருந்தது. பச்சை பேரீச்சம் மரங்களை மோதி வந்த காற்று லேசாகச் சலசலத்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட அழகான இடத்தில் அமைந்திருந்தது அந்தக் குடில். அந்தக் குடிலுக்குள் வி.வி.ஐ.பி.க்கள் இருவர் தங்கியிருந்தனர் என்பதால், குடிலைச் சுற்றிலும் ஆங்காங்கே வீரர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிளியோபாட்ரா – பேரரசர் ஜூலியஸ் சீஸர் ஆகியோர்தான் அந்த வி.வி.ஐ.பி.க்கள். தேனிலவு கொண்டாடவே, இவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

அந்த வகையில், உலகில் முதன் முதலாக தேனிலவு கொண்டாடிய ஜோடியாக கிளியோபாட்ரா – ஜூலியஸ் சீஸர் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களது கணிப்பு.

ஆனால், இவர்களது தேனிலவு கொண்டாட்டத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. இவர்கள் தம்பதியராக அதாவது, திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக உல்லாசம் அனுபவிக்க இங்கு வராமல், அந்த உல்லாசத்தை மாத்திரமே அனுபவிக்க வந்திருந்தனர். இதுபோக, வேறு சில காரணங்களும் அவர்களுக்கு இருந்தன.

கிளியோபாட்ராவைப் பொறுத்தவரை, அவள் எகிப்தின் மகாராணியாக ஆயுள் முழுக்க இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இப்போது அந்த மகாராணி அந்தஸ்தை அவளுக்குக் கொடுத்திருப்பவர் ஜூலியஸ் சீஸர். அதனால், அவரை எந்த அளவுக்கு சந்தோஷப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நல்லது என்று எண்ணிக் கொண்டாள். அதற்காக, பார்ப்போர் எல்லாம், ஏன் பெண்கள் கூட வியந்து பொறாமை கொள்ளும் தனது பேரழகை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

சீஸரும் காரணம் இல்லாமல் கிளியோபாட்ராவை தன்னுடன் வைத்திருக்கவில்லை. முதன்முதலாக அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளது பேரழகில் கவிழ்ந்து போய்விட்டார். அவளுடன் உடலாலும், உள்ளத்தாலும் கலந்ததில் தன்னை ஒரு இளைஞன் போலவே உணர்ந்தார் சீஸர். அதனால்தான், கிளியோபாட்ரா தன்னுடன் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதனாலேயே தேனிலவு வரைக்கும் வந்துவிட்டார்.

தேனிலவு அறையில் –

"என்னை முதன் முதலாக வியக்க வைத்த பேரழகே! உன்னுடன் 100 வயதைக் கடந்தும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த ஆசைதான் நிறைவேறுமா என்று பயமாக இருக்கிறது".

"பயப்பட வேண்டாம் பேரரசே! உங்களுக்காகவே நான் பிறந்ததுபோல் உணர்கிறேன். இந்த எகிப்து பேரரசின் மகாராணியாக, உங்களவளாக நான் வாழ விரும்புகிறேன்…"

"உனது இந்த பேச்சு, ஆயிரம் வீரர்கள் என்னைச் சுற்றி பாதுகாப்புக்கு நின்றிருப்பது போன்ற தைரியத்தைத் தருகிறது…" என்ற ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவை அணைத்துக்கொண்டு அவளது நெற்றியில் முத்தமிட்டார். அந்த மாவீரனது விழியோரம் லேசாக கலங்கியிருந்தது.

அந்த விழியோரம் தனது மஞ்சள் கரத்தைக் கொண்டு சென்ற கிளியோபாட்ரா, அங்கிருந்த ஈரத்தை துடைத்துவிட்டாள். ஆதரவாய் அவரை அணைத்துக்கொண்டாள்.

"சரி… இப்போது காலைப்பொழுதுதானே..? நாம் இந்த அழகிய நதியில் சிறிது தூரம் உலவிவிட்டு வரலாமே…" என்றார் சீஸர்.

"நானும் அதைத்தான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். தாங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்…" என்ற கிளியோபாட்ரா, லேசாகப் புன்னகையை உதிர்த்தாள்.

படகில் ஒரே ஒரு வீரன் மட்டும் இருந்தான். சீஸர் படகினுள் ஏறியதும், அந்த வீரனைப் படகில் இருந்து வெளியேற பணித்தார். அவனும் வெளியேறினான்.

சிறிதுநேரத்தில் உல்லாசப் படகைத் துடுப்பை மீட்டி இயக்க ஆரம்பித்தார் சீஸர். அவருடன் கிளியோபாட்ரா மட்டுமே துணைக்கு இருந்தாள்.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

  1. Balasundar Senthilvel

    பேரழகி கிளியோபாட்ரா – 11″ எங்கே?”

Comments are closed.